கவிதைகள்

Spread the love

மா -னீ

சாதாரண உத்தியோகத்தரின்

ராஜகுமாரி நான்

இரண்டறை  அரண்மனைக்கு

சொந்தக்காரியும் கூட ..!

வேண்டுவனவெல்லாம் கிடைக்கும்

கற்பகதருவின் ஏகபுத்திரியென

அழைக்கப்படுபவள் .

அப்பா பிடிக்கும்

அம்மா பிடிக்காது  என

வெளிப்படையாக சொல்லித்திரியும்

சுதந்திர ஊடகம் நான் .

உனக்கு சித்தி வரக்கூடும்

அம்மா அழுத போதும்

நானோ தீவிர அப்பா ஆதரவாளி

மனிதமும் காதலும் ரசனையும்

கோபமும் தாபமும்

இன்னும்  இன்னும்   இன்னும்

அப்பாவின் எல்லாமும் கொண்ட

வீரிய விந்தொன்றின் 

வெளிப்பாடு நான் .

அம்புலி மாமாவிற்கு முன்னரே

பாரதியையும் கார்ல்மார்க்ஸையும்

தெரிந்துகொண்ட

அதிஷ்டசாலி நான்.

எல்லாம் அப்பாவாகி போன பின்பும்

எதிரிகளாக முறைத்துக் கொள்கிறோம்

என் காதல் வாய்ப்பாட்டின் மனிதத்தில்

தெரிந்திருந்தால்

உருவாகியிருப்பாரோ

நொய்ந்த   விந்தொன்றின்   மூலம்

அம்மா போன்ற சாதாரண பெண்ணாக .

பள்ளிப்பருவத்தில்
கடைத்தெருவில் தேடி எடுத்த
பீடித்துண்டுகளை
களவில் பிடித்து
சுகிக்க முனைகையில்
கையில் பிடித்து
கன்னத்தில் அறைந்து
பீடித்துண்டை
பிடுங்கி எறிந்து
எச்சரித்துப்போன
நோஞ்சான் மனிதனின் நிழல்
இன்னும்தான் விழுகிறது
என் இதயத்தில்.
 
விடிந்து பார்த்தால்
தோட்டத்தில் தென்னங்கீற்றுகளின்
சோம்பல் முறிப்புகள்
கீழே சுகமாய் கிடந்தது
ஒரு முற்றிய தேங்காய்
தூக்கத்தில் நேற்றிரவு என்னை கலைத்த
சப்தம்
இப்போதுதான் என் காதில் விழுந்தது .

கணினி வழியே கனமான மடல் வந்து

விழுந்தது .

விரித்துப் பார்த்தேன்

அருவி ஒன்று நுரை பொங்கத்  துள்ளிக் குதித்தது 

அந்தி வானம் சூரியனின் செம்மையை அணிந்து மகிழ்ந்தது

பனி மலைகள் பாதரசமாய் உருகி வழிந்தன

வனங்கள் வானுயர நிமிந்து நின்றன

மலர்கள் மரணத்தை மறந்து சிரித்திருந்தன

பறவைகள் வான்வெளியை அளந்தன

அணில்களும் ஆந்தைகளும்

பாலையும் புல்வெளியுமாய்

படம் நூறாய் விளைந்தது .

ஒவ்வொரு படத்திலும்

இயற்கையின் அழகை

வியந்து போற்றும் ஒரு வாசகம்

கணினி முன் அமர்ந்து

படங்களை எனக்கு அனுப்பியவன்

எப்போதாவது ஆறுதலாய்

தன் அறையின் ஜன்னல் வழியே

இரவிலோ பகலிலோ

தன் தலைக்கு மேலிருந்த

வானத்தை பார்த்திருப்பானா  ?

Series Navigationமாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது