தாக்க தாக்க – திரைப்பட விமர்சனம்

Spread the love

இலக்கியா தேன்மொழி

thakkaa

பெண்கள் நேர்மையானவர்கள். உழைப்பின் வழி உயர்வின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால், நிதர்சன உலகில், இப்படிப்பட்ட உயர் அர்த்தங்கள் கொண்ட பெண் இனம் வீழ்வதும், களங்கத்திற்கு ஆளாவதும், அடிமைப்படுவது, ஏமாற்றப்படுவதும், நேர்மையற்ற ஆண்களை தேர்வு செய்கையில் நிகழ்ந்து விடுகிறது.

நேர்மையான வழிகளில் பணம் ஈட்ட எத்தனையோ வழிகள் உள்ளன. அபி நயாவின் காதலனாக வரும் அரவிந்த் சிங் பொருள் ஈட்ட தேர்வு செய்யும் வழி, ஓட்டு ஒன்றுக்கு ஐந்நூறு ரூபாய் என்கிற நேர்மையற்ற நிழல் உலக வர்த்தகத்தை.

முதல் சில காட்சிகளில், அருள் தாஸ் விக்ராந்தின் தாயை பலவந்தப்படுத்தி கர்ப்பமாக்கும் காட்சி, “ஆணின் ஆணாதிக்கத்தால் தான் பெண் களங்கப்படுகிறாள் , ஆகையால் பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும்” என்று குறிப்புணர்த்துகிறது, பிற்பாடு அரவிந்த் சிங்  அபிநயாவின் வீட்டிற்கு வந்து இரட்டை அர்த்தத்தில் பேசும் வசனக்காட்சி முதல் காட்சியுடன் முரண்படுகிறது. நம் எண்ணப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டி வருகிறது.

ஆண் தனது அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காகவே குடும்பம் என்னும் அமைப்பை நிறுவுகிறான்.     பெண்ணாக வரும் அபிநயா அரவிந்த் சிங்கை தேர்வு செய்யும் வரையில், எல்லா பெண்களையும் போல் நேர்மையான , உழைப்பின் வழி உயர்வில் நம்பிக்கை கொண்டவளாக தோன்றிவிட்டு, ஓட்டு ஒன்றை ஐந்நூறு ரூபாய்க்கு விற்கும் அரவிந்த் சிங்கை தேர்வு செய்வதின் மூலம், தவறான ஆணின் பக்கம்  சேர்வதால், “கட்டற்ற சுதந்திரம் மட்டுமே பெண்ணுக்கான ஒரே தீர்வு அல்ல” என்று தோன்ற வைக்கிறார்.

இன்னொரு விதமாக பார்க்கின், அபி நயாவை கடத்தி விற்க முனைகிறான் அபி நயாவின் தாயின் தம்பி. ஆக, அபி நயா என்கிற பெண்ணுக்கு கொடுமை செய்வது யாரெனில் அவளுக்கு நன்கு பரிச்சயமான, உறவினன் என்றாகிறது. ஆக, அபி நயா என்கிற பெண்ணுக்கு கொடுமையை நிகழ்த்தும் ஆணை, “என்ன செய்கிறான், எவ்வாறு பொருள் ஈட்டுகிறான், அவனது தர்க்க நியாயங்கள் என்னென்ன?” என்கிற எந்த கேள்வியையும் எழுப்பாமல், தங்களுக்கிடையில் அங்கீகரிப்பதன் மூலம், அபி நயாவின் தாய் என்கிற இன்னொரு பெண் தான் அபி நயா கடத்தப்படுவதற்கு காரணமாகிறாள் என்று சொன்னால் அது மிகையில்லை.

நிர்பயா கேஸில் குற்றம்சாட்டப்பட்ட முதல் குற்றவாளி ராம்சிங்கிற்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறார்கள். காரைக்கால் வினோதினி, டிசிஎஸ் வைஸ்யா, பூனேவின் நயனா பூஜாரி. இவர்களையெல்லாம் மரணத்தை நோக்கி தள்ளிய ஆண்கள் அனைவருக்கும் குடும்பம், உறவுகள் இருக்கிறார்கள்.

ஒரு பெண் தொலைக்காட்சி இயக்குனர் தனது கணவரை விவாகரத்து செய்கிறார். பின் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த , ஒரு மகனை பெற்ற ஒருவரை மறுமணம் செய்கிறார். அவரிடம் தனது சொந்த மகளை தங்கை என்று அறிமுகம் செய்கிறார். இரண்டாவது கணவரின் மகன் தனது புதிய சித்தியின் தங்கையை காதலிக்கிறார். இதை அறிந்த இயக்குனர், தனது டிரைவரை வைத்து பெற்ற மகளை கொலை செய்கிறார். இது ஏதோ உலகின் வேறொரு மூலையில் நடந்த விவகாரம் அல்ல. ஷீனா போரா கொலை வழக்கு உங்களுக்கு நினைவிருக்கலாம்.

நிஜ உலகின் பிரச்சனையும் அதுதான். நாடு முழுவதும் கட்டற்ற சுதந்திரம் மட்டுமே பெண் விடுதலைக்கு ஒரே தீர்வாக முன் மொழியப்படுகிறது. அது பெண் விடுதலைக்கான‌ ஆரோக்கியமான, அறிவுப்பூர்வமான‌ ஒரே ஒரு தீர்வு அல்ல‌.இதனால் ஒரு சமூகம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

1. ஒரு பக்கம் பெண் சுதந்திரத்திற்கென உரத்து முழங்கிவிட்டு, இன்னொரு பக்கம் தவறான ஆண்களை தேர்வு செய்வதன் மூலமாக கட்டற்ற சுதந்திரம், ஒரு முறையான தீர்வல்ல என்கிற முரண்பாட்டையும் ஒரு சேர இச்சமூகத்தின் வழி நாம் காணமுடியும். ஆக ஒரு தீர்வை முன்மொழிகையிலேயே, அதிலுள்ள முரணையும் நாம் ஒரு சேர காண்கிறோம். இதனால், பெண் அடிமைத்தளையையும், பெண் சுதந்திரத்தையும் தெளிவாக வரையறுக்க முடியாத நிலை உருவாகிறது.

2. என்றாலும் இந்திய குடும்ப நலச்சட்டங்கள் இந்த முரண்களை கண்டும் காணாமல் பாராமுகமாக இருப்பதும், அனேகம் இடங்களில் பெண்கள் பக்கமாகவே சாய்ந்திருப்பதும் கண்கூடாகத்தெரிகிறது. இதனால் குழப்பங்களே மிஞ்சுகின்றன. வாசகர்களுக்கு 498ஏ மிஸ்யூஸ் குறித்து ஓரளவுக்கு புரிதல் இருக்குமென்று நம்புகிறேன். இல்லாதவர்கள் ‘498A misuse’ என்று இணையத்தில் தேடிப்பார்க்கவும்.

3. தோல்வியடையும் தீர்வுகள் நாளடைவில் மதிப்பிழக்கும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆக முதல் கட்ட தீர்வுகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு பயணிக்க வேண்டுமானால், இப்படிப்பட்ட முரண்கள் களையப்படவேண்டும்.

சாலையில் நீங்கள் தினம் தினம் பார்க்கலாம். மணலை ஏற்றிக்கொண்டு செல்லும் மாட்டு வண்டியை. அதை ஓட்டிச்செல்பவன் ஈட்டும் பணம் யாருடைய உழைப்பு? அவனுடையதா? மாட்டுடையதா?

அடிதடி, அராஜகத்தை வேலைவாய்ப்பாக கொள்ளும் சமூகத்தை கட்டுக்குள் கொண்டுவர அடிதடி, அராஜகம் பயன்படாது என்பதை மகாபாரதத்தை இதிகாசமாக கொண்ட நாட்டுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை. அதற்கு தீர்வாக பாவம் – புண்ணியம், சுவர்க்கம் – நரகம்  போன்ற இருமைகளை உருவாக்கிசெயல்படுத்தியது இக்காலத்திற்கு உதவாது.

இதற்கான தீர்வுகள் குறித்து இந்தப் படம் எதையும் முன்வைக்கவில்லை.

முரண்பட்ட கதாபாத்திரங்கள் கதையை பலமிழக்கச் செய்கின்றன. விக்ராந்திற்கு காதலி இருக்கிறாள்.ஆனால் டூயட் இல்லை. மாறாக அர்விந்த் சிங் – அபிநயாவுக்கு ஒரு பாடல். படத்தின் நாயகன் யார் என்கிற கேள்வி எழுகிறது.

– இலக்கியா தேன்மொழி (ilakya.thenmozhi@gmail.com)