குறுங்கவிதைகள்

மனம் போன போக்கில்

இறையாலயத்தில்

இறையாலயத்தில்

இறைத் தொழுகை

கசக்கி எறிந்த

குப்பைத்தாள் ஒன்று

கண்ணெதிரே

எறிந்தவர்  ‘இல்லை’ என்கிறார்

பார்த்தவர் ‘நீதான்’ என்கிறார்

இருவருக்குமிடையே

சைகைச் சண்டை

சண்டைக்கான குப்பையை

என் சட்டைப்பைக்குள்

மறைத்தேன்

சமாதானம்! சமரசம்!! அமைதி!!!

இறையாலயத்தில்

இறைத் தொழுகை

சட்டை

ஒரு சட்டை வாங்கினேன்

நீலவான வண்ணம்

வானத்துண்டொன்று

மண்ணுக்கு வந்ததாம்

புகழ்ந்தனர் சட்டையை

அடுத்த நாள்

வாடிக்கை 

வெண்ணுடையோடு

வண்ணச் சட்டையை

வாளி நீரில் முக்கினேன்

வண்ணம் கரைந்தது

வெள்ளை  உடையெலாம்

நீலத் திட்டுக்கள்

என் வாடிக்கை உடையை

நாசமாக்கிய 

அந்த அழகான?… ஆடையில்

சொட்டிக்கொண்டே

இருக்கிறது வண்ணம்

அந்த மலர்

அந்த மலர்

மண்ணிடம் சொன்னது

‘காதலிக்கிறேன் உனை

கட்டித் தழுவ ஆசை’

மண் சொன்னது

‘உயிரைவிடு

தழுவலாம்’

உதிர்ந்தது மலர்

அறுப்புப்

பட்டறையில்

அறுப்புப் பட்டறையில்தான்

அந்த ஆட்டுக்குட்டிக்கு

வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது

ஞானம் தெளிந்தது

மனிதன் வளர்கிறான்???

பள்ளிப் பருவம்

மோனலிசா ஓவியம்

வாலிபம்

கரை தெரியாக்

கடல்வெளிப் பறவை

முதுமை கானல் நீர்

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு

வங்கிக் கணக்கு

பள்ளிப் பருவத்தில்

காசு போடாமல்

செலவு செய்தேன்

வாலிபப் பருவத்தில்

காசு போட்டுச்

செலவு செய்தேன்.

முதுமைப் பருவத்திலோ

என் வங்கிக்கணக்கில்

என் பெயரே  இல்லை.

Series Navigationஇந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்சாது மிரண்டால்