அலையின் பாடல்

This entry is part 25 of 25 in the series 7 ஜூலை 2013

மூலம்:கலீல் ஜிப்ரான்

தமில் : புதுவை ஞானம்.

எனது அன்பிற்கு உரியது உறுதியான கரை

நானோ அவன்றன் நெஞ்சம் கவர் கன்னி

இருவரும் இணைந்தோம் ஒன்றாய்

அன்பின் உந்துதலால்.

இழுக்கிறது நிலவு என்னை அவனிடம் இருந்து

விரைந்து விரைந்து திரும்பிச் செல்கிறேன்

மீண்டும் அவனிடம்

தயங்கித் தயங்கிப் பெறுகிறேன் பிரியா விடை.

 

நீலமாய் நிறைந்த

தொடுவானின் பின்னிருந்து கவர்ந்து வருகிறேன்

வெள்ளியின் நிறத்தை

கலக்கிறேன்  நுறையாய்க் கரையோர

மஞ்சள் மணலுடன்

என்னே வனப்பு எங்களின் சங்கமம் !

தணிக்கிறேன் அவனது தீராத தாகத்தை

விரிவாக்குகிறேன் அவனது விம்மும் இதயத்தை

தணிவிக்கிறான் அவன் எந்தன்

குரலையும் கோபத்தையும்.

அதிகாலை வேளையில் அவன் செவியில்

ஓதுகிறேன் காதலின் விதிமுறைகளை அவனோ

அணைத்துக் கொள்கிறான் ஆதரவாய் என்னை.

இசைக்கிறேன் யான் காற்றின் அமைதியில்

நம்பிக்கையின் கீதத்தினை _ பின்னர்

பதிக்கிறேன் யான் முத்தங்களை அவன்

முகம் முழுமைக்கும் _ யானோ

அச்சப்பட்டும் அவசரப்பட்டும் _ அவனோ

அமைதியும் பொறுமையும் சிந்தனையுமாய்.

அவனது பரந்த தோள்கள் சாந்தப்படுத்தும்

எனது பரபரப்பை.

காற்று வீசும் போது தழுவுகிறோம்

ஒருவரை ஒருவர் _ அது தணியும்போது

வீழ்கிறேன் யான் அவன் காலடியில்.

நர்த்தனம் புரிந்திருக்கிறேன் யான்  பலமுறை

கடற்கண்ணிகளைச் சுற்றி _ அவை மேலெழும்பி

என் மீது சாய்ந்து தாரகைகளைத் தரிசிக்கும் போது.

தங்களின் சிறுமை பற்றி  காதலர்கள் புகாரளிக்கும்

போது உதவி இருக்கிறேன் பெருமூச்சு விடுவதற்கு.

 

பலமுறை யான் மோதியிருக்கிறேன் குன்றுகள் மீது

குறுநகையோடு வருடிக்கொடுத்திருக்கிறேன் யான்

ஒருபோதும் திரும்பிப் பெற்றதில்லை அந்த நகையை.

பலமுறை யான் முழுகும் ஆன்மாக்களை தூக்கி

மென்மையாய்க் கொண்டு சேர்த்திருக்கிறேன் என்

பிரியமான கரைக்கு _ எனக்கு அளிப்பதைப் போன்றே

அவற்றுக்கும் அளித்திருக்கிறான் தெம்பை அவன்.

 

பலமுறை யான் திருடி இருக்கிறேன் நன்மணிகளை

கடலாழத்தில் இருந்து _ அன்பளிப்பாய் தந்திருக்கிறேன்

என் நேசத்துக்குரிய கரையன்பனுக்கு_ ஏற்றிருக்கிறான்

அமைதியாக_ இருந்த போதிலும் யான் தருகிறேன் ஏன் ?

எப்போதும் வரவேற்கிறானே என்னை அதற்காக.

இரவின் சுமையில் எல்லா உயிரினங்களும் சோம்பலின்

பேயைத் தேடும்போது யான் உட்கார்ந்து இருக்கிறேன்

ஒரு முறை பாடிக்கொண்டும்  _ மறுமுறை

பெருமூச்சு விட்டுக் கொண்டும்

எப்பொதுமே விழித்துக் கொண்டிருக்கிறேன் யான்.

அய்யகோ ! தூங்காமை பலவீனப்படுத்தி விட்டது என்னை.

ஆனால் நானொரு காதலி அல்லவா ? காதலின் உண்மை

வலிமை அல்லவா ? யான் சோர்ந்து போயிருக்கலாம்

ஆனாலும் சாக மாட்டேன் எப்போதுமே.    23.6.2013

Series Navigationகவிஞன்
author

புதுவை ஞானம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *