அம்மா என்றால்….

This entry is part 1 of 41 in the series 8 ஜூலை 2012

”ஏங்க.. அம்மா பாருங்க இன்னும் படுக்காம ஏதோ எழுதிட்டே இருக்காங்க. உடம்பு கெட்டுடப் போகுது. டாக்டர் தூக்க மாத்திரை கொடுத்திருக்கார். நேரத்திலேயே படுக்கச் சொன்னாரே.. நீங்கதான் சொல்லக் கூடாதா…”

“விடும்மா.. வனிதா… அவங்க முருகா சரணம் எழுதுவாங்கன்னு உனக்குத்தான் தெரியுமே. தூக்கம் வந்தா அவங்களே படுக்கப் போயிடுவாங்க”

இருவர் மனதிலும் ஏதோ பாரம் அழுத்த பேச்சு தடைப்பட்டு, சிந்தனை வலுப்பெற்றது. அப்பாவிற்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ததற்கு முழுதாக நண்பர்களிடம் வாங்கிய ஐந்து இலட்சம் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அம்மாவின் நுரையீரல் பாதிப்பும் சேர்ந்து கொண்டு வைத்திய செலவு, செயற்கையாக மூச்சுவிட ஊக்குவிக்கும் ஆக்சிஜன் இயந்திரம், மாத்திரை, மருந்து என்று. சக்திக்கும் மீறி செலவு. அவ்வப்போது குழந்தையும் நலங்கிக் கொண்டே மருத்துவம், பிசியோதெரபி என்று மன உளைச்சலும் சேர்ந்து கொள்கிறது. இவ்வளவையும் மீறி அம்மாவையும், அப்பாவையும் மனம் கோணாமல் மகிழ்ச்சியாக, சிரமம் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரே முனைப்பாக கணவனும், மனைவியும் செயல்படுவது மிகப் பெரிய விசயம்தான். உலகில் இப்படி ஒரு மருமகள் யாருக்குக் கிடைப்பாள், எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறார்கள் என்று சொல்லாத உறவுகளே இல்லை. ஆனாலும் அம்மா மட்டும் திருப்தியாகவே இருப்பதில்லை. உடம்பு வேதனை தாங்காமல்தான் இப்படி இருக்கிறார்கள் என்று அப்பா சொல்லி சமாதானம் செய்தாலும், குழந்தை போல சின்னச் சின்ன விசயத்திற்கெல்லாம் அடம் பிடிக்கவும், பிடிவாதம் பிடிக்கவும் செய்யும் போது கோபத்தை அடக்கிக் கொள்வது சிரமமான காரியமாகி விடுகிறது……. நேரத்திற்கு ஒழுங்காக சாப்பிடுவதுகூட இல்லையே என்று கவலை வேறு அதிகமாகிவிடுகிறது. திரும்பவும் ஒரு குழந்தைப் பருவத்தில் அடி எடுத்து வைத்தது போலவே இருந்தது அம்மாவின் செயல்கள் அனைத்தும். வயதானால் அவர்களும் இன்னொரு குழந்தைதானே.. மாமியாரையும் அப்படித்தான் நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டிவந்தது வனிதாவிற்கு…..

ஊசி முனை அமைதி. நகரத்தின் முக்கியமான மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவு. பரபரப்பான சூழலிலும் ஆழ்ந்த அமைதி… அத்துனை முகங்களிலும் வேதனையின் உச்சம். தம் நெருங்கிய உறவுகளின் இறுதிக்கட்ட போராட்டத்தின் அழுத்தத்தை தாங்க முடியாத ரணம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஒவ்வொருமுறை கதவு திறக்கப்படும் போதும் ஒவ்வொருவர் முகத்திலும் என்ன செய்தி வருமோ என்ற பதட்டம். தெய்வ பக்தி உள்ளவர்கள் முழுமையான சரணாகதியில் அமைதியடைய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். பொதுவாக நல்லதொரு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்து விட்டால் ஓரளவிற்கு நம்பிக்கை கொடுத்து, தைரியமும் கிடைக்கும்.. ஆனால் இன்று அத்துனை பேருக்கும் டென்சனின் உச்சத்திற்கு காரணம், உள்ளே என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட திங்கள் காலை மட்டும் 5 அவசர கேசுகள்.. எல்லாம் மாரடைப்பு.. (பொதுவாக திங்கள் காய்ச்சல் என்று சொல்லுவார்கள்.. விடுமுறை முடிந்து பணியின் சுமை கொடுக்கும் அழுத்தம் அது) இரவு முழுவதும் பெரும்பாலும் மின் தடை ஏற்பட்டிருந்ததால் சரியான உறக்கமும் இல்லாமல் பிரச்சனைகளின் அழுத்தமும் கூடி இரத்தக் கொதிப்பையும் அதிகமாக்கி, காலையிலேயே கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து விட்டது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தால் இங்கும் மின்வெட்டு! இருக்கும் ஒரே ஒரு ஜெனரேட்டரும் திடீரென்று பழுதாகிப் போக மருத்துவர்களும் செய்வதறியாது திகைத்துப் போயினர். எதையோ மாற்று ஏற்பாடுகள் செய்ய ஊழியர்கள் ஒரு புறமும், செயற்கை சுவாசம் தர வேண்டியவர்களுக்கு தற்காலிக அவசர சிகிச்சையும், இப்படி வழக்கத்திற்கும் அதிகமாகவே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த ஒரு மணி நேரம் ஒவ்வொருவரும் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

புயல் அடித்து ஓய்ந்தது போன்று ஒரு அமைதி வந்தது மின் இணைப்பு வந்தவுடன்.. அத்துனை அமைதியான சூழலில் சற்றே குரலை உயர்த்தி, ஒரு ஹவுஸ் கீப்பிங் அதிகாரியிடம் வாதம் செய்து கொண்டிருந்த நோயாளியின் சகோதரரின் குரல் பெரும் எதிரொலியாகக் கேட்டது. சமீபத்தில் ஒரு வழக்கில் உயர்நீதிமன்றத்தின நீதியரசர், இதுவரை மின்சார பற்றாக்குறையை சரிசெய்வதற்கு என்ன முயற்சி அரசு எடுத்திருக்கிறது.. அதைப்பற்றிய தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும், 12 மாதங்களுக்கும் மேலாக இப்பிரசசனை தொடர்ந்து கொண்டிருக்கிறது…. இதனால் விவசாயம், சிறு முதலீட்டாளர்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் பாதிக்கப்படுவதை சுட்டிக் காட்டியதை சொல்லி நொந்து கொண்டிருந்தார். உயிர் காக்கும் மருத்துவமனைகளுக்காவது மின்வெட்டை தவிர்க்கலாமே…. மனம் நொந்து அவர் பேசியது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மகேந்திரனும், வனிதாவும் இன்னும் எந்த பதிலும் வரவில்லையே என்று கைகளைப் பிசைந்து கொண்டு வியர்க்க விறுவிறுக்க நின்று கொண்டிருந்தனர்.. அம்மா காலையில் வழக்கமாக 7 மணிக்கெல்லாம் எழுந்து வந்து சோபாவில் அமர்ந்து காபி குடிக்கும் வழக்கம் இந்த ஆறு மாதமாக தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது. இன்று ஏனோ இன்னும் காணவில்லையே என்று அருகில் சென்று பார்த்த மகேந்திரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மூச்சுத் திணறல் அதிகமாக இருந்தது. நினைவும் தப்பிக் கொண்டிருந்தது.. அவன் போட்ட சத்தத்தில் வனிதா கையில் இருக்கும் பாத்திரத்தை அப்படியே கீழே போட்டுவிட்டு ஓடி வந்து பார்த்தாள். இரவு இன்வேர்ட்டரும் வேலை செய்யாமல், மின்சாரமும் இல்லாமல் செயற்கை ஆக்சிஜன் இயந்திரம் வேலை செய்யாததன் விளைவு இந்த மூச்சுத் திணறல் என்று புரிந்து அவசர அவசரமாக மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்..

மருத்துவர் வெளியே வந்து, மகேந்திரனை அழைத்துச் சென்று, இன்னும் 72 மணி நேரம் போனால்தான் எதுவும் சொல்ல முடியும் என்றும், சர்க்கரை அளவும் மிகவும் அதிகமாக உள்ளதால் முதலில் அதைக் குறைத்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும் என்று சொன்னவுடன் கண்கள் இருட்டி, மயக்கம் வருவது போல விழப்போக வனிதா தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவனை வெளியே கூட்டிவந்து உட்கார வைத்து ஆசுவாசப்படுத்தி தைரியமூட்டினாள். 65 வயதில் வாழ்வின் பல கோர முகங்களைக் கண்டதன் விளைவு ஊரில் உள்ள அத்துனை வியாதிகளும் அணி வகுத்து நின்று வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது.. ஓயாமல் முருகன் நாமத்தை செபித்துக் கொண்டு தாங்கொணாத வேதனையையும் அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தந்தையைப் பார்த்தவுடன் துக்கம் தொண்டையை அடைக்க ஆரம்பித்து விட்டது. மெல்ல அவர் அருகில் உட்கார்ந்து விசயத்தை பக்குவமாக எடுத்துக் கூறினாலும், அவருடைய இரத்தக் கொதிப்பு எகிறுவதை கட்டுப்படுத்த சிரமமாகவே இருந்தது. ஏற்கனவே இருதய நோயாளியான அவர், அழுகையைக் கட்டுப்படுத்த இயலாமல் குழந்தை போல விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டார். அத்துனை வேதனையிலும் மகளுக்கு தகவல் சொல்லியாச்சா என்று கேட்டார். அப்போதுதான் அந்த நினைவே வர அவசர அவசரமாக அமெரிக்காவில் இருக்கும் தன் ஒரே தங்கை அருணாவிற்கு தொடர்பைப் போட்டான்.

இரவு நேரமாதலால் தூங்கிக் கொண்டிருப்பார்களாதலால், போனை எடுக்க தாமதமானது. கொஞ்சமும் எதிர்பார்க்காத இந்த செய்தி கேட்டு அதிர்ந்து போனவள் உடனடியாகக் கிளம்புவதாகச் சொன்னாள்.. டிக்கெட் கிடைத்து அவள் சீக்கிரம் வர வேண்டுமே என்ற கவலையும் தொற்றிக் கொண்டது மகேந்திரனுக்கு..

அந்த 72 மணி நேரம் தாட்டுவது அவ்வளவு எளிதான காரியமாகத் தெரியவில்லை அவர்களுக்கு. அருணா கிளம்பி வந்து கொண்டிருந்தாள்… அம்மாவை நல்ல விதமாக திரும்ப வீட்டிற்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டும்தான் செய்ய முடிந்தது அப்போது…

சிம்மாசனம் போன்ற உயர்ந்த நாற்காலி. சுற்றி வெண்ணிற ஆடை தரித்த தேவதை போன்ற அழகுப் பெண்கள் கையை மெதுவாகப் பிடித்து அழைத்துச் சென்று அந்த சிம்மாசனத்தில் அமரச் செய்தபோது இனம் புரியாத மகிழ்ச்சி. சுற்றி புகை மூட்டத்தின் இடையே பல ஆண்டுகள் முன்னால் தவறிய தன் தாயும், சில ஆண்டுகள் முன்பு தவறிய சகோதரனும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக கையை அகல விரித்துக் கொண்டு வருகிறார்கள்… ஆனால் இவர்களெல்லாம் ஏன் அப்படியே அந்தரத்தில் மிதப்பது போலத் தெரிகிறார்கள்.. சில நிமிடங்களில் அதே தேவதைகள் திரும்பவும் கையைப் பிடித்து அழைத்து வந்து வெளியே விடுவது போன்று உணர்ந்த அந்த நொடி.. ’வீல்’ என்ற அலறல். தன் மார்பின் மீது இரண்டு மருத்துவர்கள் பலமாக அமுக்கிக் கொண்டிருப்பது புரிந்தது. ம்ம்ம்ம்.. என்று பெரிதாக நீண்டதொரு மூச்சு வெளிப்பட, சிலிர்ப்பாக மூச்சு முட்டிக் கொண்டு வெளியே வந்தது..

“ஓ … ஷி ஸ் அலைவ்… உயிர் பிழைத்து விட்டார் இந்தம்மா.. தேங்க காட் என்று சிலுவை போட்டுக் கொண்டார் அந்த மருத்துவர்.. போன உயிர்திரும்ப வந்து விட்டது.. அடுத்த சில நொடிகளில் சுயநினைவும் திரும்ப அனைவரையும் பார்க்கத் துடித்த அந்த அம்மாவை சற்று நேரம் அமைதி காக்கச் சொல்லி ஏதோ ஊசியும் போட்டார்கள். பக்கத்து கட்டிலில் வீல் என்று அலறல் சத்தம் அந்தப் பெண்மணியின் இறுதி நேர உயிர் பிரியும் மரண வேதனை! அவசரமாக நிமிடங்களில் சந்திராம்மாவை அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றினார்கள்.. கணவர், மகன், மகள் மருமகள், மருமகன், மற்றும் பேரக்குழந்தைகள் என அனைவரையும் பார்த்த போது கண்ணீர் மழை பெருக்கெடுத்து ஓடியது..

அருணா வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்க எண்ணியவள் அம்மாவின் அறையினுள் சென்று அவருடைய பீரோவில் தன் கைப்பையை வைக்கும் போது, அந்த பெரிய நோட்டு கண்ணில் பட எடுத்துப் பர்ர்க்க நினைத்தவள், பயணக் களைப்பில் படுத்து உறங்கலாம், பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கைப்பையை உள்ளே தள்ளி வைக்கலாம் என்று முயன்றபோது அந்த பெரிய நோட்டுப் புத்தகம் சரிய ஆரம்பிக்கவும் பிடிக்க முயன்று தோற்றுப் போனாள்…. கீழே அப்படியே விரிந்து விழுந்த நோட்டுப் புத்தகத்தில் கொட்டை எழுத்தில் அன்பு மகள் அருணாவிற்கு என்ற அம்மாவின் எழுத்துகள் தென்பட அப்படியே அந்த நோட்டை எடுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தவள் கண்களில் மாலை மாலையாக கண்ணீர். ……

அன்பு மகள் அருணாவிற்கு,

நலம்தானே கண்ணே, குழந்தைகளும், மாப்பிள்ளையும் நலம்தானே.. வழக்கம்போல் இது என்னுடைய முப்பதாவது மடல். எப்படியும் ஒருநாள் நீ என்னைக் காண வருவாய். உன் அலுவலகப் பணி ஒரு சமயம் உனக்கு விடுப்பு தரலாம், விசா ரினியூவல் முடிந்திருக்கலாம், பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம், மாப்பிள்ளைக்கும் விடுமுறை கிடைக்கலாம், குழந்தைகள் ரிஷி மற்றும் சாதனாவிற்கும் லீவ் விடலாம், இது எல்லாம் கூடி வரும்போது உங்களுக்கு விமான டிக்கெட்டும் நல்ல டீல் கிடைக்கலாம்… அப்போது நீங்கள் வரலாம். அன்று என் இறப்பிற்காக நீ வருவதாகக் கூட இருக்கலாம். அன்று என்னால் உன்னிடம் பேச முடியாமல் போனால் அப்போது உன் மனம் வேதனைப்படக் கூடும். அம்மாவிடம் மனம் விட்டுப் பேசும் வழக்கம் குறைந்து ஆண்டுகள் பலவானதே… என்று. உன்னைச் சொல்லி குற்றமில்லை. அலுவலகத்தில் பொறுப்பான உயர் பதவி, குடும்பத்தில் குழந்தைகள், கணவன் என்று உதவிக்குக் கூட ஆள் வைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை.. எல்லா வேலையும் நீயே செய்ய வேண்டும். நம்ம ஊர் போல உதவிக்கு ஆள்கூட அங்க கிடைக்க மாட்டாங்களே…

கண்களில் கண்ணீர் பார்வையை மறைக்க மெல்ல துடைத்துக் கொண்டு அடுத்த பகுதியை வாசிக்க ஆரம்பித்தவளுக்கு, அதிர்ச்சியும், கோபமும் கலந்த ஒரு மனநிலையில் மீதமுள்ள கடிதங்கள் அனைத்தையும் படிக்க முயன்றாள்… அனைத்து கடிதங்களுமே இப்படி ஏதேனும் ஒரு வகையில் கோபமான வார்த்தைகளை அமிலமாக வீசுவதாகவே இருந்தது….

”ஆனால் இங்கு நிலையே வேறு. தொட்டதெற்கெல்லாம் பணிவிடை செய்ய ஆட்கள். எள் என்றால் எண்ணெய்யாய் நிற்கும் புருசன்காரன் – அதான் உங்கண்ணன்.. எப்பப் பார்த்தாலும் குழந்தைக்கு உடம்பு சரியில்லேன்னு ஆஸ்பத்திரிக்கு அலைவதே சரியா இருக்குன்னு அலுத்துக்கற பொழைப்பு… என்னதான் உங்க அண்ணனுக்கு ஆபீஸ் வேலை மாளாம நேரங்கழிச்சி வீட்டிற்கு வந்தாலும், பையனை சாக்கு வச்சி வெளியே கிளம்பிப் போயிடுவாங்க… எதையாவது செஞ்சு எங்களுக்கு கடனை கட்டிப்பிட்டு, அவிங்க ஹோட்டல் ஓட்டலா போவாங்க…. இதெல்லாம் யாரு கேக்க முடியும். நீ பக்கத்துல இருந்தா உனக்காகவாவது செய்யலாம்…இப்ப அந்த விசனமும் இல்ல…. சரி முடியலைம்மா..எழுத முடியல.. மூச்சு வாங்குது. இந்த ஆஸ்துமா கொஞ்சம் கொஞ்சமா சித்திரவதை பண்ணுது.. ஒரேயடியா போய்ச்சேரலாம்னா அதுக்கும் குடுப்பினை இல்லை…போய் மிசினைப் போடுறேன்.. ஒரு இலட்சம் போட்டு வாங்கிக் கொடுத்திருக்கானே உங்க அண்ணன்காரன்… போடாட்டி திட்டுவான். இல்லேனா விடிய விடிய சிவராத்திரிதான்… வரேன்மா…..

அன்புடன்

அம்மா.

ஏனோ அருணாவிற்குத் தன் தாயின் மீது பரிதாபமும், கோபமும் மாறி, மாறி வந்தது.. அம்மாவையும், அப்பாவையும், தங்கத்தட்டில் வைத்து தாங்குவது போல தன் அண்ணனும், அண்ணியும் பார்த்துக் கொள்ளும் போது அம்மாவிடமிருந்து இப்படி ஒரு மடல் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது.. அண்ணனாவது அம்மாவின் வயிற்றில் பிறந்த பிள்ளை, என்ன பேசினாலும் தாங்கிக் கொள்ள இயலும்.; அண்ணியும் சேர்ந்து தாங்கிக் கொள்வது ஆச்சரியமாக இருந்தது அருணாவிற்கு. தன் அண்ணன், அண்ணியின் கண்களில் இந்தக் கடிதங்கள் படாமலா இருந்திருக்கும்.. நேற்று கூட இந்த பீரோவிலிருந்துதானே பணம் எடுத்து வந்தார்கள். எப்படி பார்க்காமல் இருந்திருக்க முடியும்.. என்ன கொடுமை இது. அவர்களின் மனம் எவ்வளவு சங்கடப்பட்டிருக்கும். அம்மாவின் புத்தி ஏன் இப்படி கெட்டுப் போனது, வயதானால் எல்லோரும் இப்படித்தான் சொந்த குணமே கெட்டு விடுவார்களோ, ஆனால் அப்பா அப்படி இல்லையே என்று அதே நேரம் அந்த எண்ணமும் தோன்றியது.. அம்மா கொஞ்சம் உடல்நிலை தேறியவுடன் இது பற்றி பேசி புரிய வைக்க வேண்டும். ஊரில் எப்படியெல்லாமோ பிள்ளைகளும், மருமகளும் இருக்கிறார்கள், இவ்வளவு நல்ல மகனும், மருமகளும் வாய்த்திருக்கும்போது ஏன் இப்படி புத்தி கெட்டுப் போகணும்னு கேட்டால்தான் மனம் ஆறும் போல் தோன்றியது.

அடுத்தடுத்த நாட்களில் அம்மாவின் உடல்நிலையில் சிறுகச் சிறுக மாற்றங்களும், முன்னேற்றமும் இருந்தது.. அருணாவிற்கு மட்டும் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக இதைக்கேட்டு, தான் ஊருக்கு திரும்புவதற்குள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டாள்..

அம்மா தன் பீரோவிலிருந்து ஒரு புடவையும், இரவிக்கையும் எடுத்து வரச்சொன்னார்கள். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது கட்டிக் கொள்வதற்காக. போகும்போது அவசரத்தில் நைட்டியுடன் கூட்டிச் சென்று விட்டார்களே என்ற கவலை வேறு. மருத்துவமனையில் அவர்கள் கொடுக்கும் கவுன் மட்டுமே போட வேண்டும். அது அம்மாவிற்கு பெரிய வருத்தம். தான் சென்ற முறை வந்திருந்தபோது அம்மாவிற்கு தான் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போன பிரிண்ட்டட் சில்க புடவை சிகப்பு வண்ணத்தில் கொடி,கொடியாக சிறு பூக்கள் இளம் பச்சை வண்ணத்தில் போட்டிருக்கும், அம்மாவிற்கு மிகவும் பிடித்த அந்தப் புடவையையே எடுத்துக் கொண்டு போகலாம் என எடுததவள் அதிலிருந்து ஒரு கவர் விழவும் குனிந்து எடுத்துப் பிரித்தாள். அதிலும் ஒரு கடிதம் இருந்தது. அருணாவிற்கு மட்டும் என்று கொட்டை எழுத்தில்.. பிரித்துப் படித்தவள் கண்களில் மீண்டும் கண்ணீர் வெள்ளம் பெருகியது.. அம்மாவை இப்படித் தவறாக நினைத்து விட்டோமே என்று…

ஆம் அந்த நீண்ட கடித்ததின் சாரம் இதுதான்.. தான் முற்பிறவியில் செய்த நற்காரியங்களின் பலனாகவே தனக்கு இப்படிப்படட குடும்பம் வாய்த்திருக்கிறது. கொஞ்ச காலமாகவே தன் உடல்நிலை அடிக்கடி கெட்டுவிடுவதால் அனைவருக்கும் உபத்திரவம் கொடுப்பது மனதிற்கு சிரமம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு முறையும் மருத்துவச் செலவும் அதிகம் ஆகிறது. தன்னால் எந்த உதவியும் செய்யவும் முடியவில்லை.. மகனும், மருமகளும் தனக்காகப் படும் வேதனையும் தாங்க முடியவில்லை. அவர்களுடைய அன்புப்பிடி மேலும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் அவர்கள் இருவரும் தன்னை வெறுத்துவிட்டால் எனக்காக அதிகம் கவலைப்படத் தேவையும் இருக்காது, தான் இறந்த பின்பும், பிரிவுத் துயர் வாட்டாது. தான் இருக்கும் போதே தனக்கான அத்துனை பணிவிடைகளையும் முகம் சுளிக்காமல், மகிழ்ச்சியாக செய்த மகனும், மருமகளும் மேலும் எந்த வருத்தமும் தங்கள் வாழ்நாளில் படவேக்கூடாது” என்று எழுதியிருந்தார்கள்..பல் எழுத்துக்கள் லேசாக அழிந்திருந்தது. எழுதும் போதே கண்ணீருடன் எழுதியிருப்பார்கள் போல..

இதைப்படித்துக் கொண்டிருக்கும் போதே வனிதா உள்ளே வந்துவிட அருணாவின் கண்ணீரைக் கண்டு பதறியவள், பின்பு ஏதோ புரிந்து கொண்டவள் போல..

“ என்ன அருணா, அம்மாவின் டைரியைப் படித்து விட்டாயா.. அதில் உனக்கு எழுதிய கடிதங்களெல்லாம். உன்னை வருத்தம் கொள்ளச் செய்கிறதா.. பரவாயில்லை இதை பெரிது பண்ணாதே. உங்க அண்ணனிடமும் இதுபற்றி சொல்லி விடாதே. நான் முன்னாலேயே இதைப் படித்துவிட்டேன். அம்மா உடம்பு வேதனை தாங்காமல் ஏதோ புலம்பியிருக்காங்க. அவருகிட்ட சொன்னால் வருத்தப்படுவார். சொல்ல வேண்டாம் ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக..

அருணா எதுவுமே பேசாமல் தன் கையில் இருந்த மற்றொரு கடிதத்தை அண்ணியின் கையில் கொடுத்தாள்… ஒன்றும் பேச முடியாத அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள் வனிதா…..
—————-

Series Navigationகாக்க…. காக்க….
author

பவள சங்கரி

Similar Posts

2 Comments

  1. Avatar
    s.ganesan says:

    Like her friend jaisree the author delivered one more story regarding amma sentiment…..now a days it becomes wonderstory when son/daughter does their duty to their parents…..

  2. Avatar
    பவள சங்கரி. says:

    அன்பின் திரு கணேசன்,

    வணக்கம். தலைப்பைப் பார்த்து அம்மா செண்டிமெண்ட் மட்டும் என்று நினைத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். முக்கியமான மின்வெட்டுப் பிரச்சனையும், வெளிநாடு வாழ் குழந்தைகளின், பிரிவின் ரணமும் உணர்த்துவதில் என் பங்கு சரிவர இல்லையென்று ஐயமேற்படுத்துகிறது தங்களின் கருத்துரை. தாய்மை உணர்வு இல்லாமல் உலகில் எவரும் இருக்க முடியாது.. ஏதோ ஒரு சூழலில் பாதிக்கப்படும்போது அந்த உணர்வு நம்மையும் மீறி வெளிப்படுவது இயற்கைதானே… தங்களின் வாசித்தலுக்கும், கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *