இலக்கிய வட்ட உரைகள்: 13 அட்டன்பரோவின் திரை மொழி-பதிவுகள்

This entry is part 24 of 24 in the series 8 பெப்ருவரி 2015

 

ஒரு சிலையையோ, நடனத்தையோ, ஓவியத்தையோ, கவிதையையோ ரசிப்பவர்கள் அதன் நுணுக்கங்களை ரசிக்கிறார்கள். எந்த இலக்கிய வடிவமும் உள்ளடக்கத்தைப் பார்க்கிலும் சொல்லப்படும் வகையினாலேயே சிறப்புப் பெறுகிறது. ஆனால் திரைப்படங்களில் மட்டும் அதன் அழகியலுக்குள் போகாது கதையோடு நின்று விடுகிறோம். இதற்குக் காரணம் ‘திரை மொழி’யில் தேற்சியில்லாமைதான். படிக்கத் தெரியாதவன் ஒரு சஞ்சிகையை எடுத்து எப்படிப் படங்களை மட்டும் பார்த்து விட்டு வைத்து விடுகிறானோ, அப்படித்தான் ரசிக்கத் தெரியாதவன் சினிமாவில் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறான். பலரும் அறியாமையில் இருக்கிறோம்.

 

ஹாங்காங் இலக்கிய வட்டம், ஜூலை 19, 2003 அன்று ‘திரைப்பட ரசனை’ என்ற பொருளில் நிகழ்த்திய கூட்டத்தில் எம். ஸ்ரீதரன் (‘பயணி’) ‘திரை மொழி’ என்கிற தலைப்பில் பேசினார். அதன் முகவுரைதான் நீங்கள் மேலே படித்தது. திரை மொழியின் பல்வேறு கூறுகளை விளக்க ஸ்ரீதரன், ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படத்திலிருந்து ஒரு நான்கு நிமிட உப்புச் சத்தியாக்கிரகக் காட்சித்தொடரை எடுத்துக் கொண்டார்.

 

அதற்கு உள்ளே போவதற்கு முன்னால் அந்தக் காட்சித் தொடரைப் பார்த்துவிடலாம்.

 

https://www.youtube.com/watch?v=yrHNig2aIjQ

 

ஒரு காட்சி எங்ஙனம் படமாகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ‘திரை மொழி’யின் பின்வரும் கூறுகளைப் பற்றிய புரிதல் உதவும்: 1. திரைக்கதை(film script); 2. காட்சித் தொடர்(sequence); 3.பார்வைக் கோணம்(point of view); 4.காட்சி(scene); 5.காட்சித் துண்டுகள்(shots); 6. ஒளிப்பதிவு(camera); 7. படத்தொகுப்பு(editing); 8. பின்னணி இசை(background-sound&music).

 

தொடர்ந்து மேற்குறிப்பிட்ட காட்சித் தொடரைத் திரையிட்டார். பின்னர் அந்தக் காட்சித் தொடரில் பயின்று வரும் திரை மொழியின் கூறுகளை அலசினார்.

 

  1. திரைக்கதை:

 

காந்தியடிகளின் பிரசித்தி பெற்ற தண்டி யாத்திரையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுகிறார். ஆனாலும் தளர்வுறாமல், உணர்ச்சி வசப்பட்டு வன்முறையையும் மேற்கொள்ளாமல் இரண்டாம் நிலைத் தலைவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். படத்தில் நான்கு நிமிடம் நீளும் இந்தப் போராட்டக் காட்சிதான் ஸ்ரீதரனின் அலசலுக்குள்ளானது.

 

(திரைப்படத்தில், தொடர்ந்து காந்தியடிகள் வைஸ்ராயைச் சந்திப்பதும், அவர் பிரிட்டிஷ் அரசின் சார்பில் காந்தியடிகளை லண்டன் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பதுமான காட்சித்தொடர்கள் இடம் பெறுகின்றன.)

 

  1. காட்சித்தொடர்:

 

மேற்சொன்ன போராட்டத்திற்கு மௌலானா அபுல் கலாம் ஆஸாத் தலைமை தாங்குகிறார். சரோஜினி நாயுடுவும் மீரா பென்னும் பங்கேற்கின்றனர். ஒரு உப்பளத் தொழிற்சாலையில் போராட்டத் தொண்டர்களை அனுமதிக்க பிரிட்டிஷ் காவலதிகாரி மறுக்கும்போது காட்சித்தொடர் துவங்குகிறது; ரசிகனுக்குக் காட்சியைக் குறித்த அறிமுகமும் கிடைக்கிறது. தலைவரின் வேண்டுகோளையடுத்து தொண்டர்கள் தயார் நிலைக்கு வருகின்றனர்; முன்னேறுகின்றனர்; முதல் வரிசைத் தொண்டர்கள் தொழிற்சாலையை நெருங்குகின்றனர்; காவலர் மூர்க்கமாக அடிக்கின்றனர்; பெண் தொண்டர்கள் காயமுற்ற தோழர்களை அழைத்துப்போய் மருத்துவம் செய்கின்றனர். தொண்டர்கள் முன்னேறுவதும் அடிபடுவதும் மருந்திடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன. இவற்றையெல்லாம் ஓர் ஆங்கிலேயச் செய்தியாளர் பார்த்துக் கொண்டிருக்கிறார். தொலைபேசியில் அவர் இந்தச் செய்தியைப் பதிவு செய்வதுடன் காட்சித்தொடர் முடிகிறது.

 

  1. பார்வைக்கோணம்:

 

எந்தக் காட்சியும் யாருடைய பார்வைக்கோணத்தில் சொல்லப்படுகிறது என்பதில் இயக்குனருக்குத் தெளிவில்லையென்றால் ரசிகனுக்குக் குழப்பமே மிஞ்சும். குறிப்பிட்ட காட்சித்தொடர் செய்தியாளரின் பார்வைக்கோணத்தில் இருக்கிறது. செய்தியாளரையும் அவரது உணர்வுகளையும் திரும்பத் திரும்பக் காட்டுவதன் மூலம் பார்வைக்கோணம் ஐயமின்றி நிறுவப்படுகிறது.

 

  1. காட்சி:

 

குறிப்பிட்ட காட்சித்தொடரில் ‘நெருங்குதல்’ என்பதான காட்சியில் பின்வருவன நிகழ்கின்றன- தொண்டர்கள் முன்னேறுகிறார்கள்; காவலர்கள் இறுகுகிறார்கள்; தலைவரின் கையசவைத் தொடர்ந்து தொண்டர்கள் நிற்கிறார்கள்; முதல் வரிசைத் தொண்டர்கள் மட்டும் முன்னேறுகிறார்கள்; காவலர்களை மிகவும் நெருங்குகிறார்கள்.

 

  1. காட்சித்துண்டுகள்:

 

மேலே சொன்னதில் ‘முதல் வரிசைத் தொண்டர்கள் முன்னேறுதல்’ எனும் காட்சி ஒரு நிமிடம் இடம் பெறுகிறது. இதில் 13 காட்சித் துண்டுகள் அடங்கியிருக்கின்றன.

 

  1. தலைவர் ஒரு வரிசையை மட்டும் முன்னேறச் சொல்கிறார்;
  2. இளைய தொண்டன்(நேர் பார்வை);
  3. முதிய தொண்டர்(நேர் பார்வை, காலடிச் சத்தம்);
  4. காவலர்கள் (‘on your march’, லத்தியை நெஞ்சுவரை உயர்த்திப் பிடிக்கின்றனர்);
  5. செய்தியாளர்(முகம் திருப்பிச் சிலுவையிட்டுக் கொள்கிறார்);
  6. மௌலானா ஆஸாத் (உறுதி);
  7. பிறிதொரு இளைஞன்;
  8. இளைய காவலன்(பரபரப்பில் சுழலும் கண்கள்);
  9. மற்றுமொரு காவலன்(காதோரம் மொய்க்கிற ஈயின் சத்தம்);
  10. மீரா பென்(bandage துணியை வேகமாய்ச் சுழற்றுகிறார், பெண்களின் சன்னமான பேச்சொலி);
  11. இளைஞன் மற்றும் முதிய தொண்டர்;
  12. இன்னொரு காவலன் (முகத்தசைகள் இறுகுகின்றன);
  13. கையெட்டும் தூரத்தை எட்டுகிறார்கள்.

 

சூழலின் தீவிரம் ரசிகனைத் தொற்றிக் கொள்கிறது.

 

  1. ஒளிப்பதிவு:

 

காட்சித்துண்டுகளின் கோணங்களையும் பரப்பையும் ஒளிப்பதிவாளர் தீர்மானிக்கிறார். ஆஸாத் தொண்டர்களை முன்னின்று வழி நடத்துகிறார்; பிரிட்டிஷ் அதிகாரி காவலர்கள் அணிவகுப்பின் பின்னால் நின்று மேற்பார்வையிடுகிறார். தொண்டர்களின் முன்னால் ஒரு தலைவன், பின்னால் மற்றொரு தலைவன் என்பதான காட்சித்துண்டுகளின் பரப்பு எதேச்சையானதல்ல. அண்மைக் கோணங்களில் காட்டப்படுகிற காவலரின் முகங்களின் ஒளி, சேய்மைக் கோணங்களின் ஒளியினும் வெகுவாக மாறுபட்டிருப்பது கவனமாய் அவதானித்தால் புரியும். இன்னும் கூர்மையாகப் பார்த்தால் அண்மைக் கோணங்களில் வரும் காவலர்கள் எவரும்  சேய்மைக் கோணங்களில் இடம் பெறுவதில்லை என்பதும் தெரியும்.

 

  1. படத்தொகுப்பு:

 

மேற்குறிப்பிட்ட ‘முதல் வரிசைத் தொண்டர்கள் முன்னேறுதல்’ எனும் ஒரு நிமிட நீளமுள்ள 13 காட்சித்துண்டுகளில் எதற்குப் பின்னர் எது, ஒவ்வொரு காட்சித்துண்டின் நீளமென்ன போன்றவற்றை படத்தொகுப்பாளர் தீர்மானிக்கிறார். காட்சித்துண்டுகள் மாறுவதற்குக் கரைதல்(dissolve), தள்ளுதல்(wipe), இருட்டுக்குப் பிறகு போன்ற உத்திகளில் எதைப் பயன்படுத்துவது என்பதையும் அவரே தீர்மானிக்கிறார். ஒவ்வொரு உத்தியும் ஒவ்வொரு விதமான செய்தியோடு ரசிகனைச் சென்றடையும்.

 

  1. பின்னணி-ஒலியும் இசையும்:

 

காட்சித்தொடர் துவங்குகிறபோது காலடிச் சத்தம், பேச்சரவம் போன்ற இயற்கையான ஒலிகளே இருக்கின்றன. காவலர்கள் தாக்குகிறபோது எலும்புகள் அடிபடுகிற சத்தம் சேர்கிறது. செய்தியாளரின் பார்வையில் இவை கலவையாகி, ஒன்றன் மேல் ஒன்றாக அந்த வலி படிந்து இழுபடுகிறது. அடிபடுவதும் மருத்துவம் செய்வதும் தொடர்ந்து நிகழும்போது, மறுபடியும் மறுபடியும் என்பதைச் சொல்லும் விதமாய் வாத்திய இசை இடம் பெறுகிறது. செய்தியாளரின் தொலைபேசிக் காட்சி தொடருகிறபோது இசையின் தொனியும் மாறுகிறது.

 

எந்த இலக்கிய வடிவமும் ரசிக்கப்படுவதற்காகத்தான் படைக்கப்படுகிறது. ‘திரை மொழி’யின் கூறுகளைப் புரிந்து கொள்வது மேம்பட்ட ரசனைக்கு வழிவகுக்கும். கலைப் படங்கள் என்றில்லை, வெகுஜனப் படங்களையும் இனிமேல் பார்க்கும்போது ‘என்ன’ என்பதைவிட ‘எப்படி’ ‘எதற்காக’ என்று கவனிக்கத் தொடங்கலாம்; விரும்பிய படங்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்க்கலாம்; அது ‘திரை மொழி’யின் கூறுகள் குறித்த புரிதலை அதிகமாக்கும். ‘வாழ் நாளெல்லாம் போதாது ஒரு மரத்தைப் பார்த்து முடிக்க’ என்கிற கவிதை வரி, மரத்துக்கு மட்டுமல்ல,  நல்ல சினிமாவுக்கும் பொருந்தும்.

 

இப்போது நீங்கள் மீண்டும் ஒரு முறை அந்தக் காட்சித் தொடரைப் பார்க்கலாம். மேலே சொன்ன திரை மொழியின் கூறுகளை மீண்டும் படிக்கலாம். மீண்டும் பார்க்கலாம்.மீண்டும் படிக்கலாம்.

 

https://www.youtube.com/watch?v=yrHNig2aIjQ

 

********

 

ஜூலை 19, 2003 அன்று நடந்த ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் ‘திரைப்பட ரசனை’க் கூட்டத்தில் எம்.ஸ்ரீதரன் நிகழ்த்திய உரையின் பதிவுகள்.

எம். ஸ்ரீதரன் (‘பயணி’) இந்திய அரசின் வெளியுறவுத் துறையில் பணியாற்றுகிறார். ‘சீன மொழி-ஓர் அறிமுகம்’, ‘வாரி சூடினும் பார்ப்பவரில்லை’ ஆகிய நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு:  msridharan@gmail.com

 

********

(ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள், தொகுப்பு: மு.இராமனாதன், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)

 

Series Navigationமரபு மரணம் மரபணு மாற்றம்
author

மு. இராமனாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *