ஒரு மரணத்தின் விலை

லாவண்யா சத்யநாதன்

மருத்துவமனையின்
முதலாளி அவரே
தலைமை மருத்துவரும்.
அவர் கண்ணுக்கு நான்
ஆஸ்டின் பசுவாகவோ
ஜெர்சி பசுவாகவோ தெரிந்திருக்கவேண்டும்.
கறந்தார் கறந்தார் அப்படிக் கறந்தார்.
வலித்தாலும் வாயில்லா ஜீவனானேன்.
வந்த வயிற்றுவலி
போகாமல் போகவே
வார்டில் சேர்த்தோம்.
வதைமுகாமிலகப்பட்டவர்போல்
வதங்கிப்போனார் அப்பா.
ஆடாமல் அசையாமல் ஒருநாள்
ஆம்புலன்சில் வீடு சேர்ந்தார்.
காற்றில் கலந்த அப்பாவின் உயிரை
கரைசேர்ப்பதாய் புரோகிதர் வந்தார்.
தகனம் முதல் கிரேக்கியம்வரை
ஐந்து லகர ஏழு லகர பேக்கேஜ்களை
சிபாரிசு செய்துகொண்டிருந்தார்.
நான் மொட்டை போட்டுக் கொண்டிருந்தேன்.

Series Navigationகடிகார கோபுரம் (நாவல்) தாரமங்கலம் வளவன்பாலியல் சமத்துவம் இன்னும் நூறாண்டு காத்திருக்கணும்..