நடு வீட்டுப் பண்ணை

author
1
4 minutes, 33 seconds Read
This entry is part 13 of 13 in the series 29 மார்ச் 2020

கண்ணன்          

நடு வீட்டுப் பண்ணையும் , நாதன் பண்ணையும் பால்ய கால நண்பர்கள். ஊரில் பண்ணையாரை சுருக்கமாக பண்ணை என்று அழைப்பதே வழக்கம்.

நாதன் பண்ணை அறைக்குள் இருந்து “பண்ண” சாப்பாடு வச்சிட்டேன் -னு சொன்ன குரலோடு வேலைக்காரன் மாரிமுத்து வெளியேறினான்.

பண்ணையாரை செல்லமாக “பண்ண” என்று அழைக்கும் பல தைரியசாலிகளுக்குள் வேலைக்காரன் மாரிமுத்துவும் ஒருவன். அந்த தைரியத்திற்கு காரணம் உண்டு.

             மேஜையின் மீதிருந்த சாப்பாட்டுச் சட்டியைத் திறந்து அன்றைய மெனுவை பார்த்த நாதன் பண்ணைக்கு ஆச்சர்யம் ஏதும் இல்லை. அந்த உணவின் மீது சலனமற்ற பார்வை பண்ணைக்கு. ஒரு யோகியின் பார்வையைப் போல பண்ணையின் பார்வை உணவின் மீது பற்றற்று பதிந்திருந்தது.

         கனிந்து தொங்கும் பலாவையும், சிறு மூங்கில் குருத்தையும், காட்டுக் கரும்பையும், புது மழையில் முளைத்தெழுந்த பசும்  புற்களையும், கனிகளையும், காய்களையும்  உண்டு கொண்டு காட்டினிலே தவழ்ந்து வாழும் யானை,  கோயில் யானை ஆன பிறகு தன் உணவாகிய தென்னை ஓலையைப் பார்க்கும் போது என்ன எண்ணம் உருவாகுமோ, அதே போன்ற எண்ணம்தான் அன்று யோகியின் பார்வை போல பண்ணையைப் பார்க்க வைத்துக் கொண்டிருந்தது.

          கம்பீரமாக யானை போன்று தோற்றம் கொண்ட பண்ணை, தோள் பட்டை வரை தொங்கும், எண்ணெய் கொண்டு நீவியெடுத்த நீண்ட தலை முடியுடன், வேஷ்டி சட்டை சகிதமாக தினசரி காட்சியளிப்பார். மாநிறத்துடன் பட்டை போட்ட நெற்றியும், கூரிய  மூக்கும், பண்ணையை நாதஸ்வர வித்வானோ என எண்ணத் தூண்டும்.

                          சிலர் மட்டுமே அழைத்து வந்த “பண்ண” எனும் பட்டப் பெயர்  இன்று பலரால்…………………. ஏன் வேலைக்காரன் மாரிமுத்துவால் கூட அழைக்க முடிகிறதென்றால்…………………?

                         ஆம்………………… ” பண்ண” என்ற அடைமொழி பெயரில் மட்டுமே பற்றிக் கொண்டிருந்தது.

         சொத்திழந்த பண்ணை, தொடர்ச்சியாக சொந்தமிழந்த பண்ணை ஆனார்.  வாழ்வின் மீதிருந்த பற்று நாதன் பண்ணையை நாதனாக வாழ  வைத்துக் கொண்டிருந்தது. இப்போது நாதன் பண்ணை ஒரு கம்பெனியில் கண்காணிப்பாளர். ஆனாலும் அந்த அடைமொழி “பண்ண” யை இந்த சமூகம் விட்டுவிடவில்லை.

                     ஆம், கம்பெனி முதலாளி கூட “பண்ண” என்றே அழைப்பார். வேலை முடிந்ததும் பண்ணைக்கு பொழுது போக்கே , மாரிமுத்து-வை அமர வைத்து, தன் கதையைச் சொல்வதுதான்.

                     கேட்டுக் கேட்டு சலித்து விட்டதால், இப்போதெல்லாம் மாரிமுத்துவின் முகம் நவரசம் அல்ல ஒரு ரசம் கூட வெளிப்படுத்துவதில்லை. ஆனாலும் வேறு திசையில் பார்வையை வைத்துக் கொண்டு, புகையை ஆழ்ந்து இழுத்துக் கொண்டிருப்பான். தலை மட்டும் ‘உம்’ கொட்டுவது போல அவ்வப்போது அசைந்து கொடுக்கும்.

                          அன்று மாரிமுத்துவிடம் புதுக்கதை ஒன்றை சொல்ல ஆரம்பித்தார் நாதன் பண்ணை.

எலே மாரி,

ஒரு நாளு……….

 நா திருந்தி வாழனும்னு முடிவு பண்ணிட்டு எம் பொண்டாட்டிய பார்க்க அவ அம்ம வீட்டுக்குப் போனென்.

            ஒரு முடிவோடதான் போனென். ஏ புள்ள கூழோ கஞ்சியோ நா சம்பாதிச்சு கொண்டாரேன். புள்ளய தூக்கிட்டு கூட வா-ன்னு உறுதியாச் சொல்லி புடனும்னு மனசுல நெனச்சுக்கிட்டு போயிட்டேன்.

           சரி…………. பழய பண்ணையார்த் தோரணய விடக் கூடாது, நடந்து போனா நல்லாருக்காதுன்னு, வெளியூர்ல தெரிஞ்ச பய ஒருத்தன கூட்டிட்டு கார்ல போனென் .

                                     வீட்டு வாசல்ல எம் மாமியாக்காரி ஒக்காந்திருந்தா………..

என்னப் பாத்ததும்………

             ஏய் இங்கேரு, இதுக்கு மேலயும் இங்க வந்து ப்ரச்சன பண்ணா நல்லாருக்காது. அவ தம்பிமாரு பூரா ஒன்ன வெட்டிப் போடனும்னு சுத்திட்டு இருக்கானுவ,,,,,,,,, மரியாதையாப் போயிரு …. சொல்லிப்புட்டென்- னு சொன்னா.

                         எனக்குன்னா வந்த கோவத்துக்கு அவள செவுள் – ல அறஞ்சிட்டு உள்ள போயிரலாம்னு தோணுச்சு. சரி வேணான்னு அடக்கிக் கிட்டன் .  நா பண்ணுன அட்டூழியத்துக்கு எம்  மச்சான் மாறனுவ எம் மேல  கொல வெறில சுத்திட்டு இருந்தானுவ. அது வேற பயம் எனக்கு.

                       சரி…..தாயளி……பெழச்சி போன்னு நெனச்சிகிட்டு………

இங்க பாரு அத்த……..எம் பொண்டாட்டியோட நல்ல படியா வாழணும்னுதான் கூட்டிட்டு போவ வந்திருக்கென். பிரச்சனெல்லாம் பண்ண வரல – னு சொன்னேன்.

                        கொஞ்ச நேரம் அமைதியா இருந்த எம் மாமியா, சரி மாப்ள!! உள்ள வாங்கன்னு சொல்லிட்டு,……………… ஏ செவாமி!!!

மாப்ள வந்திருக்காரு  பாரு -னு சொல்லிட்டே உள்ள போனா.

எம் பொண்டாட்டி கொழந்தயோட பட்டாலேல ஒக்காந்திருந்தா.

நா கூட என் பொண்டாட்டிய அழகா….சிவகாமி-ன்னுதான் கூப்புடுவேன். ஏதோ சவத்த சொல்ற மாதிரி செவாமி…….செவாமினுட்டே உள்ள போனா மாமியா.

                            சிவகாமி கொழந்தய தூக்கிட்டு வராண்டாவுக்கு வந்தா. கூடவே வந்த எம் மாமியா……..

                       செவாமி……மாப்ள கூட பேசிட்டு இரு, 

                       நா போயி சர்பத்து இல்ல கலரு வாங்கிட்டு வரேன்-னு கிளம்பிட்டா.   

ஒன்னுமே பேசாம எம் பொண்டாட்டி கோவத்துல பாத்துட்டே இருந்தா………

                  எப்புடியும் சமாதானஞ் செஞ்சிரலாம்னு…………………ஒன்னு ஒண்ணா சொல்லிப் பாத்தென்.

                 பேசிட்டு இருக்கும் போதே எம் மாமியா வார சவுண்டு கேட்டது.  

                           கலரு வாங்கிட்டு வாரா-னு திரும்பிப் பாத்தா………..ஒரு இருவது பொம்பளயளோட  வந்தா பாத்துக்க………..

               செருக்கி  விள்ளய……. எல்லாரும் வாரியலுங் கையுமா நின்னாளுவ.

               ஒடனே எம் மாமியார பாத்துச் சொன்னன்.

                இங்கேருத்த…………பேசி முடிச்சிக் கூட்டுப் போலாம்னுதான் வந்திருக்கன். என்ன பத்தி நல்லா தெரியும் ஒனக்கு. ஏடா கூடமா ஏதாச்சும் செஞ்சன்னா மனுசனாருக்க மாட்டன் பாத்துக்கன்னு சொல்லி முடிச்சதுதான் தாமதம்………

                அடிச்சாளுவளே  அடி……….. மறக்குடி பொம்பளய….. இருவது பேரு. காரு கிட்ட வர்ற வரைக்கும்…….

பொம்பளயளா   அவளுவ…..

எம்மாடி………..என்ன அடிச்சது மட்டுமில்லாம , நா கார் ஓட்ட கூட்டிட்டு வந்தவனுக்கும் தரும அடி.

               அவ்ளோதான் கார எடுத்த வேகத்துக்கு, திரும்பி பாத்தா,  காருல வந்து ரெண்டு வௌக்குமாறு விழுந்துச்சு .

                  ஒரு வழியா மெயின் ரோடு வந்ததும்…………’பண்ணையார’ கொஞ்சம் எறங்குங்க, டீ அடிச்சிட்டு பெயிருவோம்-னு சொன்னான். சரின்னு எறங்கி டீ கடைய பாத்து போனா………….அந்தப் பய கார எடுத்துட்டு பறந்துட்டான். எம் மாமியா சொன்னத விட கெட்ட கெட்ட வார்த்தையா சொல்லிட்டே போனான்.

                  கேட்ட மாரிமுத்துவுக்கு தாங்க முடியாத சிரிப்பு. அவனது ஒல்லியான தேகத்தில் தொள  தொள என தொங்கும் மேல் சட்டையே குலுங்கும் படி சிரித்தான்.

“எங்கத ஒனக்கு சிரிப்பாணியா இருக்கு என்னலே………..என்றார் நாதன் பண்ணை.  அப்போது ஒரு குவார்ட்டர் முடிந்திருந்தது.

                   மாரிமுத்து பீடியை இழுத்தபடி எழுந்து சென்று விட்டான். நாதன் பண்ணை வேலை பார்த்து வந்த கம்பெனி முதலாளிக்கு, பண்ணையை நன்றாகத் தெரியும். பண்ணைக்குச் சம்பளம் கிடையாது என்பதில் தெளிவாக இருந்தார். பண்ணைக்குத் தேவையான சாப்பாடும், குவார்ட்டரும் தினசரி வந்து சேர்ந்து விடும் முதலாளியின் வீட்டிலிருந்து.

                   முதலாளி பண்ணையை பார்க்கும் போது சொல்வார்.

                   “பண்ண” எவ்ளோ பணம் கொடுத்தாலும் தண்ணியடிப்ப, இல்ல பொம்பளட்ட போவ………….காச கரியாக்குவ. பேசாம இந்த சூப்பர்வைசர் வேலயப்  பாரு.  ஒனக்கு மீன் வேணுமா, கறி வேணுமா, சாராயம் வேணுமா, எதுவா இருந்தாலும் வந்து சேரும். காசு மட்டும் கையில தர மாட்டன்.

பணம்னு கேட்டா இதுதான் முதலாளியின் பதில்.

ஒன்றும் இல்லாத ஓட்டாண்டி ஆன பிறகும் கூட, பண்ணையாருக்கு தலையை சொரிந்து கொண்டு பணம் கேட்கும் பழக்கம் கிடையாது. இன்றும் பணம் தேவைப்பட்டால், முதலாளி முன் உட்கார்ந்து கொண்டு …

மொதலாளி………..

ஒரு ஆய ரூவா தேவப்படுது  ………………….என்று கேட்கும் பொழுது தொடையோடு சேர்ந்து கால்கள் இரண்டும் ஆடிக் கொண்டிருக்கும்.

ஆனாலும் முதலாளி அவர் பிடியில் இருந்து தளர்ந்தது இல்லை.

          கம்பெனி விசயமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. நாதன் பண்ணைக்கு கார் அனுப்பியிருந்தார் முதலாளி.  மாரிமுத்துவையும் உடன் செல்லச் சொல்லியிருந்தார்.

மாரிமுத்துவும் பண்ணையும் காரில் பின்புறம் அமர்ந்து சென்று கொண்டிருந்தனர். நீண்ட நேரம் மௌனமாக பயணித்தது போலிருந்தது மாரிமுத்துவுக்கு……

ஏன் பண்ணை வாய் திறக்கவில்லை என்ற யோசனையோடு பண்ணையை திரும்பிப் பார்த்தான்.

          ரோட்டின் நடுவே இருந்த சிலையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் பண்ணை.

என்ன பண்ண ?………… செலையயே உத்துப் பாத்துட்டு வாரிய…….

ஆமாடா……..

சிலையை கடந்து சென்ற பிறகு சிறிது இடைவெளி விட்டு ஆரம்பித்தார் பண்ணை.

தாயளி………இவனுக்கும் எனக்கும் எந்த வித்யாசமும் கெடயாது. ஆனா இவனுக்கு செல வச்சிருக்கானுக. என்னத்த சொல்ல…………?

                 அதிர்ந்த மாரிமுத்து…………… பண்ண …… அவரு எவ்ளோ பெரிய கவிஞரு………….. அவரப் போயி…………. நீங்க வேற………. போங்க பண்ண………  என்றான்.

                 பதிலுக்கு நமட்டு சிரிப்பு சிரித்த பண்ணைக்கு , வேகத்தடையில் ஏறி இறங்கிய காரைப் போல தோள்பட்டை லேசாக இரண்டு முறை  குலுங்கி நின்றது.

                 கவிஞரும் தானும் ஒன்றாக ஒரு விலைமாது வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தது…………..பண்ணையின் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது.

          சிறு இடைவெளிக்குப் பின் பண்ணை சொன்னார்…..

         ஏலே மாரி……… நீல்லாம் வாழ்க்கைல சுதாரிச்சு இருந்துகொல. எங்க ஊர்ல இருந்த பத்து பண்ண மாருல நா அறிஞ்சு ஒரு ஏலெட்டு பேரு என்னமாயி ஆயிட்டானுவ. எல்லாம் தண்ணி, பொம்பள, வரட்டு கவுரவம்…………….மயிராண்டிய இப்ப எல்லாம் பிச்ச எடுக்கானுவ.

                    ஏதோ நடுவீட்டுப் பண்ணயும், அம்பலவாணப் பண்ணயும் வெவரமா பெழச்சி கிட்டானுவ, காடு வயலெல்லாம் காப்பாத்தி கிட்டானுக.

நா காசு கைல கெடைக்காம சுத்திட்ருக்கேன் பாத்துக்க………

                கார் அந்த ஊரை சென்றடைந்தது. ஆறு மணி நேரத்திற்கு மாரிமுத்து நேரம் போனதே தெரியாமல் பண்ணையின் கதைகளை கேட்டுக் கொண்டே வந்து விட்டான்.

                கம்பெனி விசயமாக  பார்க்க வந்த காண்டிராக்டர் , நாதன் பண்ணையை நன்கு அறிந்தவராக இருந்தார்.

எல்லா விசயங்களையும் பேசி முடித்து விட்டு, முதலாளிக்கு பண்ணை போன் செய்து பேசினார் விவரங்களை.

சரி வா……என்று சொல்லி விட்டு போனை வைத்தார் முதலாளி.

         பிறகு காண்டிராக்டரும் பண்ணையும் சிறிது நேரம் ஊர்க் கதைகளை பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது காண்டிராக்டர் திடீரென ஏதோ ஞாபகம் வந்தவர் போல குறுக்கிட்டார்.

“பண்ண ஒங்க நண்பரு நடு வீட்டுப் பண்ண பக்கத்தூர்லதான் இருக்காரு”………… பாத்துட்டு போயிடுங்களேன். சந்தோசப்படுவாரு.

“வேண்டாம்” – என்றார் பண்ணை.

நா இந்த நெலமேல அவனப் போயி பாக்குறது…………

என்னதான் சின்ன வயசு நண்பணா இருந்தாலும், நல்லாருக்காது.

என்னால அவன் மூஞ்சிய கண்ணு வச்சு பாக்க முடியாது…………செத்தே போயிருவன்……….வேணாம், வேணாம்,,,,,,,,,எனச் சொல்லி விட்டு பண்ணையும் மாரிமுத்துவும் காரில் ஏறினர்.

மாரிமுத்து குறுக்கிட்டான்.

‘பண்ண ஒரு யோசன’

– என்ன?

– இல்ல…….ரெண்டு பேரும் சின்ன வயசுலேர்ந்து சேக்காளிகதான. இப்ப போயி நெலமய சொன்னா அவரு ஒரு அய்யாய ரூவாயாச்சும் குடுக்க மாட்டாரா?

தந்தா வேணாண்னா இருக்கு……….

என்ன சொல்றய…..  இழுத்தான் மாரிமுத்து.

– யோசித்துப் பார்த்த பண்ணை, சரி போவோம் என்றார்.

காண்டிராக்டரை பார்த்து பண்ணை,

காண்டிராக்டர……….நடு வீட்டுப் பண்ணய பாத்துட்டு போயிரலாம்-னு பாக்கன். வீட்ட காம்பிச்சிட்டு போறியலா …………..

காருல ஏறுங்க, என்றார்.

காண்டிராக்டர் காரில் ஏறிக் கொண்டார்.

நாதன் பண்ணையிடம், காண்டிராக்டர் நடு வீட்டுப் பண்ணையின் புகழ் பாடிக்  கொண்டே வந்தார்.

               நல்ல மனுசர் பாத்துக்குங்க…….இன்னிக்கும் அப்ப இருந்த வெகுளியான கொணம் மாறவே இல்ல……………….பட்டுனு கோவப்பட்டாலும், ஒடனே மறுவிடியும் கூப்புட்டு பேசிருவாரு. அந்த விசயத்துல மாறவே இல்லிங்க…..

நாதன் பண்ணை மனசுக்குள், ஒரு பத்தாய ரூவா கேட்டுப் பாக்கலாமா………தந்தா பரவாயில்ல. ஆனா ஏதாச்சும் சொல்லி அவமானப் படுத்திட்டானா  என்ன செய்யறது. இந்த மாரிமுத்து பய மூஞ்சிலக் கூட முழிக்க முடியாத…………………என்று நினைத்துக் கொண்டே சிறிது பதற்றம் கலந்த கூச்சத்துடன் வந்து கொண்டிருந்தார்.

             ஊரில் இருந்த போது இளமைக் காலத்தில் திருவிழா பிரச்சனையில் நாதன் பண்ணையும், நடு வீட்டுப் பண்ணையும் ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக நின்று பஞ்சாயத்தில் கூட தீர்க்க முடியாமல் போய், பின்னர் நடு வீட்டு பண்ணையிடம் பேச்சு வார்த்தை இல்லாமல் போனதும், பின்னர் இரண்டு வருடங்களுக்கு பிறகு நாதன் பண்ணையின் திருமண நிச்சயதார்த்த விழாவில் இருவரும் பேசிக் கொண்டதும் நாதன் பண்ணை நெஞ்சில் ஓடிக் கொண்டிருந்தது.

                     கார் பிரேக் போட்ட சத்தம் கேட்டு சுய நினைவு திரும்பியவர் போல சுற்றிலும் கண்ணாடி வழியாக பார்த்தார் நாதன் பண்ணை.

ஒரு ஹோட்டல் முன்பு வண்டி நின்றது.

இதுதாங்க நடு வீட்டுப் பண்ண ஓட்டல். உள்ளதான் இருப்பாரு………………என்றார் காண்டிராக்டர்.

நாடியைத் தடவியபடி யோசித்துக் கொண்டேயிருந்த  பண்ணை,

சரி நா போயி பாத்துட்டு வந்துடுறன்……….என உள்ளே செல்ல தயாரானார்.

        அது ஒரு நடுத்தரமான ஹோட்டல்.

சாப்பிடும் ஹால் , ஹாலின் ஓரத்தில் கல்லா, ஹாலுக்கு பின் சமயலறை …….அவ்வளவுதான்.

        கல்லாவில் அமர்ந்திருந்தவரை உற்று நோக்கினார் பண்ணை. நடு வீட்டுப் பண்ணையின் முகம் மறந்திருக்கவில்லை ………ஆனாலும் நாதன் பண்ணைக்கு சந்தேகம் அவர்தானா என்று………

        திடீரென “ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் …..ஷ்ஷ்ஷ் ” ………என்று சத்தம் கேட்டு சமையலறை பக்கம் திரும்பினார்.  தோசைக் கல்லில் ஆவி பறக்க துள்ளிக் கொண்டிருந்த நீர்த் துளிகளை துடைப்பத்தால் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார் சமையல்காரர்.

         சிறிது நேரம் அதை பார்த்த பண்ணை…………..என்ன உணர்வென்றே விளக்க முடியாத ஒரு நிலையில் தோசையையும், தோசையை அழகாக வட்டமாக விட்டுக் கொண்டிருந்த சமையல்காரரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

                 கல்லிலிருந்து அந்த முறுகலான தோசையை எடுத்து சர்வருடைய தட்டில் போட்டார்……………………….நடு வீட்டுப் பண்ணை.

              பண்ண…..   “டேபிளுக்கு ஒரு நைஸ் தோசை ” என கத்தினான் சர்வர்.

சட்டை இல்லாத மெலிந்த தேகத்துடனும், அழுக்கு வேட்டியுடனும்  தலையில் கட்டியிருந்த துண்டை சரி செய்து கொண்டு சூடான கல்லில் நீரைத் தெளித்தார்  நடு வீட்டுப் பண்ணை’……

                பண்ண…..டேபிளுக்கு மூணு ஊத்தாப்பம்……..என சர்வர் கத்தினான்.

கான்டிராக்டரை ஏற்றாமல் கார் வேகமாகச்  சென்று கொண்டிருந்தது.

மாரிமுத்து கேட்டான்………

“பண்ண”……….. நடு வீட்டுப் பண்ண ஏதாச்சும் குடுத்தாரா?

மீண்டும் பண்ணையின் கண்களில் ஒரு யோகியின் பார்வை நிலைக் குத்தி இருந்தது.

Series Navigationபார்வையற்றவன்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *