சாவு சேதி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 22 in the series 24 ஜனவரி 2016

     ஜி,சரவணன்

 

விடிந்து ரொம்ப நேரமாகிவிட்டது. வீடுகளில் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இருந்தனர். சீனிச்சாமி அய்யா திண்ணையிலிருந்து இறங்கி இன்னும் தெருவில் கால் வைக்கவில்லை. தெருவிலிருக்கும் ஆண்கள் வெளியில் கிளம்பும் நேரத்தைவிட சீனிச்சாமி திண்ணையைவிட்டு தெருவில் நடக்கத் தொடங்குவதுதான் ஊருக்கே நேரக்கணக்கு. வழக்கமாக காலை நாலரை மணிக்கே எழுந்துவிடுவார். இருட்டிலே அமர்ந்தபடி நாலைந்து முறை வெற்றிலை சீவலை மெல்லுவதும் துப்புவதுமாக ஏழுமணி வரைக்கும் கழியும். இடைப்பட்ட அந்நேரங்களில் எதாவது காரியமாக யாரும் தெருவில் நடந்துபோனால் அவரின் விசாரிப்புக்கு பதில் சொல்லாமல் நகரமுடியாது. மழுப்பலாக ஏதும் சொல்லிவிட்டு சென்றால் அவர்களையும் வெற்றிலையோடு சேர்த்து மென்று ஏதாவதொரு புதுக்கதை கட்டிவிடுவார் என்பதால் யாராக இருந்தாலும் அவரிடம் பேசிவிட்டு செல்வதுதான் வழக்கம். ஊரில் யார் யார் என்னென்ன வேலையாக எங்கெங்கு போனார்கள் என்பது அவருக்குத் தெரியாமல் நடப்பதில்லை.

விசாலமான தெருவில் அவரின் வீடுதான் ஊருக்கே முகப்பு. ஊர் என்று சொல்லப்படுவது சற்றே நீண்டு கிடக்கும் அந்த ஒற்றைத் தெருவைத்தான். இடதுபக்க வளைவில் சற்றுத்தள்ளி உள்ளடங்க அமைந்திருக்கும் அவர் வீட்டுத் திண்ணையிலிருந்து அமர்ந்து பார்த்தாலே தெருவின் எல்லா வீடுகளும் தெளிவாகத் தெரிந்துவிடும். அந்தந்த வீட்டுவாசலில் நடக்கும் வம்புதும்புகளும் சேர்த்துத்தான். ஊரில் எதாகிலும் விவகாரம் என்றால் நியாயம் பஞ்சாயத்து பைசல் செய்வதெல்லாம் சீனிச்சாமி வீட்டில்தான். அதற்குக் காரணம் எல்லாரும் உட்கார்ந்து விசாரிக்க வசதியாக நீண்டுகிடக்கும் அவர் வீட்டுத்திண்ணை. பொழுதுக்கும் பிள்ளைகள் விளையாடுவதும் வேடிக்கை காட்டுவதுமெல்லாம் அவர் வீட்டுவாசலுக்கு முன்பும் அந்தத் திண்ணையிலும்தான். காலையில் தினத்தந்தி படிக்க ரெண்டு மைல் நடந்து கடைத்தெருவுக்குப் போவது தவிர மற்ற நேரங்களில் ஊரில் இருக்கிற ஒரே வயசாளி ஆம்பிளை அவர்தான். மற்ற வீடுகளில் எல்லோரும் வயல் வாய்க்கால் தோட்டம் என்று போனால் மதிய சாப்பாட்டுக்கோ சாயங்காலமோதான் வீடு திரும்புவார்கள். சீனிச்சாமி குடும்பம்தான் ஊரில் பெரிய தலைக்கட்டு என்பதாலும் அவர்தான் ஊர் நாட்டாமை.

சீனிச்சாமி திண்ணையிலிருந்து இறங்கி வெளியே கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார். தெருமுனையில் ஒரு நடுத்தர வயது வழுக்கைத்தலைக்காரர் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார். சைக்கிளின் முகப்பில் திருவிழாக்களில் பாட்டு பாடும் கூம்புக்குழாய் ஒன்று கட்டியிருந்தது பார்க்க விநோதமாய்த் தெரிந்தது. பின்பக்க காரியரில் பேட்டரியும் இன்னொரு பெட்டியும் வயரோடு சேர்ந்த மைக்கும் இருந்தது. பிள்ளைகள் ஓடிவந்து வட்டமாக சூழ்ந்துகொண்டனர்.

“நோட்டிஸ் குடுங்க“ என்று கேட்டு சுற்றிநின்ற பிள்ளைகளை நகரச்சொல்லியபடி சைக்கிளை நிறுத்திவிட்டு பின்பக்க பெட்டியையும் வயரையும் முடுக்கி ஏதோ செய்துவிட்டு மைக்கை எடுத்து “அலோ… அலோ..“. என்றார்.

கிட்ட நெருங்கி நின்ற ஒன்றிரண்டு பையன்களும் மைக்கிடம் எக்கி வாயைக் கொண்டுபோய் “அலோ… அலோ…“ என்று கத்தினர். அந்நேரம் சுற்றி நின்ற பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஓவென்று சத்தமாக்க் கத்திச் சிரித்த சத்தம் பெருத்து தாறுமாறாகக் கேட்டதில் பெண்களும் தலைவாசல் வந்து எட்டிப் பார்த்தனர். பிள்ளைக்கூட்டத்தை நகர்த்திவிட்டு சைக்கிளில் வந்தவர் மைக்கில் “அலோ… அலோ…“ என்றார்.

லேசாகக் கனைத்துக்கொண்டு பேசத் தொடங்கினார். “வருந்துகிறோம்… வருந்துறோம்… “

சற்று நிறுத்தி… “இறப்பு சேதி… அதாவது… நாலாபுரம் பெரிய மிராசு சக்கரத்தார் அவர்கள் நேற்று இரவு காலமாகிவிட்டார் என்று இதன் முலம் அறிவிக்கப்படுகிறது. ஊர்நாட்டார் உறவுக்காரார் பண்ணைவாசிகள் அறிஞ்சவர் தெரிஞ்சவர் எட்டு ஊர் சனங்க எல்லாரும் இன்னிக்கி சாயங்காலம்…“

வாசலிலிருந்து விடுவிடுவென இறங்கி வந்த சீனிச்சாமி மைக்கில் பேசிக்கொண்டிருந்தவரின் சட்டையைப் பிடித்து உலுக்கி பிடறியில் ஓங்கி ஒரு அடி கொடுத்தார். சத்தத்துடன் மைக் கீழே விழுந்து ஒய்ங்ங்………. என்று ஊளையிட்டது. பிள்ளைகள் கூச்சலும் அதிகமானது. ஒரே சத்தமாக அவ்விடமே அமர்க்களமானது.

“அதை நிறுத்துடா“ என்று அதட்டினார் சீனிச்சாமி.

பிள்ளைகள் ஆளாளுக்கு வயர்களைப் பிடுங்கி இழுத்ததில் மைக்கின் ஊளைச்சத்தம் அடங்கியது. ஒரு பையன் உயிரற்ற மைக்கில் வாய் வைத்து “அலோ அலோ அலோ“ என்று சன்னமாக சொல்லிப் பார்த்தான்.

பயத்தில் மிரண்டிருந்த அந்த ஆள் “ஏங்க என்னங்க செய்யிறீங்க? சாவு சேதி சொல்ல வந்தா இப்பிடியா செய்வீங்க வுடுங்க“ என்று முரண்டு பண்ணினார்.

அவரின் சட்டையைப் பிடித்து உலுக்கி, “யார்ரா நீ? அந்த சேட்டுப்பய இப்பிடி சொல்ல சொன்னானா? வாடா இங்க, உன்னெய என்ன பண்றன் பாரு…“ அவரின் கையைப் பிடித்து திண்ணைக்கு இழுத்து சென்றார் சீனிச்சாமி.

என்ன நடக்கிறதென்று மைக்காரருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“அய்யா அய்யா என்னங்கய்யா இப்பிடி பண்றீங்க, இந்த மைக்குசெட்டுதான்ய்யா எனக்கு பொழப்பு. ஏதும் பண்ணிடாதீங்கய்யா பெரியவரே, அம்மா சொல்லுங்கம்மா“ என்று பெண்கள் பக்கமாகத் திரும்பி கெஞ்சினார்.

“என்னை வுடுங்கய்யா நேரமாவுது. இன்னும் அஞ்சாறு ஊரு போவணுங்க“ என்று திமிறினார்.

இதைக் கேட்டதும் சீனிச்சாமிக்கு ஆத்திரம் இன்னும் அதிகமாகிவிட்டது.

“எலேய் ஈத்த நாயே என் ஊருக்கே ஒருத்தன் நீ காணமாட்டே இன்னும் நாலு ஊரு போவியா நீ…“

“சேட்டுக்கு அம்புட்டு தெகிரியம் ஆயிட்டா… சக்கரத்தார செத்துப்போயிட்டாருன்னு சொல்ற அளவுக்கு… ஏய்.. போயி வூட்டாளுங்களை கொண்டாங்கடா… இவன் தோலை உரிச்சி உப்புகண்டம் போட்ருவோம்“ என்று கத்தினார் சீனிச்சாமி.

ஏய்… ஓய்… என்று கத்திக்கொண்டு பிள்ளைகள் ஒரு நொடியில் கலைந்தோடினர். பிலுபிலுவென பேசிக்கொண்டு பெண்களும் கூட்டமாய் திண்ணைக்கு வந்துவிட்டனர்.

சக்கரத்தார் செத்துட்டாருன்னு சொன்னா யார்தான் ஒப்புவாங்க. கல்லுகுண்டுமாதிரி மனுசன்… போனவாரம் கூட நல்லவிதமா நடந்து வந்து திண்ணை வீட்டில் பேசிவிட்டு சென்றவரை திடீரென்று இறந்துபோய்விட்டார் என்று சொன்னால் எப்படி?

“மனசு வந்து சொல்ல வந்துருக்கிற இவன் யாரு எவுரு. யாரும் செத்தாகொண்டா சாவு சேதி சொல்றவன்தானே வீடுவீடா வந்து சொல்ற பழக்கம். இந்த ஊரு என்ன யாரு என்னான்னு தெரியாம வெளயாடுறானா அந்த சேட்டு? ரேடியோ செட்டு வச்சி இப்புடி வமபு பண்றதுன்னா… அம்புட்டு எகத்தாளமா அந்த பயலுக்கு… நேரா எதுத்து நின்னு சண்ட போட துப்பில்லாம ஊருல கலாட்டா பண்றதுக்கு சக்கரத்தார் செத்துட்டாருன்னு புரளி கௌப்புற அளவுக்கு சேட்டுக்கு யோக்கித வந்துடுச்சோ…“

ஆளாளுக்கு மைக் ஆசாமியைப் பார்த்து துற்றிக்கொண்டிருந்தனர்.

“சேட்டு ஆளா இது… அதான் சக்கரத்தாரு குடும்பத்தப் பத்திப் புரளி பேசிறியா… இன்னைக்கி ஒம்பாடு தந்தனத்தான்தான். இந்த வளுக்கை மண்டையைப் புடிச்சி துண்ல கட்டுங்கடி, சேட்டு வரட்டும் அவன் ஆளம்பு சேனைல்லாம் வரட்டும்… என்னா கிழிக்கிறான்னு பாப்பம்“ என்றாள் சீதைக்கெழவி.

சீனிச்சாமி வேகுவேகென்று வெற்றிலை மென்றபோது முச்சிரைத்தது. பலியாடு கணக்காய் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தது சைக்கிள்.

சக்கரத்தார் மகிமை உலகறிஞ்சது என்பது எட்டு ஊர்வழக்கு என்பார் சீனிச்சாமி. அவருக்கு பேரே சக்கரத்தார்தான் என்றும் பெரிய சக்கரத்தார் சின்ன சக்கரத்தார் என்றும் அந்த வம்சமே சக்கரத்தார் வம்சம்தான் என்றும் அவுங்க பரம்பரையே எட்டு ஊருக்கும் குடுத்து குடுத்தே செயிச்சவங்க… இன்னும் இம்புட்டு நெலபுலம் கெடக்குன்னா அதுதான் அவுங்க பரம்பரை மவுசு என்பதாகவும் சீனிச்சாமி அய்யா பலமுறை சொல்லிச்சொல்லி மருகுவதை எல்லாரும் கேட்டிருக்கிறார்கள்.

இடைப்பட்ட காலத்தில் அப்படி இப்படி கொஞ்சம் காசு சேர்த்து வில்லுவண்டியில் டவுனுக்கு போய் ஏதேதோ காரியம் பார்த்துவிட்டு வரும் புது பணக்காரரான சேட்டு என்ற மாணிக்கம் செட்டியாருக்கும் சக்கரத்தாருக்கும் அந்தரங்கமான ஒரு விசயத்தில் சின்ன தவுசல். அதிலிருந்து பகையானதில் இரண்டு பேருக்கும் சரியில்லை. சக்கரத்தார் எவரிடமும் வம்புதும்பு செய்கிறவரில்லை. என்றாலும் அவ்வப்போது அவரது பண்ணையாட்கள் சேட்டிடம் ஏதாவது வம்பு சேட்டை செய்வதும் அப்போது சேட்டும் கூடசேர்ந்து மல்லுக்கு நிற்கிறதும் பிறகு சக்கரத்தார் தலையிட்டு அமைதிப்படுத்துவதும் நடப்பதுண்டு.

சுற்றியுள்ள ஊரிலும் பெரும்பகுதி நிலங்கள் சக்கரத்தார் வகையறாவுக்குதான் சொந்தம். பாத்தது பாதி பாக்காதது பாதி, தின்னது பாதி திங்காதது பாதின்னு கொஞ்சகொஞ்சமா மவுசு குறைந்து கொண்டுதானிருக்கிறது. பக்கம்பக்கமான ஊர்களில் இந்த ஊருதான் கடைசிஎல்லை. இங்கிருந்து குறுக்காக நடந்தால் சரியாக ஏழு மைல் தொலைவில் சக்கரத்தார் வீடு. இரண்டு மைல் நடந்தால் இடையில் கடைத்தெரு. அங்கிருந்துதான் டவுனுக்குப் போகிற மெயின்ரோடு. சுற்றியுள்ள முன்று நான்கு ஊர் சனங்களுக்கும் அதுதான் முக்கூட்டு கடைத்தெரு. காலையில் அங்கு வந்து சேர்கிறவர்கள் ஊர் சேதி உறமுறை சேதி, நல்லதுகெட்டது நாட்டு நடப்பு என எல்லா சேதிகளையும் அந்த கடைத்தெருவில்தான் கொட்டி அள்ளுவதெல்லாம். வெளியில் போகிற ஆம்பிளைகள் வெல்லம், பருப்பு எதுவும் வீட்டுக்கு வாங்கிவருவது அங்கிருக்கும் கண்ணாடி செட்டியார் கடையில்தான். (பெரியவங்க சின்னவங்க சிண்டு சிமிழு எல்லாத்துக்குமே அவர் கண்ணாடி செட்டியார்தான்). கீத்துக் கொட்டகையில் ஒரு டீக்கடையும் உண்டு. இந்த ஊரிலிருந்து கடைத்தெருவுக்கு சென்று அந்த டீக்கடையில் தினமும் காலையில் தினத்தந்தி படித்துவிட்டு ரெண்டு டீ குடித்துவிட்டு வருவது சீனிச்சாமி ஒருத்தர்தான்.

சீனிச்சாமி அந்த வழுக்கைத் தலையரைப் பார்த்து கைநீட்டி ஏசிக்கொண்டிருந்தார். “எந்த ஊர்ரா நீ? இந்த ஜில்லாலயே உன்ன எங்கயும் நான் பாத்தமாதிரியே இல்லியே? எங்க பக்கத்துல ரேடியோ செட்டு கட்டுறதுன்னா கொட்டையுரான்தான் எல்லாத்துக்கும் வருவான். கோயில் காரியம் கல்யாணம்ன்னா ரேடியோ செட்டு கட்டுவாங்க. இப்புடியா அவுசகுனமா சாவு சேதில்லாம் மைக்குல பேசுவாங்க. படுவாப் பயலே, உனக்கு வில்லங்கம்ன்னா அதுக்கு சக்கரத்தாரா கெடச்சாரு, தகுதிபகுதி தெரிஞ்சி நடக்குணும். ஊரு பயலுவோ வரட்டும் பாத்துக்க.“

முச்சிரைக்க ரெண்டு பொடியன்கள் ஓடிவந்தார்கள். பின்னால் ஈசுவரனும் அவன் தம்பியும் வேகமாக வந்துகொண்டிருந்தார்கள்.

மைக் ஆசாமி நடுக்கத்துடன் எழுந்துநின்று “என்னைக் கொஞ்சம் பேசவுடுங்கய்யா. விவரத்த சொல்றன். அப்பால நீங்க என்ன செஞ்சாலும் சரி. இம்மாம் கூட்டத்துல உங்கள அன்னியில நான் என்ன செய்யமுடியும். பேசவுடுங்கய்யா…“ என்றார்.

“என்னத்தடா பேசப்போற, இப்ப பேசு“ என்று சொல்லிவிட்டு சீனிச்சாமி உட்கார்ந்தார்.

அந்த ஆள் தன் சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த காகிதத்தை எடுத்துக் காட்டினார். அதில் சக்கரத்தார் இறந்துவிட்ட தகவலை அறிவிப்பு செய்யும் வாசகங்கள் எழுதியிருந்தது. கீழே வரிசை எண் போட்டு ஒவ்வொரு ஊரின் பெயரும் அதற்கான பாதைகளும் கோடு போட்டு குறிப்புகளும் எழுதியிருந்தது. படித்துப் பார்த்தபின் அதை துர எறிந்துவிட்டு “இவ்வளவு திட்டமா காரியம் பாக்குறீங்களா. ஒன்னுந் தெரியாத கேனப்பயலுவோன்னு நெனச்சீங்களா. மைக் செட் கட்டி சக்கரத்தார் குடும்பத்த புரளிசேதி சொல்லுவீங்களா? இவன வுடாதீங்கடா“ என்றார் சீனிச்சாமி.

ஈசுவரன் கேட்டான், “யோவ் நீ யாரு என்ன சேதி சக்கரத்தாரு செத்துட்டாருன்னு ஏன் இப்புடி புரளி கிளப்புற? அவுருக்கு எதாவது ஒன்னுன்னா மொத சேதி எங்களுக்குதான முதல்ல வரும். இந்த ஊரு ஒப்பரைக்கு சம்பந்தம் இல்லாத உன்பாட்டுக்கு சாவு சேதி சொல்றதுன்னா உனக்கு எம்புட்டு அதப்பு? அதும் சக்கரத்தாரப் பத்தி சொன்ன உன்னய இவ்வளவு நேரம் வுட்டு வச்சதே தப்பு. கட்டிப்போடுறா இந்தாளை.“

அவர் பவ்யமாக்க் குனிந்தபடி “அய்யா, மைக்குல விளம்பரம் செய்யிரதுதாங்க என் தொழிலு. டவுனுல யாரு என்ன விளம்பரம் செய்யச் சொன்னாலும் எங்கெங்க சொல்லச் சொல்லுறாங்களோ அத செய்யிறதுதாங்க என் வேல. இப்பதாங்க கொஞ்சநாளா இந்த பொழப்ப பாத்துகிட்டுருக்கேன். இந்த ஊருபக்கமெல்லாம் நான் இதுவரைக்கிம் வந்ததில்லீங்க. பாருங்க அவுங்களே பாதை ருட்டுல்லாம் போட்டு குருச்சி குடுத்துருக்காங்க. நீங்க சொல்றமாதிரி எனக்கு சேட்டுன்னு யாரையும் தெரியாதுங்க. என் பொழப்புக்காக வந்துருக்கன், நீங்க வேணா வெசாரிச்சி பாத்துக்கங்கய்யா.“ தழுதழுத்து அழும் நிலைமைக்கு வந்துவிட்டார் மைக் ஆசாமி.

சற்று யோசித்து “நீ இன்னும் கடைத்தெருவுக்கு போகிலியா“ என்று சீனிச்சாமியைப் பார்த்துக் கேட்டுவிட்டு தம்பியிடம் “எலேய், எதுக்கும் கடைத்தெருவுக்கு போயிட்டு வாடா“ என்றான் ஈஸ்வரன்.

“ஏய் இவன் யார்ரா கிருக்கன். அப்புடியே ஏதும் சேதின்னாகூட நமக்கு ஆளு வந்து இந்நேரம் சொல்லியிருப்பானேடா. இது என்னடா ஊருலகத்துல இல்லாத புது பழக்கம், மைக்செட்டு வச்சிகிட்டு து… துத்தேரி… அதெல்லாம் சக்கரத்தாருக்கு எதும் ஆயிருக்காது. போன வாரந்தான இங்க வந்துட்டு போனாரு. அந்த சேட்டுதான் எதோ வில்லங்கம் பண்றான். இவனப் பாத்தாலும் ஒரு மார்க்கமாதான் தெரியிறான்“ என்றார் சீனிச்சாமி.

“இரு இரு… எலேய் நீ விறுவிறுன்னு கடைத்தெருவுக்கு போயி ஒரு எட்டு பாத்துட்டு வாடா“ என்று தம்பியை விரட்டினான் ஈஸ்வரன்.

அந்நேரம் நாலுஊரான் மவுட்டி முச்சிரைக்க ஓடிவந்தபடியே சொன்னான். “எண்ணே, நம்ம சக்கரத்தாரு செத்துபோயிட்டாராம்.“

“ஏய்… ஏய்… என்னாது…“

“நெசமாவா லேய் என்னடா சொல்ற“

“யார்ரா சொன்னா என்னடா ஆச்சி?“

மொத்தக்கூட்டமும் அலைமோதியது.

மைக் ஆசாமி கலக்கம் தெளிந்து லேசான தெம்போடு நிமிர்ந்தார்.

“நேத்து சாயங்காலம் சக்கரத்தாருக்கு ரொம்ப உடம்பு முடியாம போயி ராத்திரி ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோறதுக்கு முன்னாடியே முடிஞ்சிடுச்சாம். சக்கரத்தாரு மவனும் ஊருல இல்லியாம். டவுனுல இருக்கிற அவுக மருமவப்பிள்ளை ரெண்டுநாளா அங்கனதான் தங்கியிருந்துருக்காரு. அவுருதான் தந்தி கொடுக்கிறது சேதி சொல்றதுன்னு எல்லா காரியமும் செஞசிருக்காரு. அவுருதான் டவுனுல இருந்து மைக்செட்டு வச்சி எல்லா ஊருக்கும் சேதிய சொல்ல சொன்னாராம். மச்சினன்காரன் வாறவரைக்கும் யாரையும் எங்கயும் போகவேண்டாம். இங்கனயே இருந்து ஆகவேண்டியத பாருங்கன்னு அவுரு சொன்னதால சேதி வெளியில யாருக்கும் தெரியவேயில்லயாம். விடிகாலையிலதான் பக்கத்துல இருக்க பண்ணை ஆளுங்களுக்கே தெரிஞ்சிதாம். கடைத்தெருவுல பேசிகிட்டுருக்காங்க.“ முச்சுவிடாமல் பேசிமுடித்தான் மவுட்டி.

இந்நேரம் பார்த்து சக்கரத்தார் மவன் வீட்டில் இல்லாததால் செய்யவேண்டிய சொல்லவேண்டிய நடைமுறையெல்லாம் மருமவனே எடுத்துகட்டி செய்கிறார். யாரும் மறுத்துப் பேச வழியில்லை. அதனால் அவருக்கு தெரிந்த டவுன் பழக்கம் போலவே இங்கும் நடக்கிறதென்று கடைத்தெருவில் பேசிக்கொண்டிருப்பதாகவும் சொல்லி அங்கலாய்த்தான்.

சீனிச்சாமி தலையில் கை வைத்தபடி உட்கார்ந்துவிட்டார். என்னென்னவோ நினைவுக்கு வந்து கலக்கமாகியது. பெண்கள் ஆளாளுக்கு கசமுசவென்று பேசிக்கொண்டிருந்தனர்.

மைக் ஆசாமியைப் பார்த்து, “சரி சரிப்பா நீ கௌம்பு. மைக் செட்டு வச்சி இப்புடில்லாம் சாவு சேதி சொல்றத இதுக்கு முன்ன நாங்க கேள்விப்பட்டது இல்ல. அதோட நீ சேதி சொன்ன ஆளும் இந்த ஊருக்கு ரொம்ப மதிப்பானவரு. அதுனால உன்ன சந்தேகப்பட்டுட்டோம், எதும் மனசுல வச்சுக்காம போங்க கோவிச்சிக்காதீங்க“ என்று அவரை ஈஸ்வரன் சமாதானப்படுத்தி பேசினான்.

“பரவாயில்லீங்க“ என்று சொல்லிவிட்டு வேகவேகமாக சைக்கிளிடம் சென்று வயர்களை இங்கும் அங்கும் பிடித்து வளைத்து மைக்கை சரி செய்தார். அதிலிருந்து ஒய்யென்று சத்தம் எழுந்ததும் நின்றுகொண்டிருந்தவர்களைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தார். நின்றுகொண்டிருந்த எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது. சட்டை வேட்டியை சரி செய்துகொண்டார். பிள்ளைகளைத் தவிர மற்றவர்கள் அங்குமிங்கும் கலைந்துநின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அமைதியைக் கலைத்து மைக் ஆசாமியைக் கூப்பிட்டு ஒரு செம்பு தண்ணீரைக் கொடுத்து குடிக்க சொன்னார் சீனிச்சாமி. அவரும் திண்ணையில் அமர்ந்து தண்ணீரைக் குடித்துவிட்டு “நான் கௌம்பறேங்க“ என்று கைகூப்பி வணங்கினார்.

சீனிச்சாமி மடியிலிருந்து இரண்டு ருபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து “இத வச்சிக்கப்பா“ என்றார்.

மைக்செட்காரர் “வேணாங்க“ என்றார்.

“இல்லல்ல… இதெல்லாம் பழக்கம்தான். துக்கசேதி சொன்னவங்கள சும்மா அனுப்பறது நல்லாருக்காது. கடைத்தெரு போயி கடையில எதாவது காபி பலகாரம் சாப்புட்டுட்டு போ“ என்றார்.

அவர் ருபாய் நோட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டு “நான் ரேட் பேசிதாங்க விளம்பரம் செய்யிறேன். இதெல்லாம் வேண்டாம்“ என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு விடுவிடுவென வந்த திசையிலேயே சைக்கிளைத் திரும்பினார்.

“எலேய் எல்லாம் பொண்டுவோளக் கூப்புட்டுகிட்டு கிளம்புங்க. நேரமா கௌம்பி போவலாம். அவோ செஞ்சது சரியில்லன்னாலும் சக்கரத்தாருக்காக நாம முன்னாலேயே போயி நிக்கணும். காரியத்துக்கு சாமான்சட்டுல்லாம் வாங்க தோது பண்ணிக்கடா ஈஸ்வரா. கௌம்புங்க கௌம்புங்க.“ திண்ணையிலிருந்து உத்தரவு போட்டார் சீனிச்சாமி அய்யா.

வெற்றிலைப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து, “சாவு சேதியக்கூட மைக்கு கட்டி சொல்ல ஆரம்பிச்சிட்டானுவோன்னா இது என்னடா காலம்? வரவர ஊருலகத்துல எதுக்கும் ஒரு மருவாதியுமுல்ல ஒரு மயிருமுல்ல“ என்று முணுமுணுத்துக்கொண்டே வெற்றிலையை மெல்லத் தொடங்கினார்.

துரத்திலிருந்து மைக்கில் பேசிக்கொண்டிருக்கும் குரல் சன்னமாக்க் கேட்டது.

 

 

Series Navigationபுதியதோர் பூதக்கோள் புறக்கோளாய் நீண்ட நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சான்றுகள் அறிவிப்புசலனங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *