அக்னிப்பிரவேசம்-29

This entry is part 25 of 31 in the series 7 ஏப்ரல் 2013

 

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

 yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

 இரண்டு நாட்களுக்குப் பிறகு பாஸ்கர் ராமமூர்த்தி வந்தான். ஆள் கொஞ்சம் இளைத்தாற்போல் தென்பட்டான்.

“வீட்டை மாற்றிவிட்டேன். வந்துவிடு. வேறு யாருக்கும் தெரியாது” என்றான். அவள் விசிட்டர்ஸ் அறைக்கு வந்ததுமே.

“என்ன தெரியாது?”

“அதான்… நீயும் ராமநாதனும்…. அந்த விஷயம்…”

“நீங்க அந்த வீட்டை மாற்றியது அதற்காக இருந்திருக்காது அந்தத் தெருவில் உள்ள எல்லோருக்குமே உங்கள் ஆண்மைக்குறைவு பற்றி தெரிந்துவிட்டது என்பதால்.”

“வீட்டை விட்டுத் துரத்தினாலும் உன் திமிர் இன்னும் அடங்கவில்லை என்று சொல்லு.”

“நீங்க துரத்தியதாவது? நான்தானே உங்களை கால்களுக்கு நடுவில் உதை கொடுத்து வெளியேறினேன்.”

“பாவனா!”

“பெரிதாக கத்தாதீங்க. நீங்க எதுக்கு வந்திருக்கீங்க என்று எனக்குத் தெரியும். வாங்கிக்கொண்ட வரதட்சணைப் பணத்தை அப்பாவுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்குமே என்றுதானே?”

“செத்தாலும் தரமாட்டேன். உன்னைக் கோர்ட்டுக்கு இழுத்து அழ அழ வைக்காமல் போனால் என் பெயர் பாஸ்கர் ராமமூர்த்தி இல்லை” என்றான்.

அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. “உன்னிடமிருந்து விவாரத்து வாங்கிக்கொள்வதற்கு உன்னிடமுள்ள ஒரே ஒரு அவலட்சனமே போதும் ராமமூர்த்தி! போ… நானே உனக்கு விவாகரத்து தந்து விடுகிறேன். போய் அந்த வசந்தியையே பண்ணிக்கொள் போ” என்றாள்.

“என்ன சொன்னாய்?” ஆவேசத்தில் அவன் குரல் நடுங்கியது..

“ஆமாம். எப்படியும் உடல்ரீதியான சம்பந்தம் இருக்கப் போவதில்லை. அதனால் உங்கள் இருவருக்கும் பொருந்தும்” என்றாள் நிதானமாய்.

“தேவடியா மகளே! உன் நாக்கு அழுகிப் போய்விடும். எனக்கும் என் தங்கைக்கும் உள்ள உறவை கொச்சைப் படுத்துகிறாயா?”

“வயது வந்த எந்த தங்கையின் மடியிலும், அது உண்மையான அண்ணன் தங்கை பந்தமாக இருந்தால் எந்த ஆணுமே படுத்துக்கொள்ள மாட்டான், ஏதோ ஒரு பலவீனம் இருந்தால் தவிர. அது உடல்ரீதியாக இருக்கலாம், மனதளவிலும் இருக்கலாம்.”

“நீதி மொழிகள் பேசாதே. வீட்டுக்குத திரும்பி வரப் போகிறாயா இல்லையா? அதைச் சொல்லு.”

“வருகிறேன்.”

அவன் வியப்படைந்து “வருகிறாயா?” என்றான்.

“ஒரு நிபந்தனையின் பெயரில்.”

“அது என்ன?”

“எனக்கு ஒரு குழந்தைக்குத் தாயாகனும் என்று இருக்கு. யார் மூலமாய், எந்த முறையாய் என்று நீ கேள்வி கேட்கக் கூடாது.”

பாஸ்கர் ராமமூர்த்திக்கு ஒரு வினாடி புரியவில்லை.

பிறகு சாமி வந்தவன் போல் ஆடத் தொடங்கினான். “அடியேய்! காமவெறியால் புழுத்துப் போய் சாகப் போகிறாய். புருஷன் போறாதுன்னு ஊர் மேயப் போகிறாயா? நீ ஒரு பெண்தானா?”

“நானும் ஒரு பெண்தான் ராமமூர்த்தி! ரொம்ப சாதாரணமான பெண். தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டே வாழ்க்கை அழகான பூந்தோட்மாய இருக்கும் என்று  கனவு கண்டவள். வாசலில் கோலம் போட்டுக்கொண்டடே எதிர்காலமும் அதேபோல் இருக்கும் என்று அப்பவித்தனமாய் ஊகித்துக்கொண்டவள். படிப்பு இல்லாதவள். இதயம் முழுவதும் அதைரியம் மட்டுமே நிரம்பியிருப்பவள். கண்ட கனவெல்லாம் கரைந்துப் போக, கண் நிறைய நீரும், நடுங்கும் கை விரல்களும் மட்டுமே எஞ்சியிருப்பவள். என்னை இனி தொந்தரவு செய்யாதே. போய்விடு. நான் நாலு பேரைக் கூப்பிடுவதற்கு முன்பே, என் மாஜி கானவனின் அவமானத்தை நான் கண்ணாரக் காணும் துர்பாக்கியம் ஏற்படுவதற்கு முன்பே இங்கிருந்து போய்விடு.”

அவள் கைகளால் முகத்தைப் போத்திக்கொண்டாள்.

அவன் மௌனமாய் அங்கிருந்து திரும்பினான்.

*****

பாவனாவுக்கு வேலை நன்றாகப் பழகிப் போய்விட்டது. புன்னகை மாறாமல் பண்புடன் பேசுவதாலோ அல்லது முறுவலுடன் பிரகாசிக்கும் அவள் அழகின் காரணமாகவோ தெரியாது. வாடிக்கையாளர்கள் அவளிடம் திரண்டு வந்தார்கள்.

ஒருமுறை வெளி உலகிற்கு வந்துவிட்டதுமே அவளுக்கு பல விதமான கதவுகள் திறந்து கொண்டாற்போல் தோன்றியது. முக்கியமாய் “சுயேச்சை”க்கு அர்த்தம் புரிந்தது. சுயேச்சை எவ்வளவு சந்தோஷம் தரும் என்றும் புரிந்தது. ஆனால் அந்த சுயேச்சை பிற்பகலில் பக்கத்து வீட்டுக்காரியுடன் மாட்டினிக்குப் போவதால் வருவதோ, அல்லது நள்ளிரவு வரையில் பாய்பிரண்டுடன் சுற்றுவதால் வருவதோ இல்லை. வீட்டில் இருந்த போது கணவன் வீட்டிற்குத் திரும்பி வருகிறான் என்றாலே பயமாய் இருக்கும். வசந்தியைப் பார்த்தால் அருவருப்பாய் இருக்கும். இப்பொழுது அதெல்லாம் இல்லை. காலையில் எழுந்துகொள்ள வேண்டுமே என்று நினைக்கும் போதே அதிருப்தியை ஏற்படுத்தும் ‘நாளை’யை விட, காலையில் எழுந்ததுமே உற்சாகமாய் இருக்கும் “நாளை!” அதைக் காட்டிலும் மனிதனுக்கு வேண்டியது என்ன?

அதற்காக அவளுக்கு யோசிக்கும் திறனே இல்லை என்று சொல்லிவிட முடியாது. தந்தை இல்லை. கணவனும் இல்லை. இனி வேறு யாருக்காக என்ற எண்ணம் அவ்வப்பொழுது எழும். ஒரு நல்ல நட்புக்காக மனம் தவிக்கும். ஆனால் அதையும்விட முன்பாய் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று அவளுக்குத் தெரியும். நாட்கள் நன்றாகப் போய்க் கொண்டிருந்தன. அந்த ஷோ ரூமுக்கு பெரும்பாலும் வெளிநாட்டுக்காரர்கள் தான் வருவார்கள். அவளுக்கு ஆங்கிலம் அவ்வளவு நன்றாகப் பேசத் தெரியாது. படிப்பும் குறைவுதான். அதற்காக என்ன பண்ணுவதென்று புரியவில்லை. தன் பிரச்சனையை பாரதிதேவியிடம் சொன்னாள்.

“அதற்கென்ன வந்தது? நான் படித்து கூட குழந்தைகள் எல்லோரும் பிறந்த பிறகுதான். தினமும் ஒரு மணிநேரம் நானே உனக்கு இங்கிலீஷ் பாடம் சொல்லித் தருகிறேன்” என்றாள்.

மறுநாள் முதல் அவள் சொல்லித் தரத் தொடங்கிவிட்டாள். பாவனாவின் ஆர்வத்தை கவனித்துவிட்டு “நீ பிரைவேட்டாய் டிகிரி எழுதாலமே பாவனா” என்றாள்.

“நானா? இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலா?” சங்கடத்துடன் பதிலளித்தாள் பாவனா.

“வேலை அதிகமாக ஆக ஓய்வும் நிறைய கிடைக்கும். பரீட்சைக்குக் கட்டு. எவ்வளவு நாள்தான் இதுபோல் சேல்ஸ் கேர்ளாக இருப்பாய்?”

பாவனா தலையை அசைத்தாள்.

ஒரு நாள் கடைக்கு ஆங்கிலேய தம்பதி வந்திருந்தார்கள். பத்து நிமிடங்கள் வித விதமான பொம்மைகளை எடுத்துப் பார்த்துவிட்டு, கடைசியில் ஒன்றை தேர்ந்து எடுத்துவிட்டு “இந்தப் பொம்மையின் விலை என்ன?” என்றார்கள்.

“ஐந்தாயிரம் ரூபாய். அதாவது ஏறக்குறைய நூறு டாலர்கள் சார்.”

“விலை அதிகம் என்று நினைக்கிறேன்.”

“இல்லை சார். தஞ்சாவூரைச் சேர்ந்த கலைஞன் ஒருவன் இருபது நாட்கள் கஷ்டப்பட்டு செய்த பொம்மை இது. ஒவ்வொரு அணுவிலும் அவருடைய கைத்திறன் தென்படும். இதுவே மிஷினில் தயாரிக்கப் பட்டிருந்தால் இன்னும் கூட நுணுக்கமாகத் தயாரிக்கப் பட்டிருக்கலாம். விலையும் கூட மலிவாய் இருக்கலாம். அனால் இதில் இருக்கும் அந்த கலைத்திறன் அதில் உங்களுக்குக் கிடைக்காது.”

“இந்த மூன்றாவது கண் என்றால் என்ன?”

“எங்களுடைய கடவுள் சிவ பெருமான். தீயவர்களை அடக்குவதற்காக மூன்றாவது கண்ணைத் திறந்தால் தீமைகள் எல்லாம் சாம்பலாகிவிடும் என்று எங்கள் புராணங்கள் சொல்லுகின்றன.”

“பேக் பண்ணிக் கொடுங்கள்.”

அவள் பேக் பண்ணிக்கொண்டிருக்கையில், அந்த தம்பதிகள் தமக்குள்ள பேசிக்கொண்டது தொலைவிலிருந்து கேட்டது. “அந்தப் பெண் ரொம்ப அழகாய் இருக்கிறாள் இல்லையா டியர்? இந்தியக் களை ததும்பும் முகம்.”

“ஆங்கில உச்சரிப்பு கூட நன்றாக இருக்கிறது.”

திடீரென்று மழைச்சாரலில்.நனைந்தாற்போல் இருந்தது. அதுவரையில் அவள் கவனிக்கவே இல்லை. யாருடைய உதவியும் இன்றி அவள் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறாள். கடினமான உணர்வுகளை நல்ல மொழிவளத்துடன் எடுத்துச் சொல்ல முடிந்தது அவளால். ஆங்கிலத்தில் பேச வேண்டும்  என்றாலே ஏற்படும் தயக்கமோ, நடுக்கமோ கொஞ்சம் கூட இருக்கவில்லை..

சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது. காற்றில் நீந்த வேண்டும் போலிருந்தது. உண்மையில் அது பெரிய விஷயம்கூட இல்லை. மிகவும் சின்ன விஷயம். ஆனால் அனுபவிப்பவர்களின் எல்லையைப் பொறுத்து இருக்கிறது, வெற்றியின் ஆனந்தம். அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அது புரியும்.

அவளுக்கு அந்தச் சந்தோஷத்தை யாருடனாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது. டைரக்டரியைத் தேடி பரத்வாஜ் நமபரைக் கண்டுபிடித்தாள். அவனுக்கு போன் பண்ணினாள்.

“ஹலோ!” அலுப்புடன் கேட்டது மறுமுனையிலிருந்து.

“நான்தான். பாவானா” பயந்தவாறு சொன்னாள்.

“எந்த பாவனா?’

“ஆறு மாதங்களுக்கு முன்னாடி உங்கள் வீட்டுக்கு நள்ளிரவில் வந்திருந்தேன். ஜீவனியில் கூட சேர்ந்தீன்களே .”

“ஓ… நீயா?”’

“நீங்க பிஸியாய் இருக்கீங்க போலிருக்கு.”

“இல்லை. மூட் நன்றாக இல்லை. எங்க எடிட்டர் செக்ஸ், வயலென்ஸ் இல்லாவிட்டால் எழுதுவதை நிறுத்தி விடுவது நல்லது என்று சொல்லிவிட்டார். இந்தத் தொல்லை எங்களுக்கு எப்போதும் இருப்பதுதான்.  சரி, விஷயம் என்னவென்று சொல்லு.”

பாவனா அன்றைக்கு நடந்ததைச் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு “குட்!” என்றான்.

“இதையெல்லாம் ஏனோ உங்களுக்குச் சொல்லவேண்டும் போல் இருந்தது. நான் ஒருமுறை உங்ககளைச் சந்திக்கவும் விரும்புகிறேன்.”

“வேண்டாம்” என்றான் சுருக்கமாய்.

அவள் அடியுண்டாற்போல் “ஏன்?” என்றாள்.

“எப்பொழுது பெண்ணானவள் தன் சந்தோஷத்தையோ, வருத்தததையோ பகிர்ந்துக் கொள்வதற்கு ஒரு வேற்று ஆணைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாளோ, அப்பொழுதே அவனுள் இன்னொரு மனிதன் விழித்தெழுந்து கொள்வான். அவன் அபாரமான அறிவு படைத்தவனாகவும், காரியவாதியாகவும் இருந்தால் அவளை புகழ்ந்தோ அல்லது இரக்கத்தை வெளிபடுத்தியோ நட்பை வளர்த்துக்கொள்வான் ‘என் அப்பாவித்தனத்தை நீ இந்தவிதமாய் பயன்படுத்திக்கொள்வது நியாயம்தானா?’ என்று பெண்ணாகப் பட்டவள்  கேட்பாள், அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டதும்.’இதெல்லாம் உனக்கு விருப்பம்தான் என்று நினைத்தேன். அவ்வளவு விருப்பம் இல்லாதவள் முதலிலேயே ஜாக்கிரதையாய் இருந்திருக்கலாமே” என்பான் அவன். இந்த ரகளை எல்லாம் எதற்கு?”

அவள் மித மிஞ்சிய வியப்புடன் “உங்கள் வயது என்ன?” என்று கேட்டாள்.

பரத்வாஜ் வழுக்கைத் தலையைத் தடவிக்கொண்டான்.. “ஐம்பத்தைந்து.  வயது ஏற ஏற, ஆண்களின் அம்புப் பொதியில் மேலும் சில அம்புகள் சேரும் பாவனா. அதை மறந்துவிடாதே.”.

“பின்னே நீங்க இதை உங்கள் எழுத்துக்கள் மூலமாய் எல்லோருக்கும் சொல்லலாமே?”

அவன் பெரிதாய்ச் சிரித்தான். “இந்த உலகத்தில் ஒவ்வொரு வாசகனுமே எழுத்தாளன் எழுதிய ஒவ்வொரு கருத்தும் சமுதாயத்திற்காக என்று நினைத்துக்கொள்வான். தனக்காகவும் என்று நினைக்க மாட்டான். ரொம்ப சிரிப்பு வரக்கூடிய, வருந்தத்தக்க விஷயம் இது.”

“பின்னே என்னிடம் எதுக்குச் சொன்னீங்க?”

“மனதளவில் முதிர்ச்சி அடைந்த மனிதனுக்கு ‘காதல்’ என்ற உணர்வு  எவ்வளவு ஊக்கத்தை அளிக்குமோ, அதுபோலவே முதிர்ச்சி அடையாத மனிதனுக்கு ‘ஈர்ப்பு’ எல்லாவிதத்திலேயும் தடையாய் இருக்கும்.”

“இந்த வார்த்தைகளை நான் என்றுமே நினைவில் வைத்துக் கொள்வேன்” என்று போனை வைத்துவிட்டாள் அவள்.

*****

நகரத்தில் டாஸ்க் போர்ஸ் முற்றுகை திடீரென்று அதிகமாகிவிட்டதால் கஞ்சா கிடைப்பது கஷ்டமாகிவிட்டது.  வழக்கமாக சப்ளை பண்ணிக் கொண்டிருந்த பெட்டிக்கடைக்காரன் தருவதை நிறுத்திக்கொண்டு விட்டான்.

சாஹிதியின் உயிர் துடிதுடிக்கத் தொடங்கிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரம் ஆனால் உயிரே போய்விடும் போல் இருந்தது அவளுக்கு. கல்லூரி எல்லைக்குள் தொலைவில் இருந்த மரத்தடியில் உட்கார்ந்திருந்தாள் அவள். அவள் நிலைமை எப்படி இருந்தது என்றால் ஒரு பொட்டலம் கஞ்சாவைத் தந்து என்னுடன் கொஞ்ச நேரம் இருக்கிறாயா என்று பரமஹம்சா கேட்டால் கூட ஒப்புக்கொண்டு விடுவாள் போலிருந்தது.

அந்த நேரத்தில் அவளுடைய பழைய சிநேகிதி தென்பட்டாள். அவளுக்கு அதைப் பழக்கப் படுத்தியிருந்தப் பெண்.

“இங்கே ஏன் உட்கார்ந்து இருக்கிறாய்?”

சாஹித்தி தன் பிரச்சனையைச் சொன்னாள்.

“ஆமாம். அந்தத் தொல்லை எனக்கும் வந்தது. ரொம்ப ரகசியமாய் பிளாக்கில் கிடைக்கிறது” என்று அட்ரஸைச் சொல்லிவிட்டு, தன்னிடமிருந்ததைக கொஞ்சமாய் கொடுத்துவிட்டுப் போய்விட்டாள். சாஹிதிக்கு சஞ்சீவியே கிடைத்தாற்போல் இருந்தது. பரபரக்க அதைப் பயன்படுத்தினாள். அது கலப்படமான சரக்கு என்பதால் அவளுக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. அந்த இடத்திலேயே மரத்தில் சாய்ந்தவாறு கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் கண்களைத் திறந்தபோது ஒரு அறையில் இருந்தாள்.

“அப்பாடா! விழிப்பு வந்துவிட்டதா?” என்ற வார்த்தைகள் கேட்டன.

சுமார் நாற்பது வயது ஆசாமி அவளுக்குப் பக்கத்திலேயே ஸ்டூலில் உட்கார்ந்திருந்தான். அவள் சட்டென்று எழுந்துகொள்ள முயன்ற போது அவன் தடுத்தான்.

“நான் இங்கே எப்படி வந்தேன்?”

“மரத்தடியில் நினைவு இல்லாமல் விழுந்து கிடந்ததைப் பார்த்துவிட்டு இங்கே அழைத்து வந்தேன். எனக்குப் பயமாக இருந்தது. டாக்டரைக் கூப்பிடுவோமா என்று நினைத்துக் கொண்டிருந்த போது அதிர்ஷ்டவசமாய் உங்களுக்கு விழிப்பு வந்துவிட்டது. என்னதான் நடந்தது?”

“ஏதோ தலை சுற்றுவது போல் இருந்தது” என்றாள் உண்மை விஷயத்தைச் சொல்லாமல்.

“உங்களை இங்கே அழைத்துக்கொண்டு வருவது ரொம்ப கஷ்டமாகிவிட்டது, ரிக்ஷாகாரனுக்கு சந்தேகம் வராதவாறு.”

அவள் வெட்கமடைந்தவளாய் எழுந்து நின்று “நான் போய் வருகிறேன். தாங்க்ஸ்” என்றாள்.

“இப்பொழுதா? இந்த நேரத்திலா? இப்போ நேரம் என்ன தெரியுமா? நாலு மணி. விடியற்காலை மணி நான்கு.”

அவள் லேசாய் கத்தினாள். “மைகாட்! மணி நாலா?”

“இந்த நேரத்தில் வீட்டுக்குப் போய் அவர்களைக் கலங்கடிப்பதை விட காலையிலேயே போய் இரவு எந்த சிநேகிதியின் வீட்டிலேயோ தங்கிவிட்டதாய்ச் சொல்லுவது நல்லது என்று தோன்றுகிறது. யோசித்துப் பாருங்கள்.”

அதுவும் நல்லதுதான் என்று சாஹிதிக்குத் தோன்றியது. தாய்கூட வீட்டில் இல்லை. பஜனைக்காக தென்னாங்கூர் போயிருக்கிறாள்.

அவள் மௌனத்தை சாதகமாக எடுத்துக் கொண்டு அவன் எழுந்து “முகம் கழுவிக் கொள்ளுங்கள். காபி கொண்டு வருகிறேன்” என்று உள்ளே போனான். குற்ற உணர்வும், வெட்கமும் அவளை ஆட்டி படைத்தன. அவன் திரும்பி வருவதற்குள் அவள் கொஞ்சம் நீட்டாய் தயாராகியிருந்தாள்.

“உங்களுக்கு இன்னும் பயம் போகவில்லை போலிருக்கு. அம்மா, அப்பா கொபித்துக்கொல்வார்கள் என்று பயமாக இருந்தால், நான் வந்து சொல்கிறேன்.” காபியை அவளிடம் தந்தபடியே சொன்னான்.

“ச்சே.. அதெல்லாம் ஒன்றும் இல்லை. உங்களுக்கு அனாவசியமாய் சிரமம் தந்துவிட்டேன். உங்களுக்கு எப்படி நன்றியைச் சொல்லுவது என்று புரியவில்லை.”

“இதில் சிரமம் என்ன இருக்கு? உங்களைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்து இருந்தேன். அழகை ஆராதிப்பதற்கு ஒரு வாழ்நாள் முழுவதுமே கூட போறாது என்று சொல்லுவான் என் நண்பன். மனதில் களங்கம் இல்லாத போது அழகை ரசிப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன். தவறு என்று நீங்க நினைத்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். உண்மையிலேயே புனிதமான உணர்வுடன்தான் பார்த்தேன்.”

அவன் வார்த்தைகளில் நேர்மை தென்பட்டது. அவள் யோசித்துக் கொண்டிருந்தது தவறு, மன்னிப்பு.. அதைப் பற்றியில்லை. ஒரு சந்தோஷமான உணர்வு அவளைத் திக்குமுக்காட வைத்தது. அழகை பாராட்டினால் எந்தப் பெண்ணுக்குத்தான் சந்தோஷமாய் இருக்காது?

‘ராத்திரி இரண்டு மணி வரையில் உங்களைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். அப்புறமாய் தேநீர் போட்டுக் குடித்தேன்.”

சாஹிதி வியப்புடன் பார்த்தாள் அவனை.

“உங்க பொழுதுபோக்குகள் என்ன?”

அவளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.

ஒவ்வொருவரும் தம்மையே கேட்டுக்கொண்டாலும், சரியான பதில் கிடைக்காத கேள்வி.

“பெயிண்டிங், கேரம்ஸ்” என்றாள். அவை ஹாபிஸ் அல்ல. அந்தப் பெயர்கள் தான் தெரியும், அவ்வளவுதான். பத்து வயது நிரம்பியிருக்கும் எவருக்குமே இந்த அளவுக்காவது தெரிந்திருப்பது சகஜம்தான். சாப்பிடுவது, படிப்பது, வம்பு பேசுவது என்னும் மூன்று பழக்கங்கள் உடைய மூன்று கோடி தமிழ்நாட்டு இளம் பெண்களுக்குள் அவள் ஒருத்தி.

அவன் அவளுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டான். நேரம் ஐந்து மணி ஆயிற்று. கிழக்கில் கொஞ்சம் வெளுக்கத் தொடங்கியது. அதனால் அவள் பயம் முழுவதும் தணிந்துவிட்டது. அவன் உட்கார்ந்துகொண்டே.

“ஊம். இப்போ சொல்லுங்கள். உங்களுக்கு கஞ்சா எப்போதிலிருந்து பழக்கம் ஆயிற்று?” என்றான்.

சாஹிதிக்கு பக்கத்தில் வெடிகுண்டு வெடித்தாற்போல் இருந்தது. முகம் வெளுத்துவிட்டது.

“நீ என்னைவிட வயதில் சிறியவள். அதனால் உன்னை நீ என்றே விளிக்கிறேன். உனக்குப் பக்கத்திலயே கஞ்சா பொட்டலத்தைப் பார்த்தேன். அதானால் டாக்டரைக் கூப்பிடவோ, ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போகவோ இல்லை. ரொம்பவும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டால் அப்படிச் செய்யலாம் என்று பக்கத்திலேயே விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இதைக் கொண்டு நான் எப்படிப்பட்ட குணநலன் கொண்டவன் என்று புரிந்திருக்கும் உனக்கு. இன்னும் நீ என்னைப் புரிந்துகொள்ளவில்லையா சாஹிதி?”

அவள் தலை கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தாள்.

“பிரச்சனைகள் அதிகமாகிவிட்டால், அவற்றிலிருந்து மீள்வதற்கு இந்த மாதிரி பழக்கங்களுக்கு அடிமையாவது சகஜம்தான். என்னால் உன்னைப் புரிந்துகொள்ள முடியும். இரக்கம் காட்டுபவர்களோ, புரிந்துகொள்பவர்கள் இல்லாமல் போனாலோ மனிதனின் வாழ்க்கை எவ்வளவு நரகமாகிவிடும் என்று சொல்வதற்கு என் வாழ்க்கையே ஒரு உதாரணம்.” அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவன் கண்கள் ஈரமானதைப் பார்த்து அவள் மனம் கரைந்தது. அவன் எழுந்து ஜன்னல் வழியாய் வெளியே பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டான்.

சாஹிதி அவனை நெருங்கி “என்ன நடந்தது?” என்று கேட்டாள்.

“வேண்டாம். என் வேதனையைச் சொல்லி உன்னை வருத்தப்படுத்த மாட்டேன்” என்றான்.

அவன் பிரச்சனையைப் பற்றித் தான் கேட்டது தவறோ என்று நினைத்தாள் சாஹிதி. அந்த விஷயத்தைப் பற்றி அதற்குமேல் கேட்கவில்லை.

அவள் பேசாததைக் கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, அவன் வேகமாய் அலமாரியை நெருங்கி அதன் கதவைத் திறந்தான். அது முழுவதும் காலி மது பாட்டில்கள் நிரம்பி வழிந்தன.

“பார்த்தாயா சாஹிதி! என் உயிரை நான் எப்படி எரித்துக் கொண்டிருக்கிறேன் என்று பார்” என்றான்.

அவளுக்குத்தான் எவ்வளவு வயதாகிவிட்டது? இருபதுக்கு கொஞ்சம் கூடக் குறைவு. அந்த வயதில் இரக்கம், தயவு, நல்லத்தன்மை போன்ற நற்பண்புகள் நிறைவாய் இருக்கும்.

“உங்கள் வேதனைதான் என்ன?” என்று கேட்டாள்.

“என் மனைவி!” என்றான் அவன். “அவளுக்குப் பணத்தைத் தவிர வேறெதுவும் தேவையில்லை. காரும், நகைகளும் வேண்டும் என்கிறாள். என் வாழ்க்கையில் நான் அவற்றை எப்படி வாங்கித் தர முடியும்? லஞ்சம் வாங்க மாட்டேன். நேர்மைதான் முக்கியம் என்று நம்புகிறவன் நான். என்னை விட்டுவிட்டு அவள் பிறந்தவீட்டுக்குப் போய்விட்டாள்.”

சாஹிதி உருகிப் போய்விட்டாள். பெண்களில் இப்படிப்பட்டவர்கள் கூட இருப்பார்களா என்று நினைத்துக்கொண்டாள். “நீங்க வருத்தப்படாதீங்க” என்றாள்.

“இல்லை சாஹிதி! உனக்குத் தெரியாது. என் மனதில் அன்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பது போல் வாழ்ந்து வந்தேன். நான் நேசித்த பெண்ணுக்கு என் சகலத்தையும் அர்பணித்து விட வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தேன். அந்த அடியைத் தாங்க முடியாமல் குடிப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டேன்.” அவன் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

“இங்கே புடவை எல்லாம் இருக்கே? எது?”

அவன் அந்தப் பக்கம் பார்த்தான். “என் மனைவி அவ்வப்பொழுது வந்து கொண்டிருப்பாள். எனக்காக இல்லை. பணம் படைத்த அவள் ஆண் நண்பர்களைச் சந்திப்பதற்காக.”

“மை காட்! அவள் அவ்வளவு தூரம் கொழுபெடுத்து அலைந்த போதிலும் நீங்க சும்மா இருக்கீங்களா?”

“அவரவர்களின் பாவத்தை அவர்கள்தான் அனுபவிக்க வேண்டும் சாஹிதி! என் வருத்தம் ஒன்றுதான். என் நல்ல குணத்தைக் கையாலாகாதத் தனமாய் நினைக்கிறாள். அதனால்தான் குடியை தஞ்சம் புகுந்தேன்.”

“ஆனால் உங்க உடம்பு?”

“கஞ்சாவில் உன் உடம்பு பாழாகவில்லையா? இதுவும் அதுபோல்தான். மனதில் இருக்கும் வேதனையுடன் ஒப்பிட்டால் இந்த பழக்கங்கள், உடல் ஆரோக்கியம் ரொம்ப சிறியவை. உண்மையிலேயே வேதனையில் இருப்பவள் நீ. உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா?”

புரிந்துகொண்டாற்போல் அவள் தலையை அசைத்தாள்.

“நான் எல்லாவற்றையும், கடைசியில் என் மனைவியின் விஷயத்தையும் கூட சொல்லிவிட்டேன். ஆனால் உன் வேதனை என்னவென்று இந்த நண்பனிடம் சொல்ல மாட்டாயா?”

அவள் சொன்னாள். தன் குடும்பக் கதையை முழுவதுமாக சொல்லிவிட்டாள்.

கேட்டதுமே ஆவேசத்தால் நடுங்கிவிட்டான் அவன். அவள் சொல்லி முடித்த பிறகு, “எனக்கு உடனே உங்க அம்மாவைச் சந்திக்க வேண்டும் போல் இருக்கு” என்றான். தொடர்ந்து “இப்பொழுதே வேண்டாம். நம் சிநேகம் கொஞ்சம் வளர்ந்த பிறகு நானே வருகிறேன். ஆனாலும் இவ்வளவு வேதனையை இத்தனை நாளாய் இதயத்தில் எப்படி வைத்துக் கொண்டிருந்தாய் சாஹிதி? இவ்வளவு நாளாய் வேதனை என் ஒருத்தனுக்குத்தான் என்று நினைத்திருந்தேன். உலகத்தில் என்னைவிட வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் கூட இருக்கிறார்கள் என்று இப்பொழுதுதான் புரிந்தது.  ‘வேண்டியவர்கள்’ என்று நாம் நினைப்பவர்கள் தொலைவாக சென்றுவிட்டால் அந்தத் தனிமை வாழ்க்கை எவ்வளவு துர்லபமாய் இருக்குமோ அனுபவத்தில் புரிந்து கொண்டேன். என்னால் உன்னைப் புரிந்துகொள்ள முடியும். ஒரே திசையில் பயணிக்கும் இரண்டு படகுகளின் பயணிகள் நாம்.”

அப்பொழுது வந்தது துக்கம் அவளுக்கு. இந்த அளவுக்கு அனுசரணையாக இதுவரையில் அவளிடம் யாருமே பேசியது இல்லை. குளிர்ந்த காற்றுக்கு மேகம் மழையைப் பொழிந்தது போல் அதுவரையிலும் அவள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெளியே வரத் தொடங்கியது. அவன் அவளைத் தேற்றினான். கிழக்கே நன்றாக வெளிச்சம் வந்துவிட்டது.

சாஹிதி தேறிக்கொண்டு “நான் போய்வருகிறேன். இன்றைக்கு நீங்க  செய்த உதவிக்கு ரொம்ப நன்றி” என்றாள்.

“நான்தான் உனக்கு நன்றி சொல்லணும். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு உண்மையான சிநேகிதி கிடைத்திருக்கிறாள் என்று தோன்றுகிறது. சாஹிதி! புனிதமான நம் நட்பு என்றென்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று வாக்குக் கொடு” என்று கையை நீட்டினான்.

அவன் அன்பிற்கு அவள் உருகிவிட்டாள். அவன் கை மேல் கை வைத்து “சரி” என்றாள். “திரும்பவும் எப்போ சந்திப்போம்?” இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டு இருக்கும் போது கேட்டான்.

“உங்கள் விருப்பம்.”

“கல்லூரியை விட்டதுமே எங்க ஆபீசுக்கு வந்துவிடு. சேர்ந்து காபி குடிப்போம்.”

“கார் வரும். டிரைவர் இருப்பான்.”

“பிராக்டிகல்ஸ் இருக்கு. தாமதம் ஆகும் என்று சொல்லு.”

அவள் கொஞ்சம் யோசித்தாள். போய் சொல்லுவது புதிது இல்லை. ஆனால் பழக்கம் இல்லை. ஆனாலும் அவன் வார்த்தையை மறுக்க முடியாமல் “சரி” என்றாள்.

“இன்ஷூரென்ஸ் கம்பெனி தெரியும் இல்லையா. அங்கே வந்து கேட்டால் யாராவது சொல்லுவார்கள். அதுசரி, என் பெயரை சொல்லவே இல்லையே? ராமநாதன்” என்றான்.”

(தொடரும்)

 

 

 

 

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *