உகுயுர் இனக் கதைகள் (சீனா)

தங்கமே குறி
ஒரு திருடன் ஒரு சந்தையில் இங்குமங்கும் யாரிடம் திருடலாம் என்று பார்த்துக் கொண்டே சுற்றி வந்தான்.  கூட்டம் கூட்டமாக மக்கள் இங்குமங்கும் போய் வந்து கொண்டிருந்தார்கள். அவனால் வியாபாரக் கூடத்திற்கு செல்லும் வழிதோறும் மக்கள் மக்கள் என்று மக்களைத் தவிர வேறெதையும் காண முடியாதிருந்தது. வழி நெடுகிலும் வைக்கப்பட்டிருந்த வண்ண வண்ணப் பழங்கள், பொருட்கள் அவனது கண்களைப் பறித்தன. விதவிதமான அழகு மிக்க ஆடைகளும் கம்பளங்களும் அவனை கிறங்க வைத்தன. மக்களது கவனத்தை ஈர்க்க வியாபாரிகள் கத்திக் கொண்டும், பானைகள், பாத்திரங்கள், கூடைகள், தட்டுகள் என்று பொருட்களைத் காட்டிக் காட்டிக் கூவிக்கொண்டிருந்தனர்.
அவையெல்லாம் அவனது கவனத்தைத் அதிகமாத் தூண்டாததால், சுற்றிச் சுற்றி வந்தான்.  அவனது நடையை ஒரு நகைக் கடை நிறுத்தியது.  அங்கு பெரிய மேஜையின் மேல், வைரம், பவளம், கோமேதகம், முத்து என்று அனைத்து அணிகலன்களும் பரப்பப்பட்டு இருந்தன. அவனுக்கு ஆசையாக வந்தது.  தங்க நகையைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.
“என்னிடம் தங்கம் இருந்தால், நான் பணக்காரன். மாளிகை கட்டலாம். உதவிச் செய்ய வேலையாட்கள் வைக்கலாம்.  நல்ல ஆடைகள் அணியலாம். மிகவும் சுவையாக நன்கு சமைத்த உணவுகளை உண்ணலாம்” என்று கனவு காண ஆரம்பித்தான்.
ஆசை கடலென எழுந்த வேகத்தில், கைக்குள் கிட்டிய நகையை அள்ளிக் கொண்டு கூட்டத்திற்கு மத்தியில் ஓட ஆரம்பித்தான்.
“திருடன்.. திருடன்..” என்று வியாபாரி கத்தினான்.  “பிடியுங்க.. பிடியுங்க.. என் நகையைத் திருடிக் கொண்டு போகிறான்..”  என்று கூப்பாடு போட்டான்.
சில நொடிகளிலேயே, ஒரு பெரிய கூட்டம் அவனைத் தடுத்து நிறுத்தியது. மக்கள் அவனைச் சுற்றி நின்றனர். காவலாளி வந்து பிடிக்கும் வரை அவனை நகர விடவில்லை. திருடன் நகையைத் திருப்பித் தர வேண்டியதாயிற்று.
காவலன் அவனைச் சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில், “கூட்டமாக மக்கள் இருக்கும் போது, நகையைத் திருடிச் செல்ல முடியுமா என்று உன் மூளை சொல்லவில்லையா? அது முட்டாள்தனமில்லையா? மக்கள் உன்னைப் பார்ப்பார்கள் என்று எண்ணவில்லையா?” என்று கேட்டான்.
திருடன் தலையைக் குனிந்தவாறு, “ஆசை கண்ணை மறைத்து விட்டது. என் கண்களுக்கு யாரும் தெரியவில்லை. என் குருடுத்தனம் எனக்கு துணிவைக் கொடுத்தது. நான் நகைகளைத் திருடப் போன போது, தங்கம் மட்டுமே என் குறியாக இருந்தது” என்றான்.
Series Navigationநமது பண்பாட்டைக் காக்கும் நற்பணியில் பங்கேற்க ஒரு நல் வாய்ப்புவேர்கள் (உருது மூலம்- இஸ்மத் சுக்தாய்)