அசாம்  – அவதானித்தவை

 

எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்துடன் இவ்வருடம்  ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வட  கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்தேன். பலவகையில் வித்தியாசமான அனுபவம். இதுவரையிலும் நாம் பார்த்த இந்தியாவாக இந்தப் பிரதேசம்  இருக்கவில்லை.   

தற்பொழுது  அசாம்,  மேகாலயா மாநிலங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது எனும் செய்திகள் வரும்போது மனதுக்குக் கஷ்டமாகிறது. நாம் பிரயாணம் செய்த இடங்கள் எங்களுடன் உளரீதியாக இணைக்கப்படுகிறது . ஒரு விதத்தில் எமக்குத் தெரிந்தவர்கள் துன்பம் போன்றது. தொடர்ந்து தொலைக்காட்சியை பார்த்தபடியிருந்தேன்.

இந்தியாவின் ஏழு தென் கிழக்கு மாநிலங்கள். அத்துடன் சிக்கிம் சேர்ந்து  எட்டாகும்.  ஆரம்ப காலங்களில் ஒன்றாக இருந்து பிற்காலத்தில் பிரிக்கப்பட்டவை. இவை மொழி,   கலாச்சாரம், மதம்,  மக்கள் உருவ அமைப்பில்  மற்றைய இந்தியாவிலிருந்து மாறுபட்டது.  பெரும்பாலானவர்கள் பர்மிய இன முகச் சாயல் கொண்டவர்கள்.  இதுவரையில் புவியியல் சார்ந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால்,  பொருளாதார முன்னேற்றம் குறைவு. ஆனால்,  பாதைகள், பாடசாலைகள்,  தற்காலத்தில் வேகமாக அமைக்கப்படுகிறது. 1000 கிலோ மீட்டர்கள் மேலாக காரில் நாங்கள் பயணித்தபோது அருணாசலப் பிரதேசத்தில்  சில இடங்களில் மட்டுமே பாதைகள் அழிந்துள்ளன.  நான் சென்றது  அசாம்,  மேகாலயா, அருணாசலப் பிரதேசம் மட்டுமே என்பதால் என் அவதானிப்பு அதற்குள் உள்ளது.

 

அருணாசலப் பிரதேசத்திற்குப்  போகவேண்டுமென்றபோது,  வெளிநாட்டவரான எனக்கு விசேட அனுமதி,  மத்திய அரசிடமிருந்து எடுக்கவேண்டும் என்றார்கள். அதற்கான எனது புகைப்படத்துடன்   நான் சமீபத்தில் பாகிஸ்தான் போகவில்லை,  அங்கு எனது உறவினர் எவருமில்லை:   தொடர்புமில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட  பல தகவல்களை எனது டெல்லி முகவரிடம் கொடுத்தேன்.

 

தனியாக மெல்பனை  விட்டு வெளியேறிய போதிலும் எனது பாடசாலை நண்பரான டாக்டர் திருச்செல்வத்தை சென்னையிலிருந்து சேர்த்துக் கொண்டேன் . அவர் பல காலமாக ஆதார் கார்டுடன் இந்தியாவில் வாழ்பவர். எனது பயணத்திலிருந்த பல கஷ்டங்கள் அவருக்குத் தெரியாது . ஏன் எனக்குக் கூடத் தெரியாது.

 

ஏற்கனவே குளிருடுப்புகள்,  நடப்பதற்கான விசேட பூட்ஸ் , லைட்  மற்றும் பலவற்றை  கொண்டு வர வேண்டுமென்றார்கள். நான் மெல்பனில் பார்க்காத குளிரா என்ற அலட்சியத்தில்   எதுவும் கொண்டு போகாது போனேன் . ஆனால்,  நான் போட்டிருந்த காலணி சரியானது. எனது நண்பருக்கு,  மனைவி புதிதாக  தோல் காலணி வாங்கி கொடுத்திருந்தார் – நான் இது சரி வராது எனச் சொன்னபோதும் அவர், அது வசதியாக இருக்கிறது என்றார்.     

சென்னையில் ஏறியபோது நாங்கள் ஏற்கனவே இன்ரநெட்டில் இருக்கைகள் பதிவு செய்திருக்க வேண்டும் எனச் சொன்னார்கள் பின்பு 400 இந்திய ரூபாய்கள் கொடுத்ததும் எங்களை அனுமதித்தார்கள்.

பிரயாணத்தின்போது,  எனது விமான இருக்கையின் பக்கத்தில் ஒரு வயதான மலையாளி அமர்ந்திருந்தார்.  அவர்,  தாங்கள் 40 பேர் அசாம்,  மேகாலயா சுற்றுலா போவதாகவும்,  அதற்காகச் சமையல்காரர் இருவரையும் அழைத்துப் போவதாகவும் சொன்னார். சமையல்காரரை அழைத்துக்கொண்டு  ஊர் சுற்றுவது  உலகத்தில் இந்தியாவில் மட்டுமே நடக்கும் அதிசயமாகத் தெரிந்தது. ஒரு விதத்தில் ஆச்சரியமாக இருந்தது.  அதே நேரத்தில் ஆனந்தமாக தங்களது இடியப்பம்,  புட்டு,  பலாப்பழம் என  உணவுண்டு , மம்மூட்டியின் படத்தைப் பார்த்து,  ஜேசுதாசின் பாட்டைக் கேட்டபடி  அவர்கள் பஸ்சில் போவதை பொறாமையுடன்  அவதானிக்க முடிந்தது.  அத்துடன் நட்பாக,  என்னையும் தங்களுடன் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னார். சிரித்து நன்றி சொன்னேன்

அசாமின் தலைநகரமான  குவஹாத்திக்கு  வந்து சேர்ந்தபோது மிகவும் அழகான விமான நிலயமாகத் தெரிந்தது. முழு வடகிழக்கு இந்தியாவுக்கு இதுவே பிரதான விமான நிலையம்.  எங்களை அழைத்துச் செல்பவர்    சிறிது நேரம் வரவில்லை.  பேய்க்குப் பேன் பார்த்தது போல்  முழித்தோம் – அசாமிய  மொழி தெரியாது.  இந்தி     புரியாது.

எனது பயணத்தை ஒழுங்கு செய்தவரைத் தொடர்பு கொண்ட சிறிது நேரத்தில்,  வெற்றிலையை வாயில் மெண்றவாறு  ஒரு இளைஞன் வந்தான். வந்தவன் அசாமியராகத் தெரியவில்லை. இளைஞர் என்றாலும்,   வெற்றிலை போட்டு  கார் கண்ணாடியை தொடர்ச்சியாக திறந்தபடி   துப்பிக்கொண்டிருந்தார்.  பல வட இந்தியருக்கு இந்த பழக்கம் உள்ளது. ஆனால்,  இந்த இளைஞர் வங்காள தேசத்தவர் என ஊகித்தேன்.

 

குவஹாத்தியில் இரண்டு நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடாக இருந்தது. எங்களது விடுதியிலிருந்து பார்க்க பிரம்மபுத்திரா ஆறு கீழே ஓடுவது தெரியும்.

 

குவஹாத்தி  நகர்  பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் உள்ளது.  நகரூடாக    பிரம்மபுத்திரா ஆறு ஓடுகிறது  பக்கங்களில் மலைக்குன்றுகள் கண்டியை நினைவுக்குக் கொண்டுவந்தது.  அசாம் முகாலய மன்னர்களால்  இறுதிவரையும் கைப்பற்ற முடியாத பகுதி. பலமுறை படை எடுத்தும் தோற்றார்கள் என்ற செய்தி தெரிந்தது

அசாமின் (Pragjyotisha) புராணக்கதையில் பகதத்தன்( Bhagadatt )  என்ற வீரன் அருச்சுனனுடன் வீரமாகச் சண்டை பிடிப்பான் . அவன் நரகாசரனது மகனானதால் கிருஷ்ணனோடும் பகையுள்ளது. அசுவமேத யாகத்தில் அருச்சுனனால் தோற்கடிக்கப்பட்டதால் பாண்டவரோடும்  பகைகொண்டவன். அதனால் கௌரவர்களோடு சேர்கிறான்.   குருக்ஷேத்திரத்தில்   12 நாள் சண்டையில் வீமன் உட்பட எல்லாரும் பகதத்தனிடமும் அவனது யானையுடனும் (Supratika) இறுதியில் தோற்றுப்போக மீண்டும் அருச்சுனனாலே தோற்கடிக்கப்படுகிறான்.

பிற்காலத்தில் அசாமின் பகுதிகள் காமரூப நாடாகச் சொல்லப்படுகிறது. நாங்கள் குவஹாத்தியில் உள்ள  அருங்காட்சியகம் சென்றபோது அங்குள்ள சிற்பங்களில் பல ஆண்-  பெண் நிர்வாண மற்றும் கூடலைக் காட்டும் சிற்பங்களிருந்தன.  அந்த அருங்காட்சியகத்தில் அசாம் பற்றிய அதிகமான தகவல்களைப் புரிந்து  கொள்ள முடிந்தது.

அதன் பின்பாக மதியத்தில்  அங்குள்ள பிரசித்திபெற்ற,   நமது மொழியில் காமாச்சி எனப்பெயர் பெற்ற ( (Kamakhya Temple)  அம்மன் கோவிலுக்குச் சென்றோம். அந்தக் கோவில் புதுமையானது.  பெண்களுக்கு வரும் மாதவிடாயை,  மழைக்குப் படிமமாக்கிய கோவில். அங்கு ஆடு வெட்டப்பட்டு இரத்தத்தினால் பூசை நடக்கிறது . ஆடு வெட்டும் இடத்தை நான் உயரத்தில் ஏறி நின்று பார்த்தேன். தொடர்ச்சியாக வரிசையில் ஆடுகள் கொண்டுவரப்பட்டு கத்தரிக்காயின்  முகிழ்ப்பகுதி வெட்டுவதுபோல்  கழுத்து துண்டிக்கப்பட்டது. ஏனோ ஆடுகள் அசாமில்  சிறிதாக இருக்கின்றன. தமிழகத்திலும்   யாழ்ப்பாணத்திலும்  வேள்விக்காக வெட்டப்படும் ஆடுகள் கொழுத்து வளர்ந்திருக்கும் . ஊரில் வேலை செய்யாது உடல் பெருத்தவர்களை,   “ என்னடா வேள்விக் கிடாய்போல் வளர்ந்தது தான் மிச்சம்  “ என்ற  பேச்சுத்  தொடரை பாவிப்பார்கள். எனது அப்பு கூட நான் காதலித்தபோது யாருக்கோ அவ்வாறு  சொன்னதாக அறிந்தேன் ( சீதனமற்று கல்யாணம் முடித்தவர்களை ஊரில் பிரயோசனமற்றவர்கள் எனக்கருதுவார்கள் )

நமது இந்து  மதத்தில் எதற்கும் கதையுண்டு.

காமாச்சி அம்மன் சிவபெருமானிலிருந்து பிரிந்த ஆதி சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார். இவர் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். இவரைப் பவானியெனச் சிவமகாபுராணம் கூறுகிறது. பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்ட தட்சனுக்கு  மகளாக பிறந்தார். அதனால் பிரம்மாவின் பேத்தியாகக் கருதப்படுகிறார். சிவபெருமானிடம் இருந்த வன்மம் காரணமாக தட்சன் பெரும் யாகமொன்றினை நடத்துகிறான். அந்த யாகத்திற்குச் சிவபெருமானுக்கும்  தாட்சாயிணிக்கும் அழைப்பு அனுப்பாமல் இருக்கிறார். தந்தையின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக தட்சனின் யாகத்திற்கு வந்த தாட்சாயிணி அவமானங்களை சந்திக்கின்றார். அத்துடன் தன்னுடைய கணவரான சிவபெருமானை தட்சன் அவமதித்தை தொடர்ந்து அந்த யாகத்தில் விழுந்து இறக்கின்றார். அதனையறிந்த சிவபெருமான் வீரபத்திரனைத் தோற்றுவித்து தட்சனை கொல்லும்படி உத்தரவிடுகிறார். தாட்சாயிணியின் உடலை எடுத்துக் கொண்டு நிலையின்றி சிவபெருமான் அலைவதைக் கண்ட திருமால் தாட்சாயிணியின் உடலை சக்கராயுதத்தினால் தகர்க்கின்றார். அதனால் தாட்சாயிணியின் உடல் பல பகுதிகளாக சிதறுண்டு பூலோகத்தில் பல இடங்களில் விழுகின்றது. இவ்வாறு விழுந்த இடங்கள்  சக்தி பீடங்களாக மாறியமையால்  அவை  மக்களின் வழிபாட்டிடமாகிறது.  உமாதேவியின்  யோனி விழுந்த இடத்தில்  இந்தக்  கோவில் அமைந்துள்ளதாகப் புராணம் சொல்கிறது. அதே வேளையில்  ஆதிக்குடிகளது வேள்விப் பகுதியாக இருந்த இடத்தை வேதப்பிராமணியம்(Vedic Bramanism) தன்மயமாக்கி,  மதுரை மீனாட்சியைப் போல் உருவாக்கிய கட்டுக்கதை இந்த யோனிக்கதை என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

எல்லா மதங்களும்  பாம்பு போன்றவை.  சிறிய இரைகளை விழுங்கி வெளித்  தள்ளுவதைப் பற்றி  ஜெயமோகன் எழுதிய சுடலை மாடன் கதை பேசுகிறது. தற்பொழுது மதப்பாம்புகள் பாம்புகள் ஒன்றை ஒன்று பார்த்துச் சீறுகின்றன.  

பிரம்மபுத்திரா இந்தியாவில் அகலமானது .  அத்துடன் அதிக நீர் கொண்டுள்ளது.  பிரம்மபுத்திரா நதியில் இரு மணி நேரம்  ஒரு படகில் போய் வரலாம் எனப் புறப்பட்டோம்.   அந்தப் படகில்  நாங்கள் சென்றபோது அங்கு பிறந்தநாள் விழா நடந்தது. இந்திப்பாட்டுகள்  பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கெங்கும் ஒலிக்க எங்கள் ஒரு நாள் பயணம் முடிவுக்கு வந்தது.

—0—

Series Navigationஎழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !