சீப்பு

 

‘நானா மூனா கடையில்

நயமாக நாலைந்து சீப்பு

வாங்கிவா’ என்றார் அத்தா

வாங்கி வந்தேன்

 

சீவிப் பார்த்து

வரண்டும் சீப்பைத் தள்ளிவிட்டு

வருடும் சீப்பை வைத்துக் கொண்டார்

புதுப்புளி நிறத்தில்

புலிவரிச் சீப்பு அது

 

பின்

சீப்பு வாங்கும்போதெல்லாம்

சீவீப்பார்க்காமல் வாங்கியதில்லை

எத்தனையோ சீப்புகள் வாங்கிவிட்டேன்

 

சிங்கப்பூர்ச் சச்சா தந்த

பேனாச் சீப்பொன்று

என் பேனாவோடு வெகுகாலம்

பேசிக்கொண்டிருந்தது

வாங்கிப் பார்த்தவர்களெல்லாம்

வாங்கிக் கேட்டார்கள்

 

இந்தோனேஷிய

நெருக்குப்பல் மரச்சீப்பு

இரண்டிருந்தது அம்மாவிடம்

இரவல் தர ஒன்று

இருப்புக்கு ஒன்று

 

வழிய வழிய நல்லெண்ணை விட்டு

இழுத்தால் ஈறு தப்பாது

உதிராத என் முடிக்கு

இதுவும் ஒரு காரணம்

மகுத்துவரை அம்மா

பொத்திக் காத்த சொத்து

இந்தச் சீப்பு

 

சிங்கப்பூர் வந்தேன்

சீப்பு வாங்கினேன்

அட!

அதே புதுப்புளி நிறத்தில்

புலிவரிச் சீப்பு

முப்பதாண்டு தாண்டியும்

முகத்தை மாற்றாத சீப்பு

அத்தா சீவிப் பார்த்தது

அந்தச் சீப்பில் தெரிந்தது

வாங்கினேன்

முப்பது ஆண்டுகளாக

என்னோடு வாழ்கிறது அந்தச் சீப்பு

 

ஒரு நாள்

இந்தோனேஷிய மலைப் பிரதேசம்

‘பூர்வகர்த்தோ’  சென்றோம்

எங்கள் பணிப்பெண்ணின் ஊர் அது

திரும்பினோம் ஆனால்

என் சீப்பு திரும்பவில்லை

 

ஒரு வாரம் கழித்து

பணிப்பெண் சொன்னாள்

ஜகார்த்தாவில் தாதியா யிருக்கும்

மகளுக்கு புலிவரி பிடிக்குமாம்

‘எடுத்துப் போய்விட்டாள்’ என்றாள்

 

நான் சொன்னேன்

‘ஹலால் சொல்கிறேன்

அது அவளிடமே இருக்கட்டும்’

 

ஒரு பொருள்

வாங்கியவனிடன் வாழ்வதைவிட

விரும்பியவளிடம் வாழ்வது  நன்று

இந்தோனேஷியச் சீப்புக்கு

என் அம்மா பட்ட கடனை

இந்தோனேஷியாவில் வாழ்ந்து

என் சீப்பு அடைக்கட்டும்

 

அமீதாம்மாள்

Series Navigationநான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -11இன்றைய இலக்கியம் : நோக்கும் போக்கும்