சொல்லத்தோன்றும் சில…..

Spread the love

லதா ராமகிருஷ்ணன்

வினை – எதிர்வினை. நிறைய நேரங்களில் நிறைய பேர் தமது வசதிக்கேற்ப அல்லது தமது செயல்திட்டத்திற்கேற்ப, hidden agenda வுக்கேற்ப வினையை எதிர்வினையாகவும் எதிர்வினையை வினையாகவும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் பரவலாக நடைபெற்றுவருகிறது. Out of Context சில வரிகளை எடுத்துக்காட்டுவதுபோல்.

ஒரு வினைக்கு எல்லோரும் ஒரேவிதமாக எதிர்வினையாற்றுவார்கள் என்று சொல்லமுடியாது; எதிர்பார்க்கவும் முடியாது. சகிப்புத்தன்மை எல்லோரிடமும் ஒரேயளவாய் இருக்கும் என்று சொல்லமுடியாது.

இரண்டு நாட்களுக்கு முன்பு பெண்பாலினத்தைச் சேர்ந்த முகநூலினர் ஒருவர் ‘அவனா, சரியான பொறுக்கியாயிற்றே’ என்று பொதுவெளியில் உள்ள ஆண் ஒருவரைக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தபோது ’ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைப் பழிக்கும் வாசகம் அல்லது சொல்லாடல் மட்டும்தான் அழுத்த மான கண்டனத்திற்கும் எதிர்ப்புக்கும் உரியதா?’ என்ற கேள்வியெழுந்தது. யாரிடம் கேட்பது?

வீடுகளிலும், வீதிகளிலும் நடக்கும் சண்டைகளில் ஒருவரை மிக மோசமாகக் காயப்படுத்த அவருடைய தாயை வேசியாக ஏசுவார்கள். தாய் உண்மையிலேயே அப்படியிருந்தாலும் அவள் தாய். அந்த வசை குறிப் பிட்ட நபரை எத்தனைக் காயப்படுத்தும், கோபப்படுத் தும் என்பதைப் பலமுறை கண்கூடாகப் பார்த்திருக்கி றேன்.

அவரவர் நம்பிக்கை அவரவருக்கு தாய்போலத்தான். இன்னொரு மதத்தைச் சார்ந்தவரோ, நாத்திகவாதியோ – எதற்கு அத்தனை கொச்சையாகப் பழிக்க வேண்டும்?

வார்த்தைகள் இருமுனைக் கத்திபோல். எதிரேயிருப்பவரையும் குத்திக்கிளறும்; நம்மையும் விட்டுவைப்ப தில்லை.

மூட நம்பிக்கை என்பது மதம் சார்ந்தது, கடவுள் சார்ந்தது மட்டும்தானா?

மாற்று மதத்தினரின் நம்பிக்கைகளை மிக மோசமான வார்த்தைகளில் பழிக்கும் அறிவுசாலிகள் பலரை முக நூலில் பார்க்கிறேன். ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களி லும் குறிப்பிட்ட பிரிவினரை மிக மோசமாகப் பழிப்ப தையே கொள்கையாகக் கொண்டு இயங்குபவர்களும் இங்கே நிறைய.

‘உங்க ராமர் கூர்க்காதான் – தெரியுமா?’ என்று யாரையோ எகத்தாளம் செய்யும் வேகத்தில் வருடம் முழுவதும் குடும்பத்தைப் பிரிந்து எங்கேயோ குளிரிலும் வெயிலிலும் காவல்காத்துக்கொண்டி ருக்கும் தொழிலாளியைப் பழிப்பதைக்கூட உணராத மனிதநேயவாதிகளையும் இங்கே பார்க்கிறேன்.

முன்பெல்லாம் கட்சிகளில் எதிர்க்கட்சியினரைக் கேவலமாகப் பொது வெளியில் பேசுவதற்கென்றே தனியாக சிலரை வைத்திருப்பார்கள். அந்த வேலையை படைப்பாளிகளாக அறியப்படும் சிலர் ஏன் விரும்பி ஏற்றுச் செய்யவேண்டும்? என்று இப்போது முகநூலில் சில அறிவுசாலிகளின் வன்மமான, கொச்சையான வசைபாடல்களைப் படிக்கநேரும் போது வருத்தத்தோடு என்னை நானே கேட்டுக் கொள்வதைத் தவிர்க்கமுடியவில்லை.


Series Navigationகுளியல்