அஸ்தியில் பங்கு

 

நடேசன்

அது மெல்பன் குளிர்காலத்தில்  ஒரு   சனிக்கிழமை. அரை நாள் மட்டும் வேலை.  பாதையில் ஏற்பட்ட தாமதத்தால் சற்று பிந்தி வந்ததால் எனக்காகக் காத்திருந்த நாயொன்றைப் பரிசோதித்துவிட்டு  கம்பியூட்டரில் விபரங்களைப் பதிந்து கொண்டிருந்தேன். இக்காலத்தில் நாய்- பூனைகளை சரியாகப்  பரிசோதிக்கிறோமோ இல்லையோ,  எழுத்தில் பதிந்து விடவேண்டும். நான் மட்டும்  அந்த கிளினிக்கில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில்  விபரங்கள் எனக்கு மட்டுமே. ஆனால்,  மற்றவர்களுக்காக வேலை செய்யும்போது விபரமாக எழுதவேண்டும்.

வெளிப்புறமாக  ஒரு கார் வந்து நின்றது யன்னலூடாகத் தெரிந்தது.  யாரோ ஒருவர் தனது செல்லப்பிராணியைக் கொண்டு வரலாம் என நினைத்தேன். அவர்  உள்ளே வந்தபோது எட்டிப்பார்த்தேன். முகக்கவசம் போட்டிருந்ததால் அவரைத் தெரியவில்லை. வரவேற்பிலிருந்த புதிய  நர்ஸ்ஸான எலிசாவிடம் ஒரு காகிதப்பையை வாங்கியபின் சிறிது நேரம் பேசிக்கொண்டு நின்றார் .

 இறுதியில்  “யார் இன்று வேலை செய்வது? “ என்று அவர்  எலிஸாவிடம் கேட்கவும், எலிஸா  எனது பெயரைச் சொன்னபோது  எனது அறை வாசலருகே வந்து அந்த மனிதர்,   எட்டிப் பார்த்தபோது நான் எனது முகக்கவசத்தை விலக்கினேன் 

 “ நீங்கள் வேறு ஆள்”  என்று சொல்லிச் சிரித்தார்.

அது யங்.  சீன தேசத்தவர்  என அடையாளம் கண்டவுடன் எழுந்து  “ இது எனது கொரோனோத்தாடி “ என்றேன்.

அவர் ஏற்கனவே  எனக்குத் தெரிந்த யங்.   நாற்பது வயதிருக்கும் . தலை நரைத்திருந்தாலும் குழந்தைபோன்ற  முகம் . மெல்லிய தோற்றம். சரளமாக ஆங்கிலம் பேசும் மனிதர். எப்பொழுது வந்தாலும் பத்து நிமிடங்கள்  என்னுடன் பேசிவிட்டே செல்வார் 

அக்காலத்தில் சீனாவிலிருந்து வரும் உல்லாசப்பிரயாணிகளுக்கு விக்டோரியாவில் பல இடங்களைக் காண்பிக்க  வாகனம்  ஓடுபவர் . எங்கெங்கு முக்கிய இடங்கள் உள்ளன  என்பதையும் எனக்குச்  சொல்வார். அவரது டோடோ என்ற நாய் உப்புச்சத்துக் குறைபாட்டால் வரும் அடிசன் நோயால் பாதிக்கப்பட்டு  மாதம் தவறாமல்  வந்து  மாத்திரைகள் வாங்குவார்.

கிட்டத்தட்ட  பத்துவருடங்களுக்கு  முன்பு,  மதிய நேரத்தில் முப்பது வயது மதிக்கத்தக்கச்  சிறிய உடற் தோற்றமுள்ள சூ என்ற சீனப்பெண் வந்து கதவைத் தட்டியதும்,  அப்போதிருந்த எனது நேர்ஸ் கெலி கதவைத் திறந்தாள்.   அந்தப்பெண் உள்ளே வந்து கதிரையில் அமராது தனது கையிலிருந்த சிறிய பொமரேனியன் நாயை  தரையில்,  அதைச் சுற்றியிருந்த டவலோடு  வைத்தார்.

நான்  எழுந்து போய் பார்த்தவுடன் பெயரைக் கேட்டேன்.

“டோடோ”

 “என்ன வயது?”

“ஐந்து”

“என்ன நடந்தது? “

 “நான் இன்று வேலைக்குப் போய்விட்டு மதியத்தில் வந்தபோது , டோடோ இப்படி எழும்ப முடியாது கிடந்தது. மற்றும்படி மிகவும் வேகமாக ஓடித் திரியும். என்னை நோக்கி ஓடிவரும். இன்று கழுத்தை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தது.”

டோடோவின் ஒளியற்ற கண்கள்  எங்களைப் பார்த்தன.    மெதுவாக வாலை ஆட்டினாலும், அந்த வாலாட்டம்  சக்தியற்றதாகத் தெரிந்தது. கையை வைத்தபோது உடல் குளிர்ந்திருந்தது. இதயத்துடிப்பு சீராக இருந்தபோதிலும் பலமற்று இருந்தது

எந்தத்  தகவலும் தெரிந்தபடியால்,  எந்த நோயை  தீர்மானிப்பது ?

பாம்பு கடிக்க சாத்தியமுள்ளதா?

 “ உங்கள் வீடு பூங்காவுக்கு அருகாமையில் உள்ளதா?”

 

மெல்பனில் கோடை காலத்தில்  பாம்புகள் திரியும்.  அதிலும் பிரவுன் சினேக் (Brown snake) எனும் இனம்  கடித்தால்  அதன் நஞ்சு நரம்பு பகுதியைத் தாக்குவதால்  இப்படியாக நாய்கள் அசைவற்று போய் விடும்.

 ” இல்லை , வீட்டுக்குள்தான் நிற்கும்.  ஏதாவது மலம் சலம் கழிக்கச் சிறிய டோகி (Dog door) வாசலால்  வெளியே செல்லும். ”  

உடனே  அந்த டோடோவை மேசைக்கு எடுத்துச் சென்று சேலைன் ஏற்றி சில மணிநேரம் எனது கிளினிக்கில் வைத்திருந்தேன் . அரைமணி நேரத்தில் எழுந்து வாலையாட்டியபடி நின்றது . 

அடுத்த நாள் இரத்த பரிசோதனை செய்வோம் எனச்  சொல்லியனுப்பினேன்  .

அடுத்த நாள் வரவில்லை .  டோடோ நன்றாக இருப்பதால் இரத்த பரிசோதனையைத் தள்ளிப்போட்டார்கள் .

நன்றாக இருக்கிற நாய்க்கு ஏன் பணத்தைச் செலுத்திப் பரிசோதிக்கவேண்டும் என்ற அவர்களது நோக்கம் இயற்கையானது. நிச்சயமாக ஏதோ நோய் உள்ளது, எதற்கும் வருவார்கள் என்று நினைத்தேன்

அடுத்த நாள் காலை  மீண்டும் கொண்டுவந்தபோது நாலுகாலில் நின்றாலும்  அது வாலையாட்டவில்லை . கால்களை எடுத்து  வைத்து நடக்கவில்லை .

இன்று இரத்தத்தை எடுக்கவேண்டும் என நான்  அதன் இரத்தத்தை எடுத்துவிட்டு,  மீண்டும் சேலைன் ஏற்றினேன். முழுநாளும் கிளினிக்கில்  இருந்தது. நல்லவேளையாக   அன்று மாலையே இரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்தன .

அந்த முடிவுகளின் படி இரத்தத்தில் சோடியம் குறைந்திருந்தது.      சோடியம் –  பொட்டாசியம் போன்றவற்றின் அளவை சரியாக  வைத்திருக்கும் கோட்டிசோன்  ஓமோன் குறைந்துவிட்டது . அதனால் இரத்தத்தில் சோடியம் குறைந்ததும் தசைகள் இயங்க மறுத்துவிட்டன. தமிழில் அதற்கு  உப்புச் சக்தியில்லை என்போம்.

 

இதற்கான மருந்துகள் இருப்பதால் டோடோ ஒவ்வொரு நாளும் குளிகை விழுங்கும் நாயாக இருந்தாலும் மற்றைய எந்த நோயுமற்று ஆரோக்கியமாக வாழ்ந்தது.

அதற்கான மருந்துகள் உள்ளதால் மாதமொரு முறை யங்கோ அல்லது அவரது மனைவி சூ வந்து குளிகைகளை  எங்களிடமிருந்து பெறுவார்கள் .

பல வருடங்களாக மருந்தில் டோடோ வாழ்ந்தது.

——-

இன்று யங்கை கண்டதும்  “ என்ன நடந்தது ?” என  விசாரித்தேன்

 “ஞாயிற்றுக்கிழமை இரவு டோடோ  இறந்துவிட்டது.  திங்கள் அதனது உடலை கிளினிக்கில் அடக்கத்திற்காக கொண்டுவந்தேன். அதனது அஸ்தியை வாங்கிக் கொண்டுபோக வந்தேன். “ எனத் தனது கையில் உள்ள பையை உயர்த்திக்காட்டினார்.

அப்போது எனது நேர்ஸ்ஸான எலிசா   “அரைவாசி அஸ்தியை  ஏற்கனவே நேற்று சூ தனது பங்கிற்கு  வாங்கிவிட்டார்”  என்றாள்.

அப்பொழுது நான் யங்கைப் பார்த்தேன்.

 “நாங்கள் இருவரும் இப்பொழுது விவாகரத்து வாங்கிட்டோம்  “

எனக்கு  அதனைக்கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. விவாகரத்து நடந்தால் வளர்ப்பு நாய்க்கோ பூனைக்கோ உரிமை கொண்டாடி,  சண்டை இடுவதையும்,  நீதிமன்றம் போவதையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய அவுஸ்திரேலியர்களாக இருப்பார்கள் . ஆனால் அஸ்தியைப் பிரித்து வாங்குவது என்பதை  இதுவரை நான் பார்த்ததில்லை 

 “எவ்வளவு காலம் முன்பாக நடந்தது ?” 

 “ஆறு வருடங்கள் முன்பு.  ஆனால் நான்தான் டோடோவைப் பார்த்தேன். சூவின் இடத்தில் நாயை வைத்திருக்க முடியாததால் “  என்றார் யங்.

 

  “இப்பொழுது மீண்டும் உனக்கு விவாகமாகிவிட்டதா?“

“எனக்கு பிள்ளையுமொன்று உண்டு .  “ என்றார் யங்.

டோடோ கிட்டத்தட்ட எட்டு வருடங்கள்  இந்த நோயோடு வாழ்ந்தது பெரிய விடயம்தான் . டோடோ விடயத்தில் ஒற்றுமையாக அதை பாதுகாத்த  நீங்கள் இருவருமே பாராட்டுக்குரிவர்கள் “என்றேன் 

கதவைத் திறந்தபடி அரைவாசி அஸ்தியைக் கொண்டு செல்லும்  யங் ஏற்படுத்திய பாதிப்பு மாறவில்லை என எலிசாவிடம் சொன்னேன்.

“ டோடோவையும் இருவரும் பரமரித்தார்கள்.  மருந்துகளை எடுப்பதற்கு பல தடவை சூவும் வந்தாள்.   இருவருக்கும் பங்கிருக்கும் என்றாள் எலிசா. “

“ நாற்பது வருட மிருக வைத்திய தொழிலில் அஸ்தியைப் பங்கு போட்டவர்களைப் பார்த்தது இதுவே முதல் தடவை  “ என்று சொல்லிவிட்டு மீண்டும் எனது கம்பியூட்டருக்கு முன் சென்றமர்ந்தேன்.

—0—

 

 

Series Navigationஎஸ் பொவின் தீ – நாவல்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 249 ஆம் இதழ்