ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 18 in the series 19 டிசம்பர் 2021

 

கோ. மன்றவாணன்

மகாகவி பாரதி மதுரையில் இருந்த நண்பரான ஸ்ரீநிவாச வரதாசார்யனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி :

”என்னுடைய பழைய பிரசுரங்களினால் எனக்கிருக்கும் உயர்ந்த மதிப்பினாலும் ஈடு இணையற்ற செல்வாக்கினாலும், இவை எல்லாவற்றினாலும், என்னுடைய நூல்கள் அமோகமாக விற்பனையாவது திண்ணம்.

புத்தகங்களை அச்சடிப்பதற்கான செலவிற்காக உங்களால் முடிந்த அளவு தொகையைத் தயவு செய்து கடனாக அனுப்பி வையுங்கள்.

உங்களிடமிருந்து குறைந்தபட்சம் 100 ரூபாயாவது எதிர்பார்க்கிறேன்.

கிருபை கூர்ந்து தங்கள் நண்பர்கள் இருபது பேரையாவது இதே மாதிரியோ, அல்லது அதிகமான தொகையோ கடன் தந்து உதவும்படி தூண்டுங்கள்.

உங்களிடமிருந்தும், உங்கள் நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் தொகைகளுக்கு நான் ஸ்டாம்பு ஒட்டி புரோ நோட்டு எழுதிக் கொடுக்கிறேன். எனக்குக் கிடைக்கக் கூடிய அபரிமிதமான லாபத்தை முன்னிட்டு மாதம் 2 சதவீதம் தாராளமாகவே வட்டி தருகிறேன்.”

இந்தத் தகவல், ரா. அ. பத்பநாபன் எழுதிய சித்திர பாரதி என்ற நூலில் உள்ளது.

அன்றைய உணவுக்காக வைத்து இருந்த அரிசியை எடுத்துக் காக்கை குருவிகளுக்குப் போட்டுவிட்டுத் தானும் பட்டினியாக இருந்து தன் குடும்பத்தினரையும் பட்டினி போட்ட பாரதியால் புத்தகம் விற்று அபரிமிதமான லாபம் சம்பாதிக்க முடியுமா? வற்றாத ஊற்றென இரக்கம் சுரப்பவனுக்கு வணிக உத்தி கைவருமா?

அந்தக் காலத்தில் படிப்பறிவு கொண்டவர்கள் மிகமிகக் குறைவு. அந்த நிலையில் எத்தனை பேர் புத்தகங்கள் வாங்குவோராக இருந்திருப்பார்கள்?

இந்தக் காலத்தில் படிப்பறிவு கொண்டவர்கள் ஏராளம். எத்தனை பேர் புத்தகங்கள் வாங்குகிறார்கள்?

பாரதி எண்ணப்படி… இன்றைய நிலையில் வட்டிக்குப் பணம் வாங்கி யாராவது புத்தகம் போட முடியுமா? புத்தகம் அச்சிடுவதற்கே யாரேனும் வட்டிக்குத்தான் பணம் தருவார்களா? இரண்டும் இல்லை.

அந்தக் காலத்தில்கூடப் புரவலர்களின் உதவி கொண்டு நூல்கள் வெளியாகி உள்ளன. 1998 ஆம் ஆண்டில் வே. சாமிநாதய்யர் மணிமேகலை மூலமும் அரும்பத உரையும் என்ற நூலை, பாண்டித்துரைத் தேவர் அவர்களின் உதவியோடு வெளியிட்டு இருக்கிறார். இந்தக் குறிப்பு அந்த நூலின் முதல் பக்கத்திலேயே அச்சிடப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் புததகம் அச்சிட உதவும் புரவலர்கள் யாவர்?

அரசு வேலையில் ஆசிரியர் பணியில் வங்கிப் பணியில் இருப்பவர்கள்தாம் தொடர்ந்து நூல்களை வெளியிட முடிகிறது. பொருளியலில் தாழ்ந்து கிடக்கும் எத்தனையோ நல்ல எழுத்தாளர்களின் படைப்புகள் வெளியிடப்படாமல் பழுப்பேறி நைந்து கிடக்கின்றன. அவர்களின் வாழ்நாளுக்குப் பிறகு அந்தப் படைப்புகளும் பழைய காகித கடைக்குப் போய்விடும்.

பழங்காலத்தில் அனல் வாதத்தால் அழிந்த நூல்கள் பல. புனல் வாதத்தால் அழிந்த நூல்கள் பல. அந்த வரிசையில் இன்றைக்குப் பொருள் வாதத்தால் பல சிறந்த நூல்கள் அச்சிடப்படாமல் அழிந்து வருகின்றன.

பணம் கொடுத்துப் புத்தகம் வாங்கும் பழக்கம் அற்றுப் போகிறது. துண்டு அறிக்கைகளை வழங்குவதுபோல் புத்தகங்களையும் இலவசமாகத் தர வேண்டி இருக்கிறது.

நூலக ஆணையை நம்பித்தான் சிலர் புத்தகங்களை அச்சிடுகிறார்கள். புத்தகங்களை வாங்க நூலகத் துறையும் மறுக்கிறது. வாசகர்கள் வராமல் வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நூலகர்கள்.

ஒரு காலத்தி்ல் 1200 நூல்களை அச்சிட்டார்கள். அத்தனையும் விற்பதில்லை. இன்றைய நிலையில் வெறும் 52 நூல்களை மட்டுமே அச்சிடுகிறார்கள். அவற்றையும் நூல் மதிப்புரைக்காகவும் நூலக ஆணைக்காகவும் பரிசுப் போட்டிகளுக்காகவும் அனுப்பிவிட்டுக் கையில் ஒரு பிரதியை மட்டும் வைத்துக்கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

சிலர் புத்தகங்களை அச்சிட்டு, நிலைப்பேழையில், பரணில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். விற்க முடியாத தம் புத்தகங்களைப்  பார்த்துக் கொண்டிருக்கின்ற வேதனையைவிட, பெரிய வேதனை எதுவும் எழுத்தாளர்களுக்கு இருக்க முடியாது.

இந்தப் புத்தகங்கள் இடத்தை அடைக்கின்றன என்று இடித்துரைக்காத இல்லத்தரசி யாரும் இல்லை. மனைவியின் ஏசல்களுக்கு அஞ்சி, புத்தகங்களை கட்டி எடுத்துச் சென்று எடைக்குப் போட்டவர்கள் உண்டு.

புத்தகம் அச்சிடுவதற்கான செலவைவிட, வெளியீட்டு விழாவுக்குப் பல மடங்கு செலவு செய்கிறார்கள். அந்தச் செலவில் மேலும் இரண்டு தலைப்புகளில் புத்தகங்கள் அச்சிட்டுவிடலாம்.

சிலர் சாமர்த்தியமாகப் புத்தகங்களைப் பிறர் தலையில் கட்டிவிடுகிறார்கள். அரசு அதிகாரியாக எழுத்தாளர் இருந்தால் அவரின் கீழ் பணியாற்றுகின்ற அனைவரையும் புத்தகம் வாங்க வைக்கிறார்கள். தன்னுடைய நண்பர்கள் ஒவ்வொருவரையும் பத்துப் புத்தகங்கள் வாங்குங்கள் இருபது புத்தகங்கள் வாங்குங்கள் என்று வற்புறுத்துகிறார்கள். விழாவில் புத்தகம் வெளியிடவும் வாங்கவும் ஊரில் உள்ள பெரிய பணக்காரர்களை அழைக்கிறார்கள். இவர்களில் விரும்பிப் புத்தகம் வாங்குபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வாங்கியவர்கள் புத்தகங்களைப் புரட்டுவார்களே தவிர, படிக்க மாட்டார்கள். போட்ட முதலை எப்படியாவது வசூல் செய்துவிட வேண்டும் என்ற துடிப்புதான் இத்தகைய வெளியீட்டு விழாக்களில் விஞ்சி நிற்கிறது. இத்தகைய வல்லமை எல்லா எழுத்தாளர்களுக்கும் வாய்ப்பது இல்லை.

யாரேனும் எழுத்தாளர் தோளில் பையை மாட்டிக்கொண்டு வந்தால்…. அல்லது கையில் கட்டைப் பையைத் தூக்கிக்கொண்டு வந்தால்…. புத்தகம் கொடுத்துவிடுவார் என்று பதுங்குவோர் தொகை கூடி வருகிறது.

தம் நூல்களைப் பதிப்பகங்கள் வெளியிடும் என்று கனவுத் தேரேறி வலம் வருகின்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் பதிப்பகங்கள் நூல்களை வெளியிடுகின்றன என்ற விவரம் அவர்களுக்குத் தெரியவில்லை.

இன்றைய தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாளர்களின் நிலை மிகவும் கவலைக்கு இடமாகத்தான் உள்ளது. அவர்களுக்கு உதவும் நிலையில் இன்றைய சமூகப் போக்கு இல்லை. காலத்துக்கு ஏற்ப உத்தியை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.

பெரும் நிறுவனங்களின் அச்சு இதழ்கள்கூட இணைய இதழ்களாக மாறி வருகின்றன. அதுபோல் எழுத்தாளர்கள் தம் புத்தகங்களை இணைய நூல்களாக வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் ஏட்டு நூல்களைக் காட்டிலும் இணைய நூல்கள்தாம் செல்வாக்குப் பெறும்.

வீட்டுக்கு ஒரு நூலகம் அமைப்போம் என்ற முழக்கம் தேவை அற்றதாகி விட்டது. அலைபேசி வழியாக ஒவ்வொருவர் கையிலும் ஒரு நூலகம் இருக்கிறது.

இணைய நூல்களை மிகக்குறைந்த செலவிலும் வெளியிடலாம். செலவு இல்லாமலும் வெளியிடலாம். புத்தகங்களை விற்க முடியாமல் அடுக்கி வைத்துப் பார்க்கின்ற வேதனையில் இருந்து விடுபடலாம்.

இணைய நூல்கள் இந்த உலகம் முழுவதும் உலவும். என்றும் நிலைத்து நிற்கும். எனவே எழுத்தாளர்களே உங்கள் நூல்களை மின்னூல்களாக மாற்றுங்கள்.

உங்கள் மின்நூல்களை விற்பனை செய்து உங்களுக்கான உரிமைத் தொகையைத் தருகின்ற இணைய தளங்களும் உண்டு. உங்கள் நூல்களை மின்நூல்களாக்கி இலவசமாக இணையத்தில் உலவ விடுகின்ற இணைய தளங்களும் உண்டு. உங்களுக்கு என்று ஒரு வலைப்பூவை உருவாக்கியும் மின்நூல்களை வெளியிடலாம்.

உங்கள் நூல்களை இனிப் பழுப்பேற விடவேண்டாம்.

மின்நூல்களாக வெளியிடுங்கள்.

உலகம் முழுவதும் தமிழ் நூலகப் பரப்பை விரிவு செய்யுங்கள்.

Series Navigationவிடியல் தூக்க சுகம்கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ஆங்கில புதுவருடமும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *