நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்

Spread the love

 

சிடிக்கள் டிவீடிக்கள் உருவாகாத காலமது. எழுபதுகளில் எல்லாம் தமிழகத்தில் வாழ்ந்த சிங்கப்பூர் சபுறாளிகள் சொந்த மண்ணுக்கு வரும்போது அள்ளிக் கொண்டுவரும் சாதனங்களின் ஒன்று கேசட்டுகள். தகவல் அறிவுப்பரிமாற்றத்திற்கு புரதான காலங்களில் எழுத்தாணிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள்,மரப்பட்டை,தோல்களில் எழுதுதல் என்பதான வடிவங்கள் பயன்பட்டன. நவீன தொழில்நுட்பம் உருவாகிய போது அச்சு ஊடகம் முதன்மை பெற்றது. ஓலைச்சுவடி கருவூலங்கள் அச்சுவடிவில் பாதுகாக்கப்பட்டன. இதன்பின்னர் உருவான எலக்ட்ரானிக் மீடியாகாலத்தில் இந்த கேசட்டுகள் எனும் ஒலிநாடாக்கள் உருவாகின. தற்போது ஒலியும் ஒளியும் கலந்த காட்சி ஊடகங்கள் முக்கிய வினை புரிகின்றன.

முஸ்லிம்கள் கொண்டுவரும் அப்போதைய கேசட்டுகளில் நாகூர் அனிபா,ஷேக்முகமது பாடல்கள் ஏராளம் இருக்கும். அத்தோடு ஒலிவடிவில் தொகுக்கப்பட்ட பக்கிரிஷாகளின் கிஸ்ஸா,மசலா,நாமா போன்ற பழந்தமிழ் இஸ்லாமிய நாட்டுப்புறப்பாடல்களும் அடங்கும்.

அந்தக்காலத்தில் இந்த பக்கிர் ஷாக்களின் இசை வடிவங்களின் அருமை பெருமை தெரியாமல் முஸ்லிம் குடும்பங்களின் பெரும்பாலான இளைஞர்களும் இந்த கேசட்டுகளை அழித்து சினிமாபாடல்களை பதிவு செய்து ரசித்து கேட்கும் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டனர்.

தொண்னூறுகளுக்கு பிறகு உருவான வகாபிய கருத்துருவாக்கத்தின் காரணமாக இப்பாடல்களின் உயிர்த்தன்மை குறித்த உண்மைகள் மறைக்கப்பட்டன. இந்நிலையில் பக்கிர்ஷாக்கள் பாடி முன்னால் வெளிவந்த நூறுமசலா,ஆயிரம்மசலா,ஸகராத்துநாமா,சைத்தூன் கிஸ்ஸா உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் மக்களிசைப்பாடல்களை முஸ்லிம் கலைஞர்கள் படைப்பாளிகள் வாசகர்கள் மீட்டுருவாக்கம் செய்யவேண்டும். தமிழகத்திலும் இலங்கையிலும்  வாழும் முஸ்லிம்களின் தமிழ்,உருது அடையாளங்களை இக்கலைவடிவங்களின் மூலம் நாம் பாதுகாக்க முடியும்.இசைதாண்டிய விசித்திரங்களை நிகழ்த்தும் கலைஞர்களாகவும் பக்கிர்ஷாக்கள் இருந்துள்ளனர்.


மானிலேயும் பெரிய மானு..

தமிழ் முஸ்லிம்களின் நாட்டுப்புற மக்கள் இலக்கிய வகைமைகளில் ஒன்று நூறுமசலா.மசலா என்ற சொல்லுக்கு தேடுதல் என்பது பொருள். மஸ் அலா அரபு மூலச் சொல்லில் இருந்தே மசலா என்ற வழக்குச் சொல் உருவாகி உள்ளது. மஸ்-அலாத் என்பதற்கு வினா என்பது பொருளாகும். இஸ்லாம் தொடர்பான வினாக்களுக்கு விடை அளிக்கும் உரையாடல் இலக்கியமே மசலா இலக்கியவகைமையாகும்.


நூறுமசலா என்பதற்கு நூறுகேள்விகளுக்கான பதிலைத் தேடுதல் என்பது பொருள்.இது இரண்டுபேர் எதிரும் புதிருமாக பாடும் உரையாடல் வடிவத்தைக் கொண்ட்து.இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான கேள்வியும் பதிலுமாக அமைந்திருக்கும் எளிமையான வடிவத்தில் புதிர்த்தன்மை விடுகதைத் தன்மைகளோடு பாடல்வடிவத்தில் அமையப் பெற்றதே நூறுமசலா.இது வாய்மொழிவரலாற்றின் அடிப்படையில் பாடப்பட்டுவருவதால் இதன் மூல ஆசிரியர் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.மக்கள் இசையின் ஒரு வடிவம் இது.


ஐந்துமாநகர் பதியின் பாதுஷாவாக ஆட்சி புரிந்த அகமதுஷா உடைய மகன் அப்பாஸ் சிகாமணி. சீனமாநகர் பாகவதி அரசுடைய மகளான நூறரசி ஞான அலங்காரவல்லி- இந்துப் பெண்ணான அவள் மெகர்பானுவாகிறாள். மசலா மண்டபத்தில் மெகர்பானு கேட்கும் கெள்விகளுக்கு போட்டியில் கலந்து கொள்ளவருபவன் சரியான பதிலை சொல்லவேண்டும்.இல்லையெனில் அவனது தலை துண்டிக்கப்படும். இங்கு அப்பாஸை நோக்கி மெகர்பானு கெட்கும் கேள்விகளும் அதற்கு அப்பாஸின் பதிலுமாக இது அமையப் பெற்றிருக்கிறது.


1087 கண்ணிகளால் இந்நூலின் கேள்விகள் ,அதற்கான பதில்கள் அமைகின்றன. இதன் வழியாக முஸ்லிம்கள் அல்லாத மக்களுக்கும் இஸ்லாமிய நெறிகளின் நுட்பங்கள் குறித்து அறிய முடிகிறது.இப் பதில்களின் குறிப்புகளிலிருந்து நீண்டதொரு அறிவுத்தேடலின் பயணத்தை ஒரு வாசகன் உருவாக்கிக் கொள்ளமுடியும்.இங்கு நாம் நூறுமசலாவின் ஒரு பாடல்பகுதியை உற்று நோக்கலாம்.
……..
மானிலேயும் பெரியமானு அறுபடாத மானுமென்னா?
மீனிலேயும் பெரியமீனு அறுபடாத மீனுமென்னா?
மாவுலேயும் நல்லாமாவு இடிபடாத மாவுமென்னா?
இடிபடாத மாவானதை எந்தனுக்கு சொல்லும் மன்னா
சொன்னா உயிர்பிழைப்பாய்-மன்னா
சொல்லாவிட்டால் தலையறுப்பேன்…
விடை:
;;;;;;;;;;;;;;;
மனிலேயும் பெரிய மானு – பெண்ணே
அறுபடாத மானானது- அல்லா
அறுபடாத மானானது – அது
ஈமானடி மெகர்பானே…

மீனிலேயும் பெரியமீனு
அறுபடாத மீனானது – அது
ஆமீன் என்றதாகுமே

மாவுலேயும் நல்ல மாவு – பெண்ணே
இடிபடாத மாவானது
ஐந்து நல்ல கலிமா பெண்ணே..
இங்கு மசலாவிற்கு கிடைத்த விடைகளான ஈமான் – ஆமீன் – கலிமா என்பதான கருத்தியல் சொல்லாடல்களிலிருந்து விரிவானதொரு அறிதல் தளத்திற்கான பாதையில் ஒவ்வொரு கேட்பாளனும் பயணிக்க முடியும்.

 

Series Navigationஅலையின் திசையில் மாற்றம் தேடி..-வாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து….தலைதப்பிய தீபாவளி