நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்

.unnamed1

==

கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள்  தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் ஏறி விட்டார்.

அவர் மனத்தில் பட படவென்று கதவுகளை அடித்துக்கொண்டிருக்கும்

அந்த மூன்றாவது சாளரத்தின் கசிவு வெளிச்சங்களே  இவை.

====================================ருத்ரா இ.பரமசிவன்.

“ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி

நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்”

பால் வடியும் சிறு பருவ மகள்

பால்வெளி மண்டலமாய்

படர்ந்து சிரிக்கின்றாள்.

மகிழ்ச்சி வானம் நரம்பின் இசையை

மண்ணில் தெளிக்கிறது.

கவிதை வழியே உன்

கண்கள் மாட்டிக்கொண்டாய்.

கரடு  முரடு மலையின்  முகடு

காட்சி சுவடு உன் கண்களுக்குள்

அவள்  சித்திரப்புன்னகையாய்

எங்கும் எங்கும் சிந்திநிற்கும்!

“அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்”

சினிமாவுக்காகவா இதை எழுதினாய் நீ?

திடீர் மழையில் உன்னைச்சுற்றி

ஆயிரம் காளான் குடை கள்!

அன்பை நீட்டி அந்த வானப்பூ

மத்தாப்பு காட்டும்

தனிமைத் தருணங்களின்

தொகுப்பு அல்லவா அந்த பிஞ்சு முகம்.

குடை என்றால் மழையை தடுப்பது

கொச்சை மனங்களுக்கே !

வானம் கிழித்த உல்லாசப்பூ சிதறல்

கவிதை உள்ளங்களுக்கே!

அந்த தேவதை கன்னங்குழிய சிரித்தால்

மழைத்துளி வைரங்கள்

ஆயிரம் ஆயிரம் அல்லவா!

“சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்

மலையின் அழகோ தாங்கவில்லை”

பூவின் பனித்துளி  உன் கவிதையில்

டி.வி திரைப்படம் ஆனது

அதற்குள் மலையின் முகம் தெரிய

அதன் பனிப்புகைகுள்ளும்

உன் மனக்குகை தெரியும்.

உன் ஆச்சரியங்களின் புதையல் அது.

“உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து

வீட்டுக்கு அனுப்பு நல்லபடி”

இந்த மூன்று வரிகளில்

முப்பதாயிரம் அடி உயர சிகரம் ஒன்றில்

ஏறி நிற்கின்றாய்.

கவிஞர்கள் எல்லோருமே

சோப்புகுமிழிகள் விட்டு அதை

நிலவு என்பார்கள்.

ஆனால் நீயோ

நிலவையே கரைத்து ஒளிக்குழம்பாக்கி

கோடி கோடி நிலவுகளை அதில் ஒளி பெருக்கி

அதை அன்பு மகள் முகத்தில் மஞ்சள் பூசி

குளிப்பாட்டுகிறாய் .

பாவம் நிலவு

செல்லப்பூனையாய் வீட்டுக்கு போகிறது.

நா முத்துக்குமார் அவர்களே

உங்கள் கற்பனை “ஸிப்” திறந்து கொள்ளும் போதெல்லாம்

எங்களுக்குள் தாங்க முடியாத ஒரு

மனப்பிரளயம் எங்களை

உற்சாகத்தில் புரட்டிக்கொண்டு போய்விடுகிறது.

ஒரு  பாட்டு  ஒரு காசோலை என்று

முடிந்து போகிற எந்திரத்தனமான

சினிமா வியாபாரத்தில் எச்சம் போட்டு விட்டு

பறந்து போய்விடுகிற காக்காயோ குருவியோ அல்ல நீ !

அது ஒரு ஃ பீனிக்ஸ் பறவை.

அதன் சிறகடிப்பு

இதோ எங்கள் இதயங்களுக்குள் கேட்கிறது!

மீண்டும் அடுத்த சாளரம் நீ திறக்கும்போது

வருகிறோம்

இப்போது தூங்கு

நாளை முகம் காட்டு!

இப்படிக்கு

அன்புடன் ருத்ரா

===================================

Series Navigationதிரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை