கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்

Spread the love

9 குறுங்கவிதைகள்

 

மரக்கிளைகளின் வழி
வெளிச்ச விழுதாய்த்
தொங்குகிறது சூரியன்…

****************************************

வெளிச்ச விழுதுகளில்
குருவிகளாய் ஊஞ்சலாடியபடி
இறங்குகின்றன இலைகள்

********************************************

மழையும் எப்போதாவது
நீர்விழுதாய் ஊஞ்சலாடுகிறது
மரக்கிளையைக் கட்டியபடி..

*******************************************

வெய்யில் புள்ளி வைத்து
நாள் முழுக்கக் கோலமிட்டபடி
இருக்கிறது மரம்.

********************************************

விடியலின் பூக்களாய்
பூமியின் மீது
பூத்துக் கொண்டிருக்கிறது பனி..

************************************************

சூரியன்காந்தப்பூ ஈர்க்க
அதை நோக்கி
முகம் மலர்கிறது பூமி..

******************************************

மஞ்சள் இறக்கைகளோடு
பூமியின் மீது
பறக்கிறது சூரியன்..

*******************************************

கிரண நாவுகளால்
கடலைக் குடித்து
மேகக் குடலில்
சேகரம் செய்கிறது சூரியன்.

*****************************************

மலையின் புறத்து
கதிர் ஆடை மாற்றி
இரவாடைக்குள்
புகுகிறது சூரியன்..

 

மழையாய் பாடுதல்.:-

மழையை உறிஞ்சிச்
சுவைத்துக் கொண்டிருந்தேன்..

நீர்ச்சுவை என் மொட்டுக்களில்
தாமரைத் தண்டாய்.

குழந்தையின் எச்சில் போல
சுவையற்றிருந்தது அது.

நீர்க்கதிரைச் பாய்ச்சி
நிலத்தை உழுது கொண்டிருந்தது.

எண்ணெய் தேய்த்துப் பாசிகட்டிய
குழந்தையின் மணத்தை ஒத்திருந்தது.

காய்ந்திருந்த பழைய விதைகளும்
நீருஞ்சிப் பெருக்கத்துவங்கின.

மண்புழுக்களும் என்னோடு சேர்ந்து
சேற்றை ருசித்துக் கொண்டிருந்தன.

ஒரு பட்டன் தவளையைப்போல
திடீர் விதையாய் முளைத்திருந்தேன்.

உழன்று உழன்று செம்புலச் சேறாய்க்
குழன்றபடி ஓடினேன் பூமியையும் ருசித்து.

தாகம் அடங்கி மரங்களில் இலைகளில்
வரவை எழுதினேன், சொட்டுக் கையெழுத்தில்.

தாழ்வாரங்களிலிருந்து க்ரீடம் அணிந்த
குட்டி ராணி்கள் குதித்தபடி இருந்தார்கள்.

மழையின் சலசலப்பு அடங்கியதும்
சில்வண்டுகளைப் போல பாடத்துவங்கினேன்.

எப்போதும் பாடும் பாடலை
அது ஒத்திருந்து கொஞ்சம் முற்றியதாய்.

 

தோழிகளால் வளர்ந்தவன்.

இளவேனிற் காலத்தின்
வளர் சிதை மாற்றங்களில்
இலைகளாய்  துளிர்க்கும்
பிறப்பின் முதல்  தோழியிடம்
அழுதபடியே வந்தேன்.
அணைத்து உச்சி மோர்ந்தாள்

பால்யத்தில் மொக்குவிட்ட
பள்ளித்தோழியிடம்
பலதும் சொல்லி சீண்டுவேன்
பதிலாய்ச் சிரித்துக்
கற்பி்த்தாள் பொறுமையை.

பூத்துவிட்ட பின்னாலே
கல்லூரி பாவையவள்
கைபிடித்து சுற்றினாள்
தட்டாமாலையாய்..
உலகமெல்லாம் என்
உள்ளங்கையில் குவித்து..

திருமண மாலையாகி
சீராக்க வந்தாள்
என் மீதியான துணைவி
சேர்ந்தலைந்தோம்
துன்பம் போன்ற இன்பத்திலும்..

புதுசான மொக்காய்
பொக்கைவாய்சிரிப்பில்
பூங்கொத்தாய் விரிந்தாள்
எனை ஆளவந்த தேவதை..
மீண்டும் துளிரானேன்
அவளோடு வளர..

 

Series Navigationதோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)