கைவிடப்படுதல்

Spread the love

சோழகக்கொண்டல்

வாசல் வந்தமரும் சிட்டுகளுக்காக

நான் வீசியெறியும் நெல்மணிகள்

பயந்து எழுந்து

பறந்து மறையும்

குருவிகள்

 

யாருக்கும் வேண்டாமல்

வீதியில் கிடக்கின்றன

எனது நெல்மணிகள்

 

நதியின் நீரைக்

கரைதழுவும் விளிம்பில்

நூறு தவளைகள்

தண்ணீர் பாம்புகள்

 

என் காலடி பட்டதும்

சட்டென கலைந்து

அலையெழ மறைகிறது

ஒரு காட்சி

 

தனியரங்கில்

வெறும்திரை பார்த்துநிற்கும்

கண்கள்

நிலம் பிளப்பதை

கடல் கொதிப்பதை

முன்னறிந்து நீங்குகின்றன

பறவையும் விலங்கும்

செவியும் பார்வையுமின்றி

செத்துமடியும்

பூச்சிகளென மனிதம்

எழுநூறுகோடி மரங்கள் கொண்ட

தனிக்காடு மனிதம்

பூமியின் ஒவ்வாமையில்

ஒட்டி வளரும் புழு

உலகத்திற்கும் எனக்குக்குமான

இடைவெளி ஒரு

வளரும் முடிவிலி

வாலை குழைத்தபடியே வந்து

வாசலோடு நிற்கிறது

கைவிடப்படுதலின் நரகத்திலிருந்து

காப்பாற்ற வந்த

கடைசிக் கருணை

தனித்து விடப்படுகிறேன்

வீட்டிற்குள்.

Series Navigationஏன் எப்போதுமே இந்துக்களே தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்?ஏமாற்றம்