டௌரி தராத கௌரி கல்யாணம்….! -26

This entry is part 9 of 24 in the series 24 நவம்பர் 2013

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத்

ஒரு கயவனை நல்லவன்னு நம்பிக் காதலிக்கப் போயி அவன் அயோக்கியன்னு தெரிஞ்சுண்டதும் அந்தப் பொண்ணு மனசு என்ன பாடு படும்..? கொஞ்சம் நெனைச்சுப் பாரு. யாரு மனசுல என்ன கள்ளம் இருக்கும்னு யாருக்குத் தெரியும்? கட்டி வெச்ச கோட்டை இடிஞ்சுத் தரை மட்டமா விழுந்தாலும் பரவாயில்லை…ஆனா…. அவன் இப்படி ஒரு சாக்கடேல தூக்கிப் போட்டுட்டு போய்ட்டானே..நெனைக்க நெனைக்க ஆறாமல், சாட்சிக்காரன் கால்ல போய் விழறதுக்கு பதிலா சண்டைக்காரன் கால்லயே விழலாம்னு நினைச்சாளாம்.

நல்லவன் மனசுக்குள்ள கயவன் உட்கார்ந்துண்டு இருந்தாப்பல, கயவன் மனசுல நல்லவனும் இருந்திருக்கான்…..அது அந்தப் பொண்ணோட அதிர்ஷ்டம் தான்னு சொல்லணம் .

தான், ராஜேஷைக் காதலிச்சு ஏமாந்து போன விஷயத்தைச் சொல்லி கதறி அழுதாளாம்….அப்பறம் அவனுக்கு என்ன தோணித்தோ….உனக்காக நாங்க கொடுத்த பணம் இருபதாயிரத்தைக் கொடுத்துட்டுப் போ..ன்னு கறாரா சொல்லிட்டானாம். இவளும் தன் கழுத்துல, காதுல போட்டுண்டு இருந்ததை அப்படியே கழட்டி தந்திருக்கா…அப்பத்தான் அவன் இவளோட பேரென்ன? ன்னு  கேட்டானாம்.

இவளும் கேவி கேவி அழுதுண்டே, மங்கள கௌரி….! ன்னு   சொல்லியிருக்காள்.

அவ்ளோதான்….! இவள் பேரைக் கேட்டவன் அப்படியே அவன் ஒரு நிமிஷம் திகைச்சுப் போய், யோசிச்சுப் பார்த்துட்டு…என்ன தோணித்தோ, .இது எங்க குல தெய்வத்தோட பேரு…என் அம்மாவோட பேரும் இது தான். இந்தா உன் நகையை நீயே வெச்சிக்கோ….உன் வீடு எங்கே..? ன்னு கேட்டு.. டேய்…இவளைக் கொண்டு போய் வாரணாசில விட்டுட்டு வாங்கடா…ன்னு ரெண்டு பேரைத் துணைக்கும் அனுப்பி வெச்சானாம்.

பின்னே….மங்களகௌரி, அம்பாள் லேசுப்பட்டவளா…? அம்பாளே அவனனுக்குள்ள வந்து, அவன் மனசை மாத்தி இவளை காப்பாத்தி இருக்கா…இல்லாட்டா இவள் நம்பிப் போனவன் இவளை சீரழிச்சிருப்பானே. இதைதான் அம்பாளின் கருணைன்னு சொல்வா.

அம்மா…கேட்கவே சிலிர்க்கறதும்மா….இதெல்லாம் நிஜம்மா நடந்ததா..?

ஆமாம் பின்னே…..அந்தப் பொண்ணு மங்களமும், காவேரி மாமியும்  சொன்னாளாக்கும். இந்தக் காலத்துல நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னே தெரியலையாக்கும்.

அப்படில்லம்மா…..எந்த நல்லவன் எப்போ கெட்டவனா மாறுவான்னும் , எந்தக் கெட்டவன் எப்போ நல்லவனா மாறுவான்னும் தான் சொல்ல முடியலை. நிஜம்மாவே  மங்களத்தோடு கதையைக் கேட்டால் மனசு பகீர்ங்கறது .

ஆமா …இதெல்லாம் அவா எப்டிம்மா உன்கிட்ட , பொண்ணோட பேரு கெட்டுப் போயிடுமேங்கற பயம் துளி கூட இல்லாமே தைரியமா சொன்னா..? ஆச்சரியக் குரலில் கேட்டாள் கௌரி.

இந்த ஊருக்கே தெரியுமாம்…..நியூஸ் பேப்பர்ல கூட வந்ததாம். பின்னே…சும்மா விடுவாளா..? லோக்கல் சிட்டி வாரணாசி டிவிக்காரன் கூட பேட்டி தரயான்னு வந்து நின்னாளாம். மங்களம் தான்…முடியாதுன்னு கண்டிப்பா சொல்லி அவாளைத் திருப்பி அனுப்பினாளாம். அதுக்கெல்லாம் இந்த காவேரி மாமியோட தம்பியாக்கும் காரணம். அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டு வேலைக்குப் போனா இல்லையா இந்த மங்களம், அதை மனசுல வன்மம்  வெச்சுண்டாக்கும் இந்த விஷயத்தை ஊர் பூரா தம்பட்டம் அடிச்சு கேலி பேசினானாம்.

அடப் பாவமே…சொந்த மனுஷாளே எப்படி இருக்கா பார்த்தியா..?

சொந்த மனுஷாளுக்குத் தான் பொறாமை வரும்.மத்தவாளுக்கு இப்படியெல்லாம் பண்ணத் தோணாது கௌரி.

அதற்குள் குழந்தை கௌசிக்  பசியால் நெளிய, அம்மா,  கொஞ்சம் ‘அமுல்’ கலந்து தாயேன்…இப்பவே கொடுத்தால் அப்படியே குடிச்சுட்டு தூங்கிடுவான்…கௌரி மெல்ல கெளசிக்கை எடுத்து மடியில் கிடத்திக் கொண்டே, அம்மா…நாளைக்கு அலஹாபாத் போறோமே…குழந்தைகள் படுத்தாமல் இருக்கணம்…இத்தனை நாட்கள் எப்டியோ சமாளிச்சாச்சு. கௌதமுக்கு நேத்தே ஜலதோஷம்…அங்க ‘வெதர் கண்டிஷன்’ எப்டி இருக்குமோ என்னமோ…? சொல்லிக் கொண்டே கௌதம் மேல் போர்த்தியிருந்த ஷாலை சரிசெய்கிறாள்.

ஆமாமாம்….சொல்லவே மறந்துட்டேன்…நாளைக்கு நம்மளோட கூட அந்த மங்களமும்  குழந்தைகளைப் பார்த்துக்க.
வரேன்னு சொல்லிருக்கா. நான் தான் சும்மாக் கூப்பிட்டுப் பார்த்தேன். துணைக்கு இருக்கட்டுமேன்னு…அதனாலென்ன , வரேன்னு சொன்னா. நல்லது தானே..? இந்தா கெளசிக்குக்கு பால்…. இரு…இரு…கௌதமுக்கும்  கலந்து தரேன்…என்று பாட்டிலை நீட்டுகிறாள் சித்ரா.

ஓ …மங்களமும் வராங்களா …! ரொம்ப நல்லதாப் போச்சு. பால் பாட்டிலை வாங்கி கௌசிக் வாயில் திணித்ததும் அவன் தூக்க மயக்கத்திலும் பாலுக்காகக் காத்திருந்தவன் போல ‘டபக்’ என்று இழுத்துக் கொண்டபோது…அம்மா..இவனுக்கு நல்ல பசி. பாவம்…என்று குழந்தையின் தலையைத் தடவி விடுகிறாள்.

மங்களத்துக்கிட்ட நான் எனக்கு  ஏதும் தெரிஞ்சா மாதிரியே காட்டிக்க மாட்டேன்…குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடியே சொன்ன கௌரியின் கண்களில் ஈரம்.

அந்த மாமியோட தம்பி இருக்கானே…கடங்காரன், ..அவாத்துல அந்த போட்டோல பார்த்தியே….அவன் தான், இவளைப் பத்தி
நடந்தது, நடக்காததெல்லாம் கன்னாப்பின்னா சொல்லி பேரை ரிப்பேர் பண்ணி, இனிமேல் இவளை யாரும் கல்யாணம் பண்ணிக்க விடாமல்,..இவளுக்கு என்னை விட்டா வேற கதியில்லேன்னு சொல்லி மிரட்டினானாம்.

அச்சச்சோ….இப்படியும் ஒருத்தனா..? முகத்தை வெளியே காட்டவிடாத படி கெடுதல் பண்ணினவனை எப்படி ஒருத்தி கல்யாணம்  பண்ணிப்பா..?

அதான்……மங்களமும்…விஷத்தை சாப்பிட்டு ஹாஸ்பிடல்ல கிடந்தாளாம்.. ….அது ஒரு பெரிய விஷயமாகி…கடைசில அவன் இனிமேல் இது வழிக்கு வராதுன்னு தெரிஞ்சுண்டு, யாரோ ப்ரியான்னு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணின்டானாம். நிறைய வரதட்சிணை வாங்கிண்டு அதுல டிராவல்ஸ் பிஸினெஸ் வெச்சுண்டானாம். அதுக்கப்பறம் இந்த வீட்டுப் பக்கம் வராமல் ஒரு அஞ்சு வருஷம் இருந்திருக்கான். இவாளும் தொல்லை விட்டதுன்னு கஷ்டப்பட்டு இந்த  சமையல் வேலையை  மட்டும் பார்த்துண்டு இருந்திருக்கா.

திடீர்னு ஒருநாள் கைகுழந்தையோட இவாத்து வாசல்ல வந்து நின்னானாம்….பிரசவத்துல ப்ரியா செத்துப் போயிட்டா…அவ நினைவா இந்தக் குழந்தை என் கிட்ட தான் வளரணம்…ஆனா ப்ரியாவோட அம்மா அப்பா குழந்தை அவாளுக்குத் தான்னு சொல்லி சண்டைக்கு வரா…ன்னு அழாத குறையா வந்து காலைப் பிடிச்சானாம். என் அக்கா வளர்த்துக் கொடுப்பாள்னு சொல்லி அவாகிட்டேர்ந்து குழந்தையை எடுத்துண்டு வந்துட்டேன்…காவேரி நீ தான் எனக்கு இப்ப கூடப் பிறந்த பொறப்பா எனக்கு பக்கபலமா நிக்கணம் ன்னு சொல்லி காவேரி மாமியோட கால்ல விழுந்திருக்கான்.

நல்லதுன்னா சொல்லக் கூட வரமாட்டா….ஒரு கஷ்டம்னா எங்கேர்ந்து தான் மறந்தவா கூட நினைவுக்கு வருமோ? இந்த விஷயத்தில் எல்லா உறவும் ஒண்ணு தான் போல.

ம்கும்….உனக்கு சந்தடி சாக்கில் உன் மாமாவைத் திட்டாமே விட மாட்டியே. ம்ம்..கேளு…காவேரி மாமிக்கு இளகிய மனசு பாவம். நாங்களே இங்க கஷ்டப் படறோம்னு மாமா கூடச் சொல்லிப் பார்த்தாராம்…..அதுக்கு அவனோ, நானும் இங்கயே வந்துடறேன் அத்திம்பேர்னு சொல்லி குழந்தையையும்  அவா காலடியில் போட்டானாம். வழில போன அரணயை எடுத்து இடுப்பில் கட்டிண்டா எப்படியோ, அப்படியாச்சு கதை. பாவம் மாமியும் மாமாவும்…இவன் திருந்தி நம்மையும் காப்பாத்துவான்னு நினைச்சிருப்பா.
அவனோ, இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கற ராக்ஷசன், மெதுவா….குழந்தைக்காக நான் மங்களத்தைக் கல்யாணம் பண்ணிக்கறேன்…ன்னு வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையா மறுபடியும் ஆரம்பிச்சிருக்கான்.  அவனோட செல்வாக்கு இவாளுக்கும் தேவையா இருந்திருக்கு. பாவம்…யோசிக்கவே யோசிக்காமே, வேண்டாம்னு சொல்லி அழுத மங்களத்தை …..என்னவெல்லாமோ சொல்லி படிய வெச்சு உபாயமா கல்யாணத்தைப் பண்ணிட்டா காவேரி மாமி.

அச்சச்சோ…….என்னம்மா சொல்றே நீ? இந்தக் காலத்துல இப்படியா?

காலம் எதுவா இருந்தாத்தான் என்ன….சில சமயம் எல்லாருமே சூழ்நிலைக் கைதி தான். உன் விஷயத்தில் கார்த்தி கல்யாணம் அப்படித் தானே நடந்தது?

சித்ராவிடமிருந்து சீறி வந்த ஒரு வார்த்தையில் வாயடைத்துப் போனாள் கௌரி.

ஆனா…என்னாச்சு…? தெய்வம் நின்று கொல்லும்னெல்லாம் இல்லாமே, அல்லது அந்த தெய்வத்துக்கே பொறுக்கலையோ என்னவோ ……அவன் கல்யாணம் கழிஞ்சு முதல் வாரம், ஹரித்வார் ட்ரிப்புக்கு போறேன்னு சொல்லிப் போனவன் தானாம்…..வெள்ளத்துல மாட்டீண்டு  போயே போய்ட்டான்னு தகவல் வந்ததாம். முன்னாடியே தெரிஞ்சிருந்தா, இப்படி ஒரு கல்யாணம் பண்ணியிருந்திருக்கவே மாட்டோமேன்னு மாமியும் மாமாவும் தலையில் அடிச்சுண்டு அழுதிருக்கா.

மங்களம் தான் திடமா இருந்து தைரியம் சொன்னாளாம். எனக்கு நல்லது தான் நடந்திருக்கு. இனிமேல் யாரும் அழாதேங்கோ. எனக்கு இந்தக் குழந்தை போதும்னு சொல்லி வளர்க்க ஆரம்பிச்சுட்டாளாம்.  மத்தவாளைப்  பொறுத்தமட்டில் அவள் கல்யாணமாகி, குழந்தையோட இருக்கும் ஒரு இளம்விதவை தான். ஆனால் அவளுக்கு மட்டும் தெரியும் அவளது இந்த வேஷம் அவளுக்கு ஒரு பாதுகாப்பு வளையம்னு . ஆனால்..காவேரி மாமிக்கு மட்டும் இன்னும் அவளுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு ஒரு நப்பாசை…பெத்தவளோல்லியோ…பின்னே இருக்காதா? மங்களம் மட்டும் காவேரி மாமியோட இந்த எண்ணத்துக்கு பிடி கொடுக்கவே மாட்டேங்கறான்னு மாமி என்கிட்டே ரகசியமா சொன்னா, மாமி…. நீங்களாவது அவளுக்கு எடுத்துச் சொல்லி நல்ல புத்தி சொல்லுங்கோ..எங்களுக்கப்பறம் இவாளுக்கு யாரு?…ஒரு துணை வேண்டாமான்னு கேட்டு ரொம்ப வருத்தப்பட்டாள்.

சொன்னா. நானும் சொல்றேன்னு சொல்லிருக்கேன்…..அதான் நாளைக்கு நம்மளோட அலஹாபாத்துக்கு கூட அனுப்பறா. வீட்டுக்கு வீடு வாசப்படி…! அலுத்துக் கொண்ட சித்ரா பெரிய கொட்டாவி விட்டபடி….மணி என்னாறது…என்று கைபேசியில் பார்க்க…அச்சச்சோ…..மணி ரெண்டரை ஆயாச்சு….ஒரு மணி நேரமாவது தூங்கணும். என்று சொல்லி படுத்தக் கொள்கிறாள்.

சரிம்மா….தூங்கலாம்…ஆனால், நீ ப்ளீஸ் மங்களத்தோட தனிப்பட்ட எண்ணத்தில் தலையிடாதே. அவங்க எண்ணத்துக்கு நாம் மதிப்புக் கொடுக்கணம். காதலில் ஏமாற்றம் ஏற்படுத்தும் வைராக்கியம், பெண்களுக்கு அசாத்திய துணிவையும் தன்னம்பிக்கையையும் தரும்..நீ எதைப் பற்றியும் அவள் கிட்ட பேசாதே. சரியா…?உலகத்துல எந்த மூலையிலும் பெண்களுக்கு எப்படியெல்லாம் பிரச்சனை உருவாறது பார்த்தியா….?

அதான்…..இந்தப் பருவத்துல மனத்தைப் பக்குவத்தோட வெச்சுக்கணம்ன்னு நானும் அடிச்சுண்டேன்……நீ எங்கே கேட்டே…! கோட்டை விட்டே…! இப்போ…? நிறுத்தினாள்  சித்ரா.

கொட்டாவி விடறேன்….சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டாள் கௌரி. அவளுக்குள்ளிருந்த கௌரி எழுந்து உட்கார்ந்து கொண்டாள். தனக்குள் யோசித்துக் கொண்டே இருந்தவள், உறங்கிப் போனாள் .

புரோஹிதர் அனுப்பி வைத்த ஒருவர் வந்து கதவைத் தட்டு தட்டென்று தட்டிய சத்தம் கேட்டதும்  தான் உறக்கம் லேசாகக் கலைந்து சுயநினைவுக்கு வந்தவளாக தடுமாறிக் கொண்டே எழுந்தாள் சித்ரா.

மணியாச்சு….கிளம்புங்கோ…கார் உள்ள வராது. அடுத்த தெரு முனையில் நிக்கறது. நான் அங்கே இருக்கேன்…சீக்கிரம் வாங்கோ. சொல்லிவிட்டு நகர்ந்ததும்…சித்ராவின் உடலுக்குள் சுறுசுறுப்பு புகுந்து கொண்டது.  டீ கௌரி….எழுந்திரு…எழுந்திரு…என்று அவள் முதுகில் தொப் தொப்பென்று அடித்து விட்டு…தான் அவசரமாகக் காலைக் கடனுக்குக் கிளம்புகிறாள்.

வாசலில்…நிழலாட, யாரது…..? எட்டிப் பார்த்த கௌரிக்கு, அங்கு மங்களத்தைப் பார்த்ததும் அப்படி ஒரு ஆச்சரியம்….! பளிச்சென்ற
அழகு….! கண்களில் ஒளி.

வா….வாங்கோ….உள்ள வாங்கோ…! சில அழகு சில சமயம் யாரையும் தடுமாற வைக்கும். “அம்மா…..மங்களம்…வந்தாச்சு.”…சொல்லும் போதே ஒரு மங்கலம் கௌரியின் மனத்துள் எழுந்தது.

புன்னகைத்தபடி அறைக்குள் நுழைந்த மங்களம், குழந்தைகளை நான் தயார் பண்றேன்…நீங்க கிளம்புங்கோ…சொல்லிக் கொண்டே கீழே கிடந்த போர்வையை எடுத்து மடிக்கத் தொடங்கினாள் .

மேலே…ஃபோன் போட்டு அவரையும்  எழுப்பு…சித்ரா குரல் கொடுக்கிறாள்.

டொக்….டொக்…..ரெடியா…? குரல் கேட்டு கதவைத் திறந்த மங்களத்தைப் பார்த்ததும் பிரசாத் முகத்தில்…அடடே ..!

சில நொடிகள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் உற்றுப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள்.

டக்கென்று திரும்பிக் கொண்ட மங்களம்……மாமி…! என்று குரல் கொடுக்கவும்,

அதற்குள் பிரசாத் உள்ளே வந்து…..கௌரி……கௌரி…..இவ….இவங்க……இங்க….எப்…எப்படி…..? இதெல்லாம்  உன் வேலையா? ஆனாலும் எப்படி ? அதிர்ச்சியில் தடுமாறுகிறான் பிரசாத்.

மாமி.. தயங்கியபடியே…நான் கிளம்பறேன்….! என்று சித்ராவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பத் தயாராகிறாள் மங்களம்.

எதையோ எப்படியோ புரிந்து கொண்டு, அப்போ நான் வெளில இருக்கேன், சீக்கிரமா வாங்கோ சொல்லிக் கொண்டே  பிரசாத் வெளியேறுகிறார்.

குழப்பத்துடன் சித்ரா ஏன்..? என்னாச்சு….? என்றவள் பிரசாத்தைப் பார்த்ததும், ஓ ….இவரா….? இவர் பிரசாத்…..எங்க ஃபேமிலி ஃப்ரெண்டு…நீயும் எங்களுக்குத் துணையாக் கூட வரேன்னு கௌரிட்ட சொல்லிருக்கேன்…என்று சொல்லிக் கொண்டே மங்களத்தின் கரங்களைப் பற்றிக் கொள்கிறாள்…அந்த இறுக்கத்தில்  நீ போகாதே என்ற அழுத்தம் அதிகமாய் இருந்ததை உணர்ந்து கொண்டாள்  மங்களம்.

சரி மாமி…! என்று சொல்லி விட்டு கெளதமைத் தூக்கியவள்…இவனுக்கு ரொம்ப உடம்பு அனலா கொதிக்கறதே …..ஜுரமா..மாமி ? குரோசின் இருந்தால் கொடுங்கோ என்கிறாள்.

கௌரி கௌதமுக்கு மருந்தைக் கொடுத்து விட்டு, அப்போ….பிரசாத்தின் மேங்கோ…இவங்க தானா? என்ற கேள்விக்கு விடை தெரிய,  மங்களம்…உங்களுக்கு இந்தப் பிரசாத்தை முன்னாடியே தெரியுமா? என்று மெல்லக் கேட்கிறாள்.

தெரியும்….! என்கூட வேலை பார்த்தவர்….! சொல்லிவிட்டு மெளனமாகிறாள் மங்களம்.

மங்களம்….மங்கா…! மேங்கோ…மனத்துக்குள் உச்சரித்தவள்….ஆச்சரியமாயிருக்கே….என்ற மனத்தை அடக்குகிறாள்…கௌரி.

கைகளில் கூடையுடன் சித்ராவும், மங்களமும், கௌரியும் ஆளுக்கொரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்த பிரசாத் கையில் டார்ச்சைப் பிடித்தபடி கூடையைத் தாங்கோ மாமி என்று சித்ராவின் கைகளிலிருந்த கூடையை வாங்கிக் கொண்டு
“அதோ ஸ்கார்பியோ வண்டி தான் ..அங்கே நிக்கறதே…சீக்கிரம் போய்டலாம்…”டார்ச் ஒளியை ரோட்டில் அடித்தபடியே பார்த்து நடங்கோங்கிட்டேளா…சொல்லிக் கொண்டே  பின்னால் நடந்தார் பிரசாத்.

மஹேந்திரா ஸ்கார்பியோ வண்டி அனைவரையும் ஏற்றிக் கொண்டு உறுமியபடி ஆடி ஆடிக் கிளம்பியது. கூடவே..!

” மைய்யா …..ஓ …..கங்கா…..மைய்யா ….
ஓ ஓ ஓ ஓ ஓ …..கங்கா….மைய்யா மே….ஜப்பு தக ஹைன் பானி …ரஹேன்….
மேரி சஜ்ஜுனா தேரி …….ஜிந்துஹானி ரஹே…..”..!

பாட்டு ஆரம்பித்ததும், கௌரி சொல்கிறாள்….இந்த ஒரு பாட்டு தான் எங்க பார்த்தாலும் கேட்டுண்டே இருக்கு….நேஷனல் ஏன்தெம் மாதிரி ….என்றதும் பிரசாத் மெல்ல அந்த டிரைவரிடம் சொல்கிறான்…..பாட்டை மாத்துங்க என்று.

அச்சா…கானா சார் ஏ…! என்றபடி ஒரு பட்டனை மீண்டும் தட்டவும். பாடல் மாறுகிறது.

கங்கா…..தேரா பானி  அம்ரித்து ..
ஜர் ஜர்  பெஹதா ஜாயே
யுக் யுக் ஸே இஸ் தேஷ் கி தர்தி
துஜ்ஹாஸ் ஜீவன் பாயே…
கங்கா தேரா பானி….

தூர் கிமாலய் ஸே தூ ஆய்
கீத்து ஸுஹானே ஸுனாத்தி
பஸ்தீ பஸ்தீ பர்வத்து பர்வத்து
ஸுக் ஸந்தேஷ் ஸுனாதி
கங்கா….தேரா பானி …

கம்பீரமான சோனு நிகாம் குரலில் பாடல் அங்கிருந்த அத்தனை இதயங்களையும்  அமைதி படுத்துகிறது.

இனி என்ன நடக்கும்? என்ற கேள்விகளோடு கண்ணை மூடிக் கொண்டு பயணத்தில் ஒன்றிப் போய் அவரவர் மனத்துக்குள்ளாகப்  பேசிக் கொண்டே நூற்றி இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரப் பிரயாணத்தை மெளனமாகக் கடந்து அலஹாபாத் வரவும்…..கண்விழித்தார்கள். இருள் விலகிப் பொல பொலவென விடிந்து கொண்டிருந்தது.

சாப்பாடெல்லாம் ஒண்ணும் கிடையாது….குழந்தைக்குப் பால் வேணா வாங்கிக் கொடுக்கலாம். முதல்ல காரியம், தீர்த்த சிரார்த்தம், வேணி தானம், சங்கம ஸ்நானம்…..உங்களுக்கு காசிச்சொம்பு வேணும்னா…இங்கேர்ந்து தான் ‘சங்கம்’ ல ஜலம் எடுத்துக்கணம். காசில போய் சொம்புல அடைச்சுக்கலாம். எங்களோட படகே இங்க தயாரா இருக்கு. ரெண்டு மணிநேரம் ஆகலாம். என்று பொதுவாகச் சொல்லிவிட்டு…..ஜாக்ரதையா இறங்கி வாங்கோ….தூரத்துல வராளே…அவாளைப் பார்த்து பயந்துக்காதேங்கோ….அவா தான் அகோரிகள்.
சிவனின் மைந்தர்கள்னு அவாளை சொல்லுவா..அவாளா வந்து காசு கொடுக்கலாம்..தப்பில்லை. என்னைப் பின்தொடர்ந்து வாங்கோ என்று சொல்லிவிட்டு…சாமான்களைத் தூக்கிக் கொண்டு நடக்கிறார், புரோஹிதர்.

அகோரிகளைப் பார்த்துட்டு, பயப்படதேன்னு சொன்னா எப்படி..? உடம்பெல்லாம் சாம்பலைப் பூசிண்டு மண்டையோட்டு மாலை வேற…அதென்ன…கையில சுருட்டு…..போச்சுடா….பயப்படாமே இப்படி இருக்கறது…? கௌரி, மங்களம்….தள்ளி வாங்கோ…மண்ணுக்குள்ள காலு புதையப் புதைய நடந்து எப்படியோ நதிக்கரை வரைக்கும் வந்தாச்சு. சில இடங்களில் பிணங்கள் எரிந்து கொண்டு புகைந்து கொண்டிருந்தது.

அலஹாபாத்துல தான் முதல்ல பித்ரு காரியங்கள் பண்ணணமாம்…எத்தனை பேர் எங்கேர்ந்தெல்லாம் வந்திருக்கா…பாரேன்..இப்பவாவது நமக்கு கெடைச்சுதே…பேசிக்  கொண்டே நடக்கிறார்கள் தம்பதியர் யாரோ இருவர்.

சென்னைலேர்ந்து வந்திருப்பா…மங்களம் சொல்லிக் கொள்கிறாள்.

ம்ம்ம்…..இங்கேர்ந்து பார்க்க சங்கமம் எவ்ளோ அழகு….இல்ல…?  கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஜலப் ப்ரவாஹம். தூரத்தில் வண்ண வண்ண கொடிகள், படகுகள்….மரப்பாலங்கள்..அங்கே தான் பூஜைகள் நடக்குமா ? பார்க்கவே ரம்மியமா இருக்கே. நீங்க இங்க வந்திருக்கேளா?

ஆமாம்..நான் ஆரம்பத்துல கொஞ்ச மாசம் இங்க வேலை பார்த்தேன். இங்க  இடத்தில் தான் யமுனை, கங்கை, சரஸ்வதி சங்கமம்…..நம்ம பின்னல் மாதிரி…சரஸ்வதி அந்தர்யாமி…..அதனால இங்க தான் வேணி தானம் சிறப்பு…. நம்ம தலைமுடில கொஞ்சமா வெட்டி எடுத்து சங்கமத்துல சேர்த்துடுவா…என்று புன்னகையோடு சொல்கிறாள் மங்களம்.

அப்டியா…? கௌரி ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே…இவர்களை நோக்கி ஒரு இளம்பெண்….கையில் குழந்தையோடு அருகில் வந்து நிற்கிறாள்.

அவள் முகத்தைச்  சோர்வும், குழப்பமும், பயமும், பசியும், வறுமையும் மூடி இறுக்கிக் கட்டியிருந்ததும் அதற்குள் ஒரு நளினம் இருந்தது. அவளது கையிலிருந்த பச்சைக் குழந்தைக்கு வெறும் மூன்று மாதங்கள் கூட இருக்காது என்று துணியில் போட்டு சுத்தி வைத்திருந்தாலும் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த அந்தப் பிஞ்சுப் பாதங்கள் ரோஜா மலர் எட்டிப் பார்ப்பது போலிருந்தது கௌரிக்கு.

என்ன வேணும்? என்று அவள் முகத்தைப் பார்த்தாள். பணம் வேணும்னா…இப்ப கையில பணம் ஏதும் இல்லையே….பிரசாத் எங்கே என்று கண்களை ஓட விட்டாள் அவள்.

அந்தப் பெண் ஹிந்தியில் ஏதோ கேட்கவும் ,..கௌரி..மெல்ல மங்களத்திடம், இவங்க என்ன கேட்கிறாங்க ? எனக்கு ஹிந்தி தெரியும்….ஆனா ரொம்ப நன்னாத் தெரியாது….எப்டின்னா …தமிழ் நாட்டுல நான் ஹிந்திக்காரி…..இங்க நான் தமிழ்க் காரி என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.

இவங்களுக்கும்…..அந்த சங்கமத்துக்குப் போகணுமாம்…..படகுக்கு கொடுக்க கையில காசில்லையாம்…..நம்மளக் கூட்டிட்டுப் போகச்சொல்றாங்க……நம்ம குழந்தையோடு அவங்க குழந்தையையும் கொஞ்சம் பார்த்துக்கச் சொல்றாங்க.

ஓ ….அவங்க ஸ்நானம் பண்ணும் போதா…? அதனாலென்ன…..? நல்ல காரியம் தானே…வரச் சொல்லுங்க மங்களம்….! என்றதும்.

அவளும் இவர்கள் பின்னால் வருகிறாள்.

பிரசாத்திடம்…விஷயம் சொன்னதும், சித்ரா குறுக்கிடுகிறாள்…..” உனக்கு  வேற வேலையே இல்ல…..வந்த இடத்துல பாவம் பாத்துண்டு…” இவ…யாரோ…என்னமோ….? வேணும்னா படகுக்கு உண்டான காசைக் கொடுத்து அனுப்பாமே…..!

அம்மா…நம்மளும் குழந்தை வெச்சுண்டு இருக்கோம்….குளிக்கப் போகும்போது குழந்தையைப் பார்த்துக்க ஆள் வேணும்னு நினைக்கறதில் தப்பில்லையே…நாமளும் அப்படி தானே நினைச்சோம் ….கௌரி முடிக்கவில்லை.

நீ என் குழந்தையைப் பார்த்துக்கோ….நான் உன் குழந்தையைப் பார்த்துக்கறேன்னு சொல்லி…கடைசில நம்ம குழந்தையைத் திருடிண்டு போயிடாம பார்த்துக்கோ….காலம் கெட்டுக் கிடக்கு.

எங்க வந்தால் தான் என்ன….உனக்கு மூளைத் தலை கீழா தான் வேலை செய்யும்…எப்பவும் நெகடிவ் தான்….கௌரி சித்ராவை முறைக்கிறாள்.

உனக்கு எத்தனை பட்டாலும் புத்தி வராது….சித்ரா கௌரியை திட்டுகிறாள்.

பிரசாத் நீங்க என்ன சொல்றேள்? என்று கௌரி பார்க்க…

பரவால்லே மாமி…..அவங்க ஒரு ஓரமா ஏறி உட்கார்ந்துகட்டுமே….என்று பிரசாத் சொல்லவும்.

இவளுக்கு நீங்களாக்கும் சரியான ஜால்ரா என்று சித்ரா சொல்கிறாள்.

படகைக் கட்டி நிறுத்தி, .ம்ம்ம்…ஒத்தர் ஒத்தரா ஏறுங்கோ…..என்று முதலில் புரோஹிதர் ஏறியவர் , யாரந்த அம்மா….? உங்களோட வந்தவாளா? என்று கேட்க..

வேண்டாமே….என்றவர்…பின்பு பிரசாத்தின் முகத்தைப் பார்த்து, சரி…ஒரு ஓரமா உட்கார்ந்து வரட்டும்….என்று அரை வாயால் சொல்லிவிட்டு…..ம்ம்….எல்லாரும் ஏறியாச்சா? ம்ம்ம்….சலோ….சலோ….என்றதும்…படகு கரையை விட்டு நகர விருப்பமில்லாமல் நகர்கிறது.

கௌரி சுற்றிச் சுற்றி பார்க்கிறாள்….அம்மா…..எப்டி இருக்கும்மா….? சுத்திலும் தண்ணி…! விழுந்தா அவ்ளோதான்….!

வாயை வெச்சுண்டு சும்மா இரேன்….! இப்ப நீ தான் நெகடிவ்….! என்றதும் மங்களம் சிரிக்கிறாள்.

அவ்ளோ ஆழம்…..எங்கே சங்கமம்…? என்னென்ன நிறம்….இதெல்லாம் பிரசாத்தும்….கூட வந்த பண்டிட்டும்  சொல்லிக் கொண்டே வருகிறார்கள். வருஷா வருஷம் வரும் மஹா மேளா , ஆறு வருடங்களுக்கு ஒரு முறை வரும் அர்த் மேளா பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்பமேளா பற்றியும், அப்போ வர ஜனத்திரள் பற்றியும் சொல்லச் சொல்ல ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டே
திரிவேணி சங்கமம்…. கங்கையின்  ஸ்படிக வெண்மையும்…யமுனையின் கரும் பச்சையும் இணைந்து வேகத்தோடு ஓடும் சங்கமம்….அதன் அருகில் வந்து நின்றது படகு.

இங்கே…. கீழே மரத்தால ‘நிக்கறதுக்கு அடியில் ‘தளம்’ கெட்டியாக்  கட்டியிருப்பா..இறங்கி நின்னு நன்னா முங்கிக் குளிக்கலாம்.பயப்பட வேண்டாம். ஆனா ஜாக்கிரதையா இருக்கணம்…விழுந்தாச்சுன்னா அவ்ளோ தான். கைலேர்ந்து காசு கரைஞ்சாப்பல தான். முதல்ல தீர்த்த சிரார்த்தம் ஆகட்டும்.என்று முத்தாய்பு சொல்லிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு தான் கொண்டு வந்த பையிலிருந்து சாமான்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் படகில் வைக்கிறார் புரோஹிதர்.

முதலில் பிரசாத் தான் ஷவரம் செய்து கொண்டு தீர்த்த சிரார்த்தம், காரியங்கள் முடித்து விட்டு , கங்கா பூஜை செய்தபின் அங்கிருந்த மரத்தடுப்பில் இறங்கி முங்கிக் ஸ்நானம் செய்து விட்டு படகில் ஏறி காலை இளம் வெய்யிலுக்கு இதமாக உட்கார்ந்து கொள்கிறான்.

அவரோட காரியம் ஆயாச்சு…இப்ப நீங்க ரெண்டு பேரும் வாங்கோ…! என்று புரோஹிதர் அழைக்க, சித்ராவும், கௌரியும் வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள்.

மடியில் கௌதமை போட்டுக் கொண்டும், தோளின்மேல் கெளசிக்கை சுமந்து கொண்டும், உட்கார்ந்திருந்த மங்களத்தைப் பார்த்து, அவனைத் தாங்கோ…நான் எடுத்துக்கறேன். என்கிறான்.

இல்லை…இருக்கட்டும்….என்றவள்……என்ன தோன்றியதோ…என்னை மன்னிச்சுடுங்கோ….பிரசாத்..அன்னிக்கு நடந்த எதுக்கும் நான் காரணமில்லையாக்கும்….இருந்தாலும் நானும் தப்புப் பண்ணிட்டேன்னு தோண்றது . உங்களை மீண்டும் சந்திச்சதில் ரொம்ப ஆச்சரியம். என்கிறாள் மெல்லிய குரலில்.

ம்ம்ம்…..நான் அதையெல்லாம் அப்பவே மறந்தாச்சாக்கும். என்னால கூட நம்பவே முடியலை….! நீங்க தான் மங்களம்…ன்னு.

உங்களுக்கு என்மேல கோபமே இல்லையா? எனக்குத் தான் குற்ற உணர்வு…அதுக்காக நான் நிறைய பட்டுட்டேன்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது ஓரத்தில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்…மெல்ல அவள் மடியிலிருந்த குழந்தையை வெளியில் எடுத்து…..அண்ணே …என் குலந்தே பாத்துகைங்க…..என்று தமிழில் பேசுவதைக் கேட்டதும்…திகைத்தவனாக.

உங்களுக்கு தமிழ் வருமா? நீங்க தமிழா?  என்று கேட்கிறான்.

நா….தமில் இல்லே…..ஆனா தமில் கொன்சும் கொன்சும் வருது ..என்று சொல்லிக் கொண்டே ..குழந்தையைத் துணியோட பிரசாத்தை நோக்கி நீட்டவும், அவன் உடனே கையில் ஏந்திக் கொள்ளவும்….சூரிய ஒளி பட்டு குழந்தை நெளிகிறது.

க்யூட் பேபி…..என்ன பேர்? என்று கேட்கவும்…

கல்யாணி….! என்று அழுத்தமாகச் சொல்கிறாள் அவள்.

வாவ்……என்று பெரிதாக மூச்சு விட்டவன்….அதிசயமாக கௌரி..என்று கத்த நினைத்து, அடக்கிக் கொள்கிறான். “அம்மா….நீயா ” என்று அவனது உள்ளம்  தவிக்கிறது. அவன் அந்தக் குழந்தையை கண் இமைக்காமல்  பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

சரி…நீங்க முங்கிட்டு  வாங்க…என்று மங்களம் அவளிடம் ஹிந்தியில் சொல்லவும்.அவள் இரண்டு கைகளைக் கூப்பி தொழுதுவிட்டு பிரசாத்தைப் பார்த்து, நீங் பாத்துக்க ரொம்ப நந்தி…என்கிறாள்.

திடுக்கென நிமிர்ந்து, பரவால்லே….என்றவன்…ஆப் ஜாயியே…ஃபிகர் மத்….ஹம் தேக்லேத்தே” என்கிறான்.

படகை விட்டு மர தடுக்குக்குள் முங்குவதற்கு படகைப் பிடித்துக் கொண்டு இறங்குகிறாள்……..!

நீண்ட நேரமாகியும் அவள்  வரவேயில்லை.

(தொடரும்)

Series Navigation​எப்படி முடிந்தது அவளால் ?காசேதான் கடவுளடா
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *