உலராத மலம்

மலஜலம் கழிக்க
வயல் வெளிப்பக்கமும்
ஊர் ஒதுக்குப் புறமும்
ஜனங்கள் போகும் ஊர்.

கங்குலில்
தெருவோரம்
உட்கார்ந்து எழும்
அடையாளம் தெரியாத
உருவங்கள்.

என்
பால்ய காலத்தில்
பழகிய வழி
ஊரில்
பள்ளிக்கூடம்
போய் வரும் வழி.

போய் வரும்
வழியோரமெல்லாம்
மலங்கள்
நிறைந்து கிடக்கும்.

தினம் தினம்
பள்ளி செல்லும் போது
மலத்துப்புரவு செய்யும்
ஒரு
பெருந் துயரப் பெண்ணைக்
கண்டு போவதுண்டு.

என் அம்மா
மோர் விற்கிறாள்
இவள் மலம் அள்ளுகிறாள்-
இப்படித்தான்
சின்னப்பயலான
எனது புரிதல்.

பன்றிகளை மேய்க்க
ஒத்தாசையாகப்
பாதியில்
படிப்பை நிறுத்திய
பால்ய நண்பனைப் பார்க்க
சேரிக்குச் சென்றது
சின்ன வயதில்.

அதற்குப் பின்
அவனைத் தேடி
சேரிக்குச் சென்றதேயில்லை.

உருத்தும்
இந்த நினைவுகளில்
ஒரு கணம்
உலராத மலமாய் நாறும்
என்னை
உணர்வேன்.

——————

Series Navigationபிறை நிலாமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்