தினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!

ஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும் வாழ்க்கைப் பொழுதும் கழிந்து கொண்டிருக்கிறது. யக்கோவ் குப்பேத்தாக்கோவ் (அக்கா குப்பை எடுத்து வாங்க அக்கா) என்று கூவும் பெண்மணியின் குரலோடு விடிந்தது இன்றைய இரவும்.

ஒருவழியாய் சீரான பாதையை நோக்கிப் பயணம் செய்கிறேன் என்று எண்ணுகிறேன்.

இது இலக்கை நோக்கிய பயணம். மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சி! அதுவே என் இதயத் துடிப்பு நிறுவகப் பயிற்சிக் கூடம். எவ்வளவு யோசித்தும் அவர்களுக்கு ஏற்ற ஏதுவான தொழில் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. ஆனாலும் என் முயற்சி நிற்கப் போவதில்லை. அது தொடரும்.

கம்புயூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி தருவதோடு புத்தக விற்பனையில், இப்போது இறங்கி யிருக்கிறோம். எழுபேர் பயனடைந்து வருகிறார். அநேகர் இந்த தொழில் வேண்டாம் என்று அச்சுறுத்தியபோதும், சரி இதையும்தான் செய்வோமே என்றொரு துணிச்சல். குச்சி ஐசே தயாரித்தாகிவிட்டது. இதையும் செய்துப் பார்ப்போம் என்று, இன்றைய நாள் பொழுது முழுவதும் ஹார்ட்பீட் அறக்கட்டளையின் செங்கம் கிளை அலுவலகத்திலேயே கழிந்தது.

புத்தகம் அடுக்க ஒத்தாசை செய்த தம்பி குழந்தைகளை மெச்சிக்கொள்ளத் தோன்றியது.
jij1
வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப்பூச்சி
சட்ட தச்சது யாரு ?
உனக்கு சட்ட தச்சது யாரு ?

வண்ண வண்ணம்மா வண்ண வண்ணம்மா
பொட்டு வச்சது யாரு ?
உனக்கு பொட்டு வச்சது யாரு ?

மெதுவாய் ஆரம்பித்து உச்சஸ்தாயியில் குழந்தைகள் இயல்பாய் பாடியது மகிழ்ச்சியாய் இருந்தது. ஜன்னலரோலத்தில் ஆரஞ்சு வண்ண பட்டாம் பூச்சி பறந்ததில் உதயமான பாட்டை எண்ணி மகிழ்ந்துக்கொண்டேன்.

நானும் குழந்தையாகவே இருந்திருக்கலாம் எந்த கவலையும் இல்லாமல். சாத்தியப் படாதவைகளுக்கே மனம் ஏங்குகிறது.

இவ்வலுவலகம் உருவாக பண்புடன் குழுமத்தின் பங்கு பெருமளவில் இருப்பதால் இந்த பதிவின் மூலம் பண்புடன் குழுமத்திற்கு என் மனம் மார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். ஹார்ட் பீட் அறக்கட்டளையின் முன்னேற்றத்தில் புத்தகங்கள் விற்பனைக்கு அனுப்பி ஆர்வமாய், கவனமாய் இருக்கும் எழுத்தாளர் உயர்திரு. வையவன் அவர்களையும் இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

jij2
துவண்ட போது ஆறுதலாய் இருந்த நண்பர்களையும் இவ்விடத்தில் நினைவு கூறாமல் இருக்க இயலவில்லை.

ஹார்ட்பீட் சேவை நிறுவனம் மூவகைச் செயல்பாடுகளை கையில் எடுத்திருக்கிறது. புத்தக விற்பனை மற்றும் பதிப்பு, தையல், மற்றும் கணினி கல்வி, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி.

தையலில் முதல் கட்டமாக பெண்கள் தலையில் அணியும் பேண்ட் [Band] தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறோம்.

இன்றைய பொழுது இனிதாய் இவ்வலுவலகத்தில் கடந்தது.

++++++++++++++++++++++

Series Navigationகண்டெடுத்த மோதிரம்ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எழுதிய ‘ கவிதையும் என் பார்வையும் ‘ —– ஒரு பார்வை