சமுத்திரக்கனியின் ‘ நிமிர்ந்து நில் ‘

Spread the love

 

 

இதுவரை ஊழல் எதிர்ப்பாக வந்த படங்களின் கலவையாக வந்திருக்கிறது இந்தப் படம். கொஞ்சம் முருகதாஸின் ரமணாவை எடுத்துக் கொண்டு வசனங்களில் சில சித்து வேலைகளைச் செய்து ஓரளவு பார்க்க கூடிய படமாகத் தந்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் உண்டு.

அரவிந்த் சிவசாமி ( ஜெயம் ரவி ) கல்லூரி  படிப்பு வரை, வெளியுலகமே தெரியாமல், காந்திய வழியில் வளர்ந்த இளைஞன். வேலை அவனை வெளியில் தூக்கிப் போடுகிறது. நேர்மை, நாணயம், கட்டுப்பாடு, கடமை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளே என அவன் உணரும் தருணத்தில், அவன் உள்ளிருக்கும் உணர்வுகள் தூண்டப்படுகின்றன. தன்னைப் போக்குவரத்தில் அவமானப்படுத்திய காவல் அதிகாரியிலிருந்து அவன் போர் ஆரம்பிக்கிறது. ஆனால் அது அவனை சிறைச்சாலை வரை கொண்டு சென்று விடுகிறது. லஞ்சம் எதுவரை பாயும் என்பதைக் காட்ட, இல்லாத ஒருவருக்கு மரணச் சான்றிதழும், அதே நபருக்கு பாஸ்போர்ட், வாகன ஓட்டுனர் உரிமம் என சகலவற்றையும் லஞ்சம் மூலமாக சாதித்து, அதை முறைப்படி வீடியோ படமாக எடுத்து, தொலைக்காட்சி செய்தியாளர் கோபிநாத்திடம் கொடுத்து, ஊரறியச் செய்து விடுகிறான் அரவிந்த். அரவிந்தைத் தேடி லஞ்ச லாவண்யக் கூட்டம் வெறியுடன் அலைகிறது. அவர்களிடம் சிக்காமல், அத்தனை ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விடுகிறான் அவன். போலி சான்றிதழில் இருக்கும் புகைப்படம் அரவிந்தின்  மாறுவேட முகமே என்பதை அறியும் எதிரிகளின் கூடாரம், கணினி மூலமாக அதைப் போன்ற ஒரு நபரைத் தேடுகிறது. ஆந்திராவில் இருக்கும் நரசிம்ம ரெட்டி ( ஜெயம் ரவி 2) அந்த புகைப்படம் போலவே இருக்கிறான். அவனிடம் பேரம் பேசுகிறது லஞ்சக் கூட்டம். அரவிந்தின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லை அவன் கதை முடிக்கப்பட்டதா என்பதை முழுப்படமாகச் சொல்லியிருக்கிறார் கனி.

ஜெயம் ரவியின் நடிப்பை பொறுத்தவரை, அப்பழுக்கில்லாத நடிப்பு. அவரது காதலி பூமாரியாக வரும் அமலா பாலுக்கு இது ஒரு குறிப்பிட்த்தக்க படம். சூரி இந்தப் படம் மூலம் தன் இடத்தை வெகுவாக உயர்த்திக் கொண்டிருக்கிறார். நேர்மையான வக்கீலாக வரும் சுப்பு பஞ்சு கச்சிதம். காதில் பூ சுற்றும், லாஜிக் இல்லாத காட்சிகள் இருந்தாலும், விரசமற்ற ஒரு க்ளீன் மூவியைக் கொடுத்ததற்காக கனி மற்றும் ரவியைப் பாராட்டலாம்.

புதிய சிந்தனையுடன் இன்னொரு படத்தை கனி விரைவில் கொடுப்பார் என்கிற நம்பிக்கையோடு வெளியேறுகிறான் தமிழ் சினிமா ரசிகன்.

0

ஜட்ஜ்மென்ட் : விரைப்பு

ரசிகன் காமென்ட்: ஐட்டம் டான்ஸ் இல்லாட்டாலும்  அமலா டான்ஸ் கொஞ்சம் ஆறுதலா இருக்கு மச்சான்.

0

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​