ஜல்லிக்கட்டு

Spread the love

மீனாட்சிசுந்தரமூர்த்தி.

மலையருவி தாலாட்ட
வழிதேடி
கடும்பாறை பலகடந்து
காடுவந்தான் தமிழன்.

வழிச்சோர்வு தீர்ந்திட
கனியும் நிழலும்
மரங்கள் தந்தன.

தாயாகி அமுதூட்ட
வந்ததுபசு கன்றோடு,
உடன் வந்த காளை
சுமந்தது அவனை முதுகில்

உழுது,விதைக்க, போரடிக்க,
வண்டியோட்ட என்று
பாரதியின் கண்ணன் போல்
எல்லாமாய் ஆனது.

விழியோரம் ஈரம் எட்டிப் பார்க்க
தெய்வமாய்
தினம் வணங்கி நின்றான்.

ஓடிய காலம்
சேர்ந்தாடிய கன்றோடு அவனை
காளையாக்கியது.

முல்லைச் சிரிப்பழகி
முழுநீளச் சொல்லழகி
எந்தன் காளையை அடக்கிடு
மாலை சூட்டுவேன் என்றாள்.

கரும்பு தின்னக் கூலியா
சொந்தக்காளை சொன்னபடி
வந்த காளையை
வென்று தழுவினான்.

இந்த மஞ்சு விரட்டு
முடிமன்னர் கால்பட்ட
நாட்டிலெலாம் களைகட்டலாச்சு.

காடுகழனி கட்டிடமாக
காளையினம் அடிமாடாச்சு

சீமைக் காளைகளின்
விந்தெடுத்து செயற்கைக்
கருத்தரிப்பு உருவாச்சு.

மஞ்சு விரட்டென்னும்
ஜல்லிக் கட்டுக்காகவே
காளை வளரலாச்சு.

வீர விளையாட்டா இது
காளை வதையென்றே
வஞ்சனையால்
தடை போட்டாச்சு.

நம்பியது போதுமென்று
சிலிர்த்து எழுந்த
இளஞ்சிங்கக் கூட்டத்தால்
தடை உடையலாச்சு.

வாடிவாசல் திறந்து
காளைகள் ஓடி வரலாச்சு.
இதுவே
ஜல்லிக்கட்டின் வரலாறாச்சு.

Series Navigationநாகரிகம்பொருனைக்கரை நாயகிகள். தொலைவில்லி மங்கலம் சென்ற நாயகி