சின்ன சமாச்சாரம்

This entry is part 4 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

essarciஆபீசுக்குள் நுழையும் நேரம் பார்த்து அவனை இந்த இடது கால் செருப்பு இப்படியா பழி வாங்கும். அதைக் காலணி என்று மரியாதையாய் அழைத்தால் மட்டும் என்ன எப்பவும் அது அப்படித்தான். அவன் இடது கால் கட்டை விரலுக்கு என்று செருப்பில் விடப்பட்டிருந்த

அந்தத் தோல் வளையம்தான் படாரெனப் பிய்த்துகொண்டது.
அவன் ஒருபக்கம் காலை வைத்தால் அந்தக் கால் ‘அட போப்பா என் வேலை எனக்கு உன் வேலை உனக்கு’ என்று சொல்லி இன்னொரு பக்கம் அவனை இழுத்துக்கொண்டு போனது. செருப்பு அதுதான் நமது காலில் கிடக்கிறதே என்று யாரும் அதனை அலட்சியம் செய்து விட வேணடாம்.
அது எல்லாம் கிடக்கட்டும் இப்போது என்ன செய்வது அவன் காரியார்த்தமாக நோட்டமிட்டான். பிய்ந்துபோன அதனைத் தைத்து விடத்தானே வேண்டும். ஒரு செருப்பு தைக்கும் கடைக்காரனைத்தேடினான்.
எல்லா மனிதர்களும் எப்போதேனும் தேவைப்படத்தான் செய்கிறார்கள். மனிதன் ஒரு சமூக விலங்குதானே
இன்னும் பத்து நிமிடம்தான் இருக்கிறது. அதற்குள் அவன் அலுவலகம் உள்ளே நுழைந்து அவன் தன் கட்டை விரலை பயோமெற்றிக் இயந்திரத்தினுள் மல்லாக்க வைத்து ரேகை காட்டி விட்டால் தேவலை.
அது இல்லை என்றால் அலுவலகத்துக்குத் தாமதமாக வந்தவர்கள் பட்டியலில் அவன் திருப் பெயர் சேர்ந்து கொள்ளும். வீட்டில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து நாக்கைப்பிடுங்கிக்கிக்கொண்டு அவசர அவசரமாய்க்கிளம்பி கொஞ்சம் மண் சாலையில் நடந்து அப்புறம் தார்ச்சாலையை த்தொட்டு பிறகு ஷேர்ஆட்டோ பிடித்து ரயில் பிடித்து கடைசியாய் ஒரு பஸ் பிடித்து என்ன பிரயோசனம் எல்லாம் இந்த கட்டை விரல் ரேகையை காலை பத்து பத்துக்குள் அந்த பயோமெற்றிக் இயந்திர இடுக்குக்குள்ளாக வைத்து எடுப்பதற்குத்தானே.மில்லர்ஸ் ரோடு பஸ் நிறுத்தத்திற்கு எதிரே அந்த புளிமரத்தடியில் செருப்புத்தைப்பவன் அமர்ந்துதான் இருக்கிறான். ஒரு காலை அவன் காலை இழுத்து இழுத்துக்கொண்டு நடக்கும் போதே செருப்புத்தைக்கும் கடைக்காரனுக்குத்தெரிந்து விட்டது நம்மிடம்தான் இவன் வருகிறான் என்று.
அவன் தான் தைத்துக்கொண்டிருக்கும் ஒரு கிழிசல் செருப்பைக்கீழே வைத்துவிட்டு’ சாருக்கு என்ன சேதி’
என்றான்.
‘ அதாம் ப்பாக்குறயே நீயே ‘
‘சும்மா கேட்டேன் ஆ தெரிதே அந்த கட்டை விரலு மோதிரம் புட்டுகிச்சி’ செருப்புக்காரன் சிரித்தான்.
‘நேரம் ஆச்சி நான் போகணும்’
‘ ஆம் போங்க’
‘செருப்பு இல்லாம எப்பிடி’
‘உங்க ஆபிசு வாசப்படிண்டதான் பஸ் படிய விட்டு எறங்குறீங்க. இப்பறம் எனன, எவ்வளவு தொலவு இருக்கு, செருப்பு இல்லாமதான் கொஞ்சமா இப்ப நடக்குணும்’
‘ரெண்டு செருப்பயும் உட்டுட்டு போறேன்’ அவன் சொன்னான்.’நல்ல தமாசுதான் சார் ‘ செருப்புக்காரன் அழகாய்த்தான் பதில் சொன்னான்.
‘ டீ குடிக்க ஆபிசவுட்டு வெளில வரூவிங்க அப்ப தைச்ச செருப்பு எடுத்துக்கலாம் இப்ப நீங்க போவுலாம்
‘நல்லா தைச்சி வை நான் வர்ரேன் வந்து பாக்கிறேன்’ அவன் பட பட என்று நடந்து ஆபிசுக்குள் நுழைந்தான்.மணி பத்து பத்து ஆகிவிட்டிருந்தது. அந்த க்கட்டை விரல் ரேகை இன்றைக்கு தன் மதிப்பைச்சற்று இழந்துவிடும்தான்.போய்த்தொலை

யட்டும் வேறு என்ன செய்ய, தான் அலுவலகம் வந்ததைப்பதிவு செய்துதானே ஆகவேண்டும்.
தே நீீர் அருந்துவதற்காக எழும் சமயம் வரை செருப்பு இல்லாமலேயே சமாளித்தான்.பாத் ரூம் சென்று திரும்புவதற்குத்தான் என்னமோ போல் இருந்தது.சிலதுகள் அப்படித்தான்.அன்றைக்குப்பார்த்து அதிகாரிகள் அவனை அடிக்கொருதரம் கேபினுக்குள்ளே அழைத்தார்கள்.செருப்பு இல்லாமலே போய் வந்தான்.யாரும் அவன் செருப்பு இல்லாமலே அப்படி ஆபிசுக்குள் சுற்றி வருவதைக்கவனித்து இருப்பார்களோ மாட்டார்களோ,கவனித்த சிலர் கேட்காமலும் விட்டிருக்கலாம்.அவர் அவர்க்கு எத்தனையோ பிரச்சனைகள்.சொல்ல முடிந்தவை சொல்ல முடியாதவை. யாரிடம் போய்,எதனைச்சொல்வது. எதனைக்கேட்க இப்போது ஆள் இருக்கிறார்கள்.சம்பளத்திற்கு நாமே ஆள் எதாவது பிடித்து வைத்துக்கொண்டால்தான் . ..
பதினோறு மணிக்குடீ எடுத்துக்கொண்டு வரும் பெண் ‘டீயை விநியோகித்துக்கொண்டு வந்தாள்.’ நான் வெளியில குடிச்சுக்குறேன் கொஞ்சம் வேலையிருக்கு’ அவளுக்குப்பதில் சொன்னான். அவள் பரிதாபமாக ப்பார்த்தாள்.’ இப்படி நாலு பேரு சொன்னா நா என்னா ஆவுறது சாரு’ அவள் எதிர் க்கேள்வி வைத்தாள்.அவனுக்குப்பொட்டில் அறைந்த மாதிரி இருந்தது.திரும்பவும் அவளிடம் டீ கேட்டுக்குடிப்பதற்கும் என்னமோ போல் இருந்தது.சின்ன சின்ன வேலையைச் செய்பவர்கள்தான் எத்தனை அழகாகப்பேசுகிறார்கள். அலுவலக வாயிலுக்கு வந்தவன்.நேராக செருப்பு.தைப்பவனிடம் சென்று நின்றான்.
இவனைப்பார்த்த பின்னரே அவன் இவனின் பிய்ந்த செருப்பை எடுத்து வைத்துக்கொண்டான். ‘தோ ஆயிட்டுது சாரு ஒரு நிமிஷம்’
‘இத்தன நேரம் வேலய முடிச்சிவச்சி இருக்கலாம்ல’
‘என்னா சாரு தோ ஆயி போச்சி’. இப்படியும் அப்படியும் செருப்பைத்திருப்பித்திருப்பி எதிரே இருந்த கல் மீது வைத்து நங்கு நங்கு என்று அடி கொடுத்தான். இது விஷயம் செருப்புக்கும் தெரியும் போலத்தான் இருக்கிறது அது அவன் சொன்னபடியெல்லாம் கேட்டது.நான்கு தையல்கள் போட்டான்.
‘ ஏன் சாரு அய்யா போடற செருப்பா இது, இல்ல கேட்குறன்’
அவனுக்கு என்ன சொல்வதென்றே பிடிபடாமல் ஒரு மாதிரி நெளிந்தான்.
‘வேல பாக்குற எடம் என்னா போடுற செருப்பு என்னா’.
‘என்னப்பா சொல்லுற தைக்குற வேல ஆயிட்டுதா இல்லயா’
‘ செருப்பு காலுல மாட்டு சாமி, வேல எப்பயோ ஆயிபோச்சி இது எல்லாம் அய்யா போடுற சமாச்சாரமான்னுதான் நானு கேக்குறன். செருப்பு எடுத்துப்போடுணும் போட்டா ராசா கணக்கா தெரியுணும். கடையில பளா பளான்னு கண்ணாடி புட்டியில வரிசையா குறுக்கா நெடுக்கா அடுக்கி வச்சி வா வா ன்னு கூப்புட்டு குடுக்குறது எல்லாம் செருப்பாயிடாது. எங்க மாதிரி ஆசாமிகிட்ட செருப்பு தெச்சி அத காலுல போட்டு நடந்து பாக்குணூம். எத எடுத்துகிட்டு போவப்போறம். காலு கைய நிமித்துக்கட்டி மானம் பாக்க பாக்கத்தான நாம மயானம் போவுறது’ எதுவோ சம்பந்தமில்லாமல் பேசினான்.
‘ இதுக்கு காசு எவ்வளவு சொல்லு உங்கதைய நா கேட்டானா’
‘அது கெடக்கு காசு குடுங்க இல்ல உடுங்க உங்க்ளுக்குத்தெரியாத கதய போயி நா சொல்லப்போறன்’
அவன் ஒரு பத்து ரூபாயை எடுத்து அவனிடம் நீட்டினான்.அவன் பற்கள் அத்தனையும் காட்டி அந்த பத்து ரூபாயை வாங்கி இன்னொரு செருப்பின் கீழாக வைத்துக்கொண்டான். அதே செருப்பின் கீழாக இன்னும்கூட சில பத்து ரூபாய் நோட்டுக்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
‘ ஒரு மிந்நூறு.. ரூபாயில எங்கிட்ட ஒரு செருப்பு த்யிச்சி அத காலுல போட்டுக்கினு ரோட்டுல நடந்து பாத்துட்டு அப்புறம் பேசுனும் சாரு. அது நம்ம உடம்ப தூக்குது, அது கடவுளுசாமி. செருப்புன்னா அது என்ன லேசுப்பட்டதா. அது இல்லாகாட்டி ஒரு ஜாண் நடந்து பாத்தா அப்ப தெரியும் சாரு’.
‘ இப்ப என்ன சொல்லுற நீ’
‘இப்புறம் என்ன நா சொல்லுறன் என் கிட்ட ஒரு செருப்புதச்சி போட்டுகினு தார் ரோட்டுல ரைட்டா நடந்து பாரு அது ராசா நடை. நானும் உன்னை கேக்குறன் அதுக்குத்தான் இப்ப அட்டுவான்சா எதனா கொடு சாரு காது பிஞ்ச செருப்ப தச்சி எல்லாம் ரோட்டு ஓரம் இருக்குற நா பே போட்டுகும் , அய்யா போயி அப்பிடி போடுலாமா போட்டாதான் அடுக்குமா சாரு. புதுசா செருப்பு தச்சி போடு சாரு அது தங்க பாளம்ல்ல ‘.
அவனுக்கு என்னமோ போல் இருந்தது.இப்படி அழகாய்ப்பேசும் இவனுக்கு ஏன் செருப்புத்தைக்கும் சின்ன வேலை வாய்த்ததோ.அவன் மனம் அவனிடம் கேள்வி வைத்தது.
அவன் சிறுவனாய் உலா வந்த அந்த அப்போது அவன் ‘அப்படியும் இப்படியும் ஆட்டி ராஜ நடை நடக்க வேண்டும்’ என்று அவன் தாய் மட்டும் ஆசை பட்டிருப்பாளோ என்னவோ..முந்நூறு ரூபாய் என்பது ஒன்றும் பெரிய காசுமில்லை.ஒரு நடை சரவணபவனுக்குள் நுழைந்து அரைகுறையாய் சாப்பீட்டு இன்னது சாம்பார் என்பது அத்துப்படியாகாமல் தட்டில் ஊற்றியது குடித்து நிறைவு கண்டு வெளிப்படுவதற்கும் முந்நூறு ரூபாய்தான் ஆகிவிடுறது.
‘இந்தா இரு நூறு இத வச்சிக செறுப்பு தையி’
‘இதுதான் சாரு பெரிய மனுஷாளுன்றது’ சொல்லிய அவன் இரு நூறு ரூபாயை வாங்கி தன் கண்களில் ஒத்தி எடுத்து ஆண்டவரையும் அழைத்தான். இந்த பண வரவு விஷயம் அவருக்குத்தெரிவித்துவிட்டு அந்த ஒற்றைச் செருப்புக்கு கீழாக அதனை வைத்து விட்டுக் கிழிந்து போன இரண்டு குயர் நீட்டு நோட்டு ஒன்றை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டான்.
”இப்படி கால வை’ கட்டளையிட்ட் பின்னே அவன் காலைச்சுற்றி ரீபில் பேனா வைத்து நோட்டுப்பேப்பரில் அழ்காய் வரிந்து கொண்டான்.
‘பேரு சொல்லு சாரு’
அதெல்லாம் எதுக்கு’
‘அப்பிடி சொல்லுலாமா சாரு இந்த பூமில பேரு இல்லாத எதுவும் இல்லே.தகப்பன் வச்சது அது’
‘ராமு’
‘ சரி , இப்படி ரவ பேரா உங்க அய்யா வச்சாரு’
‘ராமசந்திரன்’
‘பாண்சர் இத் மொதல்லயே சொல்லுலாம்ல என்னா சாரு என் தலைவன் பேரு. அவரு இப்பக்கி கடவுளா ஆயிட்டாரு சொக்கதங்கம் இந்த பூமி இதுவல்ரைக்கும் பாத்திடாத ஒசத்தி செம்பவுனு’
அவன் நோட்டுப்புத்தகத்தில் என்ன எழுதினான் என்றே இவனுக்கு விளங்கினால்தானே. அன்றைய தேதியை மறக்காமல் போட்டுக்கொண்டான்.
‘ அண்ணைய தேதி காலண்டரு பாத்து எழுதிக்குவன். பேரு தப்பா கிப்பா எழுதுவன் என்னா செய்யுவ’.
‘எப்ப புதுசு தருவ’
‘ஒரு வாரம் இண்ணைக்கு என்ன வெசாழனா அடுத்த வெசாழன் கொடுத்துடுறன் சாரு ‘
பெரிய ஐந்தாண்டு திட்டம் ஏதுவோ ஒன்றிற்கு ஒப்பந்தம் போட்டு முடித்துவிட்டு வந்ததாக எண்ணிக்கொண்டான்.
ஒரு வாரம் அது கட கட என ஓடியேபோனது.காலம் என்பது எப்போதும் அப்படித்தானே.செருப்புக்கடைக்காரன் முன்பாக மீீண்டும் போய் நின்று ‘ என்ன வேலை ஆயிடுச்சா’ என்றான்.
செருப்புத்தைப்பவன் பற்களை முழுவதும் காட்டினான்.வேலை இன்னும் ஆகவில்லை.
‘ரவ வேல பாக்கி இருக்கு இன்னும் ரெண்டு நாளு பொறுத்துகுங்க சாரு இண்ணைக்கு என்ன வெசாழனா வெள்ளி சனி உட்டுடுங்க ஞாயிறு உங்களுக்கும் இல்லே எனக்கும் இல்லே ஆக திங்ககெழமை நானு கொடுத்துடுவன்,என்னா நான் சொல்லுறது’
‘சரி நான் திங்க கிழமை உன்னை பாக்குறன்’
‘சாருக்கு ஒரு சேதி ஒரு நூறு பாக்கி குடுக்கணும், இன்னும் ஒரு நூறு சேத்து குடுங்க வெல வாசி அது அது ஏறிப்போச்சி உங்க்ளுக்கு த்தெரியாத கதையா’
‘என்னப்பா சொல்லுற முந்நூறு தானே பேச்சி, அட்வான்சா எற நூறு கொடுத்தேன் நூறு பாக்கி’
‘இல்ல சாரு இப்ப நானு என்ன கேட்டன் ஒரு நூறு சேத்துக்கேட்டன் வெல வாசி அப்பிடி’
‘இன்னும் எவ்வளவு தருணும்ங்க்ற நீ சொல்லு’
‘ஒண்ணும் இல்லே சாரு ஒரு எற நூரு தான் கேக்குறன்’
”இந்தா புடி எற நூறும் நானு திங்க கெழம வருவேன் ஒண்ணும் பேசாத இத வச்சுக’ செருப்புக்காரன் கேட்டபடியே அந்த தொகையை அவனுக்குக்கொடுத்தான்.மனம் என்னவோ செய்தது.வார்த்தைப்பிசகினால் அவனுக்கு எப்போதும் பிடிப்பதில்லை.அவனுக்குப்பிடித்தது எல்லோருக்கும் பிடித்துத்தான் ஆகவேண்டும் என்று எதாவது சட்டமா என்ன.
திங்கட்கிழமை வந்தது. செருப்புக்கடைக்காரன் எங்கே எனத்தேடினான். கடை மூடி இருந்தது.வெள்ளை நிறத்தில் பெயிண்ட் பூசிக்கொண்ட ஒரு பூட்டு ஒன்று தொங்கியது. அந்தப்பூட்டு அவனைப்பார்த்து ‘நான்தான் என்ன செய்யட்டும் நீ யே சொல்’ என்றது, உலகமே ஏமாத்துக்காரர்களின் இருப்பிடமாகவும் தான் மட்டும் எப்படியோ அதனுள் வந்து மாட்டிக்கொண்டு இப்படி இம்சை படுவதாகவும் உணர்ந்தான்.
நல்லகாலம் தான் போட்டிருக்கும் செருப்பில், அறுத்து பின் தைத்துக்கொண்ட அந்த கட்டை விரல் பகுதி நன்றாகவே இருந்தது.செருப்பே முழுவதாகப்பிய்ந்துபோனாலும் அவன் போட்ட தையல் மட்டும் போகாது. அப்படி அந்தத் தையல் இருந்தது உண்மை.
திங்கள்போய் செவ்வாய் வந்தது.வழக்கம்போல் அலுவலகம் கிளம்பினான்.பேருந்தை விட்டு அலுவலக வாயிலில் இறங்கி நடந்தான்.
‘சாரு சாரு இப்படி வந்துட்டு போவுலாம்’
செருப்புக்கடைக்காரன்தான் அழைத்தான். அலுவலத்திற்கு நேரம் இன்னும் இருக்கிறது. ஆக செருப்புக்கடைக்காரனிடம் சென்றான்..
‘இந்தா சாரு புது செருப்பு’
‘நேத்திக்கு எங்க போன நீ’
‘ வேளாங்கண்ணி போனன் ஒரு வேண்டுதல சாரு என்னக்கோவிச்சுக்காதிங்க சாரு இந்த சன்மம் இப்படி செருப்புதச்சி சின்னப்பட்டுப்போவுது அடுத்த பொறவிலானா நல்ல நெழலு எதனா கெடக்காதான்னு’
அவன் எதுவும் பேசவில்லை. புது செருப்பு பள பள என மின்னியது.இப்படி எல்லாம்கூட கருப்பு வண்ணம் இருக்குமா என்ன அவன் நினைத்துப்பார்த்தான்.
‘காலுலபோட்டு பாருங்க சாரு மொதல்ல’
அவன் கால்களில் புது செருப்பை மாட்டிக்கொண்டான்.
‘ரெண்டு நாளு போட்டுகிணா எல்லாம் சரியாப்பூடும் ரவ தேங்கா எண்ண அங்கங்க போடுணும் வேற என்னா சாரு’ அவன் சிரித்தான்.
பழைய செருப்பை ஒரு பிளாஸ்டீக் பையில் போட்டு’ இது எடுத்துகினு போறிங்களா என்னா சாரு’ என்றான்.
அந்த பிளாஸ்டிக் பையை வாங்கி வைத்துக்கொண்டான். அதனுள் பழைய செருப்பு பவ்யமாக படுத்துக்கொண்டு இருந்தது.
‘இப்ப பாருங்கசாரு இன்னும் எதனா வேல இருந்தாலும் ஆபிசுல எனக்கு சொல்லுங்க சாரு ரைட்டா செய்யுறன்’,
நாநூறு ரூபாய் கொடுத்துத் தைத்த செருப்பைக் காலில் மாட்டிக்கொண்டு நடந்தான்.கொஞ்சம் உயரமாகத்தான் உணர்ந்தான்.உலகம் சற்று சிறுத்துப்போன மாதிரிகூட தெரிந்தது. நம் மீது ஒரு செருப்புத்தைப்பவனுக்கு இருக்கும் அக்கறை எத்தனை பெரியது என எண்ணினான்.அன்று முழுவதும் அலுவலகத்தில் புது செருப்புடன் வலம் வந்தான். முதலில் கொஞ்சம் கனம் கூடித்தெரிந்த செருப்பு இருக்க இருக்க இன்னும் கூடிக்கொண்டேபோனது.மாலை டீ அருந்தும் நேரம் நடக்கும் போது அவனுக்குக் கால் திகு திகு என்று எரிந்தது..செருப்பைக்கழட்டிப்பார்த்தான். காலில் தோல் லேசாகப்பிய்ந்து விட்டிருந்தது.வீட்டிற்குப்போய் முதல் வேலயாக தேங்காய் எண்ணை போடவேண்டும்.செருப்பு தைப்பவன் சொன்னது நினைவுக்கு வந்தது.தே நீர் குடித்துவிட்டு அந்தக்கடைவாசலில் நின்றுகொண்டு இருந்தான்.
‘புது செருப்பா’ டீ கடைக்கார நாயர் விசாரித்தார்.’ஆமாம்’ என்றான். ‘காலு வீக்கமா இருக்கு’ நாயரே தொடர்ந்தார். அவன் கால்களைக்குனிந்து பார்த்தான்.வீக்கமாகத்தான் இருந்தது.’ தேங்கா எண்ணை இருக்குதா’ என்றான் நாயரிடம். அவர் ஒரு ஷாசேயைப்பிய்த்துக்கொடுத்துவிட்டு ரெண்டு ரூபாய் வாங்கி முடித்தார்.அவன் புதுச் செருப்புக்குத்தேங்காய் எண்ணை போட்டுத்தேய்த்தான்.
‘காலுக்கும் போடுணும்ல’ என்றார் நாயர்.அதுவும் சரி என கால்களுக்கும் தடவி விட்டுக்கொண்டு நடந்தான். கொஞ்சம் சுகமாக இருந்தது.மாலை வழக்கம் போல் அந்த பயோ மெட்றிக் இயந்திரத்துக்குள் கட்டை விரல் வைத்து விட்டு விடைபெற்றுக்கொண்டான்.அலுவலக வாயிலில் செருப்புக்கடைக்கரனைத்தான் காணவில்லை.. அவன் தான் சொன்னானே புது செருப்பு ரெண்டு நாளு பழகோணும் என்று மனம் சமாதானம் சொல்ல நடந்து போனான்.கால் ஜிவ் ஜிவ் என்று வலித்தது.செருப்புக்கொள்ளளவுக்கு அவன் காலும் வீக்கம் கண்டிருந்தது.பஸ் பிடித்து ரயில் பிடித்து ஷேராட்டோ பிடித்து கொஞ்சம் நடந்து வீடு வந்தான்.
” என்ன ஒரு மாதிரியா இருக்கிறீங்க என்ன ஆச்சி உங்களுக்கு ‘ என்றாள் மனைவி.
கால்கள் வீங்கியிருந்தன. அவள் வெந்நீர் வைத்துக்கொடுத்தாள். கால்களை க்கழுவினான்.காய்ச்சல் லேசாக வந்தமாதிரி இருந்தது.கண்கள் சிவந்துபோய் இருந்தன. இரவு உண்வுக்குப்பின் ஒரு குரோசின் மாத்திரை போட்டுக்கொண்டு படுத்தான். காலையில் வீக்கம் அவ்வளவாக இல்லை. வலி மட்டும் இன்னும் இருந்தது. நியூஸ் பேப்பரில் சுற்றிவைத்துக்கொணர்ந்த பழைய செருப்பை எடுத்துப்போட்டுக்கொண்டு நடந்து பார்த்தான்.நன்றாகவே இருந்தது.
அலுவலகத்துக்கிளம்பும் சமயம் பார்த்து அவன் மனைவி புது செருப்பை எடுத்து நியூஸ்.பேப்பரில் சுற்றி அதே பிளாஸ்டிக் பையில் போட்டு ஓரமாய் வைத்துவிட்டு பழைய செருப்பைப்போட்டுக்கொள்ள கட்டளை தந்தாள்.அவன் அரை மனசோடு பழைய செருப்பைப்போட்டுக்கொண்டான்.
‘ரெண்டு நாளுல சரியாயிடும் செருப்புக்காரன் சொன்னான்’ என்றான் அவளிடம்.
‘செருப்பு சரியாயிடும் உங்க காலு என்ன ஆகும்’ என்றாள். அவன் பழைய செருப்பு போட்டுக்கொண்டே அலுவலகத்திற்குக் கிளம்பி நடந்தான்.காலில் வலி இல்லை.மனம் மட்டும் சற்று வலித்தது.பேருந்தினை விட்டு இறங்கி அலுவலகம் நோக்கி நடக்கிறான். செருப்புத்தைப்பவன் கடை திறந்து வைத்திருக்கிறானா என்று பார்ப்பதற்குத்தான் அவன் மனம் ஒப்பவில்லை.
அவனிடம் புது செருப்பு எங்கே என்று யாரும் கேட்டால் வைகாசி விசாகத்தன்று அந்தக் கந்தகோட்ட முருகன் கோபுர வாசலில் அதனைத் தான் வைத்து விட்டுச்சென்றதாகவும், சாமிகும்பிட அங்கு வந்தவர்களில் யாரோ அதை ரவுட்டிக்கொண்டு போய்விட்டதாகவும் சொல்லலாம் என்றுதான் இருக்கிறான். யாரும் தான் கேட்கவில்லை.. .
————————————————————————————————————–

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 89வாழ்க்கை ஒரு வானவில் – 17
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *