தாய்லாந்தின் தாம் லுவாங் குகையில்

ஜூன் 23, 2018 அன்று சிக்கிக்கொண்ட காற்பந்துக்குழு ஜூலை 10ல் மீட்கப்பட்டது. உலகமே துக்கத்தில் மூழ்கிய ஒரு சோக வரலாறு இங்கே கவிதையாக

தாம் லுவாங் குகை

பதின்மூன்று பேர் குழுவில்
ஒரு பாலகனுக்குப் பிறந்தநாள்

‘காற்பந்துலகில்
உன் கொடி ஒருநாள்
உயரே பறக்கும்
வா மகனே வா
உன் பிறந்தநாள் இன்று
எனக்குள் விடியட்டும்’

அழைத்தது குகை
புகுந்தது குழு
திரும்பவில்லை

விட்டுச்சென்ற மிதிவண்டிகள்
கண்ணீர் விட்டுக்
கதையைச் சொல்லின
ஊர் மக்கள் திரண்டனர்
உறைந்தனர்

குழுவைக் காண
மழையும் புகுந்ததால்
குகைக்குள்ளேயே
குட்டிக்கடல்
சூரியனுக்கோ
அனுமதியில்லை
பாதைகள் கடல்
புதைகுழி இருள்
உயிர்வாயு சீக்கிரமே
உயிரை விடலாம்
பதினாறு நாட்கள்
மயிரிழையில் உயிர்
சீரணங்களற்ற
சித்ரவதை

குகை வடக்கானது
உலகம் காந்தமானது
முத்துக்களை மீட்க
முக்குளிப்போர் குவிந்தனர்
உயிர் வாயுக்கூம்பில்
தன் உயிரை ஊதிவிட்டு
மாண்டுபோனார்
வீரர் ‘குணான்’
ராட்சத பம்புகள்
நீரைத் துப்பின
ஏக்கர் நிலங்கள்
ஏரிக்காடாயின
வீடுகளெல்லாம் சமையற்
கூடங்களாயின
‘செய் அல்லது
செத்து மடி’
சொற்கள் இவைகளே
சூத்திரமாயின

பதினேழாம் நாள்
மீட்புப் படையின்
ஒளிக்கற்றை
ஒரு பாலகனின்
முகத்தில் ஒளிர்ந்தது

‘வந்துகொண்டிருக்கிறோம்
நலம்தானே?’

‘நாங்கள் நலம்
நீங்கள் நலமா?’

பாலகர் குரலில்
உலகம் விழித்தது
வருந்திய கண்களில்
ஆனந்தம் குதித்தது
இன்று எல்லாரும் நலம்

நான் குகையிடம் கேட்டேன்
‘பிஞ்சுகளோடு
பகை ஏன் குகையே’

குகை சொன்னது

‘ஓர் உண்மையைச் சொல்ல
உரசிப் பார்த்தேன்’

‘என்ன உண்மை?’

‘எல்லா மக்களும்
ஒரு தாய் மக்களே’

தாம்லுவாங் குகை இன்று
தாய் மடியானது
தாய்லாந்துக்கு

அமீதாம்மாள்

Series Navigation120 பீட்ஸ் பெர் மினிட் – திரைப்பட விமர்சனம்பூதக்கோள் வியாழனைச் சுற்றிவரும் புதிய 12 வெளிப்புறத் துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன