கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -60)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++
சுதந்திர மனிதன்
+++++++++++++

செல்வம் சேமித்துக் கணக்குக் கூட்டாத –
செல்வந்த னாய்க் கொழுத்துத் தோன்றாத –
செல்வத்தை இழக்க நெஞ்சம் அஞ்சாத –
சிறிதும் தன் மேனி ஒப்பனை செய்யாத
எவனோ ஒருவனை எடுத்துக் கொள் !
அவனே சுதந்திரம் அடைந்தவன் !

+++++++++++
என் சந்திப்பு
+++++++++++

தப்புத் தவறான செயல் களுக்கும்
அப்பால் ஒருவர் சிந்தனைக்கும்,
செம்மை யான வினைகளுக்கும்
வெளியே தொலைவில்
அரங்க மொன்று உள்ளது !
அங்கே உன்னைச் சந்திப்பேன் !

அந்தப் புல்தரை மீதிலே
ஆத்மா படுத்துள்ள போதிலே
நிரம்பி யுள்ளது உலகம்
உரையாட முடியாத வாறு !
கருத்துகள், மொழிகள், வார்த்தைகள்
ஒருவருக் கொருவர்
பரிமாறிக் கொள்ளினும் ஏதும்
புரிய வில்லை அவர்க்கு !

+++++++++++++++++++
காதலின் விலை மதிப்பு
+++++++++++++++++++

முத்தமிட விழைவேன் உனக்கு
விட்டுப் போகும் உயிரே
விலை அதற்கு !
இப்போது
எனது காதல்
அலறிக் கூக்குர லிட்டு
என்னுயிர் நோக்கிப்
பாயுது !
என்னே உன்னத ஆதாயம் ?
விலைக்கு வாங்குவோம்
இனிக் காதலை !

++++++++++++++++++
உயிரோடு உள்ளோம்
++++++++++++++++++

இப்படித்தான் பேசி வருகிறோம்
இனி வேறாகவும் பேசலாம்
வேண்டு வதற்கும்
அஞ்சி மிரள்வ தற்கும்
இடையே
மற்ற வருடன் வாழ்ந்து நாம்
உயிர்த் துள்ளோம்
குன்று வடிவில் தோன்றிய
கண்ணாடிக் கற்களாக !

**************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Open Secret – Versions of Rumi By John Moyne, & Coleman Barks (1984)

4. Life of Rumi in Wikipedia

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 26பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு