தண்டனை

author
0 minutes, 4 seconds Read
This entry is part 7 of 8 in the series 22 செப்டம்பர் 2019

காற்றாடி விடும் காலங்களில் அறந்தாங்கி புதுக்குளக் கரை பட்டம் விடும் எங்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். நான் எதையும் வித்தியாசமாகச் செய்வேன். எல்லாரும் ஒற்றைப்பட்டம் விட நான் 7 பட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து பறக்கவிட்டேன். பத்துக் கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஏகப்பட்ட  மக்கள் கூடிவிட்டனர் என் பட்டத்தைப் பார்க்க. பம்பரக் கயிறு தடிமனில் நூல். இன்னும் ஒரு பந்து நூலைச் சேர்த்தால் இன்னும் உயரமாகப் பறக்கும். ஆசைப்பட்டேன். பந்துநூல் தயார். எப்போதும் என்னுடனேயே இருப்பான் கரீம். அந்தப் பட்டங்களின் கயிறை கொஞ்ச நேரம் பிடிக்கச் சொன்னேன். அது ஆளையே இழுக்கும். கெட்டியாகப் பிடிக்கவேண்டும் இல்லாவிட்டால் பறித்துக்கொண்டு ஓடிவிடும். கரீம் பிடித்துக் கொண்டிருந்தான். அடுத்த நூல் பந்தை அந்தக் கயிறோடு நான் முடிந்துகொண்டிருக்கும்போது அவன் கயிறை விட்டுவிட்டான். அந்த ஏழு பட்டமும் தலையை ஆட்டிக்கொண்டு எங்கோ சென்றது. நூல் ஒரு பனைமரத்தின் உச்சியில் சிக்கிக் கொண்டது. வெறியானேன். என் இடது காலால் ஓர் உதை விட்டேன் படாத இடத்தில் பட்டு கரீம் துடித்தான். அவன் அம்மா வந்துவிட்டார்கள். தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றார்கள். சில மாதங்கள் கழித்து அவனைப் பார்த்தேன். லேசாக்க் கூனி நடந்தான். ஏதோ ஓரிடத்தில் ஏதோ ஒரு தவறு. நான் எட்டி உதைத்ததில் ஏற்பட்டுவிட்ட ஊனம் அது. எங்கள் மளிகைக் கடையை நம்பித்தான் கரீமின் குடும்பமே பிழைக்கிறது. அவன் வேண்டுமென்றே செய்யவில்லை. ஆனாலும் அந்தத் தவறுக்காக நான் அவனை கடுமையாக தண்டித்துவிட்டேன். என்னை யார் தண்டிப்பது?

பள்ளி முடிந்ததும் நாங்கள் பூப்பந்தாடுவோம். பந்தயம் கட்டி ஆடுவோம். 10 காசு 20 காசு பந்தயம்தான். அது அப்போது பெரிய காசு. ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒரு ரூபாய் பந்தயம் கட்டினோம். திடலின் எல்லைக்கோட்டை மண்வெட்டியால் கொத்தியிருந்தோம். அந்தக் கோட்டில் விழுந்தால் உள்ளேயா வெளியேயா என்ற சண்டை வரும். பந்தயம் பெரிய தொகை. மூலைகளில் ஆணியடித்து நூல்கயிறால் நான் எல்லையிட்டேன். அந்த யோசனை நான்தான் சொன்னேன். நான்தான் செய்தேன். ஃபாரூக் அந்தப் பக்கம் வந்தான். நாங்கள் முழுமூச்சில் ஆடிக்கொண்டிருந்தோம். அவனுக்குப் பார்வை கால்வாசிதான். ஒரு பேப்பரைப் படிக்கக் கொடுத்தால் கிட்டத்தட்ட இமையை மோதும் தூரத்தில் வைத்துத்தான் படிப்பான். அவன்தான் வருகிறான். அடுத்த நொடி அந்த நூலில் தடுக்கி தலைகுப்புற விழுந்தான். துடித்தான். கொஞ்ச நேரத்தில் அவன் அத்தா வந்துவிட்டார். அவனைத் தூக்கிக்கொண்டு  நுட வைத்தியர் மாணிக்கத்திடம் ஓடினார். காலில் எலும்பு முறிவு. வீட்டிலேயே இருந்தான். ஏற்கனவே ஓர் ஊனம். இப்போது இன்னொரு ஊனம். ஒரு கால் 2 அங்குல நீளம் குறைந்து விட்டது. இப்போதெல்லாம் ஒரு காலைத் தாங்கித் தாங்கித்தான் நடக்கிறான். நேராக நின்றால் ஒரு கால் தரையில் படாது. அவன் அம்மா என்னிடம் சொன்னார். எம் புள்ளக்கி கண்ணு தெரியாததுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க தம்பீ?’நான் கேட்காமலேயே அந்த அம்மா என்னை மன்னித்தாலும், அவன் நொண்டியானது என்னால்தானே. குற்றம் செய்யாமலேயே அவன் தண்டிக்கப்பட்டுவிட்டான். குற்றம் செய்த என்னை யார் தண்டிப்பது?

‘ஆப்பம் ஆப்போம்’ என்ற கூவல் கேட்டுத்தான் பல நாட்கள்  நான் கண்விழித்திருக்கிறேன். ஒரு மூங்கில் கூடையில் ஆப்பங்களை அடுக்கி அந்தக் கூடையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்தபடி விற்பான் சாகுல். இரண்டு ஆப்பம் 5 காசு. நான் வெளியே வந்தபோது, கூடையைக் க்க்கத்தில் பிடித்தபடி டவுசர் பையிலிருந்து ஒருவருக்கு பாக்கிக் காசு கொடுத்துக் கொண்டிருந்தான். ஒரு பத்துக்காசு உருண்டோடி வந்தது என்னை நோக்கி. அந்தக் காசை மிதித்துக் கொண்டு அப்படியே நின்றேன். விழுந்தது சாகுலுக்குத் தெரியாது. அவன் நகர்ந்தவுடன் அந்தப் பத்துக்காசை அவனிடமே கொடுத்து நான்கு ஆப்பம் வாங்கிச் சாப்பிட்டேன். ஓசியிலும் திருட்டிலும் உண்பது சுகம் என்று நினைத்த வயது. அடுத்த நாள் அந்தக் கூடையை கக்கத்தில் தூக்கிக்கொண்டு ‘ஆப்பம் ஆப்போம்’ என்று கூவினான். இடது காலில் 3 அங்குல நீளத்துக்கு அம்மா சூடு போட்டிருந்தார். அந்த அம்மா ஓர் இளம் விதவை. அவர் கோபங்களை இறக்கிக்கொள்ள கிடைத்த ஒரே மகன் சாகுல்.

‘நேத்துக் கணக்கில பத்துக் காசு காணாமுண்ணே. அம்மா சூடு வச்சுட்டாங்க.’

‘எவன்ட்டயாவது தெரியாம குடுத்துருந்தாலும் அவன் திருப்பித் தரவேணாமா? களவாணிப் பசங்க. எவனையுமே நம்பக்கூடாது சாகுல்’ என்றேன்  ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி. செய்யாத குற்றத்துக்கு அவனுக்குத் தண்டனை. அந்தத் திருட்டைச் செய்த என்னை யார் தண்டிப்பது?

ஞாயிற்றுக்கிழமைகளில் ராவுத்தர் குளத்தில் நாங்கள் இறங்கினால் மீன்களெல்லாம் ஒளிந்துகொள்ளும் வாத்துக்கள் தண்ணீருக்குள் இறங்காது. அப்போது வளர்ப்பு மீன் குஞ்சுகளை ராவுத்தர் குளத்தில் விட்டிருந்தார். ஓரமாகக் குளித்துவிட்டு வெளியேற வேண்டுமாம். ராவுத்தர் குளத்துக்குக் காவல் ராமாயி அக்கா. யாராவது ஆட்டம் போட்டால் சட்டை டவுசரை எடுத்துப்போய் ராவுத்தர் வீட்டில் கொடுத்துவிடவேண்டும். இது ராவுத்தர் உத்தரவு. அந்த ஞாயிற்றுக்கிழமை ஆடினோம். எங்கள் துணிகளை அள்ளிக்கொண்டு ராமாயி அக்கா ஓடுகிறார். யாரோ எங்களை எச்சரிக்க அவசர அவசரமாக  கரையேறினோம். அம்மனமாக ராவுத்தர் வீட்டுக்கு ஓடினோம். நூறு தோப்புக்கரணம் போடவைத்து ராவுத்தர் எங்கள் துணிகளைக் கொடுத்தார். ராமாயி அக்கா எங்களைப் பார்த்து சிரித்தார். அன்று ராமாயி அக்கா வீட்டில் ஏதோ விசேஷமாம்.  தன் வீட்டு வாசலில் மிகப் பெரிய கோலம் போட்டிருந்தார். கலர் மாவெல்லாம் தூவியிருந்தார். 5 மணிநேரமாவது அந்தக் கோலத்தை ராமாயி அக்கா போட்டிருக்க வேண்டும், அடுத்த நாள் காலைதான் அந்த விசேஷம்.  அன்று அதிகாலை எழுந்துபோய் அந்தக் கோலத்தை இடது காலால் தேய்த்து அழித்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டேன். மயில்களும் கிளிகளும் கிழிக்கப்பட்டன. ராமாயியை தண்டித்துவிட்டதாக நான் திருப்திப்பட்டேன். ராவுத்தரிடம் வேலை செய்பவர் ராவுத்தர் சொல்லைத்தானே கேட்க வேண்டும். அந்தக் கடமையைச் செய்த அவரை நான் தண்டித்துவிட்டேன். என்னை யார் தண்டிப்பது?

எங்கள் கடையில் புதிதாக ஒருவன் வேலைக்குச் சேர்ந்தான். பெயர் இஸ்மாயில்.அந்த வேகம் அந்த சுறுசுறுப்பு எவருக்கும் வராது. ஒரு கிலோ துவரம்பருப்பு என்று உச்சரித்து முடிப்பதற்குள் பொட்டலம் கைக்கு வந்துவிடும். எதையும் மெதுவாகச் செய்யவே அவனுக்குத் தெரியாது. அவனை அழைத்துக் கொண்டு பாசமலர் படம் பார்க்கப் போனது ஞாபகமிருக்கிறது. அப்போது சீனி கட்டுப்பாட்டில் இருந்தது. ரேசனில்தான் வாங்க முடியும். அந்த இஸ்மாயில் ஒவ்வொரு நாளும் ஒரு கிலோ சீனியை மடியில் கட்டிக் கொண்டு வெளியேறி இருக்கிறான். எவ்வளவு நாட்கள் செய்தான் என்று தெரியாது. அன்று இரவு 9 மணிக்கு அவன் வெளியேறினான். கைலி அவிழ்ந்து சீனி கொட்டி காட்டிக் கொடுத்துவிட்டது. அவனை குண்டுக்கட்டாக எங்கள் வீட்டுக்குத் தூக்கிவந்தார்கள். எவ்வளவு நல்லவனாக நடித்திருக்கிறான். மொட்டை மாடியில் அவனை விசாரிக்கிறார்கள். யாரும் அவன் மீது கை வைக்கவில்லை. முதல் உதை கொடுத்தவன் நான்தான். அதே இடதுகால். அவன் தலை பின்னால் உள்ள கல்தூணில் மோதி ரத்தம் கொட்டியது. அதுவே நல்லதாகவும் போய்விட்டது. இல்லாவிட்டால் பலரும் தர்ம அடி கொடுத்திருப்பார்கள். ரத்தம் வந்த இடத்தில் முடியை கத்தரித்து மஞ்சள் பத்துப் போட்டார்கள். எல்லாரும் சும்மா இருக்கிறார்கள். அவனை அவசரப்பட்டு நான் தண்டிக்கிறேன். என்னை யார் தண்டிப்பது?

கல்லூரிப்படிப்புக்காக தஞ்சாவூர் வந்துவிட்டேன். எம்மெம் சார்தான் கணக்கு வாத்தியார். முகத்தில் வாய்ப்பகுதி முகமட்டத்துக்கு கொஞ்சம் வெளியே இருக்கும். கணக்கில் நான்தான் எப்போதுமே முதல் மதிப்பெண் வாங்குவேன். அன்று கரும்பலகையில் எவனோ மேத்ஸ் என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்தான். அந்த எம்மை குரங்கு வாய் மாதிரி வரைந்து அந்த எஸ்ஸை குரங்கு வால் போல் நீட்டியிருந்தான். பார்த்தால் அதற்குள் குரங்கு ஒளிந்திருப்பது நன்றாகத் தெரியும்.

‘யார்ரா வரஞ்சது? யாரும் எதுவும் பேசவில்லை.

‘ஒங்களுக்கு மேத்ஸ் இப்படித்தான் இருக்கும் என்றால் நானெதற்கு? உண்மை தெரிந்தால்தான் வகுப்பு.’ ஒரே அமைதி. மாணவர் தலைவன் எழுந்தான்.

‘இங்க யாரும் வரயல சார். நான் அழிக்கப் போனேன். அதுக்குள்ள  நீங்க வந்துட்டிங்க. எப்படியும் நாளக்குள்ள கண்டுபிடிச்சுர்றோம் சார்’

வகுப்பு தொடர்ந்தது. அடுத்த நாள் என்னை அறைக்கு அழைத்தார் எம்மெம் சார்.

‘ஏன் இப்புடிச் செஞ்சே?’

 ‘சார்?’

‘ஏன் இப்புடி வரஞ்சே?’

‘நா இல்ல சார்’

‘பொய் சொல்லாதடா’  அந்த ‘டா’ இதுவரை என்மீது அவர் பிரயோகித்ததில்லை.

‘நல்லாப் படிக்கிறேங்கிற திமிரா?’

‘சத்தியமா நா இல்ல சார்’

‘நீ இல்லேன்னா அந்த பாலு ஏண்டா அப்புடிச் சொன்னான்? சரி. போ.’

நான் வந்துவிட்டேன். அந்த பாலு ஒரு நொண்டி.   விடுதியில் என் அறைக்கு அடுத்த அறையில் அவன். அறைக்குப் போனேன்.

‘டேய் பாலு இளம்புள்ள வாதத்துல ஒனக்கு ரெண்டு காலும் போயிருக்கணும்டா. ஒரு கால விட்டுவச்சது தப்புடா’

ஒரு கால் சூம்பிய கரும்பு மாதிரி இருக்கும். அந்தச் சூம்பிய காலில் இடது கையை வைத்து அழுத்தித்தான் அவன் வலதுகாலைத் தூக்க வேண்டும். என் வார்த்தைகள் வெடித்தன. ‘நா என்ன பண்ணுனேன். ஏன் இப்புடிப் பேசுறீங்க?’ கடைசிவரை என்னை மரியாதையாகவே பேசினான் . நான் ‘டா’ வில் திட்டினேன். அடுத்த நாள் எனக்கு உண்மை தெரிந்தது. எம்மெம்மிடம் சொன்னது பாலசுப்ரமணியம். அவனை நாங்கள் ‘சுப்புணி’ என்று கூப்பிடுவோம். அவனைத்தான் எம்மெம் சார் பாலு என்று சொல்லியிருக்கிறார். பாலுவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஓடினேன். அவன் பட்டுக்கோட்டை போய்விட்டான். அடுத்து பத்து நாட்களில் தேர்வு. பத்துநாட்கள் கழித்துத்தான் அவனைப் பார்க்க முடியும். பத்து நாட்கள் கழிந்தன. தேர்வு எழுத பாலு வரவில்லை. பேருந்திலிருந்து விழுந்து இன்னொரு காலும் முறிந்து மருத்துவமனையில் இருக்கிறானாம். நான் சொன்னபடியே நடந்திருக்கிறது. அவன் அதையே நினைத்து கவலைப்பட்டிருக்கிறான். அது நடந்துவிட்டது. அவனைப் பார்க்க பட்டுக்கோட்டை போக நினைத்தேன். கடைசிவரை போக முடியவில்லை. செய்யாத குற்றத்துக்கு அவனை நான் தண்டித்துவிட்டேன். செய்த குற்றத்துக்கு என்னை யார் தண்டிப்பது?

சென்னையில் படித்த காலங்களில் மயில்வாகனம் மெஸ்ஸில் சாப்பிட்டேன். அங்கு வேலை செய்யும் நாராயாணனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் கேட்காமலேயே எனக்கு என்ன தேவையோ அதைப் பரிமாறிவிட்ட அடுத்த இலைக்கு ஓடுவார். ஒரு நாள் அவர் காலைக் கவனித்தேன். வீங்கி இருந்தது. தொடர்ந்து கவனிக்கிறேன். அது வீங்கியேதான் இருக்கிறது. மயில்வாகணனிடம் சொன்னேன். ‘நாராயணனுக்கு ஒரு கால் வீங்கி இருக்கு. யானைக்காலின் ஆரம்ப கட்டமாக இருக்கலாம். சர்க்கரை வியாதியாகக் கூட இருக்கலாம். எதற்கும் அவரை உள் வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட வருபவர்கள் அருவருப்பு அடையலாம்’  அடுத்த நாள் நாராயணனைக் காணோம். சம்பளம் கணக்குப்  பார்த்து ஊருக்கே அனுப்பிவிட்டார் மயில்வாகணன். மகள் கல்யாணத்துக்காக காசு சேர்க்கத்தான் சென்னைக்கு வந்தார். அவர் இங்கே தொடரமுடியவில்லை.அவர் வேலையை இழப்பதற்கு காரணமாக இருந்த என்னை யார் தண்டிப்பது?

சிங்கப்பூர் வந்துவிட்டேன். ஒரு பூர்விகச்சொத்து விற்றதில் ஒரு கார் வாங்கினேன். அறந்தாங்கியில் என் வீட்டின் முகப்பிலேயே கார் நிற்கிறது. சிறிய சிறிய நிகழ்ச்சிகள் நடந்தாலும் சிங்கப்பூரிலிருந்து அறந்தாங்கி போக ஆசைப்பட்டேன். அந்த கார் பந்தாவைக் காட்டத்தான். காரில் போகும்போது தெரிந்தவர்கள் யாராவது நடந்துபோகிறார்களா என்று தேடுவேன். என் பால்ய நண்பன் வெங்கடேசனை ஒரு தடவை பார்த்தேன். அவன் அருகில் காரை ஓட்டிச்சென்று இடக்காலில் சரக்கென்று வேகத்தடையை அழுத்தினேன். கிரீச்சிட்டு நின்றது. கண்ணாடியை இறக்கிவிட்டு இரண்டொரு வார்த்தை பேசினேன். ‘எங்க போகணும் சொல்லு. விட்டுட்டுப்போறேன்’ என்றேன். ‘பரவாயில்ல. பக்கத்துலதான். நடந்து போயிர்றேன்’ என்றான். நான் கார்ஓட்டிச் செல்வதை அவன் பார்க்கிறானா என்று கண்ணாடியில் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். ஒரு நாள் என் சச்சா சாலையோரம் நடந்து போய்க்கொண்டிருந்தார். ஒரு காலத்தில் அவர்தான் அறந்தாங்கி பஞ்சாயத்து யூனியன் தலைவர் எனக்கு சென்னை பிரஸிடென்ஸி கல்லூரியில் எம்மெஸ்ஸி வாங்கிக் கொடுத்த்து அவர்தான். நான் இன்று காரில் போகிறேன். அவர் நடந்துதான் போகிறார். அன்றைக்கும் இன்றைக்கும் எவ்வளவு வித்தியாசம். ‘நான் எப்படி வளர்ந்துவிட்டேன் பாருங்கள்’ என்று பந்தா காட்ட நினைத்தேன். அருகில் காரை ஓட்டிச்சென்று சரக்கென்று இடதுகாலால் வேகத்தடையை மிதித்து நிறுத்தினேன். கண்ணாடியை இறக்கிவிட்டு ‘எங்க சச்சா போறிய. கூட்டிக்கிட்டுப் போறேன்’ இறங்காமலேயே அவரைக் கூப்பிட்டேன். அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. கையால் ‘நீ போ’ என்று சைகை காட்டிவிட்டு வந்த பாதையில் அவர் திரும்பி நடந்தார். கண்ணாடியில் கவனிக்கிறேன். அவர் என்னைக் கவனிக்கவே இல்லை. என் பந்தா அவரை ரொம்பவும் பாதித்திருக்கிறது. அந்தப் பெரிய மனிதரிடம் அப்படி நான் நடந்திருக்கக் கூடாது என்று இப்போது புரிகிறது. அப்போது புரியாததற்கு என்னை யார் தண்டிப்பது?

சிங்கப்பூரில் என் நண்பன் இக்பால் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் சொன்னான். நாகப்பட்டிணத்திலிருந்து ஒரு மாப்பிள்ளை பேசிவருகிறதாம். கம்ப்யூட்டர் எஞ்ஜினியரிங் படித்திருக்கிறாராம். அவர் அக்கா சிங்கப்பூரில் இருக்கிறாராம். அக்கா வீட்டுக்கு வந்திருக்கிறாராம். நீ வந்து பார். பிடித்திருந்தால் பேசி முடிக்கவேண்டுமாம். மாப்பிள்ளையைப் பார்க்க அவரின் அக்கா வீட்டுக்குச் சென்றோம். மாப்பிள்ளை காலுரையைக் கழற்றவில்லை. ஒரு காலைத் தாங்கி நடக்கிறார். வேறு யாரும் அதைக் கவனித்தார்களா என்று எனக்குத் தெரியாது. நான் கவனித்தேன். இக்பாலிடம் சொன்னேன். அந்த மாப்பிளைளயை சிபாரிசு செய்தவரிடமே இக்பால் கேட்டுவிட்டான். விமானத்திலிருந்து இறங்கிய போது ஏதோ ஒரு தகடு காலைக் கிழித்துவிட்டதாம் அதற்குக் கட்டுப் போட்டிருக்கிறாராம். அது தெரியாமல்தான் அந்த உரையாம். அதை இக்பால் நம்பினான். நான் கேட்டேன். ‘சிங்கப்பூர் விமான நிலையத்தில் தகடு அதுவும் காலில் கிழித்திருக்கிறது. வெறுங்காலிலா நடந்திருப்பார். நம்பமுடிகிறதா இக்பால்?’ ஒரு கேள்விக்குறியை விலங்குக் குறியாக்கி இக்பால் மீது எறிந்தேன். நகர்ந்தேன். அந்த சந்தேகத்தை அவமானமாக்க் கருதி அந்த மாப்பிள்ளை நாகப்பட்டிணத்திற்கே திரும்பிவிட்டார். பாவம் தன் சகோதரிகளுக்கு திருமணம் முடிக்க சிங்கப்பூர் வாழ்க்கை உதவலாம் என்று நம்பி வந்தவர் திரும்பி விட்டார். அதற்கு நான் காரணமாக இருந்துவிட்டேன். அவர் சொன்னது உண்மையாகக் கூட இருக்கலாம். எனக்குத் தெரிந்ததை நான் கற்பனையில் சொன்னேன். அந்தப் பையனின் ஆசை நிராசையாகக் காரணமான என்னை யார் தண்டிப்பது?

இன்று நான் சக்கரநாற்காலியில் என் இடது காலின் கணுக்கால் வெட்டி எடுக்கப்பட்டுவிட்டது. ஒரு காலை மூளியாக்கி வெள்ளைத்துணியால் கட்டுப்போடப்பட்டிருக்கிறது. இனி சாகும்வரை ஒன்றே முக்கால் கால்தான். சக்கர நாற்காலிதான். நடமாடுகிறேன். ஒரு நாள் என் பேத்தி ஆத்திக்கா ஓடி வந்தாள். அவள் என்னை அத்தா என்றுதான் கூப்பிடுவாள். கேட்டாள் ‘தெய்வம் நின்னுகொல்லும்னா என்ன அர்த்தம் அத்தா?’

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationஉடல்மொழியின் கலைபூசை – சிறுகதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *