உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை : 2

கண்ணன் ராமசாமி
சென்ற பகுதியில் ஹே ராம் ஒரு முசுலிம் எதிர்ப்பு படம் அல்ல என்பதை பார்த்தோம். இந்த பகுதியில் உன்னை போல் ஒருவன் பற்றிய விமர்சகர்களின் பார்வையை அலசுவோம்.

விமர்சனத்தின் தொடக்கத்திலேயே சிலர் இப்படிச் சொன்னதை பார்த்த பிறகு, ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது:
காமன் மேனாக வரும் கமல் தாடி வைத்திருக்கிறார். இதில் இருந்தே, அவர் முசுலிம்-ஐ தான் சுட்டிக் காட்டுகிறார் என்று புரிகிறது. ‘ஒரு தீவிரவாதி முசுலிம்-ஆகத் தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள ஒரு தாடி போதாதா?’ என்று அவர் கேட்பது போல் இருக்கிறது.
இந்தக் குற்றச் சாட்டை பற்றி கமலிடமும் கேட்கப் பட்டது. இதற்கு அவர் கொடுத்த பதில் இதோ:
‘எல்லாருமே என்னத்துக்கு இந்த ஒப்பனை என்று கேட்டார்கள். இந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சி வரும். முதல்ல என்ன சந்திச்ச அந்த
                                                                               இன்ஸ்பெக்டர் கிட்ட, ‘எப்படி இருந்தார்(கமல்) பார்க்க?’ என்று மோகன்லால் கேட்கும் போது, ‘அந்த மாதிரி தாடி சார்’ என்று சொல்லி, ஒரு சமிக்ஞையின் மூலம் ஒரு சமுதாயத்தை சுட்டிக் காட்டுகிறார் அவர். அந்த மாதிரி generalization கூடாது என்பது தான் என்னுடைய கோவம். எமாத்தனும்-னு முடிவு செஞ்சிட்டா நெத்தியில பொட்டு வெச்சுக்கிட்டு கூட எமாத்திடலாம் இல்ல? இந்த விளையாட்டை நாம எவ்வளவு நாள் விளையாடிட்டு இருக்க போறோம்? அதைத் தான் இந்த படத்துல எத்தனை நாளைக்கு இந்த இந்து முசுலிம் விளையாட்டை விளையாடிட்டு இருக்க போறீங்க-ன்னு கேட்டேன். இந்த சமுதாயத்தை சேர்த்தவர்கள் எல்லாம் வீரர்கள், மடையர்கள், கெட்டிக் காரர்கள் என்று generalize செய்யவே முடியாது’
காணொளி இணைப்பு: www.youtube.com/watch?v=umAANRVs3N0 (6.18 min)
ஆக, விமர்சகர்கள் ஒரு காட்சியை புரிந்து கொள்ளத் தவறியதால் ஏற்பட்ட பிழை இது. இதை சொன்ன பிறகும், சிலர், ‘இந்த விளக்கத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். விமர்சனம் எழுந்த பிறகு, அதை சமாளிக்க கமல் இப்படி திரித்துப் பேசுகிறார்’ என்று சொல்லக் கூடும். சிம்பாலிக்-ஆக சொல்வது மட்டும் போதாது; வெளிப்படையான தாக்குதல் வேண்டும் என்று அவர்கள் கருதக் கூடும்.
இதற்கு பதிலாக மற்றொரு விவரத்தையும் சொல்ல கடமை பட்டிருக்கிறேன். முசுலிம்களை தோற்றத்தை வைத்தே தீவிர வாதிகள் என்று நினைப்பது தவறு என்ற கருத்தை உன்னை போல் ஒருவன் படத்திற்கு முன்பே கமல் ‘நேரடியாக’, சிம்பலிசம் இல்லாமல் சொல்லி இருக்கிறார்!

தசாவதாரத்தில் கலிஃபுல்லா கான், பல்ராம் நாயுடுவுடன் பேசும் போது ஒரு வாக்குவாதம் வரும். அப்போது, ஏழு அடி உயரம், அஃப்கானி உடை, இதை எல்லாம் சுட்டிக் காட்டி, ‘நீ என்ன பின் லேடனா?’ என்று பல்ராம் நாயுடு நக்கலாக ஒரு கேள்வி கேட்பார். ‘அத்தனை பெரும் தீவிரவாதி தான். எல்லாரையும் கேள்வி கேளு’ என்பார. அதற்கு நாகேஷ், ‘ஜகாப்! ஜகாப்! மெக்கா பார்த்து நமாஸ் புடிக்கிற அத்தனை பேரையும் தீவிரவாதி-ன்னு நினைக்காதீங்க’ என்பார்.
காணொளி இணைப்பு: http://withfriendship.com/videos/rajesh+wari/kamal-haasan-comedy-scene-from-dasavatharam.php (1.00 min)
ஆக, இந்துத்வ வெறியாளர்களின் பிரதிநிதியாகவும், தாடியை வைத்து முசுலிம்களை குற்றவாளிகள் என்று அழைக்கும் நபராகவும் தன்னை என்றுமே காட்டிக் கொண்டதில்லை கமல். இனியாவது அவரை முஸ்லிம் எதிர்ப்பாளர் என்று தவறாக சித்தரிக்கும் வேலையை விமர்சகர்களே நிறுத்திக் கொள்ளுங்கள்! கதையை சற்றும் புரிந்து கொள்ள விரும்பாத நீங்கள், தவறான பார்வையை கொண்டே எல்லா காட்சிகளையும் அணுகுகிறீர்கள்.
ஒரு முசுலிம் பெண்ணை கருவறுத்த சம்பவத்தை நேரடியாக சொல்லி இந்து மத வெறியர்களுக்கு எதிராக பேச முடியாமல், நேர்மையின்றி,  “இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி தப்பிக்கப் பார்க்கிறார் கமல் என்று சிலர் சொல்கிறார்கள்.
இது முழுக்க முழுக்க தவறான பார்வையால் உண்டான தவறான புரிதல். கமல் சொல்லியிருக்கும் வசனத்தையே தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள் இவர்கள்! அந்த சம்பவத்தை பற்றி சொல்லிவிட்ட பிறகு,
அந்த பொண்ணுக்காக கண்ணீர் விட, கோபப்பட, அது எம்பொண்ணாத்

தான் இருக்கணுமா? என்னுடைய சகோதரனுடைய பொண்ணா, நெருங்கின நண்பனுடைய பொண்ணா, ஒரு முசுலிம்-உடைய(குரல் கனக்கிறது) பொண்ணாவோ இருந்தா இவ்ளோ கண்ணீர் வரக் கூடாதா? அது என்ன ஞாயம்?”
என்று தான் கமல் சொல்கிறாரே தவிர, இந்து என்ற வார்த்தையை அவர் உபயோகிக்கவே இல்லை! அந்தப் பெண்ணை கொன்ற இந்துவுக்கு நல்லிலக்கணம் பேசி மன்னிப்பு வழங்க அவர் நினைக்கவில்லை! தாடியை பார்த்து இவருடைய பெயர், ஸ்ரீனிவாச ராமானுசம் தான் என்று முதலிலேயே தவறாக புரிந்து கொண்டு விட்ட விமர்சகர்கள், சகோதரர், நண்பர் என்று சொன்னவுடனே அவர் இந்துவாகத் தான் இருப்பார் என்று புரிந்து கொண்டு விட்டனர். இதை வைத்து ஒரு புதிய வசனத்தையும் உருவாக்கிவிட்டனர்.
‘உங்க ஃபேமிலி ஃபிரென்ட்ஸ்-ல யாராவது பாம் அட்டாக்-ல இறந்து போயிட்டாங்களா?’ என்று மோகன் லால் கேட்கும் கேள்விக்கு பதிலாகத்

தான் இந்த காட்சி வைக்கப் பட்டிருக்கிறது. மேலே கூறப்பட்ட காமன் மேன் சொல்லிய வசனத்தின் நோக்கமே, ‘அந்த பெண் என்னுடைய குடும்பத்தில் ஒருத்தி இல்லை என்றாலும், அவளுடைய தந்தையை, ஒரு முசுலிம்-ஐ, நான் சகோதரனாகத் தான் பார்க்கிறேன்’ என்று உணர்த்துவது தான். இதைத் தான் இவர்கள் வேறு மாதிரியாக, தவறாக புரிந்து கொண்டிருகிறார்கள்.
காணொளி இணைப்பு: http://www.youtube.com/watch?v=9hmNF3cZFzM (1.31 min)
http://www.youtube.com/watch?v=qTMdOoUd2oc (0.02 min)
இது போக, அப்துல்லா என்ற தீவிரவாதி, ‘குஜராத்-ல போய்                       மோதி(நரேந்திர மோதி) பார் தெரியும்! மோதி பார்த்தாலே சாவு தான்’ என்று சொல்வதும்,    காமன் மேன், ‘அந்த கூட்டத்துல எத்தனை ராம் கிருஷ்ணா, லால் கிருஷ்ணா, ராதா கிருஷ்ணன் இருந்தானோ தெரியாது. ஒரு கிருஷ்ணன் கூட உதவிக்கு வரலை’ என்று சொல்வதும் நேரடியான இந்துத்துவ மத வெறிக்கு எதிரான நேர்மையான குற்றச் சாட்டாக தெரியவில்லையா உங்களுக்கு?
தசாவதாரத்தில் ஐயர்-அய்யங்கார் ஜாதிச் சண்டையை, ‘சிவனும்-விஷ்ணுவும் மோதி விளையாட வேறு கடவுளர் இல்லாத காரணத்தினால் தம்முள் மோதிக்கொண்ட நூற்றாண்டு’ என்று நேரடியாக சாடியது,
ஹே ராம் படத்தில் முசுலிம்களுக்கு எதிரான மத வெறியாட்டத்தை உள்ள படியே காண்பித்தது, அவ்வை ஷன்முகியில், ஒரு முசுலிம்-ஐ எதற்காக சமையல் அறைக்குள் விட்டாய்? என்று கேட்கும் மாட்டுத் தோலை தைத்து ஷூ விக்கும் ஒரு ‘வெஜிடேரியன்’ பிராமணருக்கு எதிரான நேரடியான சண்முக மாமியின் குற்றச் சாட்டு, மகாநதியில் ஜெயிலுக்குள் உட்கார்ந்து கொண்டு ‘கூரையை பிச்சுக்கிட்டு பகவான் கொட்டுவான்’ என்று கூறும் மதவாதியை பார்த்து நக்கல் அடிப்பது, மன்மதன் அம்புவில் இந்து மூடநம்பிக்கையை பற்றிய ஒரு பாட்டை எழுதியது, இப்படி எல்லா படங்களிலும் கமல் இந்துத்துவ வெறியாட்டத்தை, முட்டாள் தனத்தை நேரடியாகவே எதிர்த்துப் பேசியிருக்கிறார். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு எப்படி படுகிறது?
இது ஒரு புறம் இருக்கட்டும். கமலிடம் நேர்மை இல்லை என்று சொல்வதற்கு இவர்கள் உபயோகித்திருக்கும் அடுத்த காட்சி என்ன?
முசுலீம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். இதுதான் கமல் பிராண்ட் களவாணித்தனம். ஆர்.எஸ்.எஸ் கூட முசுலீம்களுக்கெதிராக இந்துக்களுக்குத்தான் கோபம் வரவேண்டும் என்று சொல்கிறது. கமலோ இந்தக் கோபம் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்கிறார்.

இப்படி சொல்லி, கமலின் பார்வையை தங்களுக்கு ஏற்றவாறு மறுபடியும் திரிக்கிறார்கள். இந்த வசனத்தோடு கமல் கூறும் மற்ற சில வசனங்களை தங்களுடைய ஆதரவாளர்கள் பார்வையில் இருந்து வசதியாக மறைக்கிறார்கள். அதை இந்த வசனத்தோடு சேர்த்தால் தான் இந்த பேச்சின் அர்த்தம் புரியும்.
“முசுலிம்-ஐ கொல்ற நீ ஒரு இந்து தானே?” என்று மோகன் லால் கேட்கும் போது,
‘“கரம்சந்த் லாலா ஒரு இந்து; ஆர்ம்ஸ் டீலர். கொன்னிருக்கேன். அப்போ

நான் என்ன முஸ்லிமா? இப்படியே இந்து முசுலிம் விளையாட்டு விளையாடிகிட்டே இருங்க. நேஷனல் டிவி-ல நம்ம மேற்கு வாசல் கதறி அழுதுச்சு. இனஃப் ஈஸ் இனஃப்-னு சொல்லிச்சு. ஓட்டுப் போட வாங்கடா-ன்னு கூப்பிட்ட போது, நாப்பத்தி மூணு பர்சென்ட். ஜனநாயகத்துக்காக ஆள் காட்டி விரலை கூட தூக்க முன்வராத அந்த(இந்து மதவாத கும்பல்) கூட்டத்தொட என்னை சேர்காதீங்க”, என்று காமன் மேன் கூறுகிறாரா இல்லையா?
அவர், மற்றவர்களுக்கெல்லாம் கோபமே வராதா என்ற கேட்பதே, போலீசும், மற்றவர்களும் இந்து முசுலிம் விளையாட்டை எப்போது

நிறுத்தப் போகிறார்கள்? என்று கேட்கும் நோக்கில் தான்! பொது மக்களுக்கு எதிரான தீவிரவாதத்தின் மேல் யாருக்கு வேண்டுமானாலும் கோபம் வரலாம் என்று தான் காமன் மேன் சொல்கிறார். முசுலிம்-களின் மேல் பொதுமக்கள் கோபம் கொள்ள வேண்டும் என்று அவர் எங்குமே உணர்த்தவில்லை. முஸ்லிம் எதிர்ப்பாளர் என்று அவரை முடிவு கட்டியதால் தான் இதை இப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் படத்திலேயே தான் யார் என்று சொல்லும் காட்சியில், ‘எங்கேயாவது ரயில் எறிஞ்சா(கோத்ரா), கட்டி வெச்சதை இடிச்சா(பாபர் மசூதி) முதல்-ல போறது என்னுடைய உயிரைத் தான் இருக்கும்’ என்று காமன் மேன் சொல்வதும் இதே அர்த்தத்தில் தான்.

ஆக காமன் மேன், பொதுமக்களுக்கு எதிரான, மத வெறியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை உன்னை போல் ஒருவனின் தெளிவாக உணரலாம். இங்கே பொது மக்கள் என்று நான் குறிப்பிடுவது முசுலிம்களையும் சேர்த்துத் தான்.
(தொடரும்)

Series Navigationபுரிதல்புதிய வருகை