அம்பலம்

This entry is part 14 of 14 in the series 26 மார்ச் 2017

 

 

ஸிந்துஜா 

 

சொல்வனம் லேட்டஸ்ட் இதழில் 1996ல் அம்பை எழுதிய

தி. ஜானகிராமனின் மரப்பசுவைப் பற்றிய கட்டுரை

போட்டிருக்கிறார்கள்.

பசுவைப் பற்றிய மிக நல்ல பயனுள்ள கட்டுரை அது.

 

 

 

சில “இலக்கியஎழுத்து”க்களை படிக்கும் போது

அச்சம் வந்துவிடுகிறது.கீழ்க்கண்ட வரிகளை படிக்கும் போது

என்ன ஒரு ‘உதார்’ என்று தோன்றவில்லை?

“முன்னகர வேண்டும் என்னும் விழைவோ ஒரு வித

திருப்தியின்மையோ மனதிற்குள்ளாக உழன்றாலும்,

அம்மாற்றம் நிகழ்கையில் மேல்மட்டத்தில் மிதக்கும்

பிரக்ஞை அதை உற்று நோக்குவதில்லை. சொல்முறை,

தேர்ந்தெடுக்கும் சொற்கள், நடை என மொழிப்புலத்தில்

நிகழும் மாற்றங்களுக்கு ஆழ்மனமே பிரதானமான

பங்கு வகிக்கிறது எனத் தோன்றுகிறது. கடலடியில்

தட்டுகள் நகர்வது மேல்மட்டத்தில் பயணிப்பவர்களுக்குத்

தெரியாது என்பது போல. இதற்கு வாசிப்பின் விரிவு,

கூர்மையான உரையாடல்கள், சுயவிமர்சனம் சமூக

குடும்பச் சூழல்கள், வாழ்க்கை நோக்கு என காரணிகளை

அடுக்க முயன்றாலும் அதன் பிறகும் ‘புலப்படாத’

ஏதோவொன்று அதில் வினையாற்றி இருப்பதாகவும்

அதை துல்லியமாக வரையறுத்துவிட முடியாது

என்றும் படுகிறது.”

தமிழ் வாசகனை  தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து

காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?

 

 

 

சுஜாதாவின் பிறந்த அல்லது இறந்த நாளை வைத்து எழுந்த

எல்லா இரைச்சல்களும் அடங்கிய பின் எழுதலாம் என்றிருந்தேன்.

சுஜாதா தன்னை ஒரு இலக்கியப்பிராணியாக எப்போதுமே

நினைத்ததில்லை என்று நான் பிடிவாதமாக நம்புகிறேன்.

சுஜாதாவின் இன்டெலிஜென்ஸ் பற்றி சுஜாதாவுக்குத்

தெரியாது என்று நம்பிய/நம்பும் யாராவது ஒரு அநாமதேயம்தான்

அவர் இலக்கிய அந்தஸ்துக்கு ஏங்கினார் என  நினைத்து எழுதவும்

கூடும்.

சுஜாதா பெண்களின் மார்புகளை வைத்து எழுதியிருப்பது

பல “ஆளுமைகளை” தொந்திரவு படுத்தியிருப்பது ஏன் என்று தான்

எனக்குப் புரியவில்லை.  மார்புகள் எழுதப் படக் கூடாத விஷயங்கள்

அல்ல. அதுவும் இப்போது பெண்கவிமணிகள் ஆண்குறியைக் குறி

வைத்து எழுதும் நாட்களில். இந்த “ஆளுமைகளும்” பெண் உடம்பை

எழுதாதவர்களா என்றால் அதுவுமில்லை. நான் சுஜாதா செய்தது சரி

தப்பு என்கிற வாதத்துக்கே வரவில்லை. ஆனால் நம் ‘பிள்ளை’

எழுத்துத் தச்சர்கள் அதை பற்றிக் குமுறிக் குறை சொல்வதுதான்

மகா பாவம் !

 

 

 

தற்போது நான் ஒரு மாதத்துக்கு இரண்டு மூன்று முறை சலூனுக்குச்

செல்கிறேன்.எனக்கிருக்கும் தலைமுடிச் செழிப்புக்கு வருஷத்துக்கு

ஒரு முறை நான் போனாலே  போதும். சென்னையில் உள்ள தேஜஸ்

(வயது இரண்டரை) “ஏன் உனக்கு  தலேல  two hairs தான் இருக்கு?” என்று

யு.கே.ஜி.இங்கிலீஷில் கேட்கிறான். என் நண்பர்களும் சந்தேகத்துடன்

என்னைப்  பார்க்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நான் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரைதான்.

அந்தப் பிரபல எழுத்தாளர் கசடதபறவை அறிமுகம் செய்து கொண்டது

ஒரு சலூனில்தானாம். இன்னும் இது மாதிரி கண்டுபிடுப்புகள் சலூனில்

இருந்து கிளம்பி வரலாம், அந்த மாதிரி புது இலக்கிய வரவுகளை

நான் மிஸ் பண்ண விரும்பவில்லை.

 

 

 

சில வருஷங்களுக்கு முன் வ. ஸ்ரீ நிவாஸன்  அசோகமித்திரனைப் பேட்டி காண்கிறார்:

கேள்வி : தி.ஜா .பற்றி அவரது நாவல்கள் சிறுகதை பற்றிச் சொன்னீர்கள். இன்னும் விரிவாக ஒரு பேட்டியாக இதை அமைத்துக் கொள்ளலாமா? உங்களுக்கு அது முடியுமா?

அசோகமித்திரன்:அது கொஞ்சம் கஷ்டம். ஜானகிராமனைப் பற்றி அதற்குள் என்ன சொல்லிவிட முடியும். இப்போ என் கையில் ஒரு நண்பர் அனுப்பிய ‘நதானியல் வெஸ்ட்’ பற்றிய கருத்துரை இருக்கிறது. அவர் 1940களிலேயே இறந்து விட்டார். சினிமாவுக்கெல்லாம் எழுதி இருக்கிறார். இப்போது அவர் எழுதிய இரண்டு நாவல்களை ‘க்ளாஸிக்ஸ்’ என்கிறார்கள். 70 வருடங்களுக்குப் பிறகு. ஜானகிராமன் மறைந்து எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கும்?

கேள்வி : 30 வருடங்கள்.

அ.மி.: இது ரொம்ப சீக்கிரம் இல்லையா? அவர் பற்றிய உணர்ச்சிப் பூர்வமான கணிப்புகள் அடங்கிய பிறகுதான் சொல்ல முடியும்.

அ. மி.. யைப் பற்றி என்னிடம் கேட்டார்கள். 2087ல் சொல்வதாகக் கூறியிருக்கிறேன்.

Series Navigationபிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) – இடைக்காலம் தொடர்ச்சி
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *