ஞானி

சல்மா தினேசுவரி, மலேசியா

என் வாய்மொழியின் ஒவ்வொரு வார்த்தையிலும் கனவுகள் உண்டு

ஒவ்வொரு எழுத்திலும் காயங்கள் உண்டு

காலாவதியான வார்த்தைகளும் உண்டு

சாகாத வார்த்தைகள் பல உண்டு

சாகடித்த வார்த்தைகளும் சவமாய் என்னுள் இன்னும் உண்டு

 

சாவகாசமாய் சொல்ல நினைத்த வார்த்தைகளும்  சகலமுமாய்

உள்ளுக்குள் இருத்தி இருத்தி இறுக்கமாய்…

மீந்துபோன வார்த்தைகளை நான் வீசுவதில்லை

மனத்துக்குள் பேசிப்பேசி மரணிக்கும் வார்த்தைகளை

நான் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கின்றேன் என்னுள்  பேசியபடியே

 

வாழ்வில் வார்த்தைகள் வலியை சொல்வதில்லை

சொல்லாத வார்த்தைகளில் எதுவும் உணரப்படுவதில்லை

சொல்லாமல் இறுக்கி பிடிப்பதில்தான் அதிகபட்ச சூட்சமம்

 

உயிருக்கும் மெய்க்கும் நடுவில் 

உதிரமாய் உறவாடும் ஒலிகளில்தான்

எத்தனை எத்தனை  வார்த்தைகள்

அசை சேர்த்து  அசை போட்ட வார்த்தைகளில் 

நான் அசையாமல் போன நொடிகள் எத்தனையோ

 

துறப்புக்கு ஏன் இத்தனை மெனக்கெடல்கள்

எல்லா வார்த்தைகளையும் துறந்து நின்றால்

நீயும் நானும் ஞானி தான்…

 

 

 

 

Series Navigationசெல்வராஜ் : சிறுகதைகளின் ரசிகர்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]