நூல் அறிமுகம்-பா.சேதுமாதவனின் “சிறகிருந்த காலம்”

           

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்


       பா.சேதுமாதவன் கவிதை, சிறுகதை, வரலாறு, கட்டுரைகள் எனப் பல தளங்களில் பங்களிப்பு செய்து கொண்டிருப்பவர்.சிறகிருந்த காலம் இவரது பத்தாவது நூலாகும். இதிலுள்ள அறுபது கட்டுரைகள் எல்லாமே வாழ்க்கை வரலாற்றுச்சாயல் கொண்டவை. அணிந்துரை தந்த ஆர்.ரமணியின் சொற்களில் சொல்ல வேண்டுமானால்,   “கால் நனைக்கும் நேற்றைய நதி” என்றுதான் சொல்லவேண்டும்.


       முதல் கட்டுரை பிள்ளைப்பருவத்து சைக்கிள் பழகிய அனுபவத்தை அனாயாசமாகப் பதிவு செய்துள்ளது. சரியான சில தகவல்களைச் சரியான இடத்தில் இணைப்பது இவர் நடையில் முக்கிய அம்சமாகும். பெட்டிக்கடைகர்மயோகி என்ற கட்டுரை ஒரு சிறுகதைக்கு நிகரானது. முதல் பத்தியில் சேதுமாதவனின் சிறுகதை ஆசிரியர் முகத்தை நாம் நன்கு உணரமுடிகிறது. கட்டுரைப் போக்கும் முடிவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.


        தான் ஒரு வாசகனாக உருவான விதத்தையும் படைப்பாளியான அனுபவத்தையும் சொல்லி, எழுத்தாளர் கஷ்டங்களையும் பரிதாப நிலையையும் விளக்கியுள்ளார், சொல்லேர் உழவர்கள் கட்டுரையில். புத்தகம் வெளியிடப் பண உதவி கேட்ட பாரதியாருக்குச் செல்வந்தர்கள் காட்டிய கள்ள மௌனத்தையும் இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார் சேதுமாதவன்.
     வேலை தேடும் வேலை பற்றிப்பேசுகிறது ஒரு கட்டுரை. வேலை தேடுபவர் கூடவே நாமும் பயணிப்பது போலவே ஓர் உணர்வு ஏற்படுகிறது. நிலையாகக்கால் ஊன்றமுடியாத தவிப்பு , நடைமுறைச்சிக்கல்கள் நம் மனதையும் பிசைகின்றன. வேலை வேட்டுவன் என்ற தலைப்பு அசத்துகிறது.
     பணத்தை மனிதர்கள் கையாளுவதில்தான் எத்தனை விதம்? பல தரப்பட்ட மனிதர்களை விவரிக்கும் கட்டுரை பணம் எடுத்த பாடம். கடன் வாங்கிவிட்டு ஏமாற்றும் நபர்கள் எங்கும் இருக்கிறார்கள். அதுவும் இரண்டு லட்சம்!…
     நேர்முகத்தேர்வில் ஷேக்ஸ்பியர் தொடர்பான வினாக்களும் அதற்கான விடைகளும் சுவாரஸ்யமாக உள்ளன. சேதுமாதவன் நல்ல வாசிப்புப்பழக்கம் உள்ளவர் என்பதற்குப்பல சான்றுகள் இக்கட்டுரையில் உள்ளன. ஷேக்ஸ்பியர்செய்த உபகாரம் என்ற தலைப்பு வழக்கம் போல வசீகரம் !
    நண்பர்களோடு ஒரு நாளைக்கழிப்பது அலாதியான சுகம்தான். அதுவும் மலையேற்ற அனுபவம் இன்னும் சுகமானது. பள்ளித்தோழர்களுடனான அனுபவத்தை விவரிக்கிறார் ஆசிரியர். கட்டுரை சிறிதானாலும் அனுபவங்கள் இவரது மொழி நடையில் கலக்கும்போது ஒரு தனித்தன்மை உருவாகிவிடுகிறது. பெருமாள் மலையேற்றம் இனியது!
      நலம் தரும் போதை என்னும் கட்டுரை ஒரு பாடமாக அமைந்துள்ளது. யோகாசனம், தியானம் போன்றவற்றில் ஈடுபடும்போது என்டார்பின் என்ற    இன்பத்தைத்தூண்டும் ஒரு வேதிப்பொருள் மூலைக்குச்சென்று மனமகிழ்ச்சியையும் அமைதியையும் அளிக்கிறது என்ற தகவல் பயனுள்ளது.
    விசித்திர வலைகள் கட்டுரை சிந்திக்க வைக்கிறது. வங்கி வேலை வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார். ரயில்வே வேலை கிடைத்தபின் வாங்கி வேலை எதற்கு? நாம் எதிர்பார்க்காத விசித்திர சம்பவங்கள் வாழ்க்கையில் பலருக்கும் நடக்கத்தான் செய்கிறது.
      கடவுளெனும் நீதிமான் ஒரு குறும்பு. ரசிக்கும்படி உள்ளது. ” திமுக வாழ்க்கை திடீரென மதிமுக வாழ்க்கை போல மாறியது” என ஒரு வாக்கியம் உள்ளது. (திமுக-திருமணத்துக்கு முன்பான கலகலப்பு வாழ்க்கை. மதிமுக- மணமுடித்தபின்பான திக்குமுக்காடும் கடின வாழ்க்கை). முக்கியமான ஊழியர் ஒருவரின் வசவு வார்த்தைகள் மனதை வருத்த, அந்த வழக்கை கடவுள் நீதிமன்றத்தில் வைத்து நியாயம் பெற்ற உண்மை நிகழ்வு அதிர்ச்சிஅளிக்கிறது.
   ஹுசேன் பாய் சைக்கிள் கடை கண் முன் நிற்கிறது. வாழ்க்கை எனும் சூதாட்டத்தில் கரை கண்டவர் பாய் எனலாம். கட்டுரையில்  நிஜ மனிதர்கள்  சாகாவரம் பெற்ற பாத்திரங்களாக உலா வருகிறார்கள்.
   நிறைவாக, சேதுமாதவனின் சிறகிருந்த காலம் ஒரு சிறந்த நூல். படிக்க விரும்பினால் தொடர்புக்கு 9443815933. மின்னஞ்சல்: b_sethu2003@yahoo.com. பக்கங்கள்: 172. விலை: ரூ 120/-

                                                            ##################

Series Navigationமுளையைச் சுற்றும் மூங்கை மாடுகள்கவிதையும் ரசனையும் – 17 – தேவதச்சனின் முழுத் தொகுப்பு