குக்குறுங்கவிதைக்கதைகள் / சொல்லடி சிவசக்தி – 21 – 28
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
- மேதையும் பேதையும்
//INKY PINKY PONKY
FATHER HAD A DONKEY
DONKEY DIED FATHER CRIED
INKY PINKY PONKY//
”எத்தனை அனர்த்தக் கவிதை யிது
என்ன எழவோ”
இகழ்ச்சியோடு உதடுகள் சுழித்து
பழித்தார் பெருந்திறனாய்வாளர்:
அவையிலிருந்த பெரியவரொருவர்
அன்று சிறுவனாய் அரசபாவனையில் ஊர்வலம் வர
தன் முதுகில் இடம்தந்து
பின்னொருநாள் இறந்துபோன கழுதையை நினைத்துக்கொண்டார்.
கசிந்த கண்ணீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டார்.
HAD HAS HAVE என்று சொல்லிப்பார்த்துக்கொண்ட சிறுவன்
அவற்றிற்கான வாக்கியங்களை அமைக்கத் தொடங்கினான்.
பின் NOT சேர்த்தும்.
ஆறடிக்குச் சற்றுக் குறைவான உயரத்திலிருந்த அப்பா
தன் நண்பன் இறந்த நாளன்று அப்படி உடைந்து அழுததை
எண்ணிப்பார்த்தாள் ஒரு சிறுமி.
INKYயும் PINKYயும் PONKYயும்
வட்டமாய் நின்று ஒவ்வொருவரையாய்ச் சுட்டிப்
பாடுவதற்கானது மட்டுமல்ல
என்று புரிவதற்குள் பாதி வாழ்க்கை போய்விடுகிறது…..
என்றாலும் தன்னை மேதையென்றே
இன்னமும் நம்பிக்கொண்டிருக்குமவர்
நிச்சயம் பேதைதானே!
- இங்கே – அங்கே
“இங்கே பாருங்கள் இத்தனை குப்பை”
அங்கேயும் பாருங்களேன்
“அட, கம்முனு கெட – இங்கே பாருங்கள்
இத்தனை பெரிய தொப்பை”
அங்கேயும் பாருங்களேன்
“அட கம்முனு கெட கம்முனு கெட – இங்கே பாருங்கள்
பிணந்தின்னும் சாத்திரங்கள்”
அங்கேயும் பாருங்களேன்
அட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட-இங்கே பாருங்கள்
பிசுக்குப்பிடித்த பாத்திரங்கள்
அங்கேயும் பாருங்களேன்
அட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட…..
- அவர் – இவர்
……………………………………………
அவர் அவராகவே இருக்கலாம்
அல்லது இவராகவே இருக்கலாம்
அவராகவும் இருக்கலாம்
இவராகவும் இருக்கலாம்
அவரை நீங்கள் அவரென்றால்
இல்லை இவரெனலாம்
அவரை நீங்கள் இவரென்றால்
இல்லை அவரெனலாம்
அவர் இவரை எவரெ வராகவும்
அடையாளங்கண்டும் காட்டியும்
கடைவிரிக்க மாட்டாதவர்கள்
அரசியல் கருத்துரைக்கத் துணிந்தாலோ _
அம்போவென்று போய்விடுவார்கள்
என்கிறார் அவரெனுமிவரெனு
மவரெவரேயவர்!
- ஒளிவட்டம்
பீடத்தின் மீதேறி நின்றவண்ணம் பிரசங்கம் செய்துமுடித்து
கையோடு கொண்டுவந்திருந்த ஜெல் பேனாவால்
பட்டிமன்றத் தீர்ப்பளிப்பாய் முடிவொன்றைப் பறையறிவித்த பின்
”இன்னொரு நாள் நான் எதிர்பார்க்கும் பதில்களைத் தரமுடிந்த அளவில் உன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு
உரையாட வா”, என்று
அதிகார தோரணையில் அழைப்பு விடுத்தவரிடம்
’அடடா, உன் தலைக்குப்பின்னால் சுழலவேண்டிய ஒளிவட்டத்தைக் காணவில்லையே’
என்று சொன்னவாறே
விட்டு விடுதலையாகி வெளிபரவும் களியில்
கிளம்பிச்சென்றது சிட்டுக்குருவி.
வெலவெலத்துப் போனவர் அவசர அவசரமாய்
கத்திரிக்கோலைத் தேடியவாறே
கையில் கிடைத்த அட்டைத்துண்டில்
கோணல்மாணலாய் வட்டம் வரைய ஆரம்பித்தார்.
- சொல்லடி சிவசக்தி
‘பெருமானின் பாதி உடலாய்
கருவறைக்குள் உறைந்திருப்பவள்
காலைக்கடன்களைக் கழிக்க என்ன செய்வாள்
பாவம்’
என்று பரிகாசமும் பாவனைக் கரிசனமுமாய்க்
கேட்ட தர்க்கவியலாளரிடம்
புன்னகையோடு பதிலளித்தாள் பராசக்தி:
”பாதியுடலாய் இருக்கமுடிந்தவளுக்கு
மீதியையும் செய்யமுடியாதா என்ன?
உங்கள் வீதிகளெங்கும் வாகான
பொதுக்கழிப்பறையே இல்லை – அதற்கு
ஏதாவது செய்யமுடியுமா பாருங்களேன்”.
- மதிநுட்பமும் மொழித்திட்பமும்
’எனக்குக் காபி என்றால் உயிர்’ என்றார் பரவசத்தோடு.
’உயிரை எத்தனை மலிவாகப் பேசுகிறார் பார்த்தீர்களா’ என்று
ஒரு கரும்புள்ளியிட்டனர்.
’உயிரென்ன வெல்லமா?’ என்று அவர் கோபத்தோடு கேட்டபோது
‘வெல்லத்தை இழிவுபடுத்துவதில் வெட்டவெளிச்ச மாகிறது இவருடைய புல்லுருவித்தனம்’ என்று
ஒரு செம்புள்ளியிட்டனர்.
’நல்ல மனம் வாழ்க’ என்றதை
’தன்னைத்தான் சொல்லிக்கொள்கிறார்’ என்பதாகவும்
’அல்பகல் அயராதுழைத்தார்கள்’ என்றதை
’அப்படி அல்லாடத்தான் அவர்கள் பிறந்திருப்பதாக’ மூளைச்சலவை செய்வதாகவும்
காலைமாலையெவ்வேளையும் புதுப்புது
அ(ன)ர்த்தங் கற்பித்துக்கொண்டே போவதில்
ஒருவேளை
கைவசமிருக்கும் கரும்புள்ளி செம்புள்ளிகள் தீர்ந்துபோட்விட்டால் என்ன செய்வது என்று
சீரிய மதிநுட்பமும் மொழித்திட்பமும் வாய்க்கப்பெற்றவர்கள்
சிந்தித்துச்சிந்தித்துச்சிந்தித்து
ஸ்விஸ் வங்கி லாக்கரில் நிரம்பி வழியுமளவு
வெகு அதிகமாகவே கரும்புள்ளி செம்புள்ளி சொல்பொருள் அ(ன)ர்த்தாத்தங்களை
சேமித்துவைப்பதென்று ஒருமனதாய் முடிவுசெய்திருக்கிறார்கள்.
- கருமமே கண்ணாயினார்
‘கருமம் எப்படிக் கண்ணாகும்?’ எனக் கேட்டார்
ஒருவர்.
‘அல்லது கண் எப்படிக் கருமமாகும்?’ என்றார் இன்னொருவர்.
‘கருமம் கருமம்’ என்று முகத்தை கோணலாக்கி தலையிலடித்துக்கொண்டார் வேறொருவர்.
’கருமம் பிடித்தவர்’ என்று காறித்துப்பினார்
மற்றொருவர்.
‘நார் கண்ணானதோ யார் கண்டார்’ என்றார்
காணாமலே விண்டிலராயிருப்பவர்.
’கண்ணன் + நயினார் கண்ணாயினார்’ என்றார்
பன்மொழிப்புலவராக அறியப்படப்
பெருமுயற்சி செய்துகொண்டிருப்பவர்.
‘கரு, மரு மேரு’ என்று WORD BUILDING கட்டி
இறும்பூதடைந்தார் சொற்கட்டிடக்கலைஞர்.
நயினாவுக்குத் தரப்பட்டிருக்கும் ‘ர்’ விகுதியை
நிறையவே சிலாகித்தார் மொழியியலாளர்.
’கண் ஆய் என்கிறாரே – இது என்ன கூத்து’ என்று
அவிட்டுச்சிரிப்போடு கேட்டவர்க்கு
வெண்பட்டுச் சால்வை போர்த்தப்பட்டது.
அவரவர் கண்ணும் கருமமும் நாரும் வேறும்
அவரவர்க்கேயாகுமாம்
என்றொரு அசரீரி எந்நேரமும் கூறும்…….
28.வேடதாரிகளும் விஷமுறிப்பான்களும்
அத்தனை கவனமாகப் பார்த்துப்பார்த்துத் தேர்ந்தெடுத்து
ஊரிலேயே மிகச் சிறந்த தையற்காரரிடம் கொடுத்துத்
தைக்கச்சொல்லி
மீண்டுமொருமுறை திருத்தமாய் நீவி மடித்து
பதவிசாக அதையணிந்துகொண்டு
ஆடியின் முன் நின்றவண்ணம்
அரங்கில் நளினமாக நடந்துவருவதை
ஆயிரம் முறை ஒத்திகை பார்த்து முடித்து
அப்படியே நீ வந்தாலும்
அடி! உன் விழியோரம் படமெடுக்கும் நாகம்
வழியெங்கும் நஞ்சு கக்கும் என
அறிந்திருக்குமெனக்குண்டாம்
குறைந்தபட்சம்
இருபது திருநீலகண்டங்கள்!