சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்

சேயோன் யாழ்வேந்தன்

1

நினைவில்லை

காலடியிலிருந்த
புல்வெளி
பச்சையாக இல்லை
சரக்கொன்றை மரத்தில்
எந்தப் பூவும்
மஞ்சளாக இல்லை
முள் குத்தி
வழிந்த ரத்தம்
சிவப்பாக இல்லை
கனவுகளில் பெரும்பாலும்
வண்ணங்களில்லையென்பது
நினைவிலில்லை
– சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

2
இன்னும் அவகாசம் இருக்கிறது

யாரும்
அவசரப்பட்டு
எந்த முடிவுக்கும்
வந்துவிட வேண்டாம்
அவர்கள்
உங்களைக் கொல்வது கூட
உங்களைக் காப்பாற்றுவதற்காக இருக்கலாம்
மூன்றாம் நாள்
நீங்கள்
உயிர்த்தெழவில்லையெனில்
அவர்கள் மீது
வழக்குத் தொடுக்கலாம்
உங்கள் உறவுகள்
உயிரோடிருந்தால்
– சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

3
ஒரே ஒரு வித்தை

ஒரு புறாவை
ஒரு முயலை
ஒரு பெண்ணை
மறைய வைத்த
அந்த மாயவித்தைக் கலைஞனிடம்
ஒரே ஒரு வித்தையை
கற்றுத்தரக் கேட்டேன்
ஒரு நிராகரிப்பை
ஒரு ஏமாற்றத்தை
ஒரு துரோகத்தை
ஒரு புன்னகையால்
மறைக்கும் வித்தை
அல்லது
வாழ்நாள் முழுதும்
தொடரும் சோகத்தை
ஓரிரவுத் தூக்கத்தில்
மறக்கும் வித்தை
– சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

Series Navigationகைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்நாவல் – விருதுகளும் பரிசுகளும்