செல்லம்மாவின் செல்லப்பிள்ளை

குமரி எஸ்.நீலகண்டன்

மகாகவி பாரதியின் பேத்தி டாக்டர் விஜயபாரதி தனது 81 வது வயதில் கனடாவில் காலமானார். பாரதியின் மூத்த மகள் தங்கம்மா பாரதியின் புதல்வி. செல்லம்மா பாரதியின் வாய்வழி பாரதியின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நான் சென்னை வந்த புதிது. விஜயபாரதி குடும்பம் கனடாவிலிருந்து விடுமுறையில் பாரதியின் கவிதைகளின் செம்பதிப்பை வெளியிடும் முயற்சியில் சென்னை வந்திருந்தனர். அப்போது அவர்கள் பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கே அவர்கள் சென்ற போது வெயில் சுட்டெரித்தது. அவர்கள் பாரதியின் மண்டபத்திற்குள் நுழைந்து தாத்தாவை பக்தியுடன் தரிசித்திருக்கிறார்கள்.

மன நிறைவோடு வெளியே வந்த போது சில நிமிடங்களுக்கு எதிர்பாராமல் வானத்திலிருந்து ஒரு மழை கொட்டோவென்று கொட்டி இருக்கிறது. மழைக்கான எந்த சூழலும் இல்லாத நிலையில் அந்த நொடியில் வந்த மழையில் அனைவரும் வியந்தனர். விஜயபாரதி, அவர் கணவர் சுந்தரராஜன், கொள்ளு பேத்தி மீரா என மூவருமே அந்த நிகழ்வில் மிகவும் பரவசித்திருக்கிறார்கள். எதிர்பாராத அந்த கொட்டித் தீர்த்த குறைந்த நேர மழையை பாரதியின் அன்பின் ஆசிர்வாதமாக அவர்கள் லயித்திருக்கிறார்கள்.  மகிழ்ச்சி பரவசத்தில் மீரா அந்த அனுபவத்தை ஆங்கிலத்தில் அழகிய கவிதையாக அப்போது எழுதி இருக்கிறார். அந்தக் கவிதையை நான் ஆங்கில இந்துவின் தலையங்க பக்கத்தில் படித்தேன்.

என்னையும் பரவசித்த அந்தக் கவிதையை தமிழில் மொழிபெயர்த்தேன். அது அமுதசுரபியில் பிரசுரமானது. என்னுடைய மொழிபெயர்ப்பு அவர்களின் கவிதையின் ஆன்மாவுடன் மிகுந்த உயிர்ப்புடன் இருப்பதாக பாராட்டினார்கள். அப்படி உருவானது அந்தக் குடும்பத்துடனான ஆழ்ந்த நட்பு.

அப்போது அவர்கள் சென்னையில் அடையாறில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து இருந்தார்கள். சென்னை வரும்போதெல்லாம் அங்கேதான் தங்கி இருப்பார்கள். ஒரு தடவை ஒரு மொழிபெயர்ப்பு தொடர்பாக நான் அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். என் மனைவியும் எனது மகனும் அப்போது திருவனந்தபுரம் சென்றிருந்தார்கள். காலையில் என்ன சாப்பிட்டீர்களென விசாரித்தார்கள். மதியம் சாப்பிட்டு செல்லலாமென கூறினார்கள். நான் அவசரமாக ஒரு வேலை இருப்பதால் உடனடியாக செல்ல வேண்டுமென விடைபெற்றேன். வெளியே சில அடிகள் நடந்து சாலைக்கு வந்த என்னை மீண்டும் கூப்பிட்டார்கள்.

மதிய உணவிற்காக உங்களுக்காக சிறிது உப்புமா கிண்டி தருகிறேனென்று சமையலறைக்குள் சென்று விட்டார்கள். சிறிது நேரத்தில் ஒரு பாத்திரத்தில் உப்புமா, ஒரு சிறிய பிளாஸ்டிக் புட்டியில் ஊறுகாய் எல்லாவற்றையும் ஒரு பையில் அழகாக வைத்து இது இன்று உங்களின் மதியத்திற்கான உணவு. பசிக்கும் போது சாப்பிடுங்கள் என்று தந்து விட்டார்கள். வீட்டிற்கு சென்று மதியம் அதைத் திறந்த போது அந்த உப்புமாவின் சுவையும் மணமும் இன்றும் என் மனதில் நிறைந்திருக்கிறது.

ஆழ்வார்பேட்டையில் அப்போது நான் இருந்தது தனிவீட்டின் முதல் மாடி. வீட்டு வாசற்கதவை அடுத்து இடுப்பளவிற்கு பக்கச்சுவர். நான் என் வீட்டு முன்ன்றையில் உட்கார்ந்து அந்த உணவை உண்ணத் தயாரான போது, வழக்கத்திற்கு மாறாக அந்த குறைந்த உயரச்சுவரில் ஒன்றிரண்டு காகங்கள் வந்து கத்தத் தொடங்கின. எப்போதுமே அந்த சுவரில் காகங்கள் நின்று அப்படி கத்துவதில்லை. அந்த உணவை கூவி அழைத்து கேட்பது போல் அவை தொடர்ந்து கத்தி காகா என கேட்டுக் கொண்டே இருந்தன. பாரதியார் சமையலுக்கு செல்லம்மாள் வைத்திருந்த அரிசியை காக்கை குருவிக்கு அள்ளி வீசிய சம்பவம்தான் அப்போது எனது நினைவில் வந்தது.

இந்த உணவு பாரதியின் பேத்தி சமைத்த உணவு. சிறிது கொடுப்போமே என்று அன்று அந்த காகங்களுக்கும் கொடுத்து நானும் அந்த உணவை சுவைத்தேன். அதன்பின் அடுத்த  நாளிலிருந்து எங்கள் வீட்டில் வந்து கத்தி கேட்டு உணவு உண்பதை காகங்கள் வழக்கமாக்கிக் கொண்டன. என் மனைவியும் என் பையனும் ஊரிலிருந்து வந்தபின்னும் அந்த வீட்டிலிருக்கும் வரை அந்த வழக்கம் தொடர்ந்தது. என் பையனுக்கு ஏழு வயதிருக்கும். என் பையன் கையாலேயே காகங்களுக்கு உணவு ஊட்டுமளவிற்கு அந்த  வீட்டில் காகங்கள் எங்களோடு பழகி விட்டன. விஜயபாரதி குடும்பத்தாரோடு சார்ந்த அந்த சம்பவம் இன்றும் என் நினைவில் அவ்வாறே நிழலாடுகிறது.

டாக்டர் விஜயபாரதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாரதியின் படைப்புகள் சார்ந்து ஆழ்ந்த ஆய்வு செய்து தமிழ்நாட்டில் முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண்மணி  என்ற பெருமைக்குரியவர். அந்த ஆய்வு நூலே பின்பு புத்தகமாக வெளி வந்தது. அதன்பின் அவரது ஆய்வுப் பணிகள் இங்கிலாந்தில் ஆப்ரிக்க கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி, லண்டன் பல்கலைக் கழகம், கனடாவில் வான்கூவரில் பிரிட்டீஷ் கொலம்பிய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தொடர்ந்தன. லண்டன் பல்கலைக் கழகம் அவரது பாரதி பற்றிய ஆய்விற்கு உதவித்தொகை வழங்கி அங்கீகரித்திருக்கிறது.

முன்னதாக அவர் 1962ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனாரிடம் பயின்று தமிழில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1969 சென்னை அரசு கலைக் கல்லூரி, ஸ்ரீ அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் கல்லூரி , மதுரை பாத்திமா கல்லூரி ஆகியவற்றில் விரிவுரையாளராக 1969 வரை பணியாற்றி இருக்கிறார். பாரதியைப் பற்றி ஆராய்ந்து அவரது பாடல்களை உரைகள் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு கொண்டு சென்றவர். பாரதியைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய கட்டுரைகளும் நூல்களும் எழுதி இருக்கிறார்.

குறிப்பாக இவரது அமரனின் கதை என்ற நாவல் புதிய உத்தியில் எழுதப்பட்டது. பாரதியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.  1900 ஆண்டுகளில் சுதந்திரப் போராட்டத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பாரதியின் வாழ்க்கையும் இந்த நாவலை செறிவூட்டும் அம்சங்களாகும். செல்லம்மா பாரதி தனது கணவரைப் பற்றி எழுதிய நூலையும், தங்கம்மா பாரதி தனது பெற்றோரைப் பற்றி எழுதியவற்றையும் நூலாக இவர் தொகுத்து தந்திருக்கிறார்.

தமிழ் இலக்கியத்திற்கான பங்களிப்பிற்காகவும் பாரதி பற்றிய அவரது ஆழ்ந்த ஆய்விற்காகவும் சிக்காகோ தமிழ் சங்கம், கனடா தமிழ் பண்பாட்டு சங்கம் ஆகியவை விருதுகள் வழங்கி அவரை கௌரவித்துள்ளன.

பாரதியின் ரத்தமும் சதையுமாய் இருந்து பாரதியின் கவிதைகளையும் அவரது படைப்புகளையும் தனது தேர்ந்த ஆங்கிலத் திறனால் உலகம் முழுக்க பரப்பிய சிறப்பிற்குரியவர். அவரது பாரம்பரிய இசை ஞானத்தின் மூலம் பாரதியின் பாடல்களை அவரது உரைகளின் இடையே உணர்வுபூர்வமாக பாடியவர்.

பாரதி இலக்கியம் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த அவரது கணவர் பேராசிரியர் பி.கே.சுந்தர ராஜன் சில வருடங்களுக்கு முன்பு கனடாவில் காலமானார்.

அவரது ஒரே புதல்வியும் பாரதியின் கொள்ளு பேத்தியான மீரா சுந்தர ராஜன் சட்டவியல் பயின்றவர். அறிவுசார் சொத்துரிமையில் உலக அளவில் மிக முக்கியமான பேராசிரியர்.  தற்போது கனடா விலும் அமெரிக்காவிலும் பாரதியின் புதுமைப் பெண்ணாய் இயங்கிக் கொண்டிருக்கிறார். இவரது சட்டம் சார்ந்த நூல்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் நூல்களாய் வெளியிட்டுள்ளது. இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லாது தேர்ந்த பியானோ இசைக் கலைஞரும் கூட.

செல்லம்மாவின் செல்லப்பிள்ளை அமரனின் கதையை எழுதியவர் அமரரானார். விஜயபாரதியின் மறைவு பாரதியின் குடும்பத்திற்கு மட்டுமல்ல பாரதி அன்பர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு.

விஜயபாரதியின் பாரதி குறித்த கட்டுரைகளை இந்த இணைப்பில் படிக்கலாம்.

https://subramaniabharati.com/

          குமரி எஸ். நீலகண்டன்

Old no – 204, new no – 432,

D7, Parsn guru Prasad residential complex,

T.T.K road,

Alwarpet,

Chennai – 600 018

Cell no – 9444628536

punarthan@gmail.com

Series Navigationரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்அசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்