தொடுவானம் 143. முறுக்கு மீசை

This entry is part 9 of 14 in the series 6 நவம்பர் 2016

டாக்டர் ஜி. ஜான்சன்

143. முறுக்கு மீசை

கல்லூரி பேருந்து எங்கள் விடுதியில் நின்றபோது நான் இறங்கவில்லை. வகுப்பு மாணவிகள் ஏன் என்று கேட்டனர். அங்கு யாரைப் பார்க்க வருகிறாய் என்று கேலி வேறு செய்தனர். நான் பதில் கூறவில்லை. புன்னகை மட்டும் செய்தேன். பெண்கள் விடுதிவரை அமர்ந்திருந்தேன்.
கல்லூரி முதல்வரின் அலுவலகம் பெண்கள் விடுதி அருகேதான் இருந்தது. பெண்கள் அனைவரும் இறங்கியபின் நான் கடைசியாக வெளியேறினேன். அவர்கள் விடுதிக்குள் நுழையும்வரை நான் காத்திருந்தேன்.பின்பு கல்லூரி முதல்வர் அலுவலகத்தினுள் புகுந்தேன். முதல்வரின் உதவியாளர் ஆர்தர் என்னை நோக்கி புன்னகைத்தார். அவர் தமிழர். எனக்கு நண்பர் போன்றவர். உள்ளே போகலாம் என்றார். முதல்வர் ஏன் என்னை அழைத்துள்ளார் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் அவர் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
கதவைத் தட்டியபடி நான் உள்ளே நுழைந்தேன். வணக்கம் கூறினேன். முதல்வர் அவருடைய இருக்கையில் அமர்ந்திருந்தார். என்னை பெயர் சொல்லி அழைத்து அமரச் சொன்னார். நுண்ணுயிரி இயல் பாடம் எப்படியுள்ளது என்று கேட்டார். ஏன் அவ்வாறு கேட்கிறார் என்று புரியாமல் நான் நன்றாக உள்ளது என்றேன். இப்போதும் அங்கிருந்துதான் வருகிறாயா என்றார். நான் ஆம் என்றேன்.
அவர் சிரித்தபடி ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டினார்.அதை வாங்கும்போது கை லேசாக நடுங்கியது.
அதை நுண்ணியிரி இயல் ஆசிரியை ( Tutor ) டாக்டர் அன்னம்மா கல்லூரி முதல்வருக்கு எழுதியிருந்தார். அது ஒரு புகார்க் கடிதம். வகுப்பில் நான் மீசையை முறுக்கிக்கொண்டு அவரையே முறைத்துப் பார்ப்பதாகவும், அதனால் அவருக்கு என்னைக் கண்டால் பயமாக இருப்பதாக எழுதியிருந்தார்! இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை! அவர் என்னிடமே இது பற்றி கேட்டிருக்கலாம். எதனால் இதைப் பெரிதுபடுத்தி கல்லூரி முதல்வருக்கு எழுதவேண்டும்? என் மீது அவ்வளவு பயமா? வகுப்பில்தான் மொத்தம் நாற்பது பேர்கள் உள்ளோமே. அவர்களில் இருபத்தி ஐந்து பெண்கள் உள்ளனரே. அவர்களில் ஒருத்திகூட என்னுடைய மீசையைக் கண்டு பயந்ததில்லை. மாறாக லலிதா, நிர்மலா போன்றவர்கள் அது அழகாக உள்ளதென்றே கூறியுள்ளனர்.
அன்னம்மா அழகான மலையாளப் பெண்தான். இளம் வயது. என்னைவிட சுமார் ஐந்து வயது மூத்தவர். இனிய குரலில் மெதுவாகப் பேசுபவர். என்னுடைய ஆசிரியை. அவர் பாடம் நடத்துகையில் நான் அவரைப் பார்த்தபடிதான் கவனமாகக் கேட்பேன். அவரும் எல்லாரையும் பார்ப்பதுபோலத்தான் என்னையும் பார்ப்பார்.
நான் அப்போது முறுக்கு மீசை வைத்திருந்தது உண்மை. அதோடு அடர்த்தியான நீண்ட கிருதாவும் வைத்திருந்தேன்.கருகருவென்று அழகாக இருக்கும். மீசையும் அடர்த்தியாக இருந்ததால் அதை முறுக்கி விடும் பழக்கம் தானாக வந்துவிட்டது. எப்போது பார்த்தாலும் இடது கை மீசையில்தான் இருக்கும். அதிலும் கவலை அல்லது பிரச்னை என்றால் சொல்லவேண்டியதில்லை. தீவிரமாக சிந்தனை செய்யும்போதும் அதே நிலைதான்.
” படித்து பார்த்தாயா? ” டாக்டர் கோஷி என்னைப் பார்த்து கேட்டார்.
” டாக்டர். இது எனக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணுகிறது. அவர் சொல்வதுபோல் எப்போதுமே கெட்ட நோக்கத்தோடு அவரை நான் பார்த்ததில்லை. இந்த மீசையை முறுக்குவது எனக்கு பழக்கமாகிவிட்டது. ” அப்போதும் மீசையை முறுக்கியபடிதான் அவரிடம் கூறினேன்.
” அதுதான் தெரிகிறதே! என்னிடம் பேசும்போதுகூடத்தான் நீ உன் மீசையை முறுக்குகிறாய். ஆனால் நான் அன்னம்மாபோல் பயந்துவிடமாட்டேன். ”
” மன்னிக்கணும் டாக்டர். இதைத்தான் பழக்கம் என்று .கூறினேன். ” கையை மீசையிலிருந்து எடுத்துவிட்டேன்.
” சரி. இனி விஷயத்துக்கு வருவோம். அன்னம்மா நீ மீசையை முறுக்கிக்கொண்டு அவரைப் பார்த்து முறைப்பதாக புகார் செய்துள்ளார். அது அப்படி இல்லை, உன் பார்வையே அப்படிதான் என்கிறாய். மீசையை முறுக்குவது உனக்கு பழக்கமாகிவிட்டது என்றும் கூறுகிறாய். இந்தப் பிரச்னைக்கு நான் ஒரு தீர்வு சொல்லியாகணும். இது பற்றி நீ ஏதும் சொல்ல விரும்புகிறாயா? ”
” நான் சொன்னதுபோல் அவரை நான் எப்போதுமே கெட்ட நோக்கத்தோடு பார்த்ததில்லை. இது உண்மை. மீசையை முறுக்குவது எனக்கு சாதாரண பழக்கமே . அவர் இதை தவறாகப் புரிந்துகொண்டார். அவர் என் ஆசிரியை டாக்டர்.” நான் அவரைப் பார்த்துச் சொன்னேன்.
” உன் விளக்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் இது அன்னம்மாவுக்கு புரியணுமே? அவர் எழுத்து பூர்வமாக உன் மீது குற்றம் சாட்டியுள்ளார். கல்லூரி முதல்வர் என்ற முறையில் நான் இதை முக்கியமாகக் கருதி தகுந்த பரிகாரம் காண வேண்டும். நீ இன்னும் இரண்டு மாதங்களில் நுண்ணுயிரி இயல் தேர்வு எழுத வேண்டும். அதுவரை அன்னம்மாவிடம்தான் பயிலவேண்டியுள்ளது. ஆகவே, உன் நலனுக்காக நான் ஒன்று சொல்கிறேன். அதைச் செய்வாயா? ” என்றவாறு என்னைத் தயங்கியபடி பார்த்தார்.
” சொல்லுங்கள் டாக்டர். ” நான் பதில் சொன்னேன்.
” பேசாமல் நீ உன்னுடைய மீசையை எடுத்துவிடு. பிரச்னை தீர்ந்துவிடும். ” என்றார்.
நான் ஒரு கணம் நிலைகுலைந்தேன். நான் ஆசையாக வளர்க்கும் என் முறுக்கு மீசையை எடுத்துவிடுவதா? இது போன்ற முறுக்கு மீசை தங்களுக்கு இல்லையே என்று பல மாணவர்கள் அதன் மீது பொறாமை கொண்டுள்ளது எனக்கு நன்றாகவே தெரியும். அதை பிரேம் குமார் பகிரங்கமாகவே என்னிடம் ஒருமுறை கூறியுள்ளது என் நினைவுக்கு வந்தது. சம்ருதி எவ்வளவோ முயன்றும் என்னைப்போல் கிருதா வளர்க்க முடியவில்லை. அதுபோன்று டேவிட் ராஜன் தலை கீழ் நின்று யோகாசனம் செய்துபார்த்தும் மீசை வளரவில்லை. இவ்வளவு அபூர்வமான என்னுடைய முறுக்கு மீசையை ஒரு பெண்ணுக்கு பயந்துகொண்டு எடுக்கவேண்டும் என்று இவர் இவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டாரே! அவர் மீது அப்போது கோபம் வரவில்லை. அவர் கல்லூரி முதல்வர்! கோபப்பட்டால் எனக்குதான் இழப்பு உண்டாகும். இருந்தாலும் என்னுடைய எதிர்ப்பை நான் பக்குவமாக அவரிடம் எடுத்துக் கூறினேன்.
” டாக்டர், நான் ஒரு தமிழன். மீசையை வீரத்தின் அறிகுறியாக நாங்கள் கருதுகிறோம். அதனால் இதை என்னால் எடுக்க முடியாது. நான் செய்யாத ஒரு குற்றத்திற்கு தண்டனைதான் தரவேண்டும் என்று எண்ணினால் வேறு ஏதாவது தாருங்கள். மீசையை மட்டும் எடுக்கச் சொல்லாதீர்கள். ” துணிவுடன் சொல்லிவிட்டேன்.
” இது தண்டனை இல்லை. சமரசம். மீசை இல்லாமல் நீ வகுப்புக்குப் போனால் அன்னம்மா உன்னைக் கண்டு பயப்படமாட்டார் அல்லவா? ” இது அவரின் மறுமொழி.
” நான் அவரைத் தவறாகப் பார்க்கவில்லை என்றுதான் சொல்கிறேனே? அதை அவரிடம் சொல்லி சமாதானம் செய்யலாமே? ”
” அவர் அதற்கு சரி என்று சொல்வார் என்று எண்ணுகிறாயா? ”
” என்னுடைய பார்வையே சரியில்லை என்று சொன்னால் நான் என்ன செய்வது? முகமூடி அணிந்துகொண்டு வகுப்புக்குச் செல்லவா? ”
” உன் வாக்குவாதம் எனக்குப் புரிகிறது. ஆனால் நான் முதல்வர் என்ற முறையில் அவரையும் சமாதானப் படுத்த வேண்டியுள்ளது. ஆகவே நீ மீசையை எடுத்தே ஆகவேண்டும். அப்படி உன் வீரத் தமிழ் நெஞ்சம் அதற்கு இடம் கொடுக்கவில்லையென்றால், எனக்கும் வேறு வழி தெரியவில்லை. உன்னை வருகிற நுண்ணியிரி இயல் தேர்விலிருந்து நிறுத்தி வைக்கப்போகிறேன். ”
அது கேட்டு என் வீர வசனமெல்லால் பறந்துபோனது. அப்படி என்னை நிறுத்தினால் நான் அடுத்த தேர்வை ஆறு மாதங்கள் கழித்துதான் எழுதவேண்டும். படித்ததையே மீண்டும் .படிக்க வேண்டும். அதோடு நுண்ணியிரி இயல் பாடம் கொஞ்சம் சிரமமானது. ஏராளமான நோய்க் கிருமிகளைப் பயிலவேண்டும். அவற்றின் ஒவ்வொன்றுக்கும் சில தனிப்பட்ட தன்மைகளும் உள்ளன.அவற்றையெல்லாம் குழப்பமில்லாமல் மனதில் வைத்திருக்கவேண்டும். தற்போது ஓரளவு சிறப்பாக தேர்வுக்கு தயார் செய்துள்ளேன். இவற்றை இப்போதே தேர்வில் எழுதிவிடுவது நல்லது. இல்லையேல் மறந்துபோக நேரிடும்.
” டாக்டர். ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இது கடுமையான தண்டனை. தயவு கூர்ந்து வேறு எதாவது சொல்லுங்கள் ” .வேறு வழியின்றி ..மன்றாடினேன்.
அவர் கண்களை மூடி கொஞ்ச நேரம் யோசித்தார்.
” உனக்கு மீசையும் வேண்டும். தேர்வும் வேண்டும். ஆனால் அன்னம்மாவுக்கும் நான் சமாதானம் சொல்லியாகவேண்டும். இந்த இக்கட்டான நிலையில் எனக்குத் தெரியும் ஒரே வழி இதுதான். மீசை வைத்துள்ள தமிழன் ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்கவேண்டாம். ஆனால் அந்த பெண்ணிடம் கூடுதல் வகுப்பு பயிலலாம். ஆம். உனக்கு ஒரு வாரம் நுண்ணியிரி இயலில் கூடுதல் வகுப்பு. தினமும் நீ அன்னம்மாவிடம் மாலை ஐந்து முதல் ஆறு வரை உங்கள் வகுப்பறையில் தனியாக இருந்து இதை நிறைவேற்றவேண்டும். இதில் அன்னம்மாவும் திருப்தியாவார் என்று நினைக்கிறேன். ” என்றார்.
வகுப்பறையில் அன்னம்மாவுடன் ஒரு மணி நேரம் தனியாகவா? அவருக்கு முன்பே என்னைக் கண்டால் பயமாயிற்றே? இதற்கு அவர் சம்மதிப்பாரா? எனக்கு இது புரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காகவே முதல்வர் இப்படித் தீர்ப்பு கூறினார் என்று கருதினேன். இது பரவாயில்லை என்றே தோன்றியது. சக மாணவர்கள் ஏளனம் செய்தால் பரவாயில்லை. எப்படியாவது சமாளித்துவிடலாம்.
நான் இதற்கு சம்மதித்தேன். அவர் கை குலுக்கி வாழ்த்து கூறினார். நான் விடை பெற்றேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஇது பறவைகளின் காலம்சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *