இந்திய இலக்கிய சிற்பிகள் – மா.அரங்கநாதன்

 

அழகியசிங்கர்

          16ஆம் தேதி ஏப்ரல் 2022 ல் மா அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்பட்டது.

          அப்போது முக்கியமாக இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழாவும் நடந்தது.

          ஒரு புத்தகம் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் மா.அரங்கநாதன் குறித்து எஸ்.சண்முகம் எழுதிய புத்தகம்.  

          சாகித்திய அகாதெமி சிறந்த முறையில் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ என்ற தலைப்பின் கீழ் பல்வேறு எழுத்தாளுமைகளைப் பற்றி புத்தகங்கள் கொண்டு வருகிறார்கள்.

          அதில் முக்கியமான புத்தகம் மா.அரங்கநாதன் புத்தகம்.  முத்துக்கறுப்பன் என்ற பெயர் மா.அரங்கநாதனின் சிறுகதைகளோடு ஆழ்ந்திருக்கும் சொல்.  இதை வெறும் பெயர்ச் சொல்லாக மட்டுமே பொருள் கொள்ளவியலாது. 

          இந்த மெய்யியல் தமிழில் வைதீகத்திற்கு எதிரான அவைதீக குரலாக தமிழ்க்கொடி மரபிலிருந்து வந்துள்ளது என்பது அரங்கநாதனின் உறுதியான நம்பிக்கை.

          மா.அரங்கநாதனின் சிறுகதைகள், நாவல்கள், கவிதையைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் என்று பலவாறு இப் புத்தகம் அலசுகிறது.

          மா.அரங்கநாதனின் படைப்பிலக்கியத்தின் ஊற்றுக்களில் இரண்டு அம்சங்கள் உண்டு.  ஒன்று அவைதீகச் சிந்தனை.  இரண்டு சங்க இலக்கியத்தின் இன்மைப் பண்பு.  ஆனால் இவ்விரு புள்ளியிலேயே தங்கிவிடாமல் மேற்கத்திய இலக்கியப் போக்குகளுடனும், தற்காலத்திய இலக்கியப் போக்குகளுடனும் பரிச்சயம் கொண்டிருந்தார்.

          சண்முகம் இப் புத்தகத்தில் மா.அரங்கநாதனின் படைப்புகளைக் குறித்து தீவிரமாக அலசுகிறார்.    

          இந்தப் புத்தகத்திலிருந்து கண்டெடுத்த சிறப்பான துளிகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

 

          – அரங்கநாதனின் கதைகள் உணர்வுத்தளத்தில் மட்டுமே இயங்குபவை அல்ல.  அதற்கும் மேலாக ஆழ்ந்த அறிவுத்தளத்தில் இயங்குபவை.  கதைகள் முதல் வாசிப்பில் ஒரு அறிவார்ந்த விசாரணைத் தளத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.

 

          – ஒரு கதைப்பிரதி ஒரே சமயத்தில் உணர்வு ரீதியாகவும் – அறிவு ரீதியாகவும் இரட்டை மடிப்புகளுடன் காணப்படுவது நவீனத்துவம் இல்லையென்றால் வேறு என்ன?

 

          – முத்துக்கறுப்பன் நம் சுயமரபின் குறியீடாக இருந்தாலும் தான் சார்ந்த கலாச்சாரத்தின் வட்டத்திற்குள் மட்டுமே உலவக்கூடியனவாக இல்லை.  தான் சாராத பிற கலாச்சாரத்தோடும் உரையாடுபவனாக அவனை உருவாக்கியுள்ளார் மா.அரங்கநாதன்.

 

          – தனது சிறுகதைகளின் வெளிப்பாட்டுமுறைக்கான எழுத்துமுறையை எங்கிருந்து பெற்றார் என்ற கேள்விக்குப் பதில் சொல்லும்போது அது சங்க இலக்கியத்தில் வரும் இன்மை தன்மையின் தாக்கத்தினால்தான் என்று அரங்கநாதன் கூறுகிறார்.

 

          – சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் தனது சிறுகதைகள் வழியே இழைய விட்டிருக்கிறார் மா.அரங்கநாதன். பக்தி இலக்கியத்தின் வழியே பயணித்து சைவசித்தாந்தத்தை அடையும் முயற்சி இது.

 

          – மா.அரங்கநாதனின் படைப்பிலக்கியத்தில் ஊற்றுக்களில் இரண்டு அம்சங்கள் உண்டு.  ஒன்று அவைதீகச் சிந்தனை.  இரண்டு சங்க இலக்கியத்தின் இன்மைப் பண்பு.  ஆனால் இவ்விரு புள்ளியிலேயே தங்கிவிடாமல் மேற்கத்திய இலக்கியப் போக்குகளுடனும், பரிச்சயம் கொண்டிருந்தார்.

 

          – சங்க இலக்கியம் பள்ளியில் சில பாடல்கள் படித்தேன். அந்தப் பாடல்கள் என் மனதை விட்டு நீங்கவே இல்லை.  ஏன் இப்படி நீங்க வில்லை என்று யோசிக்க ஆரம்பித்தபோது, அதனுடைய கவிதாம்சம் தெரிய ஆரம்பித்தது என்று சொல்லலாம்.

 

          இது மா அரங்கநாதன் கூற்று. ஆனால் கவிதாம்சம் என்று எப்படிக் கூறுகிறார் என்பது விளங்கவில்லை.

 

          – மா.அரங்கநாதனின் மொழி எத்தகையது, அது எத்தகைய விடயங்களைக் கொண்டிருக்கிறது என்று நோக்கும்போது, அவைதீகம், ஜோதிடம், சைவசித்தாந்தம், சங்கப் பாடலின் உள்ளூறை மற்றும் திருக்குறளின் அன்புடைமை, மாற்றுக் கலாச்சாரங்களுடான பரிவர்த்தனை, சுய விசாரணை எனப் பலவற்றைக் கவனிக்கலாம்.

 

          – மா.அரங்கநாதனின் மொழி பல விஷயங்களை உள்ளடக்கியது.  சின்ன வார்த்தைகள், எளிமையான அழகு பொருந்திய வர்ணனைகள், நாகர்கோவிலின் வட்டார வழக்கு என்று அதில் சிலவற்றைச் சொல்லலாம்.

 

          – நமது பண்பாடு, கலாச்சாரம், மொழியின் மேன்மை, தொன்மை, பக்தி இலக்கியம் குறித்த பதிவுகள் என்று கதைகளின் வழியே பல செய்திகளை உறுத்தலின்றி சொல்லிச் செல்கிறார்.

 

          – ‘பறளியாற்று மாந்தர்’ என்ற மா.அரங்கநாதன் நாவலைப் பார்த்தால் ஒருவகையில் ஒரு சரித்திரம் கலந்த புனைவாகத் தெரிகிறது. இதில் நடமாடும் ஆண்கள், பெண்கள் எல்லோரையும் ஒரு பொதுவான சரடு இணைக்கிறது. இவர்களது பண்டைய வேளாண் நாகரீகத்தின் சாயல்கள் மற்றும் சைவ மரபின் வாழ்வியல் இவற்றோடு மனிதர்களுக்கே உரிய பலங்கள், பலவீனங்கள் இடையிடையில் மனிதக் கட்டுப்பாட்டின் பிடியிலிருந்து நழுவும் வேளைகள், சில அமானுஷ்யமான காட்சிகள் என மா.அரங்கநாதனின் நாவல் பிரதியின் பல அம்சங்கள் செழுமை சேர்க்கின்றன என்கிறார் ப. கிருஷ்ணசாமி என்கிற சகாதேவன்.

 

          – ஆரம்பகாலம் தொட்டு சிறுபத்திரிகைகள் மூலமாக இலக்கியத் தொடர்பு வைத்திருந்த அவர் ஒரு கட்டத்தில் இலக்கியத்திற்கென ஒரு சிறுபத்திரிகையையும் தொடங்கி நடத்தும் சூழல் ஏற்பட்டது.  அப்படி மா.அரங்கநாதனால் தொடங்கப்பட்டதுதான் முன்றில் இதழ். 

 

          – எண்பதுகளில் முன்றில் இதழ் வெளியான காலங்களில் நடத்தப்பட்ட ஒரு கலை இலக்கியக் கருத்தரங்கு தமிழ் நவீனத்துவ எழுத்து விவாதத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. 

          – அன்றைய சூழலில் நிலவி வந்த பல கருத்துப் போக்குகள் பற்றிய ஆழமான விவாதங்கள் அக் கருத்தரங்கில் நிகழ்த்தப்பட்டன.  இலக்கியம், கலை, பண்பாடு என்னும் புலங்களில் முன்றில் என்ற சிற்றிதழின் பங்கு கணிசமானது.

 

          – மா.அரங்கநாதனின் கட்டுரைகளில் ஒரு தனி இடம் பெறுவது கவிதை குறித்து அவர் எழுதிய பொருளின் பொருள் கவிதை என்னும் நூல். இந்நூல் பெரிதும் விதந்து பேசப்பட்டது.  அதற்குக் காரணம் இதன் கட்டுக்கோப்பான தர்க்கம் தான்.

 

          மா அரங்கநாதன் செவ்விகள் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை இந்தப் புத்தகத்திற்கு மகுடம் சூட்டுவதுபோல் இருக்கிறது.

 

          ஒரு கேள்வி பதிலோடு இதை முடித்துக்கொள்ளலாம்

 

          உங்கள் கதைகளில் முத்துக்கறுப்பன் என்ற பாத்திரம் தொடர்ந்து வருகிறது? உண்மையில் முத்துக்கறுப்பன் என்ற பாத்திரம் தொடர்ந்து வருகிறது? உண்மையில் முத்துக்கறுப்பன் யார்?

 

          என்னால் விளக்கிச் சொல்ல முடியாத சில உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதற்கு உதவி செய்கிறவன் முத்துக்கறுப்பன்.  கதை என்றால் என்ன – கவிதை என்றால் என்ன என்று கேட்டால் சரியான பதில் சொல்ல முடியாமல் நிற்பது போன்ற நிலை ஏற்படுகிறது.  அது என்னவென்று தெரிந்தால், அது இனிமேல் இருக்காது – இல்லையா- கடவுள் சமாச்சாரம் கூட அப்படித்தானே.

 

          எஸ். சண்முகம் இந்தப் புத்தகத்தைச் சிறப்பாகக் கச்சிதமாக உருவாக்கி உள்ளார். ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்.

         

 

Series Navigationவடகிழக்கு இந்தியப் பயணம் : 7 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்