கருவூலம்

 

 

இறகை உதிர்க்காத

சிறகை மடக்காத

பறவையோடுதான்

பயணம் செய்கிறேன்

மலைகளைத்தாண்டி

கடல்களைக்கடந்து

எல்லைகளின்றி

இயங்கிவருகிறேன்

நுணுக்கமாய்ப்பார்த்தும்

நுகர்ந்தும்

உணர்வைக்குழைத்துப்

படைத்து வருகிறேன்

 

அசைவுகளாலும்

பாவங்களாலும்

மின்னும் ஓவியத்தை

வரைந்து வருகிறேன்

 

மெழுகுவர்த்தியாயும்

மெழுகாயும் என்னைப்

பகிர்ந்துகொள்கிறேன்

 

மேகமாகவும் அருவியாகவும்

அணைக்கத் தவிக்கிறேன்

அணைத்துக்கொள்கிறேன்

 

ஈரமாய் இருந்து

இதயம் கரைந்தோரை

தென்றலாய்ப் பழகி

கரம்கொடுத்தோரை

கல்வெட்டாய்ப்

பதிவுசெய்கிறேன்

 

இப்படியாக நான்

நாளும்

பூட்டித்திறக்கிறேன்

கருவூலத்தை

 

26.02.2014 மாலை 5.45க்கு 67எண் பேருந்தில் எஸ். இராமகிருஷ்ணனின் ‘குதிரைகள் பேச மறுக்கின்றன’ சிறுகதைத்தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தபோது)

Series Navigationநிழல் தந்த மரம்வையவன் & ஜி.ஜே. தமிழ்ச்செல்வி நடத்தும் “இதயத்துடிப்பு” பணிப் பயிற்சி