இயற்கையின் மடியில்

Spread the love
செந்தில்
1)
இத்தனை சிறிய எட்டுக்கால் பூச்சிக்கு
எத்தனை பேராசை;
பாதையை மறைத்து வலை பின்னியிருக்கிறது!
வருவது வேலம் என்றால் என் செய்யும் இச்சிலந்தி!
வந்தது ஒன்றும் வண்ணத்து பூச்சி அல்லவே!
2) எதற்காக!
எறும்புகளை போல சாரை சாரையாய் சிலந்திப்பூச்சிகள்!
மகரந்த தேன் கொடுத்து இனம் வளர்க்கும் மன்மத மலர்கள் அறிவோம்!
வண்ண வலை விரித்து வண்டின உயிர் வடிக்கும் மலர்களும் உண்டு!
எதையும் கொடாது உதிரம் குடிக்க வலை விரிக்கும்
சிலந்திகள் எதற்க்காக!
இயற்க்கையும் ஒரு சூதாடிதான்! (னோ?)
3)
இயற்கையின் மடியில்
காற்றின் பாடல்
மின்னலின் நடனம்
இடியின் முழக்கம்
மழையின் ராகம்
மனம் குளிர்ந்தது இன்றிரவு
அருவியில் பெருகும் வெள்ளம்
நாளை உடல் குளிர்விக்கும்!
விடியல் வரை கச்சேரியில் கிட்டியது
மனம் தூங்கா விழி கிறங்கும் பேருறக்கம்
இது யோக நித்திரைதான்
யார் சொன்னது, அது, தத்துவ சரடென்று!
(நகுலன் ஒரு கவிதையில் யோக நித்திரையை தத்துவ சரடென்கிறார். அவர் பாதியில் பயந்து கண் விழித்திருக்க்கூடும்!)
4)
மழை இறங்கிய பின் அந்தி மாலை அது!
மணம் வாரி இறைத்து
மலை தழுவி தென்றல் வீசும் காடு!
வண்ணம் குழைத்த ஒரு வானவில்!
காற்று என்னிடம் கேட்டது; மகிழம் பூவின் மணத்தை
ஓவியமாக்கவோ, இசையாக்கவோ உன்னால் முடியுமா?
ஒரு பறவை சொன்னது பதில், “என் குரலில் அதை பார்க்கமுடியும்”!
வானவில் உரைத்தது, “என் வண்ணத்தில் அதை கேட்க முடியும்”!
மரணத்தின் பின்பும் நினைவில் நெகிழும் மகிழம் பூவின் மணம்!
5)
மரம் செறிந்த அடர் கானகம் அது!
“வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று”
பட்டுகோட்டையாரின் பாடல் நினைவுடன்
நடை தொடர்ந்து தலை உயர்த்தினால்!
வேப்பிலை மரம் இல்லைதான், ஆனால் ஒரு மாப்பிள் மரம் (Maple tree)
உச்சியில் உட்கார்ந்திருந்ததோ, ஒரு பெருங் கருங்கரடி!
Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.வால்ட் விட்மன் வசனக் கவிதை – 88