தி பேர்ட் கேஜ்

அழகர்சாமி சக்திவேல் 

திரைப்பட விமர்சனம் – 

பெண்ணுடையாளன் (drag queen) என்ற, பெண்ணின் உடையணிந்து வந்து, நிகழ்ச்சிகள் நடத்தும் ஆண்கள், தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்றாலும், மேலைநாடுகள், இதுபோன்ற பெண்ணுடையாளன்களுக்கு, கொடுக்கும் ஒரு பெரிய வரவேற்பு, தமிழ்ப் பண்பாட்டில், அவ்வளவு இல்லை என்றே, நான் சொல்லுவேன். அந்தக் காலங்களில், தமிழ் நாடக மேடைகளிலும், தமிழ்த் தெருக்கூத்துக்களிலும், பெண் வேடம் இட்டு நடிப்பதற்கு, தமிழ்ப்பெண்கள், அவ்வளவு முன் வராத காரணத்தால், நல்லதங்காள் போன்ற நாடகங்களில், பெண் வேடம் இட்டு, சில ஆண்கள் நடித்து இருக்கிறார்கள் என்பது என்னவோ உண்மைதான். ஏன் இப்போதும் கூட, சிற்சில தமிழ் மேடைகளில், சில ஆண்கள், பெண் வேடமிட்டு நடிக்கிற, சில நகைச்சுவைக் காட்சிகளை, நாம், பார்க்கிறோம் என்பதும் உண்மைதான். ஆனால், இவை போன்ற அனைத்தையும், மற்ற உலக நாடுகளில் நடிக்கப்படுகிற, பெண்ணுடையாளன் (drag queen) நிகழ்ச்சிகளோடு, நாம் ஒப்பிட முடியாது. உண்மையைச் சொன்னால், பெண்ணுடையாளன் (drag queen) ஆக நடிப்பது என்பது, ஒரு கலை. இந்தக்கலையில், பெண் வேடமிடும் ஆண்கள், கிட்டத்தட்ட, ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம், சற்றே மிகைப்படுத்தப்பட்ட பெண்ணாகவே மாறி, ஒரு முழுநீள நகைச்சுவையை, மேடைகளில் வழங்கி, பார்வையாளர்களைக் கவர்ந்து ஆகவேண்டும். இந்தியாவைப் பொறுத்த வரை, அதன் வடக்கு நகரங்களில், இது போன்ற பெண்ணுடையாளர்கள் சிலர் இருந்தபோதும், இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை, மேலை நாடுகளில் கிடைக்கும் அபரிமிதமான வரவேற்போடு, நாம் ஒப்பிடமுடியாது. தி பேர்ட் கேஜ் என்ற இந்தத் திரைப்படத்தில் வரும், ஒரு கதாநாயகன், ஒரு பெண்ணுடையாளன் ஆக வரும், ஆண் என்பதால், இந்தக் கட்டுரையில், பெண்ணுடையாளர்கள் குறித்துப் பேசுவது, அவசியம் ஆகிறது. 

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில்தான், பெண்ணுடையாளன் (drag queen) என்ற இந்தக் கலை, ஒரு குறிப்பிட்ட வடிவம் பெற்றது என, சமூக வரலாறு நமக்குச் சொல்கிறது. ஆரம்பக் காலங்களில், இந்தக் கலை, சட்டத்திற்குப் புறம்பான ஒன்று என்று, வரையறுக்கப்பட்டதால், இந்தக் கலையைப் போற்றி வளர்த்த, ஆரம்பக்கட்ட ஆண்கள், பல்வேறு வகை அவமானங்களையும், தண்டனைகளையும், அந்தந்த நாடுகளில், அனுபவிக்க வேண்டியதாயிற்று. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, மேலை நாடுகள், ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்க ஆரம்பித்தபோது, பெண்ணுடையாளன் கலையும், அதற்கென ஒரு தனி வரவேற்பைப் பெற ஆரம்பித்தது. இந்தக் பெண்ணுடையாளன் கலை சார்ந்த, பல இரவு நேர கேளிக்கை விடுதிகள், மேலைநாடுகளில், பல்வேறு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது. ரூ பால் போன்ற, உலகப் புகழ் பெற்ற பெண்ணுடையாளன் கலைஞர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கின்றன என்பது கண்கூடு. சிங்கப்பூரிலும் கூட, தமிழரான, திருவாளர் குமார், பெண்ணுடையாளனாக வந்து நடத்தும் மேடை நிகழ்ச்சி, உலகத்தரம் வாய்ந்த ஒன்று ஆகும். இந்திய நாட்டைப் பொறுத்த வரை, ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்படும் வரை, இந்தக் கலைக்கு, பரவலான ஆதரவு கிடைக்கவில்லை எனினும், ஓரினச்சேர்க்கை எதிர்ப்புச் சட்டம், செக்சன் 377-அ பிரிவு, நீக்கபட்ட பிறகு, மும்பை, தில்லி, பெங்களூர் போன்ற மாபெரும் நகரங்களில், இந்தப் பெண்ணுடையாளன் கலை, தற்போது பெரும் வரவேற்பு பெற ஆரம்பித்து இருக்கிறது. 

 

ஒரு சிறந்த பெண்ணுடையாளனுக்கு, ஒரு பெண் ஆக மாறி நடிப்பது, எனபது மட்டுமே முக்கியம் இல்லை. மாறாய், ஒரு மிகைப்படுத்தப்பட்ட பெண்ணைப் போன்ற ஒப்பனை, அதற்கேற்ற வண்ண வண்ண ஆடைகள் அணிதல், பெண் ஆக மாறி நடிக்கும்போது தேவைப்படும், நேரத்திற்கேற்பப் பேசும் சமயோசித நகைச்சுவைத் திறமை, பெண் போன்று நன்கு ஆடும் திறமை, நன்கு பாடும் திறமை, இப்படி பல திறமைகள், ஒரு சேரப் பெற்றவனே, ஒரு திறமையான பெண்ணுடையாளன் ஆக, மிளிர முடியும். அதற்கு, நிறையப் பயிற்சிகளும் தேவைப்படுகிறது. 

 

அப்படி பெண்ணுடையாளன் ஆக வாழும் ஆண்களுக்கு, ஒரு முழுமையான ஆண் போன்ற, நடை உடை பாவனைகளைக் கொண்டு வருவதும், அவ்வளவு எளிதான ஒன்று இல்லை. பெண்களைப் போல இடையை, இடையை ஒடித்து நடக்கும், இது போன்ற பெண்ணுடையாளன், ஒரு உண்மையான ஆண் ஆக நடந்து பழக முயற்சி செய்தால், அது ஒரு பெரிய நகைச்சுவை ஆகவே அமைந்து போகும். அப்படிப்பட்ட ஒரு நகைச்சுவையின் கலவையே, தி பேர்ட் கேஜ் என்ற இந்தப் படத்தின் கதைக்கரு ஆகும். 

 

பெண்ணுடையாளன் ஆக வருபவர்களில், பெரும்பாலோர், ஆண்-ஆண் ஓரினச் சேர்க்கையை விரும்பி வாழும் ஆண்கள் ஆகவே இருக்கிறார்கள். இந்தப் படத்தில் வரும் கதாநாயகன் ஆல்பர்ட்டும், அது போன்ற ஒரு ஆண்-ஆண் விரும்பிதான். சரி, இனி படத்திற்கு வருவோம். 

 

1996-இல் வெளிவந்து, சக்கைப்போடு போட்ட இந்தப் படம், ஒரு அமெரிக்கா ஆங்கிலப்படம் என்றாலும், இந்தப் படம், 1978-இல் வெளிவந்த லா கேஜ் ஆக்ஸ் பால்ஸ் என்ற பிரெஞ்சு-இத்தாலியப் படத்தின், மறு ஆக்கப் படம் ஆகும். அகாடமி விருது, கோல்டன் குளோப் விருது போன்ற பல உலக விருதுகளுக்கு, பரிந்துரைக்கப்பட்ட இந்தத் திரைப்படம், பண வசூலிலும், வெற்றிக்கொடி நாட்டிய ஒரு படம், என்று நாம் புகழ்ந்தால், அது மிகை ஆகாது. சரி, இனி கதைக்கு வருவோம். 

 

அர்மாந்து கோல்டு என்ற, இப்படத்தின் முதல் கதாநாயகன், பறவைக் கூண்டு (bird cage) என்ற, இரவு நேர கேளிக்கை விடுதியின் முதலாளியாய் இருப்பவர். அர்மாந்து கோல்டு என்ற கட்டுடல் கொண்ட அந்த முதலாளி, ஆண் பெண் என இருவரோடும், உடலுறவு கொள்ளும் பழக்கம் உள்ளவர். ஆரம்பத்தில், காத்தரின் என்ற பெண் மூலம், சந்தர்ப்பவசத்தால், ஒரு ஆண் பிள்ளைக்குத் தந்தை ஆகும், அர்மாந்து கோல்டு, அதன் பிறகு, அவளிடம் இருந்து பிரிந்து, மியாமி கடற்கரையில், ஒரு ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கையாளராக, தனது வாழ்க்கையைத் தொடருகிறார். இந்தப் படத்தின், ஆல்பர்ட் என்ற பெயரில் வரும், இரண்டாவது கதாநாயகன், ஒரு பெண்மை ததும்பும் ஆண் ஆவார். அர்மாந்து கோல்டு நடத்தும், அந்த இரவு நேர கேளிக்கை விடுதியில், பெண்ணுடையாளன் ஆக வந்து, பாட்டுப் பாடி, நடனம் ஆடும், ஆல்பர்ட்டை, தனது வாழ்க்கைத் துணையாக சேர்த்துக் கொள்கிறார், முதலாளி அர்மாந்து கோல்டு. பெற்றோர்களான, ஓரினப் பெற்றோர்கள் ஆன, இந்த ஆண்கள் இருவரும் சேர்ந்து, அர்மாந்து கோல்டுவின் ஆண் பிள்ளையான வால் கோல்டுவை, நன்கு வளர்க்கிறார்கள். ஆண்கள் இருவரும் நடத்தும் அந்த இல்லற வாழ்க்கை, நல்லபடியாகப் போகிறது. பிள்ளையும் வளர்கிறான். 

 

இப்போது மகன் வால் கோல்டுவிற்கு, கல்யாண ஆசை வருகிறது. மகனின் காதலி பார்பரா, ஒரு பழமைவாதத்தைத் தாங்கிப் பிடிக்கும், கிறித்துவக் குடும்பத்தைச் சார்ந்தவள். அவளது தந்தை கெவின், ஓரினச்சேர்க்கை போன்ற பாலியல் விசயங்களை, ஒழுக்கக்கேடு என ஏதிர்க்கும் ஒரு அமெரிக்காவின் செனட்டர் ஆவார். தனது காதலன் வால் கோல்டுவின் தந்தை, அர்மாந்து கோல்டு, ஒரு ஆண் உடலுறவை விரும்பும் ஆண் என்று தெரிந்தால், செனட்டர் அப்பா கெவின், தனது காதலுக்கு, நிச்சயம் சம்மதிக்க மாட்டார் என்று பயந்து, காதலி பார்பரா, தனது தந்தை, தாயிடம், உண்மையை மறைத்து விடுகிறார். எனினும், “வால் கோல்டுவின், தாய் தந்தை யார், அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரிந்த பின்னரே, கல்யாணத்திற்கு சம்மதிப்பேன்” என்ற, செனட்டர் அப்பாவின் நிபந்தனைக்குக் கட்டுப்படும், காதலி பார்பரா, தனது குடும்பத்துடன், காதலன் வால் கோல்டுவின் வீட்டிற்கு வருகிறார்.  

 

மகன் வால் கோல்டு, தனது காதலியின் இக்கட்டான நிலைமையை, தனது தந்தை அர்மாந்து கோல்டுவிடம் சொல்ல, பிரச்சினை அங்கே ஆரம்பிக்கிறது. பெண்மை ததும்பும் பெண்ணுடையாளன் ராபர்ட்டை, ஒரு ஆண் போல நடக்க வைக்கும் முயற்சியில் தோற்றுப் போகிறார், அர்மாந்து கோல்டு. பழமைவாத செனட்டர் குடும்பத்துக்கு அறிமுகப்படுத்த, ஒரு தாய் வேண்டும் என்பதற்காக, வால் கோல்டுவின், உண்மையான தாய் காதரினைத் தேடிப் பிடிக்கும், அர்மாந்து கோல்டு, ஒரே ஒரு நாள், வால் கோல்டுவுக்கு, தாய் ஆக நடிக்கும்படி, காதரினை வேண்டிக் கேட்டுக்கொள்கிறார். அதற்கு, காத்தரின் சம்மதித்தாலும், சம்பவ தினத்தன்று, ஒரு போக்குவரத்து நெரிசலில், மாட்டிக் கொள்கிறார் தாய் காத்தரின். நிலைமையை சமாளிக்க, தாய் வேடம் இடுகிறார், இரண்டாம் கதாநாயகன் ஆன, பெண்ணுடையாளன் ராபர்ட். அப்புறம் என்ன ஆயிற்று, மகன் வால் கோல்டுவின் காதல் வெற்றி பெற்றதா என்பதை, படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

 

ஆண்மையோ, பெண்மையோ, அவரவர் இயற்கையான சுபாவத்திற்கு ஏற்ப, வாழும் வாழ்க்கைதான், சிறந்த வாழ்க்கை, என்ற வாழ்க்கைத் தத்துவத்தை, இந்தப் படத்தின் மூலம், தெளிவாகச் சொல்ல வந்து இருக்கும், இயக்குனர் மைக் நிகொலசுக்கு, நமது மனம் நிறைந்த பாராட்டுக்கள். முழுமையான இசைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், பாடல்கள் அனைத்துமே இனிமையான பாடல்கள்தான். படத்தின் ஆரம்பத்தில் இருந்து, கடைசி வரை, நகைச்சுவை தொய்ந்து விடாமல், தமது நடிப்புத் திறமையால், கதையை நகர்த்தும், ஓரினச்சேர்க்கை கதாநாயகர்கள் ஆன, நடிகர்கள் ஜீன் ஹாக்மேன், மற்றும் நேதன் லேன் ஆகிய இருவரையுமே, நாம் பாராட்டாமல் இருந்து விட முடியாது. இரு நடிகர்களுமே, தத்தம் திறமை வாய்ந்த நடிப்புக்காய், பற்பல உலகத் திரைப்பட விருதுகளைப் பெற்றவர்கள். இவர்கள் இருவரில், பெண்ணுடையாளன் ஆக வரும், நேதன் லேன், ஒரு உண்மையான ஓரினச் சேர்க்கையாளர் ஆவார். எய்ட்ஸ் நோயால் வாழும் மக்களைக் காக்க, பற்பல சமூகத் தொண்டுகள் செய்தவர். 

 

இறுதியாக மறக்க முடியாத விசயம், படத்தில் காட்டப்படும், அந்த அழகிய மியாமி கடற்கரை. நான், ஒரே ஒருமுறை, அமெரிக்காவின், ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள, மியாமி கடற்கரைக்குச் சென்று இருக்கிறேன். அதன் அழகின் ஒரு பகுதியை, இந்தத் திரைப்படத்தில் பார்க்கும்போது, என் மனதுக்குள் தாண்டவமாடும், சில ஆனந்த நினைவுகள். 

 

அழகர்சாமி சக்திவேல் 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 250 ஆம் இதழ்அதுதான் வழி!