அவியல்

aviyal

0

நான்கு குறும்படங்களை இணைத்து 132 நிமிட ஒட்டுச் சட்டையாக தந்திருக்கீறார் கார்த்திக் சுப்புராஜ்! வெரைட்டி இருந்தாலும் வயிறு ரொம்பவில்லை!

0

“ உனக்கும் எனக்கும் பிடிச்ச அவியல் “ என்றொரு தலைப்பு பாடலுடன் ஆரம்பிக்கிறது இந்தப் படம். முடிவில் உனக்கு பிடிக்கிறது. எனக்கு பிடிக்குமா என்றொரு யோசனையுடன் கலைகிறது ரசிகர் கூட்டம்!

1, ஸ்ருதி பேதம் – இயக்குனர் மோஹித் மெஹ்ரா.

தாத்தாவுக்கு நான்காவது குழந்தையாக பிறந்தவள் ராஜின் தாய். ராஜ், தன்னை விட ஒரு வயதே பெரியவளான ஸ்ருதி சித்தியை லவ்வுகிறான். ஆனால் தன் பழைய காதலை மீட்டெடுக்க ஸ்ருதி அவனை பயன்படுத்திக் கொள்ள, விரக்தியில் பிரிந்த காதலி சரண்யாவிடம் மண்டியிட்டு, மன்னிப்பு கேட்டு இணைகிறான்.

“ ஒரு ஆர்டிஓ ஆபிசர் என் மேலே வச்சிருக்கற நம்பிக்கை கூட உனக்கு என் மேலே இல்லை “ என்று காதலி, தன்னுடன் பைக்கில் வர மறுப்பதை சுட்டி காட்டும் ராஜ், பாபி சிம்ஹாவின் பாவங்களைக் கடன் வாங்கி தேறுகிறார். எல்லொரும் புதுமுகம் என்பதால் பெயர் தெரியவில்லை.

2, களம் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

குறும்படங்கள் மூலம் அகன்ற திரையை எட்டிவிட நினைக்கும் இளைஞர் பட்டாளம். சீனியர் நடிகரான விஸ்வநாதனின் மகனுக்கு நடிப்பு வராத காரணத்தால், அந்தக் குழு அவனை விலக்கி விடுகிறது. பழிக்கு பழி வாங்க விஸ்வநாதன், பிக்பாக்கெட் ஆசாமிகளைக் கொண்டு குறும்படப் போட்டிக்கு போக இருந்த குறுந்தகடை களவாடி காணாமல் போக்கி விடுகிறார். விஸ்வநாதனின் செயலுக்கு இளைஞர் அணியின் பதிலடி என்ன என்பதை சுவையாக சொல்லியிருக்கீறார் இயக்குனர்.

நடிகர் விஸ்வநாதனாக பத்திரிக்கையாளர் சுதாங்கன் ஒரு ஆச்சர்ய அறிமுகம்!

ஜேப்படி திருடர்களின் வாழ்வினை ஒரு அங்கமாக கொண்ட கதையும், அதில் சிக்கி தவிக்கும் இளைஞர்களின் போராட்டமும் புதிய களமாக கவர்கிறது. வெல்டன்!

3, கண்ணீர்  அஞ்சலி – இயக்குனர் குரு ஸ்மரன்

பாஸ்கர், பாஸ்கி எனும் பாஸ்கர் ராவ், ரமேஷ் மூவரும் நண்பர்கள். பாஸ்கி இறந்து விடுகிறான். அவனது அஸ்தி சொம்பை ராமேஸ்வரம் கடலில் கரைக்க புறப்படுகின்றனர் பாஸ்கரும் ரமேஷும். இடையில் கஞ்சா கடத்தல் பேர்வழி ஒருவனும் சேர்ந்து கொள்கிறான். காவல் துறை தன் மூக்கை நுழைக்கிறது. பாஸ்கியின் ஆவி வேறு இடையில் வந்து குழப்புகிறது. முடிவு என்ன? அஸ்தி கரைக்கப்பட்டதா என்பதே முடிச்சு!

வித்தியாச திரைக்கதை. நெடுக நகைச்சுவை தூவல்கள். குரு ஸ்மரன் கவனிக்கப்பட வேண்டியவர்.

4, எலி – இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்

ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு யூ ட்யூபில் வெளியிடப்பட்டு, பலராலும் ரசிக்கப்பட்ட இந்த குறும்படத்தை புதிய படம் போல வெளியிட்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜின் ‘போங்கு ‘ கண்டிக்கத்தக்கது.

எலியை வேட்டையாட காத்திருக்கும் பூனை, புலி கையால் சாவது ஒன்லைன்

தாதாவாக பாபி சிம்ஹா அசத்தல். அவரிடம் மாட்டிக் கொண்டு சாகத் தயாராகும் எலியாக நவின் பாலி கச்சிதம். ஆனாலும் சடார் திருப்பத்துடன் கூடிய முடிவு எதிர்பார்க்காதது!

0

பஃபே டின்னர் போல இருக்கிறது இந்தப் படம். ஆனாலும் பிடித்த உணவுகள் ரேஷனின் தரப்பட்டதால் வயிறும் நிறையவில்லை. மனமும் கவரவில்லை. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!

0

Series Navigationபிரேமம் ஒரு அலசல்பிரான்சிலே உலகத்தின் பிரமிக்கத் தக்க வானுயர்ப் பட்டாம்பூச்சிப் பாலம்