நாணம்

Spread the love
மீனாட்சிசுந்தரமூர்த்தி
(ஜெர்மனி ஆல்ஸ்டர்  ஏரியில் கண்ட காட்சியே கவிதையாக மலர்ந்துள்ளது.)
    மஞ்சள் வெயிலில்
    மனம் மயங்க,
    காதோரம் குளிர் காற்று
    கதைபேச,
    உலாவப் போன
    மாலை வேளை.
   வளைந்து நெளிந்து
   ஏரியைச்  சுற்றும்
.   ஒற்றையடிப் பாதை.
   இருபறமும்
   இளஞ்சிவப்பு
   நட்சத்திர இலை
   மரங்கள்.
   வானவில்லின்
   வண்ணம்
   காட்டும் பூக்கள்,
   வழிச்செல்வோரின்
   விழிகளை,
   வண்டுகளென எண்ணி
   நாணத்தில்
   பனி முக்காடிடும்.
   ஆங்காங்கே
   அமைந்திட்ட
   இருக்கைகள்
   இளைப்பார வா! வா!
   என்றழைக்க
   பரந்து விரிந்திருக்கும்
   ஆல்ஸ்டர் ஏரி.
   வானில், வட்டமிட்டு
   வட்டமிட்டு
   சரேலென
   மீனைக் கொத்தும்
   சீகல் பறவைகள்.
   வேகநடை
   நடந்திடுவார் சிலர்.
   அடுக்கடுக்கான
   படித்துறைகளில்
   அமர்ந்து பேசி
   மகிழ்வார் சிலர்
   ஒற்றைப்
   பலகையில்
  வேகம் கூட்டி
  நீரில் சிலர்
  புரிவார் சாகஸம்
  சோளப் பொறியை
  இறைத்து புறாக்கள்
  உண்ணக்
  கண்டு மகிழும்
  பிள்ளைகள்.
.  கண்ணாடித் தகட்டு
  நீரலைகள்
  மேடை போட
  வெள்ளை
  அன்னங்களின்
  கொண்டாட்டம்.
  ஒய்யார உலாப்
  போகும்
  ஒன்று,சிறகு
  உதறும் ஒன்று.
  சேவல் இரண்டு
  தனக்காகப்
  போடும்
  சண்டையை
  இரசிக்கும் ஒன்று.
  உதட்டுச் சாயம்
  மிளிரும்
  அழகு மங்கையவள்
  அருகு வந்து
  சிவந்த தன் அலகு
  காட்டும் ஒன்று.
  படகு போன்ற
  முதுகில்
  பாங்காய்
  குஞ்சுகளைச் சுமந்து
  நீந்தும் ஒன்று.
 நீள் கழுத்து வளைத்து
 எனதழகு காணக்
 கண்ணிரண்டு
 போதுமோ என
 ஒயிலாகக்
 கேட்கும் ஒன்று
  கூட்டம் இருந்தது
  கூச்சல்
  இல்லை,
  ஆரவாரம்
  இருந்தது
  ஆர்ப்பாட்டம் இல்லை.
  கூடிவிட்ட எடை
  குறையுமென
  நானும்
  கூட்டினேன்
  நடையினில் வேகம்.
  மேலை நாட்டுப்
  பாணியில்
  அங்கிரண்டு
  காதலரின் அன்பின்
  பரிமாற்றம்.
  சற்றே தூரத்தில் எமைக்
  கண்டு விட்ட
  வேல்விழியாள்
  விலகினாள் நாணி.
  மீண்டும்
  அருகிழுத்த
  காளைக்குக்
  குறிப்புக் காட்டி
  அமர்ந்தாளே தள்ளி.
  அச்சம்,மடம்
,  நாணம்
  நம்மிடமே
  உள்ளதென்ற
  எந்தன் மனம்
  கொண்டது நாணம்.
Series Navigationபெற்றால்தான் தந்தையா