அவளின் தரிசனம்

நான் படுக்கைக்கு
எப்போது எப்படி
வந்தேன்
வியந்தபடி எழுந்தான்
புள்ளினங்கள்
விடிவெள்ளிக்கு
நற்காலை வாழ்த்துகையில்

நகை தாலி கூரைப்புடவை
வைத்த இடத்தில்
அப்படியே
அவள் எங்கே?

தாழிடாமல் வாயிற்கதவு
மூடப்பட்டிருந்தது
அவள் வந்ததே
கனவோ?

மீண்டும் அறைக்கு
விரைந்தான்
அவள் அமர்ந்த இருக்கைக்குக் கீழ்
சிதறிய காட்டுப்புக்கள்
வாடாமல் சிரித்தன

குதிரையை விரட்டினான்
பனித்துளிகள் படர்ந்த
மலைவனத்தில்
சுனை அருகே
நினைவில் தேடி
அடைந்தான்

நேற்று
புற்களாயிருந்த இடத்தில்
ரோஜாக்கள்
இளங்காலைப் பொற்கதிர்களில்
புன்னகையில் மிளிர்ந்தன

எங்கே சென்றாள்?

மனைவி என்னும்
வடிவம் தாண்டிய
பூரணமான பிணைப்பை
உன் முன்முடிவு மிகுந்த
சிந்தனை
கனவு காண்பதே இல்லை
சொற்களின் ஆழத்தை
உள்வாங்காது
அவள் முக எழிலில்
மூழ்கி இருந்தான் முதல் நாள்
மாலை

அடிவாரத்தைத் தாண்டும் போது
தொலைவில்
ஊரே திரண்டிருந்தது
மங்கலாய்த் தெரிந்தது

ஏகப்பட்ட பெண்கள்
மேகம் விரைவாய்
திரண்டது கலைந்தது மீண்டும் திரண்டது
பல்வேறு பெண் வடிவாய்
பொன்னிற தேவதையுமாய்
வியந்து சிலிர்த்தார்கள்
கூட இருந்த
ஓரிரு ஆண்களுக்கு
மேகத் திட்டுக்கள் மட்டுமே
தென்பட்டன

அவன் அண்ணார்ந்து
பார்த்தான்
அவளே தான்
மேகங்கள் அங்கங்களாய்
அவனைப் பார்த்துப்
புன்னகைத்தாள்

Series Navigationகவிதைதற்காலிகமாய் நிறுத்தப்படும் ஆட்டம்