தேர்வு

                         ஜோதிர்லதா கிரிஜா

 

(1984 அமுதசுரபி தீபாவளி மலரில் வந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் “அதென்ன நியாயம்?” எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)

 

      ஜெயராமன் யோசித்துக் கொண்டிருந்தான். தனக்கு வரப்போகிற மனைவியைப் பற்றி, அவளுடன் தான் நடத்தப் போகிற இல்வாழ்க்கையைப் பற்றி, அவளுக்கும் தன் குடும்பத்தினருக்கும் இடையே நல்ல படியாக உறவு ஏற்படுமா என்பது பற்றி, இன்னும் எத்தனையோ விஷயங்கள் பற்றி …

      பைரவி ராகம் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். தனக்குப் பாட வரவில்லையே எனும் குறை அவனுக்கு நெஞ்சளவு உண்டு. ஆனாலும் குளிக்கும் போது, யாரும் பக்கத்தில் இல்லாத போது என்று முணுமுணுப்பாகப் பைரவி ராகப் பாட்டுகளைப் பாடிப் பார்த்துத் தனக்கு நன்றாகப் பாடவர வில்லையே என்று அவன் ஏங்குவது வழக்கம். அவனது மனக்குறையை யெல்லாம் தீர்க்க வந்தவள் மாதிரி அவனுடைய வருங்கால மனைவிதான் அந்த “லலிதே” பாட்டை என்னமாய்ப் பாடினாள்!  கேட்டுக்கொண்டு அவளை ஓர விழிகளால் பார்த்தவாறு உட்கார்ந்திருந்த நேரத்தில் தன் மனம் முழுக்க முழுக்க அவள் வசமாகிப் போனதாக உணர்ந்தான்.

       ‘வருங்கால மனைவி!’

       அவனுள் எதுவோ கழன்றார்ப்போல் திடுக்கென்றது. அவளே தன் மனைவியாகப் போகிறவள் என்று அவன் தீர்மானித்துவிட்டானா என்ன? பெரியவர்கள் பேசி முடிப்பதற்கு இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருந்தன. அவனுக்குப் பெண்ணைப் பிடித்துவிட்ட தென்னவோ உண்மைதான். ஆனால் அதை மட்டுமே வைத்து அவளே தன் மனைவி என்று தீர்மானித்து விடுகிற அளவுக்கு ஒரு திருமணத் தீர்வு என்பது அவ்வளவு இலேசானதா எனச் சட்டென்று நினைத்து மலைப்படைந்தான்.

      பெரியவர்களின் பேரங்களும், பேச்சுகளும், சந்தேகநிவர்த்திகளும் நல்ல முறையில் தீர்ந்து அவளையே மணக்க வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏக்கமாய் ஏங்கினான். பாடுவதில் மட்டுந்தானா அவள் சிறந்திருந்தாள்? பார்ப்பதற்கும் தான் விருந்தாக இருந்தாள். என்ன அழகான கண்கள்! மிகப் பெரியவை. அவற்றைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.

       “என்னடா யோசனை?” என்று அவன் அக்கா சீண்டலாய்ச் சிரித்த போது அவனுக்கு வெட்கமாய்ப் போயிற்று. தன் உள்ளத்து எண்ணங்களை முகம் காட்டிக்கொடுத்திருக்குமோ என்று சங்கடப்பட்டான். ஒரு புன்சிரிப்போடு ஒன்றும் பேசாமல் இருந்தான்.

       “பொண்ணு பிடிச்சிருக்கா?” என்று கேட்டுச் சிரித்தாள். யாருக்குத்தான் அந்தப் பெண்ணைப் பிடிக்காது என்கிற உட்கிடை அவளது சிரிப்பில் வெளிப்பட்டதாய் அவனுக்குத் தோன்றிற்று. அவன் இப்போதும் பதில் சொல்லாமல் சிரித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தான்.  டாக்சி ஓட்டுநர் ஓரக்கண்ணால் தன்னைப் பார்த்துத் தமக்குள் சிரித்துக்கொன்டது தெரிய, அவன் கூச்சம் அதிகரித்தது.

       “பேசி முடிக்கிறதுக்கு இன்னும் எம்புட்டோ இருக்கே?” என்று அவன் அம்மா இடைமறித்தாள். … அவன் சட்டென்று திரும்பி அம்மாவைப் பார்த்தான். ’இந்த அம்மாக்களே இப்படித்தான். பிள்ளையுடைய கல்யாணம்குற பேச்சு வந்தா எப்பவும் நெகடிவ் அப்ரோச்தான்’ என்று மனம் கசப்படைந்தது. முகத்து உணர்ச்சிகள் வெளியே தெரியாதிருக்கத் தெருப்பக்கம் கழுத்தைத் திருப்பிக்கொண்டான்.

       ”பொண்ணு ராஜாத்தியாட்டமா இருக்காம்மா,” என்று அவன் அக்கா பரிகிற குரலில் குறுக்கிட்ட போது, “ஏன்? நம்ம ஜெயராமனுக்கு மட்டும் என்ன குறைச்சல்?” என்று அவன் அம்மா மறுபடியும் இடைமறித்தாள்.

       “ஜெயராமனுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லைதான். அவனும்தான் ராஜாவாட்டமா இருக்கான். அதுக்குச் சொல்லல்லே. ஜோடிப்பொருத்தம் நன்னாருக்குங்கிறதுக்காகச் சொல்ல வந்தேம்மா!”

       “அது சரி. எனக்குந்தான் பொண்ணைப் பிடிச்சிருக்கு. மத்த தெல்லாம் பொருந்தி வரட்டும் … என்ன சம்பளம் இருக்கும் அவளுக்கு?”

       “ஆயிரத்துக்கு மேலேயே இருக்கும்மா.”

       இதற்குப் பிறகு யாரும் பேசவில்லை. டாக்சி ஓடிக்கொண்டிருந்தது.

       அன்று முழுவதும் ஜெயராமனுக்கு அந்தப் பெண் ரேவதியைப் பற்றிய நினைவாகவே இருந்தது. கனவில் கூட இரண்டு தரம் வந்து அவனை அலைக்கழித்தாள்.

       மறு நாள் காலை அவர்கள் வீடு எதிர்பாராத தந்தி ஒன்றால் அல்லோலகல்லோலப்பட்டது. ஜெயராமனின் மற்றொரு தமக்கையின் கணவர் இதய நோயால் திடீரென்று இறந்த செய்தியைத் தாங்கிவந்த அந்தத் தந்தி அந்தக் குடும்பத்தினரை ஒரு கலக்குக் கலக்கிவிட்டது.

      அவன் அம்மாதான் எல்லாரிலும் மிக அதிகமாய்ப் பாதிக்கப்பட்டாள். அவன் பெண் பார்க்கப் போனபோது உடன் சென்ற அக்கா சுமதி விடுமுறைக்காகக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பம்பாயிலிருந்து வந்திருந்தாள். இப்போது கைபெண் ஆகிவிட்ட அக்கா செங்கல்பட்டில் இருப்பவள். பக்கத்து வீட்டுத் தொலைப்பேசி வேலை செய்யாததால் தந்தி கொடுத்திருந்தார்கள்.

      கைம்பெண்ணாகிவிட்ட அக்காவுக்கு நான்கு குழந்தைகள். மூத்தவள் பெண். படித்துக்கொண்டிருப்பவள்.  பதினைந்து வயது. இரண்டாவதும் பெண். அவளும் படித்துக்கொண்டிருப்பவள். மூன்றாவதும் நான்காவதும் ஆன் குழந்தைகள். முறையே ஒன்பது, ஆறு வயது. அவர்களும் படித்த்க்கொண்டிருப்பவர்கள்..அவன் அத்திம்பேர் ஊதாரி. காசு சேர்க்கத் தெரியாதவர். போன ஆண்டு வந்திருந்த போதே அவன் அக்கா அவருடைய பொறுப்பின்மையைப் பற்றிப் புலம்பினாள். கடன் கூட இருப்பதாய்ச் சொல்லி அழுதாள்.

      ஜெயராமனுக்குப் பக்கென்றது.. காலையில் சாப்பிட்ட சிற்றுண்டி யெல்லாம் எங்கோ மறைந்து வயிறு காலியாகிவிட்டது போன்ற வெற்றுணர்ச்சிக்கு ஆளானான். அக்காவின் குடும்பச்சுமையை அவன் தான் தாங்கியாக வேண்டும். வேறு வழியே கிடையாது. இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்தாக வேண்டும் என்பதை நினைத்த போதே பகீர் என்றது. எல்லாரையும் படிக்கவும் வைத்தாக வேண்டும். இனிமேல் வயிறாரச் சாப்பிடக் கூட இயலாது என்பதை நினைத்துக் கலங்கிப் போனான்.

      அவனுக்குத் தன் அக்கா சொர்ணத்தின் மீது மிகுந்த அன்பு உண்டு. அவன் அம்மாவுக்கு அடுத்தபடியாக அவன் மீது பாசம் கொண்டவள். சின்ன வயதில் தனக்குத் தின்னக் கிடைத்ததை எல்லாம் ஆசையோடு அவனுக்குக் கொடுத்துவிடுவாள்.

      மாப்பிள்ளை இறந்ததைச் சொல்லிச் சொல்லி அழுத அவன் அம்மா, “என்னடா ஜெயராமா, இப்படி ஆயிடுத்து? அம்பது வயசுதானேடா இருக்கும் மாப்பிள்ளைக்கு? அதை நினைச்சா வயித்தைக் கலக்கறதே!” என்று அரற்றிய போது அவன் பதில் சொல்லாமல் கண்கலங்கினான்.

      தொடர்ந்து, “ … அந்தப் பொண்ணையே சீக்கிரம் கல்யாணம் பண்ணிண்டுட்டா நல்லது. ஆயிரம் ரூபாய்க்கு மேல சம்பளமாச்சே! உன் சுமை குறையும்,” என்று அவள் நடைமுறை ஞானத்தோடு தொடர்ந்த போது அவனுக்கு எப்படியோ இருந்தது. ரூபா, பைசா உணர்வுடன் அம்மா பேசியதில் ரேவதியின் மீது அவன் கொண்டிருந்த மயக்கத்தைக் கடந்து எரிச்சலடைந்தான்.

      உடனேயே எல்லாரும் கண்ணீரும் புலம்பலுமாகச் செங்கல்பட்டுக்குப் புறப்பட்டுப் போனார்கள். …

      இரண்டே வாரங்களில் ஜெயராமனின் வீடு ஐந்து புதிய நபர்களைத் தன்னுள் அடக்கிக்கொண்டது.  எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்கிற மலைப்பு அடிக்கடி தோன்றினாலும், ரேவதியின் முகமும் நிறமும் இடையிடையே அவன் மனக்கண் முன் தோன்றியவாறாக இருந்தன. துயரம் நிகழ்ந்துவிட்ட நிலையில் தன் திருமணப் பேச்சு அப்போதைக்கு இல்லை என்று நினைத்துக் கசப்படைந்தான். எனினும் அந்தப் பெண்ணை வேறு யாராவது அடித்துக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்டான். குடும்பத்தினருக்குத் தெரியாமல் சொல்லி அனுப்பி இப்போதைக்குத் தொங்கலில் வைத்திருக்கலாமா என்று யோசித்தான்.

      பெண்ணைப் பிடித்திருப்பது பற்றி உடனேயே அவர்களுக்குத் தெரிவிக்காமல், எழுதுகிறோம் என்று சொல்லிவிட்டு வருவானேன் என்று எரிச்சலடைந்தான். சொல்லியிருந்தால் அவர்கள் மேற்கொண்டு பேச வருவார்கள். இப்போது உள்ள நிலையில் சொல்லி அனுப்பவும் முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டான்.

      விடுப்பு முடிந்து, அவன் அலுவலகத்துக்குக் கிளம்பிப் போன அன்று காலையில் அவன் சற்றும் எதிர்பாராத அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. பேருந்தில் எக்கச்சக்கமான கூட்டம். அவளுக்குத் திருவல்லிக்கேணி வங்கியில் வேலை என்று அவனுக்குத் தெரியும். பாரீஸ் போகும் பேருந்தில், கடைசிப் பெண்கள் இருக்கையில், ஓரமாக அவள் உட்கார்ந்துகொண்டிருந்தாள். அவள் அவனைக் கவனிக்கவில்லை. அன்று விடுப்பாக இருக்கலாம். அதனால்தான் பாரீஸ் பக்கம் போகிறாள் என்று நினைத்துக்கொண்டு வைத்த விழி வாங்காமல் அவளையே பார்த்தான். ஆனால் அவளோ கையில் ஒரு பத்திரிகையைப் பிரித்து வைத்துக்கொண்டு மிக மும்முரமாய்ப் படித்துக்கொண்டிருந்தாள். அவள் தன்னைக் கவனிக்க மாட்டாளா என்று ஏங்கினான்.

      பேருந்து நின்றதும் சிலர் இறங்க, பலர் ஏறினார்கள். கையில் குழந்தையுடன் ஒரு பெண் ஏறினாள். கடைசி இருக்கையில் ஆறு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அது ஆறு பேருக்குரிய இருக்கைதான். ஆனால் அதில் இருந்த ஆறு பேரும் குண்டாக இல்லாததால், கொஞ்சம் அனுசரித்து ஆளுக்கு இரண்டு அங்குலம் வீதம் நகர்ந்து நெருங்கி உட்கார்ந்தால் அந்த  ஏழாவது கைக்குழந்தைக்காரிக்கு ஒண்டிக்கொள்ள இடம் கிடைக்கும் என்பதால், முன்னடியில் அமர்ந்திருந்தவள், ‘கொஞ்சம் நகருங்க –ஆளுக்குக் கொஞ்ச. அந்தப் பொண்ணும் உக்காரட்டும்,” என்றாள்.

      அவன் கழுத்தை நீட்டிக் கவனித்தான். சொன்னவள் அவன் அலுவலகத்தில் பணி புரியும் பத்மாதான். இப்போதுதான் அவளைப் பார்த்தான். மற்ற எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் நகர்ந்தும், கடைசியாக உட்கார்ந்திருந்த ரேவதி இம்மியும் அசையாதிருந்தாள். ‘ஒருவேளை, படிக்கிற மும்முரமோ?’ என்று நினைத்தான்.

       “ஏம்மா. உன்னைத்தான். கொஞ்சம் நகரேன்,”     

       ”இதுல ஆறு பேர்தாம்மா உக்காரலாம். ஏழாவது ஆளுக்கு இடமில்லை.”

       ஜெயராமன் திடுக்கிட்டுப் போய் அழகான உதடுகளிலிருந்து தெறித்த கண்டிப்பான சொற்களைச் செவிமடுத்தான்.

       குழந்தைக்காரி சற்றுப் பருமனாக இருந்ததால், மற்றவர்கள் நகர்ந்தும் அவளுக்குப் போதுமான இடம் கிடைக்கவில்லை. ரேவதியால் நகர்ந்து அனுசரித்திருக்க முடியும். அவள் செய்யவில்லை. அத்தோடு சட்டமும் பேசினாள்.

      கடைசியில் பத்மா எழுந்து நின்றுவிட்டாள். “கூட்டத்துல இடிபடக் கஷ்டமா இருக்கு. இல்லேன்னா நானே முதல்லயே எழுந்திருந்திருப்பேன்!” என்று பத்மா முனகியதும் கேட்டது.

      பத்மா காலி செய்த இடத்தில் கைக்குழந்தைக்காரி அமர்ந்துகொண்டாள். ரேவதி சிரிப்புடன் பத்திரிகையில் கண்களைப் பதித்தாள்.

      ஜெயராமனின் கனவு மாளிகை இடிந்தது. அம்மா குறிப்பிட்ட அவளது சம்பளத் தொகை ஞாபகத்துக்கு வர, நகைத்துக்கொண்டான். ஆறு பேருக்குரியதை ஏழு பேருக்குரியதாக்க ஒப்புக்கொள்ள மறுத்தவள் தன் குடும்பத்துக்கு அப்பால் இன்னொரு குடும்பத்தை, முக்காமல், முனகாமல், சொல்லிக்காட்டாமல் பேணிக் காப்பாளா என்கிற கேள்வி அவனுள் எழ, அவனது திடீர் மயக்கம் கலைந்து போயிற்று.

      பத்மாவுடன் அவனும் இறங்கினான். அவன் திரும்பிப் பார்த்த போது ரேவதி இன்னும் படித்துக்கொண்டிருந்தாள். அவன் ஒரு பெருமூச்சுடன் நகர்ந்தான்.

       “ஹல்லோ, பத்மா! குட் மார்னிங்!” என்றான்.

       சுமாரான அழகுள்ள பத்மாவோடு அவனுக்கு அவ்வளவாய்ப் பழக்கம் இல்லை. அதனால் என்ன? இனிப் பழகினால் போயிற்று என்று எண்ணிக்கொண்டான்.

      அவளுக்கும்தான் வங்கியில் அவனுடன் உத்தியோகம். அவளும்தான் ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறாள். அவன் அம்மா வேண்டாம் என்பாளா என்ன!

…….

Series Navigationகணக்கு