உள்ளிருக்கும் வெளியில்

செம்மை கூடிய வானவெளியின்
அரிய தருணத்தைச் சிறைப்படுத்தியிருந்த
புகைப்படத்தில் ஒரு கோடுபோல்
தெரிந்தது என்ன பறவையோ
என்றே துடிக்கிறது மனச்சிறகு
அலைபேசி உரையாடலில்
லத்தின் அமெரிக்கப்பாடலை
 சிலாகித்துக்கொண்டிருக்கிறார் நண்பர்.
 பின்னணியில்
குழந்தைகளின் விளையாடற் கூச்சல்
“டேய் அந்தண்டை போங்க “
 தொடர்கிறார் அவர்
லத்தின் அமெரிக்காவிலிருந்து
நான் அந்த முற்றம் இறங்கிவிட்டேன்
என்ன ஆட்டமாயிருக்கும்
ஜம் பம்மென அதிரும் இசைக்குள்
வளைந்து குழையும் ஒரு புல்லாங்குழல் துணுக்கு
சட்டென்று பதிந்து இழைகிறது
எல்லாம் தாண்டி நாள் முழுக்க
பிரம்மாண்டங்களின் ,அதீதங்களின்
ஊர்வலத்தைக் கேலிசெய்தபடி
சிறுகோடுகளின்
படியில் தொங்கும் பயணி எனப்
பரிகசிக்கிறாள் தோழி
——————————————————–
                                                           -உமாமோகன்
Series Navigationநைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவக் காட்சிகள் -5காப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்