எதிரொலி

 

என் இரவின் கழுத்தைக்

கவ்விச் செல்கிறது பூனை.

நெஞ்சை யழுத்து மந்த

இரவினோசை

திசையறியாச் சிறகுகளின் படபடப்பு.

இருளின் முடியாத சுரங்கக் குழாயினுள்

தலையற்ற தேவதை

அசைத்துச் செல்லும்

வெள்ளை யிறக்கைகளாய்

தோட்டத்திலிருந்த  வளர்ப்புப் புறாவின்

போராட்டம்.

இறுக்கமாய்ப் பற்றி மரணத்திற்கு அழைத்துப் போகும்

சிறு வேட்டை மிருகத்தின்

எச்சில் நூல்

காற்றில் நீண்டு அறுந்த போது

என்னில் ஏதோ ஒன்று

தொடர்பிழக்கும்.

சில நினைவுகளை

எட்டி உதைத்துப் புறந்தள்ளி

நடக்கும் காலத்தின்

பாதங்கள்

ஒரு மாலை

பெரும் அரங்கத்தினுள்

மெல்லிய இசையாய்

மிதந்தது.

அவள் பேச்சை

அப்படியே திரும்பச் சொல்லும்

கிளிகள்

என் உள்ளம் போன்றவை.

பொருளறியாது வெறும்

ஓசைகளை உமிழும்.

என் நெஞ்சத்தின் அலகுகள்

அவள் கண்கள் மிதக்க விடும்

அர்த்தத்தைக் கொறித்தன.

அவள் விரலசைவை

விழியசைவை

எப்படிப் பேசிக்காட்டுவது?

பேச்சுக்கு இடையே வரும்

புன்னகை கிரணங்களில்

கண்கூசித் திகைத்த பறவைகள்

குதித்தது நடனமானது.

என் உள்ளமோ போலித்தனமில்லா

அப்புன்முறுவலின் இடுக்கில் சிக்கி

பலியானது.

கூட்டுக் கம்பிகளுக்கிடையே நீண்ட  அலகைப் பற்றி,

அச்சிறு மிருகம் இழுத்துச் சென்ற,

இரவினொலி

மீண்டும் அதிர்கிறது என்னுள்.

மறந்து போன

அவ்விரவின் எதிரொலியாய்- என்

இதயச் சுவர்

சிறகுகளாய் படபடக்க

இழுத்துச் செல்லும்

பூனையாய்

அவள் புன்னகை.

Series Navigationஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சிஇடைசெவல்