கனடிய மக்களை ஆச்சரியப்படுத்திய பல வடிவப் பனிக்கட்டிகள்.

This entry is part 1 of 15 in the series 5 டிசம்பர் 2021
 
குரு அரவிந்தன்
 
கனடாவில் பனிக்காலம் ஆரம்பித்து விட்டது. ரொறன்ரோவில் சென்ற கிழமையில் இருந்து பனி கொட்டத் தொடங்கியிருக்கின்றது. மனிற்ரோபா ஏரியின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள தண்ணீர் சென்ற வாரம் உறை நிலை எய்திய போது, சிறிய பந்துகள் போன்று மாற்றமடைந்திருப்பது அவதானிக்கப்பட்டது. இதற்கு இயற்கையான காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என நம்புகின்றார்கள். 
 
வின்னிப்பெக்கில் இருந்து 200 கிலோ மீட்டர் வடமேற்கே இந்த ஏரி இருக்கின்றது. 200 கிலோ மீட்டர் நீளமான இந்த ஏரி கனடாவின் 14வது பெரிய ஏரியாகவும், உலகின் 33வது பெரிய ஏரியாகவும் இருக்கின்றது. சுமார் 30 மில்லியன் டொலர் பெறுமதியான மீன்கள் வருடாவருடம் இங்கே பிடிக்கப்படுகின்றன.  ஸ் ரீப்றொ க் என்ற இப்பகுதியில், இந்த ஏரி நீர் ஒரு போதும் இப்படி மாற்றம் அடைந்ததில்லை. சாதாரணமாக பனிக்காலத்தில் மேற்பரப்பு உறைந்த நிலையில் தட்டையாகக் காணப்படும், ஆனால் இம்முறை ஏரியின் மேற்பரப்பில் இப்படி வித்தியாசமான சிறு உருண்டைகள் தோன்றியிருப்பது அங்கிருக்கும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. மதநம்பிக்கை உடையவர்கள் இதற்கு வேறுகாரணங்கள் சொல்லலாம், அறிவியல் சார்ந்த கருத்துக்களைக் கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்து என்வென்றால்,
 
ஏரியின் தண்ணீர் உறை நிலைக்குச் செல்லும் போது, மேற்பரப்பில் குளிர் காற்று வீசினால், அதனால் மேல் மட்டத்தில் சிறிய அலைகள் தோன்றும். அப்படித் தோன்றும் போது, அவை திரண்டு சிறு கற்கள் போல மாறி, பனிப்பந்துகளாக மறிவிடலாம். காற்றின் வேகத்தையும், உறைநிலை அடைய எடுக்கும் நேரத்தையும் பொறுத்து அவற்றின் உருவ அமைப்புக்கள் மாறுபடலாம். இந்த இரண்டு நிலையும் ஒரே சமயத்தில் நடந்தால் இப்படி மாறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அல்பேர்ட்டா பல்கலைக்கழக பேராசிரியரும், பனிப்பாறை நிபுணருமான ஜெவ் கவன்னாக் இது பற்றிக் கருத்துத் தெரிவித்தார்.
 
சமீபத்தில் சட்பரி பகுதியில் உள்ள வானபிட்ரி  (Wanapitei River) ஆற்றங்கரையில் தண்ணீர் உறைந்தபோது, மிகவும் வித்தியாசமாக பனிக்கட்டிகள் பான்கேக் வடிவத்தில் வட்டம் வட்டடமாக இருந்ததாகச் சட்பரியைச் சேர்ந்த டக் ஜோடோயின் என்பவர் தெரிவித்தார். ஒட்டாவாவில் பனிப் பொழிவின் போது ‘றோள்ஸ்’ வடிவத்தில் பனிக் கட்டிகள் இருந்ததாக டேவிட் பிலிப்ஸ் தெரிவித்தார். குறைந்தது 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால்தான் மென்மையான பனிப்படலம் உருண்டு உறையும் போது, இப்படி றோள்ஸ் வடிவம் பெற்றிருக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். சிறிய குச்சிகள் வடிவத்திலும் பனி உறையும்போது மாற்றமடைவதுண்டு. ‘துருவப் பகுதிகளில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கலாம், ஆனால் இது போன்ற மாற்றங்களை இதுவரை இங்கே கண்டதில்லை’ என்று மனிற்ரோபா பல்கலைகழக பேராசியரான யூலியான ஸ்ரோவ் தெரிவித்தார்.
 
 

எல்லாப் பொருட்களும் மூலக்கூறுகளால் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதை அடர்த்தி என்று சொல்வார்கள். அந்தவகையில், பூஜ்ய டிகிரி செல்சியஸில்தான் பனிக்கட்டிகள் உறையும் என்பதால், தண்ணீரைவிட அவை அடர்த்தி குறைவாக இருக்கின்றன. அதனால்தான் பனிக்கட்டிகள் தண்ணீரில் மிதக்கின்றன. கனடாவில் பனிக்காலத்தில் ஆறுகள், குளம், குட்டைகள், எரிகள் உறைநிலைக்குச் செல்வது காலாகாலமாய் நடந்து கொண்டே இருக்கின்றது. இக்காலத்தில் இது போன்ற பல வடிவங்களில் பனிக்கட்டிகளைக் கனடாவில் காணமுடியும். கோடை காலத்தை விடப் பனிக்காலத்தை மகிழ்ச்சியோடு விரும்பி வரவேற்கும் பலர் இங்கே இருக்கிறார்கள். பனிக்கால விளையாட்டு வீரர்களும் இதில் அடங்குவர்.

 

 

Series Navigation’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

குரு அரவிந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *