தேவயானியும் தமிழக மீனவனும்…

இந்தியப் பாராளுமன்றத்தின் வகை தொகையில்லாமல் பல கட்சி எம்பிக்கள், மந்திரிகள் எல்லாம் கொந்தளித்துப் போனார்கள்..
ஏன்..?
இந்தியத் தூதர் அவமானப்படுத்தப்பட்டார், பொதுவெளியில் கைவிலங்குப் போடப்பட்டு கூட்டிச்செல்லப்பட்டார். கேவிட்டி தேடலுக்கு உட்படுத்தப்பட்டார்.. என்று.
ராகுலும், கூகுல் பண்ணி தேவயானி பற்றிச் சரியாக பார்க்காமல், தன்னை சந்திக்க வந்த அமெரிக்க காங்கிரஸ் குழுவை சந்திக்க மறுத்தார்.
இளவரசர் செய்தாச்சு… பேரரசர் சும்மா இருப்பாரா..?
மோடி டிவீட் செய்தார், “இந்தியாவின் அசைக்க முடியா ஒத்தும நிலைப்பாட்டிற்காக தானும் சந்திக்க மறுத்ததாக.
அரவிந்த் கேஜ்ரிவால் கருத்துச் சொல்லவில்லை. ஒரு வேளை என்ன கருத்துச் சொல்ல வேண்டும் என்று கொஸ்டினர் தயார் செய்து பிரிண்டிங்கிற்கு விட்டிருக்கிறாரோ என்னமோ.
எல்லா அரசுகளில் காசு பண்ணக்கூடிய சாமர்த்தியசாலிகள் அ.கேஜ்ரிவால் அரசு வந்தால், பிரிண்டிங் ஆர்டர் எடுத்தே ஜமாய்க்கலாம்.
எப்படியோ…
விசா பிராடு செய்தார் என்று அமெரிக்க அரசத்துறை தேவயானியை கைது செய்கிறது.
உடனே, அவர் டிப்ளமாட் இம்யூனிடி உள்ளவர் என்று இந்தியா கொதிக்கிறது.
அப்படிக் கொதித்து 72 மணி நேரத்திற்குள், ஐ நா விற்கான நிர்ந்தர தூதர் பதவிக்கு அவரை மாற்றுகிறது.
ஏன்..? அப்ப தான் முழு இம்யூனிடி கிடைக்குமாம்.
முதலில், தேவயானி இருப்பது ஜி விசா அல்ல. அவர் இருப்பது ஏ விசா. அதுவும் போக , அவர் இந்தியத் தூதரகத்தில் ஒரு அதிகாரி. அவ்வளவே. தூதர் அல்ல.
உங்களில் யாராவது பிற தேசத்தில் , இந்தியத் தூதரகத்திற்கு ஏதாவது வேலை முடிக்கும் நிமித்தமாக, பாஸ்போர்ட் எக்ஸ்டென்ஷன், அட்டஸ்டேஹ்சன் வாங்க என்று போயிருக்கிறீர்களா..?
இல்லை ஃபோன் செய்திருக்கிறீர்களா..?
அந்த அனுபவத்தை பகிருங்கள்.
இந்த அதிகார வர்க்கத்தில் யோக்கியதை புரியும்.
சில பகிர்வுகள்: ஜூ.வி பின்னூட்டத்தில்
ஒன்று தெரியுமா? உலகெங்கிலும் உள்ள இந்திய தூதரகங்கள் நம்ம ஊர் தாசில்தார் ஆபிசைவிட மோசம். அங்கு வேலை செய்பவர்களின் நடைமுறைகள், ### சொல்லி மாளாது. அங்கிருக்கும் டாய்லெட் முதற்கொண்டு நம்மை நாமே மட்டப்படுத்திகொள்ள சான்றாக இருக்கும். மூச்சா வாடை உள்ளேயும் வெளியேயும் தென்றலாய் வீசும். அவசரத்திற்க்கோ அல்லது சாதாரண விஷயத்திற்க்கோ தொலைபேசியில் அழைத்தால் எந்த தூதரக ஊழியர்களும் உடனே போனை எடுக்க மாட்டார்கள். அது கூட பரவாயில்லை, மணி அடித்துகொண்டே இருக்கும், 45 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த பின்னர் ஒரு ஊழியர் போனை எடுப்பார், எடுத்து ஹலோ சொல்லிவிட்டோ அல்லது சொல்லாமலோ உடனே போனை வைத்துவிடுவார். இன்னும் மோசம், உள்ளே டோக்கன் சிஸ்டம் எல்லாம் இருந்தும் ஒரே கூச்சலும் குழப்பமாகவும், ஆளாளுக்கு கத்திக்கொண்டு நம்ம ஊர் ரஜினி பட ரிலீஸ் முதல் ஷோக்கு டிக்கெட் கவுண்டர் கூட்டம் போல் இருக்கும். தெரிந்த ஒரு வெள்ளை காரன் இந்திய தூதரகம் சென்று வந்தால் மறு நாள் எங்களிடம் பேசும் விதம் வேறு மாதிரியாய் இருக்கும், நக்கல் பொங்கும்.
எபினேஷர் ராஜாராம்
இந்திய தூதரக அலுவலர்கள் இந்தியர்களை எப்படி அவமானப்படுத்துகிறார்கள் என்பதை அனுபவித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.எனது மகன்
ஸ்விட்ட்ஜர்லாந்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு வீட்டு மனை வாங்க எனக்கு ‘ Power of Attorney ‘ கொடுத்திருந்தான்..அதில் Endorsement பெற ஸ்விஸ் தலைநகர் ‘பெர்ன்’ -ல் உள்ள இந்திய தூதரகம் சென்றிருந்தேன். அங்கு சம்பிரதாயங்களை முடித்த பின் ஒப்புதல் கேட்ட போது ஒரு பெங்காலி அலுவலர் ,தபால் தலை ஒட்டிய கவர் வாங்கி வந்து கொடுக்கச்சொல்லி ‘உங்கள் பாஸ்போர்ட்டும் ,பவர் கொடுத்த கடிதமும் தபாலில் வரும் ‘ என்று சொல்லி விரட்ட ஆரம்பித்தார்.இதற்கும் தூதரகம் யாருமில்லாமல் வெறிச்சோடித்தான் இருந்தது .ஒரு சீல் வைத்து தர வேண்டிய மிக எளிய பணி.சரிபார்க்க ஏதுமில்லை =பாஸ் போர்ட்டைத் தவிர =.. பின்னர் நான் நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட எனது சென்னை அடையாள அட்டையைக் காட்டி வாதாட ஆரம்பித்தவுடன் நல்ல வேளையாக திருச்சியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உள்ளே இருந்து
வந்து சமாதானப்படுத்தி அரை மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொடுத்தார். பின்னர Basel -இல் உள்ள நண்பர்களிடம் இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொண்ட போது ‘இந்திய தூதரங்களில் இவ்வளவு சீக்கிரத்தில் எப்படி வேலையை முடித்தீர்கள் நாங்கள் அனுபவிக்கும் கேவலங்களைச் சொல்லி மாளாது’ என்று குமுறினார்கள்.
கிருஷ்ணன்
அனுமார் வால் மாதிரி இது நீளும்.
அவரது கைதில் பழி வாங்குதல், இல்லை முறை மீறல் இருந்தால் நிச்சயம் கண்டிக்கத்தக்கது தான்.
ஆனால், இந்திய அரசும், அரசியல்வாதிகளும் நடந்து கொண்ட விதம் , புரியாத புதிர்.
அதே மாதிரி ஒரு அமெரிக்க தூதர அதிகாரியை இழுத்து வந்து அவுக்கனும் என்கிறார் முலாய்ம் சிங் யாதவ்.
ஏன்..?
ஏனென்றால், அவர் ஊரின் அரசியல் எதிரி, “தாழ்த்தப்பட்டவர் என்பதால் இந்திய அர்சு சும்மா இருக்கிறது” என்று மாயாவதி கொளுத்திப் போட்டதால்.
“அவரை மீட்டு வரமால், பார்லி வாசல் மிதிக்க மாட்டேன்” என்கிறார் சல்மான் குருஷீத்.
இவர் தான், இலங்கையில் இருக்கும் பிரச்சனை வேறு. காமன்வெல்த் மாநாட்டிற்கு போகாமல் இருந்தால் இந்தியாவிற்கு பிரச்சனை என்றார்.
இந்தியா அடித்த விட்டை மாதிரி இருக்கும் இலங்கையை கண்டு பயப்படும் சல்மான், அமெரிக்காவிற்கு சவால் விடுகிறார்.
இங்கு தான் ஏதோ இடிக்கிறது.
இந்தப் பிரச்சனையை பூதகரமாக்கி, வேறொரு கோர்ட் பிரச்சனையில் குழப்பம் பண்ண இவர்கள் முயல்கிறார்களே என்று தோன்றுகிறது.
மேலும்,
தேவயானி யார்..?
ஐ எப் எஸ் அதிகாரி.
கார்கில் வீரர்களில் அமரர்களானவர்களின் குடும்பத்திற்கு என்று போடப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்புத் திட்டத்தில் ஒரு பிளாட்டை வாங்கியவர்.
எப்படி , அந்த ஆதர்ஷ் குடியிருப்பு குழுமத்தின் தலைவராக இவரின் அப்ப இருந்ததால்.
விசாரணையில் கேட்டால் எந்தவிதமான குற்ற உணர்வும் இன்றி, தவறில்லை என்கிறார்கள்.
மனசாட்சி அற்ற இந்த முடிச்சவிக்கிகள் பின் தான் அரசியல்வாதிகள்.
ஏன்,
கோர்ட் உத்தரவில், ஆதர்ஷ் பயன்பெற்ற முறைகேட்டாளர்கள் லிஸ்டில், மகாராஷ்டிரா முதல்வர்கள், மந்திரிகள் என்று வருகிறது.
அந்தப் பாசத்திற்காக வரிந்து கட்டுகிறார்கள்.
நித்தம் இந்திய போலீஸால், ராணுவத்தால் அத்து மீறிப் புனரப்பட்ட பெண்கள் பற்றி இவர்கள் கவலைப்பட்டதுண்டா..?
வீரப்பனை பிடிக்கிறோம் என்று மானப்பங்கப்படுத்தப்பட்ட மலைசாதி பெண்கள் பற்றி இந்த பார்லியில் பேசியதுண்டா…
பல வருடங்களாக உண்ணாவிரதம் இருக்கிறாளே… அந்த மலைசாதி பெண், அவளுக்கு உங்கள் இதயத்தில் இரக்கம் வராதா..?
இந்திய அமைதிப் படையால் கற்பழிக்கப்பட்டர்கள் என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறதே அதற்கு முறையான விசாரணையுடன் விசாரிப்பு நடந்ததுண்டா..?
குற்றம் சாட்டப்பட்டவரின் கேவிட்டிச் சர்ச்சிற்கு ரணகளம் செய்யும் இந்திய அரசு, அப்பாவிகளை விசாரணை என்றும், வீரப்பனை , பிரபாகரனை தேடுகிறோம் என்று மானபங்கம் செய்து பல பெண்களை படுகுழியில் தள்ளியதற்கு அந்த பாராளுமன்றத்தில் பேச ஒரு இதயம் கூட கிடையாதா..?
ரொம்ப நல்லவன் என்று கொண்டாடப்படும், சச்சின் போன்றவர்கள் அங்கிருப்பது , என்ன கொலுவில் வைக்கப்படும் பொம்மை போன்று கம்மென்றிருக்கவா…?
இதோ தேவயானி பற்றி தினமலர் செய்தி,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி 2012ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி வரை தேவ்யானிக்கு ஆதர்ஷ் குடியிருப்பு பிளாட் மட்டுமின்றி மேலும் 10 சொத்துக்கள் உள்ளன. ஆதர்ஷ் குடியிருப்பு பிளாட்டின் மதிப்பு ரூ.90 லட்சம் ஆகும். மற்ற 7 சிறிய சொத்துக்களின் மதிப்பு ரூ.78 லட்சத்திற்கும் மேல். மேலும் 3 சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்று குறிப்பிடப்படவில்லை. ஒஷிவரா பகுதியில் மீரா ஒருங்கிணைந்த குடியிருப்பு பகுதியிலும் தேவ்யானிக்கு வீடு உள்ளது. 11 சொத்துக்களில் 5 சொத்துக்கள் மூலம் தேவ்யானிக்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.1.26 லட்சம் வருமானம் வருகிறது. இவருக்கு மகாராஷ்டிராவில் 8 சொத்துக்களும், கேரளாவின் எர்ணாகுளத்தில் 2 சொத்துக்களும், உ.பி., மாநிலம் கவுதம புத்தா நகரில் ஒரு சொத்தும் உள்ளது. மகாராஷ்டிராவில் முறையே 25, 8, 2 ஏக்கர்களில் விவசாய நிலமும், 2 வீட்டடி மனைகளும், 4 பிளாட்களும் உள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த சொத்து விபர அறிக்கையை மகாராஷ்டிர அரசு நிராகரித்துள்ளது.
மகாராஷ்ட்ராவில் விவசாயிகள் இன்றி பிறர் விவசாய நிலம் வைத்திருக்க முடியாது..
இவருக்கு பல ஏக்கர் இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு அப்பாடக்கர், விசா பேப்பரில் பிராடு செய்திருக்கிறார் என்று ஒரு அரசு சொன்னால், அவரைப் பற்றி விசாரிக்காமல் அவரை பாதுகாப்பதிலேயே குறியாக பதவி உயர்வு செய்கிறது, அரசு.
அதுவும் ஐ. நா-விற்கு.
ஐ நா என்ன குற்றவாளிகளைப் பாதுகாப்ப்பதற்கு பதவி பெறும் இடமா..?
நம்ம ஊரில் தான் கிரிமினல்கள் அரசுப் பதவியில் அமர்வார்கள். அப்ப தான் போலீஸ் கை வைக்க முடியாமல் சல்யூட் அடிப்பார்கள் என்று.
அதே சிந்தனை..
இனி, இந்திய தூதரக அதிகாரிகள் பற்றி எந்த நாட்டினருக்காவது மரியாதை வருமா..?
நவநீதம் பிள்ளை போன்றோர் இருக்கும் இடங்களில் இவர் போன்றோரும்.
இந்த மாதிரி ஆட்கள் உலக பிரச்சனையில் என்ன நல்நிலை எடுப்பார்கள்.
அதனால், இந்திய அரசு இந்த நியமனத்தை ரத்து செய்ய அனைவரும் போராட வேண்டும்.
அது விட்டு இந்திய வாலிப சனநாயக சங்கம் , சென்னை அமெரிக்கன் கன்சுலேட் முன்பு தேவயானிக்கு நடந்த கொடுமைக்கு போராடியது தான் கொடுமை. அவர்களுக்குத் தெரிந்த ஒரே செய்தி, தேவயானி தலித் என்பது மட்டுமே.
ஆனால், தேவயானி ஒரு முதலாளித்துவ, பிறர் வாய்ப்பை தட்டிப் பறிக்கும், கார்கில் விதவைகளுக்கான பயனீட்டை பிடுங்கித் தின்றவர் என்பதெல்லாம் இவருக்கு கவலையில்லை.
அமெரிக்கா முறைப்படி தனது விசாரணையைத் தொடர்ந்து , தவறு செய்திருப்பின் தண்டனை தர வேண்டும்.
இதோ தேவயானியின் ஒரு அமெரிக்க வாழ் புகைப்படம்…
image001
எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாத சிரிப்பு. கையிலே கோப்பை, அதில் இருப்பது கார்கில் விதைவைகளின் கண்ணீரன்றி வேறென்ன…
கார்கில் வீரர்களுக்கான பயனீட்டை திருடுவது என்பது அவர்களின் பிணத்தை பிரிட்ஜில் வைத்து தினமும் தின்னுவது போலாகும்.
இந்தக் கைகளில் விலங்கு மாட்டப்பட்டதென்று கொதிக்கும் அரசு, கீழுள்ள கைகளுக்கு என்ன பதில் சொல்கிறது..?

image003தமிழக மீனவர்கள்.
வலையை போட்டு இவன் என்ன
கடல் மொத்தத்தையுமா இழுக்கிறான்.
உண்ண சில மீன்களை தானே…

image005முன்பெல்லாம் இப்படித்தூக்கி வந்தால் ஊர் சனம் மொத்தமும் கும்மியடிக்கும் உற்சாகத்தால்..
இப்போதோ பிரிக்கும் வரை பேயறைந்த மௌனம் தான் –
பல சமயம் மீன்களென்றாலும்
சில சமயம் இவர்கள் தூக்கி வருவது சக மீனவனின் பிணம் என்பதால்..
image007
இந்த அழுகையின் குரல் பார்லியில் கேட்காது..
அழுபவன் அழுக்கு பிடித்தவன் என்பதால்..
அவன் கையில் கோமணம் தானே இருக்கிறது..
மதுக் கோப்யையா இருக்கிறது – கரிசனம் காட்ட…
image009
கடலுக்குள் நின்றாலும்
கத்தி நீங்கள் கோஷமிட்டாலும்
கவர்மெண்டிற்கு கேட்காது..
நித்தம் நாம் நிம்மதியாய் கண்மூடி உறங்க
நிரந்தரமாய் கண்மூடிய
காரிகில் வீரனின் தாலி அறுத்த மனைவிக்கு
தந்த வீட்டையே
அபகரிக்கும் கும்பல்..
உப்புக்கரிக்கும் உன் வாழ்விற்கு
மனம் கசிவார் என்று நினைக்கும் மடையர்களே..
நானும் பிறந்தது முதல்
உன்னை
அவன் சுட்டான்
அவன் சுட்டான்
என்று தான் கேட்டு வருகிறேன்..
ஒரு தடவை கூட
ஏன் என்று இவன் கேட்டான் என்றோ
இல்லை
உனைக் காக்க திருப்பி இவன்
சுட்டான் என்றோ கேட்டதில்லை..
தாரை வார்க்கப்பட்டது
கச்சத் தீவு மட்டுமா.?
இல்லை தமிழ் மீனவனுமா..?
கச்சத்தீவில்
வலை உணர்த்தும் உரிமையும் போனது
கேட்டால்
மீனவனின் பிணத்தை அலைகளில்
இலங்கை ராணுவம் உலர்த்துகிறது.
வடக்கத்தி மங்கைக்காய்
அமெரிக்காவிற்கு
சவால் விடும் இந்திய அரசே,
அரசியல்வாதிகளே:
எம் மீனவன் மட்டும் என்ன
ஒதுக்கப்பட்ட
கருவாடா…?

Series Navigation