சமுதாய அக்கறை உள்ளவை [வளவ. துரையனின் “சாமி இல்லாத கோயில்” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]

Spread the love

ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி

வளவ. துரையனின் படைப்புகள் எல்லாமே சமுதாய அக்கறையை வெளிப்படுத்துபவை. அவ்வகையில் இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளும் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன எனலாம். பல்வேறு தரப்பு மனிதர்களின் மனப்போராட்டங்களையும், வாழ்வில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் இவை நேர்மையான முறையில் பேசுகின்றன.

முச்சந்திகளில், தெருவின் ஓரத்தில், மரத்தடிகளில், வானமே கூரையாகக் கொண்டு கோயில் இல்லாமலே சாமிகள் குடியிருப்பதுண்டு. நாம் பலமுறை இவற்றைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் சாமி சிலைகள் இல்லாமல் எந்தக் கோயிலும் இருப்பதில்லை. நூலின் தலைப்புக் கதை அப்படி ஒரு கோயில் இருப்பதைக் காட்டுகிறது. அதற்கான காரணமும் ஓரளவு வெளிப்படையாகவும், கொஞ்சம் மறைவாகவும் உணர்த்தப்படுகிறது. மேலும் சாமி இருக்கும் தகுதியை இக்கோயில் பெறவில்லை என்பதைக் காட்டி அதுவே நூலிற்கும் பெயராகவும் உள்ளது.
எப்பொழுதுமே நாம் சொற்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் அதுவும் ஒருவரை விமர்சிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரைப்பற்றிய நம் கணிப்புத் தவறாகும்போது அவரைப் பற்றி நாம் விமர்சித்தது சாட்டையாகி எய்தவரையே தாக்கும் என்பதைக் காட்டும் கதைதான் “வார்த்தைச் சாட்டை”.

”வண்டியோட்டி” சிறுகதையின் நாயகன் ஒரு கவிஞன். அவன் எழுதியுள்ள கவிதை ஒன்றும் அக்கதையில் காட்டப்பட்டுள்ளது.
”வண்டி கிடைத்தவர்களுக்குச் சரியாய்
ஓட்டத் தெரியவில்லை; திறமையாய்
வண்டி ஓட்டத் தெரிந்தவர்களுக்கு நல்ல
வண்டிகள் கிடைப்பதில்லை”
என்பதே அக்கவிதை. இக்கவிதையை மனமானது சற்றே அசைத்தால் “விருது” கதைக்கும் பொருந்துவதாக உள்ளது.
”விருது பெறும் தகுதி இல்லாதவர்களுக்கு
விருது கிடைக்கும்;
விருது பெறும் தகுதி உடையவர்களுக்கு
விருது கிடைக்காது”
என்பதாக ஒரு கவிதை நமக்குள் முளைக்கிறது.
”புல்லுருவி” அருமையான கதை. இந்து-முஸ்லீம் கல்வரத்தை நினைவூட்டுகிறது. மேத்தாவின் [மனமே கோவில் மனமே தேவன்]
”இந்தியனே! இந்தியனே!
நீயிருக்க முதலில் இடம் தேடு
…… ……. ………… ……………… ……… …….
…… ……. ….. ……….. …… ……. …….. …….. ………
திரிகள் எரிந்து கொண்டிருக்கின்றன
என்னும் கவிதை வரிகள் மனத்தில் நிழலாகின்றன.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளை, நீராதாரங்களை நாம் புதிதாக உருவாக்காவிட்டாலும் இருப்பதைக் கூடப் பாதுகாப்பதில்லை என்ற குமுறலை வளவ. துரையன் “ஏரி” என்னும் சித்திரத்தின் வழி வெளிபடுத்துகிறார். ஒரே சிறுகதையில் சமுதாயத்தின் இரு தீமைகளைக் கண்டிக்கும் கதைதான் “விடியாத உலகம்.” பெண்ணை வக்கிரமாகப் பார்க்கும் பார்வையும், சாதியமும் கலந்த கலவையாக அக்கதை இருக்கிறது.

பேருந்தில் தன் பர்சைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் ஒருவனின் மன உணர்வுகள் “நிம்மதி” கதையில் நன்கு படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கையில் எல்லாரும் எதிர்கொள்ளும் இடர்ப்பாடான அவசரம் அக்கதையில் பிரதிபலிக்கிறது. கதையின் முடிவில் தொலைந்து போனது கிடைத்துவிட்டது என்பதில் நமக்கும் கூட நிம்மதியில் கிடைக்கும் “நிம்மதி.”

”ஆலமரம்” சிறுகதை எழுத்துலகில் நிலவும் பாரபட்சத்தைத் தோலுரிக்கிறது. அதே நேரத்தில் படைப்பாளிக்குத் தெளிவையும் காட்டுகிறது. ”வண்டியோட்டி” சிறுகதையானது பல பெரிய மனிதர்கள் தங்களின் தகுதிக்கு முரணாகப் பிறரின் சிறு சிறு பொருள்களை அபகரிக்கும் மனத்தின் சிக்கலுக்கு அடிமையாகி இருப்பதை நினைவூட்டுகிறது. “வலை” எத்தனையோ வலைகளிருக்க நாட்டுக்குள்ளே மலிந்துள்ள மோசவலையைக் காட்டும். சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் நயவஞ்சகர்களின் நாடகத்தை அம்பலமாக்குகிறது.

’தோல்வி” சிறுகதை நேர்மைக்கு இங்கே இடமில்லை என்பதை வலியுறுத்துகிறது. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதையும் காட்டுகிறது. நாட்டில் துணை வர எவருமே முன்வராத நிலையிலும் ஒவ்வொருவரும் பொறுப்போடு செயல் பட்டால் வெற்றி வந்து சேரும் என்பதைக் காட்டும் கதைதான் “தனியாள்.” ஒரு மனிதனின் சாவிற்கு வெளிவந்த காரணங்களுடன் வெளிவராத காரணமும் இருக்க்லாம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது ”மூன்று காரணங்கள்.”

சித்தர்களின் சித்து விளையாட்டு உண்மையே என்பதனை ‘ஆறுமுகத்தைப் பெண்ணொருத்தி தொட்டதிலும், அவன் பெற்ற கல் மஞ்சளாய் மின்னிய ரசவாத்திலும், “திருக்கடிகைத்தானம்” மெய்ப்பிக்கிறது. இறந்தவரின் இறுதி ஆசையைப் பிள்ளைகள் எப்பாடுபட்டாயினும் நிறைவேற்ற முனைந்தாலும் சாதிச் சண்டை அதற்குத் தடையாகி இறுத்கி ஊர்வலத்தையே அலங்கோலமாக்கும் என்பதே “பல்லக்குப் பயணம்.” மேடையில் போடப்படும் “துண்டு” பற்றிக் கூறுகிறது ‘துண்டு’ சிறுகதை. பொன்னாடைகள் பயனுள்ளதாக இருப்பதன் அவசியத்தையும், இருக்க வேண்டும் என்பதையும் நகைச்சுவையோடு பதிவு செய்கிறது அக்கதை.
”கற்பு” குடும்பத்தில் மட்டும் அன்று; இயக்கத்திற்கும் வேண்டும் என்பதை மிக அழகாகச் சொல்லும் பாங்கு மனம் கவர்கிறது. “வடு” பெண்ணொருத்தி எதையும் பங்கு போட்டுக் கொள்வாள் கணவனைத் தவிர என்பதைச் சொல்லும். அன்பும் மன்னிப்பும் இருந்தாலும் கணவரின் ஒழுக்கக்கேடு கதையின் நாயகியைக் கொலைகாரியாக்கி விடுகிறது. இது நெஞ்சை உலுக்குகிறது.

மொத்தத்தில் தொகுப்பின் அனைத்துச் சிறுகதைகளும் தமிழ் அன்னைக்கு அணிகலன்களாய் விளங்குகின்றன என்று துணிந்து சொல்லலாம்.

[ சாமி இல்லாத கோயில்—சிறுகதைத் தொகுப்பு—வளவ. துரையன்; வெளியீடு ; ருத்ரா பதிப்பகம்; 14-அ, முதல் தெரு; அருளானந்தம்மாள் நகர், தஞ்சாவூர். பக்:144. விலை; ரூ150; பேச: 04362 256234]

Series Navigationபிரிவை புரிதல்…